விஷ்ணுபுரம்,யூதமரபு,தியானம்:ஒருகடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

இந்த கடிதம் நீங்களும் குடும்பமும் மகிழ்ச்சியும் நலமுமாக இருக்கையில் வந்தடையுமென நம்புகிறேன்

உங்கள் எழுத்துக்கள் பெரும்பாலும் அனைத்தையும் படித்திருக்கிறேன். உங்கள் நூல்களை தொடர்ந்து கேட்டு வருவதால் கவிதா பதிப்பகத்தாரே என்னை அறிவார்கள்.:)

அவை தீவிரமான படைப்புகள் என்று உணர்ந்து பலதடவை படித்துள்ளேன். குறிப்பாக கொற்றவை பல இரவுகளில் என்னை தீவிர மனநிலைகளுக்கு கொண்டு சென்றிருக்கிறது. விஷ்ணுபுரம் வாசிக்கும்போது பல நுட்பமான விஷயங்களை தொடர்ந்து உணர்ந்திருக்கிறேன். கற்பனையையும் உண்மையையும் நீங்கள் கலந்துள்ள விதம் காடு போன்ற நாவல்களில் என்னை மிகவும் கவர்ந்தது. பின்தொடரும் நிழலின் குரலை கடந்த ஒருவருடமாக பல சந்தர்ப்பங்களிலாக படித்துக் கொண்டிருக்கிறேன்.

‘விசும்பு’ நான் விரும்பிப்படித்த தொகுதி. அறிவியலின் தொடுகை [ அழுத்தமான!] உள்ள தத்துவார்த்த கதைகள் அவை. எழுதுவது மகத்தான அனுபவமே. வாசிப்பதும் அதர்கு சற்றும் குறைந்தது அல்ல

இணையத்தில் உலவிக் கொண்டிருந்தபோது யூத மத ஞானி [cabbalist] ABULAFIA, ABRAHAM BEN SAMUEL பற்றி படிக்க நேர்ந்தது. கொற்றவையிலும் விஷ்ணுபுரத்திலும் பேசப்பட்ட பல விஷயங்களுக்கு சமானமான சிந்தனைகளைப் படித்து வியந்தேன். குறிப்பாக மொழிக்கும் மெய்ஞானத்துக்குமான உறவைப்பற்றிய பகுதிகள்.

பார்க்க:

http://www.jewishencyclopedia.com/view.jsp?artid=699&letter=A

கூகிளில் Abulafia வின் தியான உத்திகளைப் படிக்கும்போது இதைச்சார்ந்த பல நுண்ணிய தகவல்கள் கிடைக்கின்றன.

அதை உங்களுடன் பகிர விரும்பியே இதை எழுதினேன்

அன்புடன்
ஷிவானி அருணாச்சலம்

அன்புள்ள ஷிவானி

உங்கள் கடிதம் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். என் படைப்புகளை நீங்கள் கூர்ந்து படித்திருப்பது நிறைவை அளிக்கிறது. எந்த ஒரு படைப்பும் தனக்குரிய வாசகனுக்காக தேடிக் கொண்டிருக்கிறது, கண்டடையும்போது நிறைவு கொள்கிறது.

என் படைப்புகளில் கொற்றவையே இன்றுவரை எனக்கு மனநிறைவை அளிப்பதாக உள்ளது. அதன் நுண்ணிய மொழி ஆழங்கள் பிற படைப்புகளில் குறைவே. கொற்றவை உங்களுக்கு பிடித்திருப்பதறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்

நீங்கள் சொன்ன சுட்டிகளில் சென்று பார்த்தேன். செமிட்டிக் மதங்களில் ஆதியில் தியானஅம்சங்கள் இருந்தன. அம்மரபு கிறித்தவம், இஸ்லாம் போல பின்னர் நிறுவனமாக்கப்பட்டபோது தியானம் வேண்டாம் பிரார்த்தனை போதும் என்ற நிலை உருவாகியது. பின்னர் கூட்டு ஆராதனை– கான்கிரகேஷன் – மட்டுமே போதும் என்ற நிலை ஏற்பட்டது. மாணிகேயர்கள் போன்ற அழிந்துபட்ட செமிட்டிக் மதங்களிலும் நாஸ்டிக் கிறித்தவ மதங்களிலும் தியானவழிமுறைகள் இருந்துள்ளன.

ஆனாலும் அந்த தியானங்களுக்கும் கீழை மதங்களின் தியானங்களுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு இருமை– டைகாடமி- யிலிருந்து அவர்களால் வெளியே வர முடியாது என்பதே. நன்மைX தீமை கடவுள் X சாத்தான் என்ற இருமை. அது அவர்களின் அடிப்படை உருவகம். கீழையர் ஏதோ ஒருவகையில் முழுமுதன்மை நோக்கி – பிரம்மம் அல்லது தம்மம் – செல்லக்கூடியவர்கள். அது இரண்டின்மை என்ற கருத்துநிலையாக உணரத்தக்கது.

அன்புடன்

ஜெயமோகன்

கிறித்தவ மரபு முந்தைய கட்டுரைகள்

புனித தோமையர் ஓர் அறிமுகம்

விவிலியத்தின் முகங்கள் – ஓர் அறிமுகம்

மறைக்கப்பட்ட பைபிள் :தோமையர் எழுதிய சுவிசேஷம்

விஷ்ணுபுரம் முந்தைய கடிதம்

விஷ்ணுபுரம்:இருகடிதங்கள்

முந்தைய கட்டுரைகொரியர் தபால் ஓர் அறிவிப்பு
அடுத்த கட்டுரைஇயற்கை உணவு : என் அனுபவம்