காந்திராமன்

அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். நான் ஜெயகாந்தன் பழனி. உங்களை தினந்தோறும் வாசிப்பவன்.உங்களைப் புத்தகச்சந்தையில் நேரில் சந்தித்து பேசியிருக்கிறேன்.ஆனால், அந்த அறிமுகம் உங்களுக்கு நினைவிலிருக்க வாய்ப்பில்லை.

எங்களின் தேடல்கள் பலவற்றிற்கு நீங்கள் விடையாகியிருக்கிறீர்கள்.அந்தவகையில் உங்களுக்கு நான் உட்பட இந்த சமூகம் கடன்பட்டவர்களாக இருக்கிறோம். உங்களுக்கு இதுநாள்வரை நான் ஒரு கடிதம் கூட எழுதியதில்லை. தயக்கம்தான், மற்றபடி வேறு ஒன்றுமில்லை.

இந்தக் கடிதம் முக்கியமானதொரு சந்தேகம் குறித்த விளக்கம் கேட்பதற்காக எழுதப்பட்டது. சமீபத்தில் கம்பராமாயணம் படிக்கத் தொடங்கினேன்.அதுவும், உங்கள் எழுத்தாலும், நாஞ்சில்நாடன் பேசியதைப் படித்ததாலும் ஏற்பட்ட ஆர்வம். மிகுந்த ஈடுபாட்டோடு தொடங்கியபோதுதான் ராமன் குறித்து காந்தி எழுதியதைப் பார்க்க நேர்ந்தது.

மகாத்மா காந்தி,’ என்னுடைய ராமன் வேறு, அயோத்தி ராமன் வேறு. என் ராமன் சீதையின் கணவனல்ல-தசரதன் மைந்தனல்ல. ராமாயணக் கதையில் வரும் ராமனை நான் பூஜிக்கவே மாட்டேன்.’

இதைப் படித்ததும் எனக்குப் பெரும்குழப்பம். அப்படியானால் காந்தி எந்த ராமனைத் தனது கடைசி மூச்சு வரை உச்சரித்து வந்தார்.ராம எனும் இரண்டெழுத்திற்கு அளப்பரிய சக்தி பற்றி ராமாயணம் பல இடங்களில் விளக்குகிறது.ஆனால், காந்தி ஏன் அதைப் புறக்கணித்தார். தயவுசெய்து இதை விளக்கினால், பெரும் பயனடைவேன். நன்றி

ஜெயகாந்தன் பழனி

அன்புள்ள ஜெயகாந்தன் பழனி,

காந்தியின் ராமன் காந்தியின் கிருஷ்ணன் இருவருமே இந்து புராணங்களில் உள்ள ராமனும் கிருஷ்ணனும் அல்ல என்பது ஒரு வேடிக்கையான உண்மை. காந்தி கீதை பற்றிச் சொல்லியிருப்பதில் இருந்தே அதைப்புரிந்துகொள்ளலாம்.

ராமனும் கிருஷ்ணனும் இந்துமரபின் ஆழத்தில் இருந்து உருவாகிவந்தவர்கள். நாம் சிந்திக்கமுடியாத தொல்பழங்காலத்தில், பழங்குடிவாழ்வில் இருந்து பெருசமூக வாழ்க்கை உருவாகிவந்த ஆரம்பகட்டத்தில் உள்ளது அவர்களின் வரலாறு. அவர்களின் மூலக்கதையில் உள்ளவை அந்தத் தொல்பழங்காலத்து வாழ்க்கைவிழுமியங்களும் தரிசனங்களும்தான்.

உலகின் எந்த மதத்திலும், எந்தப்பெரும்பண்பாட்டிலும் அவற்றின் அடிப்படைத் தரிசனங்களும் விழுமியங்களும் பழங்குடி வாழ்க்கையில் முளைத்தவையாகவே இருக்கும். அந்த மக்களால் தலைமுறை தலைமுறையாகத் திரட்டி எடுக்கப்பட்டவையாக இருக்கும். இதிகாசங்களின் கதைகள் அப்படிப்பட்டவை.

அதன்பின் சமூகம் வளர்ந்து விழுமியங்கள் வலுவடைய வலுவடைய அவர்களின் கதை மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டது. ஒரு கட்டத்தில் எழுத்துவடிவம் பெற்றது. இதிகாசங்களாக ஆகியது.

இதிகாசங்களாக ஆனபின்னரும்கூட சமூக வளர்ச்சியின் விழுமியமாற்றங்களுக்கேற்ப அவர்களின் கதையைத் திருப்பிச்ச்சொல்லவேண்டியிருந்தது. இதிகாசங்கள் எல்லா மொழிகளிலும் விதவிதமாக மாற்றி எழுதப்பட்டுள்ளன. கம்பராமாயணம், எழுத்தச்ச ராமாயணம், துளசிதாச ராமாயணம் போல. அவற்றில் இருந்து காவியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன, காளிதாசனின் ரகுவம்சம் முதல் பாரதியின் பாஞ்சாலி சபதம் வரை. பௌத்த மரபிலும் சமண மரபிலும் ராமாயணத்திற்கு வேறு வடிவங்கள் உள்ளன.

நவீன இலக்கியத்தில் மீண்டும் மீண்டும் ராமாயண மகாபாரதக் கதைகள் எழுதப்பட்டுள்ளன. இன்னும் எழுதப்படுகின்றன. காரணம் ராமனையும் கிருஷ்ணனையும் பிறரையும் நாம் இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப மறு ஆக்கம்செய்துகொள்ளவேண்டியிருக்கிறது. அவர்கள் குறியீடாகி நிற்கும் விழுமியங்களை இன்றைய வாழ்க்கையில் வைத்து ஆராயவேண்டியிருக்கிறது.

ஆகவே இந்துமரபில்கூட ராமனின் கதை ஒன்று அல்ல. அது விழுமியங்கள் ஏற்றப்பட்டு மாறிக்கொண்டே இருக்கக்கூடிய ஒன்றுதான். காளிதாசனைப்போல துளசிதாசரைப்போல காந்தியும் தன் ராமனை இதிகாச ராமனில் இருந்து கண்டெடுத்துக்கொண்டார்.

காந்தியிடம் சமணப் பாரம்பரியம் வலுவாக இருந்தது. சமண அகிம்சைத்தத்துவத்தில் ஆழமாக வேரூன்றிய மனம் அவருடையது.அந்த அகிம்சைத்தரிசனத்தால் மறு ஆக்கம்செய்யப்பட்ட ராமனையும் கிருஷ்ணனையுமே காந்தி வழிபடுகிறார்.

இதிகாசராமன் ஒரு மாபெரும் போர்வீரன். ராஜச குணம் நிறைந்தவன். அவனுடைய ஆளுமையில் வீரமும் அறமும் ,ஆட்சித்திறனும் கருணையும் சரிசமமாகக் கலந்துள்ளன. இந்தக்கலவையைப் புரிந்துகொள்ளாவிட்டால் இதிகாசராமனை உள்வாங்கிக்கொள்ளமுடியாது.

உதாரணமாக, வாலியை மறைந்திருந்து கொன்றவன் ஆட்சித்திறன் கொண்ட ராமன். பேரறத்தின் இறுதிவெற்றிக்காக நடைமுறையறம் ஒன்று மீறப்படலாம் என்ற போர்அறம் சார்ந்த நோக்கு அங்கே அவனிடம் செயல்படுகிறது. மன்னன் என்பவன் குடிகளின் முழுநம்பிக்கையைப் பெற்றவனாக இருந்தாகவேண்டும், அவன் மனைவியும் அந்த நிபந்தனைக்குக் கட்டுப்பட்டவளே என்ற அரசியலறம் சார்ந்த நோக்கு சீதையைக் காட்டுக்கனுப்ப அவனுக்குக் காரணமாக அமைகிறது

பெரும்வீரனாக அவன் எதிரிகளைக் கொன்று அழிக்கிறான். அதேசமயம் எந்நிலையிலும் மானுட அறத்தை அவன் மீறவில்லை. கருணையை, சமத்துவத்தை தன் ஆதார இயல்பாகக் கொண்டிருக்கிறான். கிருஷ்ணனைப்பற்றியும் இதையே சொல்லமுடியும்

காந்தி இந்த இதிகாசராமனில் இருந்து தனக்கென உருவாக்கிக் கொள்ளும் ராமனில் போர்வீரம், ரஜோகுணம் போன்ற அம்சங்கள் இல்லை. எதிரிகளை அழிப்பதை காந்தியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரது சமணப்பின்புலம் அதற்கு ஒப்பவில்லை. ஆகவே கருணையும் அறமும் மட்டுமே இயல்புகளாக உள்ள ஓர் அகிம்சை ராமனை அவர் கண்டுகொள்கிறார். அவர் வழிபட்டது அந்த ராமனை மட்டுமே

கீதை அதன் உச்சநிலையில் இச்சைகளில் இருந்து விடுபடுவதை, அகிம்சையைத்தான் முன்வைக்கிறது. ஆனால் கீதையின் செய்தி அது மட்டும் அல்ல. கீதை இவ்வுலகின் வெற்றிகளை செயலூக்கம் மூலம் அடைவதைப்பற்றி பேசியபடித்தான் ஆரம்பிக்கிறது.மகத்தான விஷயங்களை வென்றெடுக்கும் இச்சாசக்தியை வலியுறுத்துகிறது. ஆனால் காந்தி அதிலிருந்து அனாசக்தி [ இச்சைமறுப்பு ]யைத்தான் எடுத்துக்கொண்டார். அனாசக்தியோகம் என அதைச் சொல்லலாம்.

காந்தியின் புஷ்டிமார்க்க வைணவமே ஒருவகையில் சமணத்தை உள்ளே இழுத்துக்கொண்ட வைணவம்தான். அதுவே குஜராத்தின் பெருமதம். சமணத்தில் இருந்த புலன்மறுப்பு , அகிம்சை இரண்டையும் தன்னதாக்கிக் கொண்ட வைணவம் கூடவே சமணத்தில் இருந்த சுய ஒடுக்குதலைக் கைவிட்டது. பக்தியைப் பெரும் களியாட்டமாக ஆக்கிக்கொண்டது.

அவ்வகையில்பார்த்தால் காந்தி புஷ்டிமார்க்க வைணவத்திலும் இல்லை. அவர் புஷ்டிமார்க்க வைணவத்தின் கிருஷ்ணபக்தியை, ராமநாமத்தை, பஜனையை எல்லாம் ஒருகையில் எடுத்துக்கொண்டு சமணத்துக்குள் சென்றுவிட்டார். மறுகையில் பைபிளையும் ஏசுவையும் வைத்திருந்தார்.

காந்தியின் மதம் காந்திமதம். காந்தியின் ராமன் காந்திராமன்

ஜெ

முந்தைய கட்டுரைஅலை, இருள், மண்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைபண்பாட்டு உடை