சூழல் கடிதங்கள்

வணக்கம். வேளச்சேரியில், பள்ளிக்கரணைக்கு அருகில் என் வீடு. கோவிலுக்கு சொந்தமான கருவேல மரங்கள் நிறைந்த ஒரு ஏக்கர் நிலத்தை அடுத்தது எங்கள் வீடு. google maps இல் பார்த்தால் இந்த இடத்திலேயே கொஞ்சம் பசுமையாக இருப்பது இந்த நிலம் மட்டும்தான். மழைக் காலத்தில் தண்ணீர் சேர்ந்து கொசு,பாம்பு, தவளை என்ற பல ஜந்துக்களும் வரும், மழை தொடங்கிவிட்டால் தவளைகளின் சத்தம் 24 மணி நேரமும் கேட்க்கும். கோடை காலங்களில் பல விதப் பறவைகள் இந்த சிறிய இடத்திற்கு வரும். கடந்த 25 வருடங்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் இந்தவருடம் எத்தனையோ வகையான புதிய பறவைகள் தென்படுகின்றன. பல வண்ணத்தீட்டல்களுடன் , பறவைகள்,பெரிய வால், கொண்டையெல்லாம்வைத்த சிறிய குருவிகள். வால்பாறையிலும், ஹிமாச்சல் பிரதேஷிலும் பார்த்த, கேட்ட பறவை சத்தங்கள். படத்தில் மட்டுமே பார்த்த சுண்டு விரல் அளவு குருவியெல்லாம் தென்படுகிறது. காலையில்எழுதிருக்கும்போதே ஒரு ரம்மியமான அனுபவம். இது பள்ளிக்கரணையில் ஏற்பட்ட மாற்றத்தினால் என்றால், நாம் இத்தனை நாள் எதை இழந்துகொண்டிருந்தோம் என்ற உணர்வு மூச்சை அடைக்கிறது. இந்த இடத்தின் அருகில் இருக்கும் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் காரர்கள் ஒரு நாளைக்கு மூட்டைக் கணக்கில் குப்பை கொட்டுகிறார்கள். கோவில் அதிகாரிகளிடம் சொன்னால், “அங்கே பார்க்கிங் வரபோகிறது சார், வந்தால் சரியாகிவிடும்” என்கிறார்கள். யார் யாரோ வந்து அதிகார தோரணையுடன் பார்த்துவிட்டுச் செல்கிறார்கள். யாருக்கும் பறவைகள் ஏதும் தென்படவில்லை போலும். எப்பொழுதும் புல்டோசர்கள் வரலாம் என்ற நிலை. கோகுல் அன்புள்ள கோகுல், 1984 வாக்கில் நான் சென்னைக்கு வரும்போது பள்ளிக்கரணை, புழல் போன்ற பகுதிகளில் நண்பர்களுடன் செல்வேன். அருகே ஒரு நகரம் இருப்பதாகவே தெரியாது. வண்டலூர் அருகே அடர்காடு தொடங்கிவிடும். நகரம் ஒரு பெரிய ஆலை. அது கழிவுகளை வெளியேற்றிக்கொண்டே இருக்கும். நம் நாட்டில் எந்த நகரத்திலும் உள்கட்டமைப்புகள் திட்டமிட்டு உருவாக்கப்படுவதில்லை.அதன் விளைவுகளை நாம் தீவிரமாக அறிய ஆரம்பித்திருக்கிறோம். ஜெ மதிப்பிற்குரிய ஜெ , இது ஒரு நல்ல முயற்சியாகத் தோன்றுகிறது. https://www.facebook.com/thenaturetrustwildlifeconservation உங்கள் மகனுக்கு இதில் விருப்பம் இருக்கலாம் நேரம் இருந்தால் உங்கள் இணைய தளத்தில் பதிவு செய்யவும் நன்றி ஆனந்த் சுந்தரம்

முந்தைய கட்டுரைஏற்காடு இலக்கியமுகாம் – வானவன்மாதேவி
அடுத்த கட்டுரைபழங்கள் – இளம் விதவைகளுக்கு இலவசம்- நதன் இங்கிலான்டர்