பண்பாட்டு உடை

அன்புள்ள ஜெயமோகன் சார், வணக்கம்! நலமா?

ஒவ்வொரு இனக்குழுக்களுக்கும் ஆடை என்பது அதன் தனி அடையாளமாக உள்ளதை நாம் அறிவோம். மரப்பட்டைகளும் – தழைகளும் கட்டிக் கொண்டிருந்த காலம் முதல் ஜீன்ஸ், சல்வார் கமீஸ் போடும் காலம் வரையும்!

நம் முன்னோர்கள், இடுப்பில் ஒரு 4 முழு வேட்டியும், தோளில் துண்டும் அணிந்தவர்கள். அப்புறம் 8 முழு வேட்டி – உடன் சட்டை. என் பாட்டி, முப்பாட்டிகள் ரவிக்கை அணிந்திருக்கவில்லை. அதிகபட்சம் ஒற்றைப் பிரியில் சேலை.

நவீன தொழில் நுட்பமும், பஞ்சாலைகள் மற்றும் செயற்கை நூல் இழைகளின் வரவால்- ஆடைகளின் உபயோகமும், வடிவமும், பயன்பாடுகளும் மாறிவிட்டன.

இச்சூழலில் எந்த ஒரு இனத்திற்காகவென்றும் தனித்த ஆடை அடையாளம் சாத்தியமா? உதாரணமாக, தமிழன் என்றால் வேட்டி, சட்டை, சேலை. வட நாட்டவர் என்றால் பைஜாமா, குர்தா, ஐரோப்பியர் என்றால் பேண்ட், கோட், அரபு நாட்டவர் என்றால் நீண்ட பைஜாமா, கோஷா…இப்படி!

மேலும் சில இந்துக் கோயில்களில், பேண்ட் அணிந்து வரக் கூடாது. சுடிதார் போட்டுக் கொண்டு வரக் கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகளும் – குறிப்பிட்ட பூஜை, சடங்குகள், திருமண விழாக்கள் ஆகியவற்றின் போது சில வகையான ஆடைகளைத்தான் அணிய வேண்டும் என்கிற கட்டுப்பாடுகளும் தேவையா? இது கால பரிணாமத்தின் வேகத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்ளும் செயலாகப் படவில்லையா?

எம்.எஸ்.ராஜேந்திரன். திருவண்ணாமலை

அன்புள்ள ராஜேந்திரன்

உடைகள் இரண்டு தளங்களில் அர்த்தம் கொள்கின்றன. தேவை, வசதி சார்ந்த ஒரு தளம். அடையாளம் சார்ந்த ஒரு தளம். இவ்விரண்டுமே நாம் வாழும் சூழலுடன் சம்பந்தப்பட்டவையே ஒழிய நிரந்தரமானவை அல்ல. மாறாத எதையும் சுட்டி நிற்கக்கூடியவை அல்ல. ஆகவே உடை மாறாமலிருக்கவேண்டிய தேவை இல்லை என்றே நினைக்கிறேன்.

இன்றைய தேவைக்காகவும் வசதிக்காகவும் நாம் நம் உடைகளைத் தேர்வுசெய்வதே இயல்பானது. இன்று வேட்டி மிக வசதிக்குறைவான உடை என்பதே என் எண்ணம். ஆகவே நாமனைவரும் இன்று கால்சட்டையும் மேல்சட்டையும்தான் அணிகிறோம். நான் உடைகள் கசங்காமலிருக்கவேண்டும், அழுக்குத்தெரியக்கூடாது என்பதற்காக எப்போதும் ஜீன்ஸ்தான் அணிகிறேன்.

அதேபோலப் பெண்களுக்கு அவர்களுக்கு வசதியான உடைகள் இருக்கலாம். நான் அவதானித்தவரை சுடிதார் அவர்களுக்கு மிக வசதியான ஆடை. அதைவிட வசதியான ஆடை வருமென்றால் அதற்குச் செல்லலாம். என் மகன் அவனுக்கு வசதியாக உணர்வது டிஷர்ட் மட்டுமே. சட்டை அணிவதே இல்லை.

இன்னொருபக்கம் உடை என்பது அடையாளம். நம் சமூகம், நாம் புழங்கும் தொழிற்சூழல் ஆகியவை சார்ந்த உடைகளை நாம் அணிகிறோம். அந்த தளத்திற்கான அடையாளங்களை உடைகள் கொண்டிருக்கின்றன. ஏதோ ஒருவகையில் எல்லா நிறுவனங்களும் உடைவிதிகளைக் கொண்டிருக்கின்றன. சொல்லாமலோ அல்லது சொல்லியோ .

நான் அலுவலகத்தில் வேலைபார்த்த நாட்களில் சட்டை பாண்ட் அணிந்து பெல்ட் கட்டி ஓர் மத்திய அரசூழியனுக்கான உடையில்தான் இருந்தேன். அது என் வசதியை மட்டும் சார்ந்தது அல்ல. என்னைச் சந்திக்கவரும் பொதுமக்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கவேண்டும் என்பதைச்சார்ந்தது அந்த அலுவலகத்தில் முழுக்க நிலவும் பொதுவான உடைப்பண்பாடு சார்ந்தது. நான் விலகி நிற்க முடியாது. நின்றால் பணி சிறப்பாக நடக்காது.

இதே முறையைத்தான் கோயில்களிலும் காண்கிறோம். கேரள ஆலயங்களில் வேட்டி கட்டி மேல்சட்டை இன்றிச் செல்லவேண்டும். அது ஒரு உடைவிதி. அந்நிறுவனம் அந்த அடையாளத்தைப் பேண விரும்புகிறது, அவ்வளவுதான். அதன்மூலம் அது சில பாரம்பரிய அடையாளங்களைப் பேண விழைகிறது.

அதேபோல திருமணங்கள் போன்ற சடங்குகளில் நாம் நம் தனியடையாளத்தைப் பேணிக்கொள்ளும் உடைகளை அணியலாம். பட்டுப்புடவை இப்போது அப்படிப்பட்ட ஒரு பாரம்பரிய அடையாளம் மட்டுமே.

இவ்வாறு உடை என்பது அச்சூழல் சார்ந்து மாறிக்கொண்டிருப்பதாகவே இருக்கமுடியும். மாறாத நிலையான உடை என்பது எந்தச் சமூகத்திற்கும் சாத்தியம் அல்ல.

தமிழர்கள் இன்று வேட்டி கட்டுவதுபோல முந்நூறாண்டுகளுக்கு முன் கட்டியதில்லை. சுசீந்திரம் கோயிலில் தட்டு சுற்றுவேட்டி கட்டிய சிலைகள் உள்ளன . இருநூறாண்டுகளுக்கு முன்புள்ளவை. அதற்கு முன்னாலுள்ள எல்லா சிலைகளிலும் ஏதேனும்வகையான கச்சைவேட்டிக்கட்டுகளையே காண்கிறோம்.

வேட்டியின் தரமும் அளவும் மாறிவிட்டிருக்கிறது. இரட்டை மல்வேட்டி என்பது நூறாண்டுகளுக்கு முன்னால் ஒரு பெரிய ‘பேஷனாக’ வந்ததுதான். அதைக்கட்டுபவர்கள் அதிநவீன நாகரீகர்கள் ஊதாரிகள் என கருதப்பட்டனர். மல்லுவேட்டிக்காரர் என்பதே ஒரு வசையாக இருந்த காலம் உண்டு.

இன்று பெண்கள் கட்டும் புடவை இதேபாணியில் நூறாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதில்லை என்பதைப் பழைய படங்களைக் கண்டால் அறியலாம். ஜாக்கெட் என்பது இன்று பெண்களின் ‘லெக்கிங்ஸ்’ எப்படிப் பார்க்கப்படுகிறதோ அப்படி நவநாகரீகமாகவும் ஆபாசமாகவும் அத்துமீறலாகவும் அழகாகவும் எல்லாம் அணுகப்பட்டது.

பாரம்பரிய உடை என ஒன்று இல்லை. இருக்கிறது என்பவர்களிடம் எந்தப் பாரம்பரியம் என்று கேட்டுப்பார்க்கலாம். எந்த நூற்றாண்டின் பாரம்பரியம்? எந்தச்சாதியின் பாரம்பரியம்?

பாரம்பரிய உடை என நாம் சொல்வது நாம் இச்சூழலில் உருவாக்கிக்கொள்ளும் ஓர் அடையாளம் மட்டுமே. தட்டுசுற்று வேட்டி கட்டி ஜிப்பா போட்டால் அல்லது பட்டுப்புடவை கட்டிக்கொண்டால் தமிழடையாளம் என நாம் இந்நூற்றாண்டில் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். ஏதேனும் ஒரு சூழலில் அந்த அடையாளம் நமக்குத்தேவை என்றால் அணியலாம்.

உடைகளில் பண்பாடு இல்லை. உடைகள் பண்பாட்டின் மேலோட்டமான தற்காலிக அடையாளங்கள் மட்டுமே. உடைகளுக்கு அப்பாலுள்ள பண்பாடு பற்றிய பிரக்ஞை இல்லாத நிலையிலேயே உடைகளைப்பற்றி அலட்டிக்கொள்கிறோம்

ஜெ

முந்தைய கட்டுரைகாந்திராமன்
அடுத்த கட்டுரைநாய்களும் பூனைகளும்