ஊமைச்செந்நாய் கதை பற்றி எனக்கு வந்த ஒரு கடிதம் சுவாரசியமான ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டது
‘ஊமைச்செந்நாய் கதையில் வெள்ளைக்காரன் பேசும் ஆங்கிலம்கூட சரியாக இருந்தது’ என்றது அது.. ‘வெள்ளையர் அக்காலகட்டத்தில் பேசிய சில வசைச்சொல்லாட்சிகள் நம்முடைய கிராமத்து மக்களின் நினைவில் கூட உள்ளன. அவை இந்திய ஆங்கிலமாகவே நிலைத்துவிட்டன. உதாரணம் கண்ட்ரி புரூட். அத்தகைய சொல்லாட்சிகளை அந்த வெள்ளையன் வாயில் இருந்து கேட்டபோது நீங்கள் எதையெல்லாம் ஆய்வுசெய்திருக்கிறீர்கள் என்ற ஆச்சரியம் ஏற்பட்டது’
இம்முறை எனக்கு ஆச்சரியம். ஏனென்றால் நான் அப்படி ஆராய்ச்சி ஏதும் செய்யவில்லை. ஒரு புனைவுக்கான களத்தை ஆர்வம் காரணமாக அறியவேண்டுமே ஒழிய ஆராய்ச்சிசெய்யக்கூடாதென்பதே என் கொள்கை. எழுதும்போது தகவல்களைச் சொல்லும் நினைவு என்பது கற்பனையை குறுக்கும் இரும்புத்தளை. படைப்பு என்பது எனக்கு ஒரு பெரிய விழ்ப்புநிலை கனவுதான். கனவுபோலவே நான் அறிந்தவை என் அச்சங்கள் ஆவல்களுடன் கலந்து இன்னொன்றாக படைப்பில் இருக்கும். நானே அதை வாசித்து வியப்பேன்.
ஆகவே படைப்பில் உள்ள பிழைகள் எல்லாமே படைப்பின் பகுதி என்றே நான் எண்ணுவேன். நாகர்கோயில் மணிமேடைக்கு அருகே ஏரி உள்ளது என நான் எழுதினால் அது என்னைப்பொறுத்தவரை பிழை அல்ல. உண்மையில் ஏரி இல்லை என்பது யதார்த்தம். என் கதையில் ஏரி உள்ளது என்பது புனைவுயதார்த்தம். ஏன் அந்தப்பிழை அங்கே நிகழ்ந்தது என்றுதான் வாசகன் யோசிப்பான். என் கனவுக்குள் அறிவார்ந்த முறையில் நுழைய அவனுக்கு அது நல்ல வழி.
நான் பின்னர் கண்டுகொண்டேன். அந்த ஆங்கிலத்தை நான் வடுவூரார் காலகட்ட நாவல்களில் இருந்துதான் எடுத்துக்கொண்டேன் என. அந்த துரையுடன் மெல்லிய சாயல் கொண்ட கதாபாத்திரம் எங்காவது இருக்கலாம். தேடிப்போனால் சிக்கலாம்
பலவகையான கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. முடிவின்மையின் விளிம்பில் போன்ற ஒரு கதை எந்த மனநிலையில் உருவானது என்பதை இன்று என்னாலேயே ஊகிக்க முடியவில்லை. அது சொல்வதற்கும் அப்பால் சொல்லத்தயங்கி நின்றுவிட்ட விஷயங்கள் உள்ளன என்று படுகிறது. அவையே இக்கதைகளை இலக்கியமாக்குகின்றன.அவற்றை வாசிக்கும் வாசகனையே நான் நாடுகிறேன்.
தூக்கத்தில் நடப்பவர்களைப்பற்றி நான் நினைத்துக்கொள்வதுண்டு. அவர்கள் வெளியே புறவுலகில் நடமாடுகிறார்கள். உள்ளே கனவில் வாழ்கிறார்கள். அந்த நடையில் அவர்கள் உள்ளே செல்லும் பயணம் என்னவாக இருக்கும்? இவற்றை தூக்கத்திலாடிய நடனங்கள் என்பேன். நான் இன்னும் பெரிய ஓர் நடனத்தில் உள்ளே வாழ்ந்திருந்தேன் அப்போது.
ஜெ
[நற்றிணை வெளியீடாக வந்திருக்கும் ஊமைச்செந்நாய் மறுபதிப்பின் முன்னுரை]