வணக்கம் சார்,
என் பெயர் ஆ.மணிமாறன்.வயது 32.நான் வேதாரண்யத்தில் வசித்து வருகிறேன்.உங்களின் “அறம்” என்ற நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.இன்னும் படித்து முடிக்கவில்லை.இருப்பினும் உங்களுக்கு எழுத வேண்டும் என்ற ஆவலினால் எழுதுகிறேன்.இப்படியும் உண்மை மனிதர்கள் இருக்கிறார்களா? இவர்களைப் போல் நாம் ஏன் இல்லை என்ற கேள்வி என் மனதுக்குள்?.யானை டாக்டரைப் படிக்கும் போது யானையை மதிக்க வேண்டும்.அனைத்து விலங்குகளையும் நம்மைப் போல் பாவிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.திருவனந்தபுரத்தின் சாகிப் நினைத்தால் எப்படி இது சாத்தியம்?? என் வாழ்க்கையில் நான் சுமந்த கொடிய நோய் பசி. கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை.எத்தனை சத்தியமான வார்த்தைகள்.திருவனந்தபுரத்தின் சாகிப் மிகவும் உயர்ந்த மனிதர்(மருத்துவர்).என் விமர்சனம் தொடரும்.
இப்படிக்கு
ஆ.மணிமாறன்
வேதாரண்யம்
அன்புள்ள மணிமாறன்
அறம் தொகுதியில் உள்ள கதைகளில் வரும் எல்லா மனிதர்களும் உண்மையானவர்களே. அவர்கள் அபூர்வமானவர்கள் என்பதனால்தான் அவர்கள் எழுதப்படும் தகுதி பெறுகிறார்கள்.
உலகம் என்பது பொதுமனிதர்களால் அல்ல விதிவிலக்குகளாலேயே தீர்மானிக்கப்படுகிறது. ‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’ என்ற வரியின் பொருள் அதுவே
ஜெ
அன்பு ஜெயன்,
பல தீவிரமான, மாறுபட்ட தளங்களில், இத்தனை வருடங்களாக இவ்வளவு தீவிரமான படைப்பூக்கத்துடன் இயங்கும் தங்களின் வேர்கள் எங்கு இருக்கின்றன? தங்கள் இயங்கு சக்தியின் எரிபொருள் எது? தங்கள் இளமைக் கால வாழ்க்கையா? தங்கள் விழுமியம் சார்ந்த லட்சிய வேட்கையா? தங்களின் வாசிப்பு உலகம் வழி வந்ததா? கருவிலே திருவானவரா? இல்லை பலரும் சொல்வது போல் கலைமகள் கருணையேதானா?
தங்களின் அறம் தொகுதி வாசித்தேன். ரத்தமும் சதையுமான நிஜ மனிதர்களின் கதைகள். ஆயினும் இவைகளை அவர்களே சொல்லி இருந்தால் கூட இவ்வளவு தாக்கம் இருந்திருக்குமா என்பது சந்தேகமே. அவர்கள் வாழ்வை, அதில் இருந்த அறத்தைத் தங்களின் கனல் போல சுடரும் படைப்பாற்றல் மூலமே நான் பெற்றேன், நன்றிகள் பல.
குழந்தைகளுக்கு (ஒன்று குமரன் ஆகிவிட்ட போதிலும்) என் அன்பை சொல்லவும்.
வணக்கம்.
அன்பன்,
ரமணா.
அன்புள்ள ரமணா,
பலமுறை சொன்னதுதான். இரு புரிதல்கள். ஒன்று, வாழ்க்கையில் செய்யவேண்டியது என்ன என்றும் எவ்வளவு செய்யமுடியும் என்றும் அந்தரங்கமாக உணர்வது. இரண்டு, நேரம் அதிகமில்லை, வாழ்க்கை மிக அரிதானது என்ற புரிதல். அவையே என்னைத் தொடர்ச்சியாக செயல்படச்செய்கின்றன
அவ்வாறு செயல்படுவதற்கான முக்கியமான இன்னொரு அடிப்படையும் உண்டு. நான் என் புலன் சார் இச்சைகளை என் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன். ஆகவே எப்போதும் எவரையும் சுரண்டும்படி ஆவதில்லை. எந்த ரகசியத்தையும் பேணவும் வேண்டியதில்லை. அது அபாரமானதோர் அகச்சுதந்திரத்தை அளிக்கிறது
ஜெ
டியர் ஜெயமோகன்,
http://www.youtube.com/watch?v=TQCM9WhukhI
அவருடைய கதைகள் பல வாசித்திருக்கிறேன். முக்கியமாய் “ஜன்னல்” என்னை மிகவும் ஆட்கொண்டது.
என் தந்தையிடம் “சிறுவயதில் என்னை நீங்கள் சுந்தர ராமசாமியிடம் அறிமுகம் செய்திருக்கலாம்” என்று பிற்பாடு கவலை தெரிவித்திருக்கிறேன். மீனாட்சிபுரத்தில் என் தந்தையின் நகைக்கடை இருந்தது. என் தந்தை அவரை அடிக்கடி பார்த்திருப்பதாகக் கூறினார். மேன்மக்களின் உறவு வளரும் மனதுக்கு முக்கியம் என்று இப்போதுதான் புரிகிறது.நீங்கள் அதில் அதிர்ஷ்டக்காரர்.
ராமலக்ஷ்மன். எஸ்
பெங்களூர்
அன்புள்ள ராமலட்சுமணன்
இந்தப்பேட்டிக்கு நான் முன்னரே இணைப்புக் கொடுத்திருக்கிறேன் என நினைக்கிறேன்
சமீபத்தில் நித்ய சைதன்ய யதியின் பேட்டி ஒன்றை டிவியில் பார்த்தேன். அபூர்வமான படச்சுருள். மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் பிகெ பாலகிருஷ்ணனோ எம் கோவிந்தனோ அப்படிப் பதிவாகவே இல்லை என்பதும் கூடவே நினைவுக்கு வந்தது
ஜெ