கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,

ஒரு கதை எழுதப்பட வேண்டுமா வேண்டாமா என்பதை தீர்மானம் செய்வது எப்படி?

எனக்கு நடந்த அனுபவங்களை நான் கதையாக எழுதி , திரைப்படமாக எடுக்க விழைகிறேன் . இது படங்களில் வேலை பார்க்கும் Post Production Artists பற்றிய இன்றைய நிலை . இவர்களையும் Artist என்றுதான் அழைப்பது வழக்கம் . அதில் பல்வேறு படிநிலைகள் இருந்தாலும் , ஆரம்ப நிலையில் மட்டுமே வருடக் கணக்காக ,வேலை செய்து, சோர்ந்து இந்த field  வேண்டாம் என்று வெறுத்து ஒதுங்கி நின்றவர்கள் பலர் இருந்தாலும், இன்னமும் புதிதாக உற்பத்தி செய்யப்பட்டே இருகிறார்கள் . படங்களில் காணும் ஐந்து நிமிட கிராபிக்ஸ் காட்சிகளுக்கு ,மாதக்கணக்கில் பெரிய உழைப்பு தேவைப்படும் . அதில் Manpower சார்ந்த வேலைகள் மட்டுமே இந்தியாவில் அதிகம் செய்கிறோம் .அதிக நேரம் எடுக்கும் உலகத்திலே உள்ள மிக boring ஆன வேலை(Roto & Paint artist) அது. அந்த வேலைக்குத்தான் நிறைய இளைஞர்களை வேலைக்கு எடுப்பார்கள் . ஐந்து ஆறு நாட்கள் தூக்கம் இல்லாமல் , பசியோடு வேலை செய்தாலும் குறைந்த பணமே கிடைக்கும் . சில நேரங்களில் அதுவும் கிடையாது . இரு வேளை சாப்பாடு மட்டும் , உயர் அதிகாரியை காக்கா பிடித்து வாங்கிக் கொள்ளவேண்டும் .

இதைப் போன்ற சோர்வான தருணங்கள் நிறையவே உள்ளது . படங்களில் எங்கள் பெயர் கூட எப்போதாவது இறுதியில் வரலாம் . Outsourced project ஆக இருந்தால் அதை எல்லாம் எதிர்பார்க்க முடியாது

Independent ஆக இந்த கிராபிக்ஸ் அனிமேஷன் துறையில் , வெளிநாட்டவர்கள் சாதனை படைப்பதை நான் அவர்களின் நேர்காணலில் படித்து உள்ளேன் . ஏழு நிமிட, பத்து நிமிட அனிமேஷன் படங்களுக்கு தனியாளாக நான்கைந்து வருடங்கள் அயராது வேலை செய்து , பார்ட் டைம் பார்த்துக் கொண்டு இதை செய்வார்கள் .

இங்கும் அது போன்று ஒரு துடிப்பு எனக்கு உள்ளதா என்றால் , முழு நம்பிகையோடு முடியும் என்று என்னால் சொல்ல முடிவது இல்லை. ஏழு மாதம் முயன்று தோற்றுப்போய் இருக்கிறேன் , மூன்று நிமிடப்படத்திற்காக

இதை எங்களின் திறமையின்மை என்று என்னால் அணுகமுடியவில்லை

நான் இதை எழுதி , சொல்லக்கூடிய ஒன்று தான் என்று எப்படி தீர்மானிப்பது . பொதுவாக இந்தக் கதை சொல்லப்படவேண்டும் என்று எதனால் தீர்மானம் செய்கிறீர்கள் .

துன்பத்தில் இருக்கும்போது உன்னைவிடத் தாழ்ந்த நிலையில் அவதிப் படுபவர்களைப் பார்த்து அமைதி கொள்வது போன்று ஏழாம் உலகத்தில் வருபவர்கள் வாழும் அவல நிலையைப் பார்க்கும்போது , எங்கள் கஷ்டம் குறைந்ததுதான் . அப்படியெனில் நான் இதை எழுதவேண்டுமா ??

நரேந்திரன்

அன்புள்ள நரேந்திரன்

பொதுவாக நமக்குத் தோன்றும் ஒரு விஷயம் என்னவென்றால் வாழ்க்கையின் துயரம், சிக்கல் ஆகியவை இலக்கியத்துக்கான கதைக்கருக்கள் என்று

ஆனால் அதுவல்ல உண்மை. துயரமோ சிக்கலோ உவகையோ பரவசமோ ஒரு பக்கம்தான். மறுபக்கமும் தேவை. அந்த மறுபக்கத்துடன் கொள்ளும் உறவில், அந்த சந்திப்புப்புள்ளியில் மட்டுமே இலக்கியம் உள்ளது.

ஒரு இழப்பு நமக்கு மிகப்பெரிய துயரத்தை அளிக்கலாம். ஆனால் அந்த இழப்பின் மூலம் நாம் ஒன்றை அடைந்தோம் என்றால்- அது அறிதலாகக் கூட இருக்கலாம்- அந்தப்புள்ளியில் கதை இருக்கிறது

ஒன்று எழுதப்படவேண்டுமா என தீர்மானிக்கும் கூறு இதுதான். அதில் அதன் மறுபக்கம் தெரிகிறதா? மண்ணில் தெரியுது வானம் என்று சொல்லும்படியாக? அனுபவங்களில் இருந்து திரண்டு வருவது என்ன? என்ன மிஞ்சுகிறது? அதுதான் எழுதப்படவேண்டியது

ஜெ

அன்புள்ள ஜெ,

தேடியவர்களிடம் எஞ்சுவது வாசித்தேன்

நம்மைப் பற்றி நாம் செய்யும் எந்த (எல்லா) அனுமானமும் சிதையும்போதுதான் புதிய வாசல் திறக்கிறது . அதை கவனிக்க மறந்தவர்கள் வாழ்வில் தோற்று விட்ட தாக எண்ணித் தன்னைத் தான் சிதைக்கிறார்கள் . புதிய திறப்பை உணர்ந்தவர்கள் .அடுத்த நிலையை அடைகிறார்கள் . வாழ்வு என்பது மற்றவையுடன் மோதி உடைப்பது அல்ல, நாம் உடைவதுதான். அவைதான் நம்மில் மாறுதல் உண்டாக்கும் . இதை மனத்தில் ஆழமாக விதைத்தாலே மெல்ல மாறுதலை உணரலாம் .

பாஸ்கரன்

அன்புள்ள பாஸ்கரன்,

உண்மைதான்

ஆனால் அந்த வீழ்ச்சியும் மறு எழுச்சியும் எப்போதும் வலிமிக்கவை. அந்தத் தேடல் எந்த அளவுக்குத் தீவிரமானதோ அந்த அளவுக்கு அந்த வீழ்ச்சி வலியளிப்பது

ஜெ

பெருமதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு…….

வணக்கம்…..நான் தங்களது தளத்தை நீண்ட நாளாக வாசித்துவருகிறேன்…… எனக்குள் இருந்த பல கேள்விகளுக்குத் தாங்கள் மற்றவர்களுக்கு அளித்த விரிவான பதில்கள் மூலம் விடைகள் கிடைக்கப்பெற்றேன்……

சமீபத்தில் தாங்கள் எழுதிய ” இப்படி இருக்கிறார்கள் ” என்ற கட்டுரை [அல்லது கருத்து ] தொடர்பாக இணையதளங்களில் நடந்து வரும் விவாதங்களை கவனித்துவருகிறேன்…..என்னைப்பொறுத்தவரை தங்களை விமர்சிப்பவர்களில் பெரும்பாலானோரின் உளவியல் ஒன்றுதான்…. மூளைச்சலவை செய்யப்பட்டவர்களின் வெற்றுப்புலம்பல்கள் அவை……. நீங்கள் குறிப்பிட்ட அந்த பாண்டிச்சேரி நபரின் அரசியல் பின்னணியை நீங்கள் குறிப்பிட்டதே இத்தனை அலம்பல்களுக்கும் காரணம்…..அதைக் குறிப்பிடாமல் வெறுமனே ஒரு பெரியவர் என்ற அளவில் நீங்கள் நிறுத்தியிருந்தால் இவ்வளவு எதிர்வினைகள் வந்திருக்காது…..காரணம் இவர்கள் தங்களைக்குறித்து உருவாக்கிவைத்துள்ள பிம்பம்……தகுதியற்றவர்களை அளவுக்கு மீறிப் புகழ்வது அவர்களின் கலாச்சாரம்……

உதவி விரிவுரையாளரைப் பேராசிரியர் என்பார்கள் , கிட்டத்தட்ட முப்பது ஆண்டுக் காலம் படிக்கும் பழக்கத்தையே நிறுத்தி விட்டவரை நடமாடும் பல்கலைக்கழகம் என்பார்கள் , சீனாவுக்கு சீனா போட்டு சிந்தனைச் சிற்பி என்பார்கள்…..இம்மாதிரியான புகழுரைகளுக்கெல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் தகுதியானவர்கள் தானா என்பதைப்பற்றி யோசிக்கக்கூட மாட்டார்கள் …..

தலைவர் சொல்வதே வேதவாக்கு என்றே பழக்கப்பட்டவர்களிடம் இதைத்தவிர வேறு எதை நாம் எதிர்பார்க்க முடியும்? தாங்கள் எதைச்சொல்ல வந்தீர்களோ அது அழுத்தமாகப் பதிவாகிவிட்டது……நீங்கள் சொல்லியது முற்றிலும் உண்மை என்பது இதுபோன்ற எதிர்வினைகள் மூலம் உறுதியாகிறது…….அந்த அளவில் நல்லதே நடந்திருக்கிறது……..நன்றி…..

இப்படிக்கு

சான்றோன் [ சி.சரவணக்குமார் ]

அன்புள்ள சரவணக்குமார்

ஒரு பொதுச்சூழல் அரசியலிலானாலும் இலக்கியத்தினாலும் நுண்மைகளை அழித்துச் சமப்படுத்தக்கூடியதாகவே இருக்கும். நாம் அதற்கு எதிரான போர் வழியாகவே நம் ஆளுமையை, தனித்தன்மையைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்

மொண்ணைத்தனம் என நான் சொல்வது இந்தப் பொதுத்தன்மையை மட்டுமே தன் ஆளுமையாகக் கொண்டிருப்பதை மட்டும்தான்

ஜெ