சுதந்திரமும் கனவும்

அன்புள்ள ஜெ,

ராஜாஜியின் ஜெயில் டைரி என்று நூல் படிக்கக்கிடைத்தது. 1922ல், தன் நாற்பத்தி நாலாம் வயதில், வேலூர்ச்சிறையில் இருந்த மூன்று மாத காலத்தில் ராஜாஜி ஒரு நாள் தவறாது எழுதிய டைரிக்குறிப்புகள். படிக்கப்படிக்கப் பக்கத்துக்குப்பக்கம் அவர்மேல் எனக்கிருந்த எதிர்மறையான பிற்போக்கு பிம்பம் உடைந்துகொண்டேபோனது. முதலில், என்னைக்கவர்ந்த, மீண்டும்மீண்டும் படிக்கச்செய்த பல பத்திகளிலிருந்து மூன்றைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

“ஒத்துழையாமை என்பது அரசியல் லட்சியம் ஒன்றை அடைவதற்காக ஏற்படுத்தப்பட்ட சாதனம் மட்டுமன்று. வாழ்க்கையை எவ்விதம் நடத்தவேண்டும் என்னும் தார்மீக நெறியைக் காட்டுவதே அது. அநியாயத்துடன் ஒத்துழையாமலிருப்பதே அவசியம் செய்து தீர வேண்டிய கடமையாகும். ஆங்கிலேயரை நாட்டைவிட்டு விரட்டுவதன்று நாம் ஒத்துழையாமையை மேற்கொண்டிருப்பதன் நோக்கம். நாம் அகப்பட்டுக்கொண்டிருக்கும் அநியாயமாகிய வலையினின்று விடுதலை பெற முயற்சி செய்வது நாம் நிறைவேற்றவேண்டிய கடமையாகும். இது தாற்காலிகமாக மேற்கொண்ட திட்டமன்று; அரசியல் நோக்கத்துக்காக அமைக்கப்பட்ட திட்டமுமன்று. கங்கிரஸ் கூறும் கால எல்லைக்குள் விடுதலை தேட முடிந்தாலும் முடியாவிட்டாலும் ஜனங்கள் இந்த அநியாயமாகிய கேட்டினுடன் ஒத்துழைக்க மறுப்பது இடைவிடாது செய்யவேண்டியதாகும். வேறுமுறைகள் பலிக்கவில்லை என்பதற்காக வகுக்கப்பட்ட முறையன்று இது. எப்படிப் பலனை எதிர்பாராமல் உண்மையாகவும் ஒழுக்கமாகவும் நடக்கவேண்டியது எந்தக்காலத்துக்கும் இன்றியமையாத அறமோ, அப்படியே இந்த ஒத்துழையாமை அறமும் ஆகும். அன்னிய ஆட்சிக்கு அடிமையாகி அதை ஆதரித்து நிற்க மறுப்பது இயற்கையின் நியதியையும் உணர்ச்சியையும் ஆதரமாகக்கொண்டதாகும்.” (பக். 86-87)

“கடுங்காவல் தண்டனை பெற்ற கைதிகள் எல்லோரும் இரவுச்சட்டிகளைத் தூக்கிக்கொண்டுபோகவே செய்கிறார்கள். நாமும் ஏன் செய்யக்கூடாது? நமக்கு தண்டனை விதித்தது தவறு என்று சொல்ல நமக்கு உரிமை கிடையாது. நாமாகத்தானே இப்படி தண்டனை விதிக்கும் நிலையை உருவாக்கிக்கொண்டோம்? சர்க்கார் நம்மை சிறையில் வைப்பதோடு நில்லாமல் இருட்டறையில் போடலாம், இரும்புச்சங்கிலியால் பிணைக்கலாம், அசுத்தமான வேலைகளைத் தரலாம். ஆனாலும் அவற்றையெல்லாம் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டியதே. இரவுச்சட்டிகளைத் தூக்குவதும், கழுவுவதும் இழிவான வேலையென்றும் அதைசெய்வதற்காகவே சிலர் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் எண்ணுவோமானால் நம்மை உலகம் வெகு கேவலமாகவே மதிக்கும். தோட்டி வேலை செய்து எத்தனையோ சத்யாகிரகிகள் புகழ்பெற்றனர். அப்படியிருக்க நாம் மறுத்தால் ஒருக்காலும் நாம் காந்தியடிகளின் உத்தம சிஷ்யர்கள் ஆகமாட்டோம். கடமையிலும் தவறிவிடுவோம்.” (பக்.138)

“சுயராஜ்ஜியம் வந்த உடனே ஜனங்களுக்குச் சந்தோஷம் உண்டாகிவிடாது என்பதை நாம் எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டும். நல்ல அரசாங்கமும் ஏற்பட்டுவிடாது. சுயராஜ்ஜியம் பெற்று நீண்ட நாட்களுக்குப்பின்னும் இவை கிடைக்காது. தேர்தல்களும், அவற்றில் லஞ்ச ஊழலும், அநீதிகளும், செல்வத்தினால் ஏற்படும் அதிகார பலமும், கொடுமையும், நிர்வாகத்தின் திறமையின்மையும் சேர்ந்து சுதந்திரம் நமக்குக்கிடைத்தவுடன் வாழ்க்கை நரகமாகிவிடும். மக்கள் பழைய ஆட்சியை எண்ணி ஏங்குவார்கள். அடிமைப்பட்டுக்கிடக்கும் அவமானத்திலிருந்து இந்த மக்கட்குலம் மீட்கப்படுவது ஒன்றே நமக்குக்கிடைக்கக்கூடிய லாபம். எல்லோருக்கும் கல்வியறிவு கிட்டச்செய்து, அதன்மூலம் நன்னடத்தை, கடவுளிடம் பயபக்தி, அன்பு முதலிய குணங்கள் குழந்தைப்பருவம் முதற்கொண்டே வளருமாறு செய்வதில்தான் விமோசனம் இருக்கிறது. இதில் நாம் வெற்றி அடைந்தால்தான் சுதந்திரம் மகிழ்ச்சிதரும்.” (பக்.108)

சில இடங்களில் தன் காலைப்பிரார்த்தனையுடன் பக்கத்து சிறையிலிருக்கும் இஸ்லாமிய நண்பரின் தொழுகை எப்படி அற்புதமாக இணைந்துகொள்கிறது என்றும் இது புரியாமல் இவ்விரு மதங்களும் எத்துணை காலம் சண்டையிட்டிருக்கின்றன என்றும் எழுதுகிறார். முழங்காலை மறைக்கும் அளவுக்கு ஆடை அணிந்து கொள்ள இஸ்லாமியக் கைதிகளுக்கு அனுமதியளிக்குமாறு சிறையதிகாரியிடம் முறையிட்டு இறுதியில் தொழுகைக்கு மட்டும் நீண்ட ஆடை அணிந்துகொள்ள வழிசெய்கிறார். இதையெல்லாம் படிக்கும்போது பின்னாளில் அவரெடுத்த பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவு, வெள்ளையனே வெளியேறுவுக்கு எதிரான நிலைப்பாடு அதன் மூலமாக சிறையைத் தவிர்த்தது ஆகியவைகள் காலத்தின் கோலமா என்று சிந்திக்கவைக்கிறது.

இதையெல்லாம்விட ஆச்சரியமான விஷயம் ஒன்றுண்டு. சிறையில் தரப்படும் கடும் வேலைகளைப் பொறுக்கமாட்டாது இவரைக் காணுந்தோறும் சக ஒத்துழையாமைக்கைதிகள் “எத்தனை மாதங்களில் சுதந்திரம் கிடைக்கும்?” என்று கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். திலகர் ஆறு வருடங்கள் சிறையில் கஷ்டப்பட்டாரே அப்போதெல்லாம் இவர்கள் இப்படி சிந்தித்திருப்பார்களா? தனக்கு ஒரு சிறு கஷ்டமென்றதும் ஒரே நாளில் உலகமே மாறிவிடவேண்டும் என்று இவர்கள் நினைப்பது என்ன நியாயம்? என்று எழுதுபவர், ‘என்னதான் சுதந்திரம் சமீபித்துவிட்டாலும் அதற்காக அதே நினைப்பாகவா இருப்பது’ என்ற தொனியில் எழுதுவது இவரும் அதையே நம்பியிருந்தார் என்பதையே காட்டுகிறது.

இவ்விடத்தில் நீங்கள் சமீபத்தில் பகத்சிங் தொடர்பான ஒரு பதிலில் குறிப்பிட்டிருந்த சந்திரசேகர் ஆசாத்-நேரு சந்திப்பு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அதில் ஆசாத் 1931ல் நேருவிடம் “எத்தனை மாதங்களில் சுதந்திரம் கிடைக்கும்?” என்று கேட்கிறார். அக்கேள்வியுடன் நேரு வன்முறைப் புரட்சிக்காரர்கள் கொண்டிருக்கும் கற்பனாவாதத்தைப் புரிந்துகொள்கிறார்! அவர்களைப்பற்றிய அவருடைய மதிப்பீடு மாறுகிறது. இவ்விடத்தில் நேருவின் மேல் எனக்கு பச்சாதாபம் ஏற்படுகிறது. தான் சார்ந்திருந்த இயக்கத்தின் தொண்டர்களும் தலைவர்களும் காலம்காலமாக இதே கேள்வியைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அந்த அளவிற்குத்தான் அவருடைய புரிதல் இருந்திருக்கிறது. அந்த அடிப்படையில் வன்முறைப் புரட்சியாளர்களைப் பார்த்து கவலைப்படுகிறார். தன் தலைக்கு மேல் எந்நேரமும் கத்தி தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு வாழ்க்கையிலிருக்கும் வன்முறைப் புரட்சிக்காரர்கள் 1931ல் “எத்தனை மாதங்களில் சுதந்திரம் கிடைக்கும்?” என்று கேட்டதைவிட கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பே 1922ல், தாம் விடுதலையாகப்போகும் நாள் தீர்மானமாகத் தெரிந்த, உயிருக்கு எந்த விதமான ஆபத்துமில்லாத, ஒத்துழையாமத் தலைவர்கள் அதே கேள்வியைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்ததே எனக்கு கற்பனாவாதமாகப்படுகிறது. ஒருவேளை காந்தியும் பகத்சிங்கும் அவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கவில்லையோ என்னவோ?

போகட்டும். நாம் செய்யவேண்டியது ஒன்றுதான். தனிமனித பலவீனங்களை இயக்கங்களின் இயல்பாகவும் குறைபாடாகவும் வரிந்து கொள்வதை கூடுமானவரை தவிர்த்துக்கொள்வதும் அதைக்காட்டி வாதிடாமல் இருப்பதும் தான்.

என் புரிதல் சரியா ஜெ?

அன்புடன்,

சிவானந்தம் நீலகண்டன்,

சிங்கப்பூர்.

அன்புள்ள சிவானந்தம்,

சமீபத்தில் கூடங்குளம் போராட்டக்களத்திற்குச் சென்றிருந்தோம். அங்கே அமர்ந்திருந்த ஒரு பெண்மணியிடம் என்னுடன் வந்த ஒரு நண்பர் சொன்னார் ‘போராட்டத்தோட முடிவு என்னவா இருந்தாலும் இப்ப நீங்கள்லாம் உருவாக்கியிருக்கிற சிந்தனைகளை வச்சு சொன்னாலே இந்த போராட்டம் மாபெரும் வெற்றிதான்மா’

அந்தப்பெண்மணி கொதித்துவிட்டார். ‘என்ன சொல்றிய? போராட்டத்துக்கு வேற என்னத்த முடிவு? கூடங்குளத்தில அணு உலை இருக்கப்பிடாது…வேற முடிவே கெடையாது’ என்றார். நண்பர் பின்வாங்கிவிட்டார்

சிந்திப்பவர்களுக்கும் செயல்வீரர்களுக்கும் நடுவே மிகப்பெரிய வேறுபாடு ஒன்று உண்டு. சிந்திப்பவர்கள் பார்க்கும் எல்லாப் பக்க உண்மைகளையும் செயல்வீரர்கள் பார்ப்பதில்லை. செயல்வீரர்கள் ஒன்றை மட்டுமே பார்ப்பவர்கள். ஆகவே நன்னம்பிக்கை மிக்கவர்கள்.

அரசியலில் சேவைத்தளத்தில் செயல்படுபவர்களைக் கண்டால் இதை உணர்ந்துகொள்ள முடியும். அவர்கள் ஆழமான நம்பிக்கையால் இயக்கப்படுகிறார்கள். எதிர்காலம் மீதும் சகமனிதர்கள் மீதும் விழுமியங்கள் மீதும் தங்கள்மீதும் கொள்ளும் ஆழமான நம்பிக்கைதான் அவர்களின் ஆற்றல். அவர்களிடம் ‘யதார்த்தம்’ பேசி வாதிடுபவர்களைக் கண்டிருக்கிறேன். அவர்கள் பெரும்பாலும் அந்நம்பிக்கையை உடைக்கமுடியாது. முடிந்தால் அந்தச்செயல்வீரரை அவர்கள் செயலற்றவர்களாக ஆக்கிவிடுவார்கள்.

காந்தியும் பகத்சிங்கும் மட்டுமல்ல அன்று அந்தப்போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருமே அழுத்தமான நம்பிக்கையுடன்தான் இருந்திருக்கிறார்கள். நீங்கள் உணரும் இதே விஷயத்தை டக்டர் ராஜேந்திரபிரசாத்தின் சுயசரிதையை 1984இல் வாசித்தபோது நானும் உணர்ந்தேன். சுயசரிதைக்கான எழுத்துவன்மை இல்லாத குறிப்புத்தொகை அது. ஆகவே எந்தவகையான மிகையும் இல்லாதது.

’1917 இல் சுயராஜ்யம் மிக அருகே தெரிந்தது’ என்று சொல்கிறார் ராஜேந்திரபிரசாத். 1916இல் சுதந்திரம் இரண்டுவருடங்களில் வந்துவிடும் என நம்பித்தான் அவர் அரசியலுக்கே வருகிறார். அதற்கு ஒரு வருடம் கழித்துதான் காந்தி இந்திய அரசியலில் நுழைகிறார் என்பதை நினைத்துப்பார்க்கவேண்டும்.ராஜேந்திரபிசாத் போன்றவர்கள் பெரிதும் நம்பியிருந்த சுயராஜ்யம் மாண்டேகு செம்ப்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் மட்டுமாக முடிந்தது.

என்ன நடந்தது? நாம் ஒரு விஷயத்தில் உள்ளே நுழைந்து அதில் நாம் விரும்புவதைச் செய்ய ஆரம்பிப்பதுவரை அந்த விஷயம் என்ன என்று நமக்கு தெரிந்திருப்பதில்லை என்பதுதான் எப்போதுமுள்ள யதார்த்தம். ஒரு சாதாரண வியாபாரமானால்கூட அதில் ஈடுபடுவதற்கு முன் நமக்கு ஆயிரம் கனவுகளும் திட்டங்களும் இருக்கும். உள்ளே நுழைந்து நம் திட்டங்களைச் செய்ய ஆரம்பித்தால் ஏராளமான தடைகள் எழுந்துவரும். அந்த தடைகளைக் கொண்டுதான் அந்த வியாபர உலகத்தின் விதிகளை நாம் புரிந்துகொள்வோம். அதன் ஆழத்தில் செயல்படும் விசைகளை அடையாளம் கண்டுகொள்வோம்.

வியாபாரத்தில் இறங்குபவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் முதலில் ஒரு பலமான அடியைப் பெறுகிறார்கள். பெரும் நஷ்டம் அடைந்தவர்கள் உண்டு. பலவீனமானவர்கள் அந்த அடியில் சுருண்டு வெளியேறி விடுவார்கள். பலமானவர்கள் அந்த அடியில் இருந்து பாடம் கற்றுக்கொள்வார்கள். என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்று புரிந்துகொள்வார்கள். அவர்களின் வெற்றுக்கனவுகள் சரியும். அந்த வியாபாரத்தைப் புரிந்துகொண்டபின் யதார்த்தமான இலட்சியங்களை உருவாக்கி அதைநோக்கிப் படிப்படியாக உறுதியாக முன்னே செல்வார்கள். தோல்விகளில் துவளாமல் அவசரப்பட்டு எதிலும் பாய்ந்தேறாமல் விடாப்பிடியாகத் தொடர்ச்சியாக முயன்று அந்த இலட்சியத்தை அடைவார்கள்.

வியாபாரத்திலாவது உடனடியாகக் கிடைக்கும் சின்ன லாபங்கள் என்னும் கவர்ச்சி உண்டு. சேவை போன்றவற்றில் அதுவும் இல்லை. பெரிய கற்பனைகளுடன் மக்கள்சேவைக்குச் செல்பவர்கள் ஆரம்பத்திலேயே யதார்த்தங்களை உணர்ந்து துவண்டு வெளியேறுவதை, அவநம்பிக்கையாளர்களாக மாறி புலம்புவதைக் காணலாம். அந்த ஆரம்பகால ஏமாற்றங்களின் காற்றிலும் தன் நம்பிக்கையின் கைவிளக்கை அணையாமல் வைத்திருப்பவர்களே உண்மையான சேவைகளைச் செய்கிறார்கள்.அவர்களிடம் ஓர் அபாரமான களங்கமின்மை இருப்பதைக் கண்டிருக்கிறேன்.

இந்திய சுதந்திரப்போரும் அப்படித்தான். ஆரம்பகால ராணுவக்கலகங்களுக்குப்பின்பு இந்தியாவை உலுக்கியது 1870களின் பெரும்பஞ்சம். அத்துடன் இந்தியா துவண்டு சரிந்தது. இந்தியாவின் சமூகக் கட்டுமானங்கள் அழிந்தன. கிராம அமைப்புகள், குறுநில அரசுகள், ஆலயங்கள் மடங்கள் போன்ற மதநிறுவனங்கள் பலமிழந்து அழிந்தன. இந்திய மக்கள்தொகையில் கால்வாசிப்பேர் பட்டினியால் செத்தனர். பலகோடி பேர் அகதிகளாகப் புலம்பெயர்ந்தனர். எஞ்சியமக்களில் பெரும்பாலானவர்கள் பிழைப்புக்காக நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்தனர். அந்த அதிர்ச்சியில் இருந்து இந்தியா விடுபட பல ஆண்டுகளாகியது

உண்மையில் அந்தப்பஞ்சம் இந்தியாவுக்கு சிறியதோர் நன்மையையும் செய்தது. ஆங்கில மனசாட்சியை அது தட்டி எழுப்பியது.இந்தியாவில் செயல்பட்ட சில ஆங்கில இதழாளர்கள் இந்தியாவின் மீது பரிவுடன் எழுத ஆரம்பித்தனர். இந்தியாவின் உரிமைகள் பற்றி அவர்கள் பேசியதே அக்காலத்தைய ஆங்கிலம் கற்ற நடுத்தர , உயர்நடுத்தர வர்க்கத்தினரை தேசிய உரிமைகளைப்பற்றி எண்ணச்செய்தது. 1870களின் பெரும் பஞ்சத்துக்குக் காரணமான மாபெரும் வேலியை அமைப்பதில் பணியாற்றிய ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் இந்திய தேசிய காங்கிரஸை அமைத்ததை உதாரணமாகக் கொள்ளலாம்

ஆரம்பத்தில் இந்திய தேசிய விடுதலைக் கனவுடன் இருந்த அனைவருக்கும் மிகமிக எளிதான ஒரு விஷயமாகவே அது தோன்றியிருக்கும்.இந்தியா என்றால் என்ன, அதன் சிக்கல்கள் என்ன எதுவுமே அவர்களுக்குத் தெரிந்திருக்காது. ஆரம்பித்தபின்னர் ஒவ்வொரு தடைகளாக முன்னால் வரவர அவர்கள் தங்கள் முன்னாலுள்ள சவால்கள் என்ன என்று அறிந்திருப்பார்கள்.

ஆரம்பத்தில் தெரியவந்த தடை என்பது இந்தியா என்பது கருத்தியல்ரீதியாகவே ஒன்றல்ல என்பதுதான். இரண்டு இந்தியா இருந்தது. பழமையான மதிப்பீடுகளும் போர்வேகமும் கொண்ட ஒரு இந்தியா. அதை நிலப்பிரபுத்துவகால இந்தியா எனலாம். வெள்ளையர் ஆட்சியால் உருவாக்கப்பட்ட புதிய இந்தியா ஒன்று இருந்தது. ஜனநாயகம், சமரசம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட நவீன இந்தியா, உருவாகி வந்துகொண்டிருந்த முதலாளித்துவ இந்தியா.

முதல் இந்தியாவுக்கு திலகர் பிரதிநிதி. இரண்டாவது இந்தியாவுக்கு கோகலே. அந்த முரண்பாடு காங்கிரஸை உடைத்தது.காங்கிரஸ் மாநாடுகளில் நாற்காலிகள் பறந்தன. நுரைத்துக்கொந்தளித்த நன்னம்பிக்கை அப்படியே சோர்ந்து அழிந்தது. காங்கிரஸுக்குள் கடைசிவரை அந்த இரு கருத்தியல் தளங்களும் மோதிக்கொண்டேதான் இருந்தன என்பதும் வரலாறு.கடைசியாக சுபாஷ் சந்திரபோஸுக்கும் காந்திக்கும் இடையேயான முரண்பாடும் இதே இரு தரப்புகளின் போர்தான்.

கோகலேயின் தரப்புக்கு காந்தி வந்துசேர்ந்தபோது அந்த சோர்விலிருந்து காங்கிரஸ் மெல்ல மீள ஆரம்பித்தது. காந்தி உள்ளே நுழைந்தபோது சாகசம், போர் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டிருந்த பழைய இந்தியாவின் குரலே ஓங்கி ஒலித்தது. காந்தி ஜனநாயகத்தை முன்வைத்துப்பேச ஆரம்பித்தார். ஜனநாயகமென்பது எண்ணிக்கையின் ஆற்றல் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

எளிய அடித்தள மக்களைக் காங்கிரஸுக்குள் கொண்டுவந்தார் காந்தி. அடிப்படை உறுப்பினர்கள், அதிகாரபூர்வமான வட்டாரப்பொறுப்பாளர்கள் என முறையான அமைப்பு காங்கிரஸுக்கு உருவாகியது. சம்பாரன்போராட்டம் வழியாக இந்தியாவில் பெருந்திரளாக மக்கள் பங்கெடுக்கும் போராட்டம் ஒன்றை நடத்தமுடியுமா என சோதித்துப்பார்த்து அதில் வெற்றிபெற்றபின் காந்தி இந்திய அரசியலில் மக்கள்போராட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

ஒரு விசை அதன் எதிர்விசையையும் வலிமையாக்குகிறது. காந்திவழியாக சுயராஜ்யப் போராட்டம் வலிமை பெற்றபோதுதான் அதற்கு எதிரான இந்திய யதார்த்தங்கள் வலிமைபெற ஆரம்பித்தன.அவற்றை அடையாளம் கண்டு பிரிட்டிஷார் வளர்த்தனர். தொடர்ந்து காங்கிரஸ் உடைந்தபடியே இருந்தது.ஒருபக்கம் மிதவாதிகள் உடைத்துச்சென்று அரசியலில் பதவிகளை அடைந்தபடியே இருந்தனர். மறுபக்கம் தீவிரவாதிகள் உடைத்துச்சென்று போராடிச்செத்துக்கொண்டே இருந்தனர். காந்தி அவரது நடுப்பாதையில் சென்றபடி இருந்தார்.

இந்தியச் சுதந்திரபோரில் ஒர் விஷயத்தை நாம் கவனிக்கலாம். இந்திய சுதந்திரம் பற்றிய கோரிக்கை வலுவடையும்தோறும்தான் இந்தியப்பிரிவினைவாதக் கோரிக்கைகள் வலுபெற்றன. 1905ல் கர்சான் பிரபு வங்கப்பிரிவினையைக் கொண்டுவந்தபோதுதான் இந்திய அரசியலில் முதல் மக்கள் எழுச்சி உருவானது. காங்கிரஸ் என்ற அமைப்பை மக்கள் கவனிக்க ஆரம்பித்தனர். 1906 முஸ்லீம் லீக் அமைந்துவிட்டது. இஸ்லாமியர் இந்தியாவில் தனியாகச் செயல்படவேண்டியவர்கள் என்றும் தனியுரிமை கொண்டவர்கள் என்றும் அது வாதிட ஆரம்பித்துவிட்டது.

வங்கப்பிரிவினை விளைவாக உருவான எழுச்சியை முஸ்லீம் லீக் இல்லாமலாக்கியது. பலவகையான சமரசங்களுக்குப் பின் 1916ல் லக்னோ ஒப்பந்தம் மூலம் காங்கிரஸ் முஸ்லீம் லீகுடன் ஒப்பந்தம்செய்துகொண்டு அந்தப் பிளவைத் தாண்டமுயன்றது. 1917ல் மாண்டேகுசெம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் வழியாக சீக்கியருக்கும், இஸ்லாமியருக்கும் தனிச்சலுகைகளும் இட ஒதுக்கீடும் கொடுத்தனர் பிரிட்டிஷார். அதனூடாக அந்த இணைப்புமுயற்சியை முறியடித்தனர்.

இந்தியச் சுதந்திரப்போராட்டவரலாற்றில் 1929ல்தான் முதன்முதலாகப் பூரணசுயராஜ்யம் என்ற கோரிக்கை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1930ல் பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மக்டொனால்ட் இந்தியாவில் சாதிவாரியான இட ஒதுக்கீட்டை வகுப்புவாரி பிரதிநிதித்துவ அறிவிக்கை வழியாக அமலாக்கினார். தலித்துக்களுக்கான சலுகைகள் அறிவிக்கப்பட்டன. பதிமூன்றுவருடங்களுக்கு முன்னரே இஸ்லாமியர்களுக்கு பிரிட்டிஷார் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்தனர் என்றும் அப்போது தலித்துக்களின் பின்னடைவுநிலை அவர்களுக்குப் பொருட்டாகத் தெரியவில்லை என்றும் கவனிக்கவேண்டும்.

கிலாஃபத் இயக்கம் மூலம் காந்தி பிரிட்டிஷார் இந்திய தேசிய அரசியலில் உருவாக்கிய இந்து முஸ்லீம் பிளவை சரிசெய்ய முயன்றார்.வகுப்புவாரிப்பிரதிநிதித்துவ அறிவிக்கையை தொடர்ந்து தலித்துக்களை மையச்சமூகத்தில் இருந்து பிரித்தாளும் முயற்சிக்கு எதிராகவும் காந்தி போராடவேண்டியிருந்தது. அதில் அவர் வெற்றிபெற்றார்.

இந்த ஒவ்வொரு பிரிவினையும் சுதந்திரம் பற்றிய கற்பனைகளையும் எதிர்பார்ப்பையும் பெரிய மலைகள் போல வந்து தடுத்துநின்றன. ஒவ்வொன்றும் பெரும் சோர்வையும் பின்னடைவையும் உருவாக்கின.

அரசியல் நடைமுறைத்தளத்திலும் இதேபோன்ற பின்னடைவுகள் இருந்தன. 1922இல் ஒத்துழையாமை இயக்கம் தேசத்தை உலுக்கி எழுப்பியது. ஆனால் அது வன்முறைப்போராக மாறியது. காந்தி போராட்டத்தைத் திரும்பப்பெற்றார். ஒத்துழையாமை இயக்க நாட்களில் இந்திய சுதந்திரம் கையருகே வந்துவிட்டது என அனேகமாக அனைவருமே நம்பினர். ராஜாஜியின் சிறைக்குறிப்புகள் அந்த நம்பிக்கையையே காட்டுகின்றன.

ஆனால் காந்தி வன்முறை அரசியல் இந்தியாவில் வளர்வதை விரும்பவில்லை. மக்கள்தொகை மிக்க, பேதங்கள் மிகுந்த இந்தியாவுக்கு அது அழிவைக் கொண்டுவரும் என எண்ணினார். சுதந்திரம் கொஞ்சம் தள்ளிப்போனாலும் பரவாயில்லை என்று அவர் நினைத்தார். போராட்டத்தை ஒத்திவைத்தார். 1947 மதக்கலவரங்களைக் கண்டவர்கள் அவர் எவ்வளவு தீர்க்கதரிசி என உணரமுடியும்.

அந்த முடிவு காந்திக்கு இந்திய அரசியலில் மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கியது. தேசம் முழுக்க அவர்மீது ஆழமான அவநம்பிக்கை ஏற்பட்டது. அவரை அன்று பெரும்பாலான படித்தவர்கள் புரிந்துகொள்ளவேயில்லை .எளியமக்கள் அவரை மட்டுமே நம்பினர். ஆகவே அன்றைய காங்கிரஸுக்கு வேறு வழியிருக்கவுமில்லை. ஏராளமான இளைஞர்கள் காங்கிரஸில் இருந்து நம்பிக்கையிழந்து வெளியேறினார்கள். இந்திய தேசிய அரசியலின் தீவிரவாதக்குழுக்கள் பலவும் இக்காலகட்டத்தில் உருவானவையே.

மணிக்கொடியின் பழைய இதழ்களைக் கண்டால் இந்த சோர்வுக்காலகட்டத்தை நன்கு உணரமுடியும். காந்தி அவரது சபர்மதி ஆசிரமத்தில் நிர்மாணப்பணிகளில் ஈடுபட ஆரம்பித்தார். ஏறத்தாழ ஆறாண்டுக்காலம் அவர் நேரடி அரசியலில் இருந்து விலகி இருந்தார்.பல காங்கிரஸ் தொண்டர்கள் அவரைத்தொடர்ந்து நேரடி அரசியலில் இருந்து விலகி இலக்கியம்,சேவை போன்றவற்றில் ஈடுபட ஆரம்பித்தனர். இந்தியமொழிகளில் ஓர் இலக்கிய மறுமலர்ச்சி அவ்வாறு ஆரம்பித்தது.

காந்திமீது உருவான கசப்பைப் பயன்படுத்திக்கொண்ட மூத்த தலைவர்கள் 1923 இல் காங்கிரஸைப் பிளந்து சுயராஜ்யா கட்சி என்ற பேரில் மாகாணக்கவுன்சில் தேர்தலில் பங்கெடுக்கச் சென்றனர். பதவி பெற்று ஆட்சியமைத்தனர். காந்தி முழுமையாகவே ஒதுங்கியிருந்தார். மணிக்கொடி இதழ்களில் ‘வாருங்கள் மகாத்மா’ என்ற மன்றாடலை மீண்டும் மீண்டும் பார்க்கமுடிகிறது.மலையாள சுவதேசாபிமானியிலும் அதையே காணமுடிகிறது. இந்தியா முழுக்க அந்த நிலைதான்

ஆனால் காந்தியின் இந்தக்காலகட்டம் செயலற்ற காலகட்டம் அல்ல. 1918ல் காங்கிரஸுக்குள் நுழைந்தது முதல் அவர் மெதுவாக காங்கிரஸை ஒரு மக்கள் அமைப்பாக மாற்றினார்.1923 ல் ஒத்துழையாமை இயக்கம் பின்வாங்கப்பட்ட பின் காங்கிரஸை அவர் நன்கு பயிற்சிபெற்ற தொண்டர்களின் அமைப்பாக மாற்றிக்கொண்டிருந்தார். அதன்பின் ஒத்துழையாமை இயக்கத்தில் செய்ததுபோல உணர்ச்சிவசப்படும் சாதாரண மக்களை பிரிட்டிஷாருக்கு எதிராக முன்னிறுத்தவேயில்லை. அகிம்சைப் பயிற்சிபெற்ற தொண்டர்களை மட்டுமே முன்னிறுத்தினார். ஆகவே இந்தியாவில் ஒரு வன்முறையரசியலை உருவாக்கும் பிரிட்டிஷாரின் முயற்சி வெற்றிபெறவேயில்லை.

1928ல் நன்கு பயின்ற தொண்டர்படையுடன் காந்தி உக்கிரமாக நேரடி அரசியலுக்குத் திரும்பி வந்தார். அந்தப்போராட்டத்துக்கு பிரிட்டிஷார் அளித்த எதிர்வினைதான் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அறிவிக்கை. அது உருவாக்கிய பிரிவுமனநிலைகளுக்கு எதிராக அவர் மீண்டும் போராடநேர்ந்தது.

இந்தப்போராட்டங்கள் அனைத்தும் ஒரு கோணத்தில் பின்னடைவுகள். ஆனால் வரலாற்றுநோக்கில் இவைதான் இந்தியா என்றால் என்ன, இங்கே என்னென்ன அதிகார உள்ளோட்டங்கள் உள்ளன, எவ்வாறெல்லாம் இதன் சமுகம் நெய்யப்பட்டுள்ளது என்ற யதார்த்தத்தை வெளிக்காட்டின. அவற்றைப் புரிந்துகொண்டு அவற்றுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு, அவற்றுடன் மோதுமளவுக்கு தன்னை வலுவாக்கிக்கொண்டு வளர்ந்தமையால்தான் காங்கிரஸ் சுதந்திரத்தை பெற முடிந்தது. வெற்றிகரமாக உலகிலேயே பெரிய ஜனநாயக அமைப்பை உருவாக்கவும் முடிந்தது. அலைகள் நல்ல மாலுமியை உருவாக்குகின்றன.

காந்தியேகூட 1925 வாக்கில் இந்தியா சுதந்திரம்பெறும் என்ற கனவில் இருந்திருக்கிறார். இந்துசுயராஜ்யம் என்னும் நூலை எழுதிக் கையில் வைத்துக்கொண்டுதான் அவர் இந்தியாவுக்குள் நுழைந்தார். நிலைமைகளை சந்திக்கும்தோறும்தான் தன் முன் உள்ள சவாலின் பிரம்மாண்டம் அவருக்குப்புரிந்திருக்கும். 1935 வாக்கில் காந்தி உட்பட அனைவருமே சுதந்திரம் வந்துவிட்டதென எண்ணினர். உலகப்போர் மூளாமலிருந்தால் ஒருவேளை அது நிகழ்ந்திருக்கவும்கூடும். உலகப்போர் எல்லாவற்றையும் பத்தாண்டுகளுக்கு ஒத்திப்போட்டது

ஆகவே ஒரு போராட்டத்தில் உள்ள கனவுகளும் நம்பிக்கைகளும் பலவீனங்கள் அல்ல. அவைதான் செயல்படவைக்கும் விசைகள். கனவுகளுக்கும் யதார்த்தங்களுக்கும் இடையேயான முரணியக்கமே வரலாற்றை முன்னகர்த்துகிறது

அப்படியென்றால் ஆயுதப்போராட்டக்காரர்களின் கனவுகளை ஏன் குறைகூறவேண்டும்? அவர்களின் கனவுகளுக்கும் இவற்றுக்கும் என்ன வேறுபாடு?

ஆயுதப்போராட்டவாதிகளின் கனவுகளுக்கும் பிறரது கனவுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால் அவர்கள் சந்திக்கும் யதார்த்தங்களுக்கும் இவர்கள் சந்திக்கும் யதார்த்தங்களுக்கும் இடையே பெரும் வேறுபாடு உள்ளது. அதுதான் சிக்கலே.

ஆயுதப்போராட்டவாதிகள் தங்கள் வன்முறைமூலம் ஒரேவீச்சாக பிரிட்டிஷ் அரசைச் சாய்த்துவிடலாமென நினைத்தார்கள். ஜனநாயகப்போராட்டவாதிகளும் தங்கள் போராட்டம்மூலம் கொஞ்சம் கொஞ்சமாக பிரிட்டிஷாரைத் துரத்தலாமென நினைத்தார்கள். யதார்த்தம் முன்னால் வரும்போது இருவர் கனவுகளும் முட்டிநிற்கின்றன. ஜனநாயகப்போராட்டக்காரர்கள் அங்கே நின்று தங்கள் பிழைகளைக் களைந்து தங்களை மறு அமைப்புசெய்துகொண்டு, ஊக்கத்தைத் திரட்டிக்கொண்டு மேலே செல்ல வாய்ப்பிருக்கிறது. அதைத்தான் மேலே சொன்ன காந்தியப்போராட்ட வரலாறு காட்டுகிறது. அந்த இரண்டாம் வாய்ப்பே ஆயுதப்போராட்டக்காரர்களுக்கில்லை. அவர்கள் அழிவைத்தான் சந்திக்கவேண்டியிருக்கிறது.

அதுதான் உண்மையில் நடந்தது. ஆயுதப்போராட்டக்காரர்கள் என்ன எதிர்பார்த்தார்கள்? இந்தியசமூகம் விடுதலைக்குத் தயாராகிவிட்டது என மனக்கணக்குப் போட்டார்கள். தாங்கள் ஆயுதமெடுத்து ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கினால்போதும், இந்தியசமூகமே பிரிட்டிஷாருக்கு எதிராகக் கிளம்பிவிடும் என நம்பினார்கள். அது கொஞ்சமும் நிகழவில்லை. இந்தியசமூகம் பற்றிய அவர்களின் கணிப்பு முழுக்கவே அபத்தம் என நிரூபணமாகியது. இந்தியாவில் எங்கும் வன்முறை வெடிக்கவில்லை. புரட்சியாளர்கள் கொல்லப்பட்டபோதுகூட கண்ணீரும் கவிதையும்தன் எழுந்தனவே ஒழிய பிரிட்டிஷார் எங்கும் எதிர்ப்பைச் சந்திக்கவில்லை. பிரிட்டிஷார்மேல் செலுத்தமுடியாத கோபத்தை அசட்டுத்தனமாக காந்திமேல் திருப்பிக்கொண்டனர் இளைஞர்கள்.

இந்தியசமூகம் அப்படி இருப்பதற்கு வரலாற்றுக்காரணங்கள் உண்டு. ஒன்று நூற்றாண்டுக்கால பெரும்பஞ்சங்கள் மக்களின் வீரியத்தை அழித்திருந்தன . இரண்டு போராடுவதற்கான நிலப்பிரபுத்துவகால அமைப்புகள் எல்லாமே அழிந்துவிட்டிருந்தன. சிற்றரசுகளும் போர்ச்சாதிக்குழுக்களும் செயலிழந்துவிட்டிருந்தன.ஐரோப்பா போல முதலாளித்துவ அமைப்பு உருவாக்கும் தொழிலாளர் அமைப்புகள் போன்ற புதியவகை போர்க்குழுக்கள் உருவாகி வரவும் இல்லை.

இந்திய சமூகம் பற்றிய தங்கள் புரிதல் பிழையாக ஆனமைக்கு பகத்சிங்,ஆசாத் போன்றவர்கள் தங்கள் வாழ்க்கையையே பலிகொடுக்க நேர்ந்தது. இப்படிச்சொல்லலாம், ஆயுதப்போராட்டம் என்பது விமானம் போல. விசை தீர்ந்தால் அல்லது இயந்திரம் பிழைசெய்தால் மொத்த அழிவுதான். ஜனநாயகப்போராட்டம் என்பது கார் போல .வழியில் சக்கரத்தைக் கழற்றிப்போட்டு ஆசுவாசமாக செப்பம்செய்யலாம்.

சந்திரசேகர ஆசாத் கதையில் நாம் காண்பது தான் செய்த பிழையை உணர்ந்தபின் திரும்பிச்செல்லமுடியாத நிலையில் அவர் இருப்பதைத்தான். பிழைவந்த இயந்திரத்துடன் அவர் வானத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறார். தரையிறங்க இடம்கேட்டு நேருவிடம் வந்து கெஞ்சுகிறார். அதுதான் கவனிக்கப்படவேண்டியது.

அடிப்படையான பாடம் ஒன்றுதான். அரசியல்போராட்டம், சமூகப்போராட்டம் போன்றவை பல படிகளாக செய்யப்படவேண்டியவை. அரசியல்சூழலையும் சமூகஅமைப்பையும் புரிந்துகொண்டும், பிழைகளை சரிசெய்துகொண்டும், தன்னை மேம்படுத்திக்கொண்டும் நிகழ்த்தப்படவேண்டியவை. அவற்றில் நிகழும்பிழைகள் இன்றியமையாதவை மட்டும் அல்ல ஒருவகையில் தேவையானவையும் கூட. அந்தப்பிழைகள் வழியாகவே உண்மையை உணரும் கணங்கள் வாய்க்கின்றன.

ஜனநாயகப்போராட்டம் பிழைகளைச் சந்திக்கையில் மேலும்மேலும் கச்சிதமானதாக ஆகிறது. வன்முறைப்போராட்டம் பிழைகளுக்கு மிகப்பெரிய விலைகளைக் கொடுக்கவேண்டியிருக்கிறது. அந்த விலையை ஆயுதமெடுத்தவர்கள் மட்டும் கொடுப்பதில்லை, அவர்களை நம்பிய மக்களும் கொடுக்க நேர்கிறது

ஜெ

முந்தைய கட்டுரைபடைப்புகள் கடிதங்கள்
அடுத்த கட்டுரைநமது தொழில்நுட்பம்-இணைப்புகள்