பொன்னொளிர்தடங்கள்

எர்ணாகுளம் அருகே தங்கியிருந்தபோது தினமும் காலையில் கடலோரம் நடக்கச்செல்வேன். அதிகாலை இருளில், யானையின் தந்தங்கள்போல அலைநுரைக்கீற்றுகள் தெரியும் கடலைப் பார்த்தபடி நடந்தேன். நடக்கையில் நான் என்னை இழந்து விடுவதுண்டு. எங்கோ ஒரு இடத்தில் ஒளிவழியும் வான்சரிவைப் பார்த்தபடி நின்றேன். மீண்டும் அவ்வழியாக திரும்பி வந்தேன்.

பரிசுத்தமான கடற்கரை. முந்தையநாள் மழைபெய்த மணற்பரப்பு. அலைநாக்கின் ஈரம் படிந்து படிந்து குமிழியிட்டு வற்றிக்கொண்டிருந்த பரப்பில் காலைச்செம்மை. அந்த ஒளிமணற்பரப்பில் ஒரு நீண்ட தங்கச்சங்கிலி போல கிடந்த இரண்டு பாதங்களின் தடங்களைப்பார்த்தேன். யார் அது என எண்ணிய மறுகணமே என் உடல் சிலிர்த்தது, அது எனது பாதத்தடம்.

அவ்வளவுதான். சில மணிநேரம்கூட அது இருக்காது. காற்றும் கடலும் சேர்ந்து அதை உண்டுவிடும். ஆனால் அதற்கு முன் கடலும் வானும் அதைப் பொன்னாக்கிப் பார்த்திருக்கின்றன.

இந்தக்கதைகளை இத்தொகுப்புக்காக மீண்டும் வாசிக்கையில் அப்படித்தான் உணர்கிறேன். ஓர் எளிய மனிதனின் சாதாரண தடங்கள்தான். ஆனால் இவை ஒருகணமேனும் பொன்னென ஒளிவிட்டிருக்கின்றன.

ஜெ

[நற்றிணை வெளியீடாக வரவிருக்கும் ஜெயமோகன் சிறுகதைகள் தொகுதியின் நான்காம் பதிப்புக்கான முன்னுரை]

முந்தைய கட்டுரைபுறப்பாடு II – 15, நுதல்விழி
அடுத்த கட்டுரைகாந்தியின் லண்டன்