படைப்புகள் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

கடந்த 5 வருடமாக நான் உங்களின் வலைத் தளத்தைப் படித்து வருபவன், உங்களின் ரப்பர், கன்னியாகுமரி, காடு, ஏழாம் உலகம், அறம், கொற்றவை, இன்றைய காந்தி, அனல்காற்று, நாவல், மற்றும் உங்களின் சில சிறுகதைகளைப் படித்துள்ளேன், இருந்தாலும் “விஷ்ணுபுரம்” நாவல் வாங்குவதற்குக் கொஞ்சம் தயக்கம் இருந்தது ஏன் என்றால் (உங்களுடைய புத்தக வெளியீட்டு விழாவில் திரு. ஜெயகாந்தன் அவர்கள் “விஷ்ணுபுரம்” நாவல் அதன் கதவுகளை சாத்திக் கொண்டது, என்னால் உள்ளே செல்ல முடியவில்லை என்று கூறி இருந்தார்.)

இப்போது ” நியூ புக் லேண்டில் ” ஆர்டர் செய்து வாங்கி விட்டேன்.. “விஷ்ணுபுரம்” நாவலை எப்படிப் படிக்க வேண்டும் என்று “விஷ்ணுபுரம்” வலைத்தளத்தைப் படித்து விட்டேன். நாவல் படிக்கும் முன்பே எனக்கு ஒருவித ஆர்வமும், பரவசமும் வந்துவிட்டது..நிச்சயம் “விஷ்ணுபுரம்” வாசலைத் திறந்து அதன் உள்ளே செல்ல முடியும் என்ற நம்பிக்கை இருகின்றது.(எனது தாயும் “விஷ்ணுபுரம்” நாவல் படிப்தற்கு மிகுந்து ஆர்வமாக உள்ளார், அவரும் உங்களின் வாசகி..முக்கியமாக உங்களின் “காடு” நாவல் என் அம்மாவின் விருப்பமான நாவல்.)

“விஷ்ணுபுரம்” நாவல் படிப்பதற்கு முன்பு உங்களுக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்தேன்.

இப்படிக்கு

ரா.அ.பாலாஜி

பெங்களூர்

அன்புள்ள பாலாஜி

வாழ்த்துக்கள். விஷ்ணுபுரம் என்பதற்காகச் சொல்லவில்லை. ஒரு பெரியநாவலைப் படிப்பதென்பது, அதிலும் இளமையில் படிப்பது, ஒரு அழகிய மெய்நிகர் உலகை நம் கற்பனையில் ஆக்கி அதனுள் வாழும் அனுபவம்தான்.

ஜெ

அன்புள்ள ஜெ

மூன்றாவது முறையாக மறுபடியும் படித்தேன். முடியும் போது மறுபடியும் ஈரக் கண்கள் தான்.

என்ன மகத்தான மாமனிதர் டாக்டர் கே.

கடந்த 2 மாதங்களாக மனவளக் கலைப் பயிற்சி மையம் மூலமாக உடல், மனப் பயிற்சிகளைப் பயின்று வருகிறேன்.

அவர்கள் நம் மனதிற்கும் இயற்கைக்கும் இணக்கம் ஏற்படுத்திக் கொண்டால் இய
ற்கையைப் புரிந்து கொள்ளவும் இணங்கியும் வாழ முடியும் என்று பயிற்றுவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

டாக்டர் கே செந்நாய்களிடமும் யானைகளிடமும் நெருங்கிய போது அவர்கள் சொன்ன இணக்கம் என்ன என்பது நன்கு எனக்கு விளங்கியது.

டாக்டர் சாந்தா அவர்களின் சேவையும் டாக்டர் கே அவர்களின் சேவையும் உன்னதமானது.

யானைகளின் அந்தக் கடைசியில் பிளிறல் பத்மஸ்ரீ அவார்டுக்கும் மேலானதாக எனக்குப் பட்டு மெய் சிலிர்த்துப் போனது.

அதை எழுதிய விதத்திற்கும் டாக்டர் கேவை அறிமுகம் செய்ததற்கும் நன்றிகள் கோடி.

மேலும் ஆங்கில மொழியாக்கம் பற்றி இன்றே எனக்குத் தெரிந்தது, அதை என் மகள்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி இருக்கிறேன். அதற்கும் நன்றி.

அன்புடன்

மாலா

அன்புள்ள மாலா,

நன்றி

யானைடாக்டரை இப்போது வாசிக்கும்போது அது ஒரு நவீனப்புனைவு என்பதை விட புராணம் என்றே பட்டது. இப்படித்தான் மாமனிதர்களின் நினைவுகளையும் அவர்களின் வாழ்க்கைச்செய்தியையும் நினைவில் பேணினார்கள். அந்தப்புராணத்தன்மையே அதைக் குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கிறது

ஜெ

முந்தைய கட்டுரைதெய்வமிருகம்-கடிதம்
அடுத்த கட்டுரைசுதந்திரமும் கனவும்