«

»


Print this Post

காந்தி ஒருகடிதம்


அன்புள்ள ஜெ,

திரு.பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் நாவலை வாசித்தபோது அக்கால ஆட்சியாளர்களுடன் தற்போதைய ஆட்சியாளர்களுக்கும் ஆச்சரியகரமான ஓற்றுமைகள் தெரிந்தன. சொந்த சுயலாபத்துக்காக வரி மூலம் சுரண்டுவது, போர்ப்படைகள் சிறிதும் அறமின்றி வயல்வெளிகளில் அறுவடைக்கான தானியங்களை அழிப்பது,போர்வீரர்களுக்கு ஊதியம் அளிக்காமல் அவர்களைக் கொள்ளையிட அனுமதித்தது, அரச பதவிக்காக கொலை, சூது, நயவஞ்சகச் செயல்களில் ஈடுபடுவது என அப்போது சந்தா சாகிப், சாயாஜி, ரகுஜி செய்ததையே இப்போது சற்றே சிறிய அளவில் செய்கிறார்கள். நில அபகரிப்பு, ஊழல், இயற்கை வளங்களைச் சூறையாடுதல், எளிய மக்களை சுரண்டுதல், அரசியல் கொலைகள் என அப் பாரம்பரியம் அப்படியே தொடர்கிறது.

ஒத்திசைவு ராமசாமி அவர்களின் வலைப்பக்கத்தில் திமுகவினரின் ‘சாதனைகளை’ப் பற்றி எழுதியிருந்ததைப் படித்தபோது இதுதான் தோன்றியது. ஆட்சியாளர்கள் எப்போதும் மாறுவதில்லை. அதிகாரம் உண்மையில் மனிதனின் இருண்ட பக்கத்தையே வளர்க்கிறது. சுயசிந்தனையும் மனித நேயமும் நேர்மையும் இல்லையானால் தனக்கும், தன்னால் மற்றவர்க்கும் அதிகாரம் ஒரு படுகுழி என்பது சர்வ நிச்சயம். நீங்கள் ஸ்பெக்ட்ரம், மாவோயிசம், குறித்து எழுதியவையும் ‘இன்றைய காந்தியும்’ இவற்றையே எனக்கு உணர்த்தின. சமூகத்தைப் பற்றி அக்கறையுள்ள ஒவ்வொருக்கும் கடும் அயர்ச்சியையும் சோர்வையும் இவ்வுண்மைகள் ஏற்படுத்துகின்றன.

இச்சூழ்நிலையில்தான் அந்த மாமனிதரின் மகத்தான பங்களிப்பை உணர்ந்து கொள்ள முடிகிறது. சாதாரண மக்களுக்கு விழிப்புணர்வை அளித்த, அவர்களிடம் கொஞ்சமேனும் சமூகப் பிரக்ஞையை உண்டாக்கிய அப்பெரியவரின் மகத்தான பங்களிப்பிற்கு ஒப்பாக வேறெதுவும் இருக்க முடியாது. இனி எந்தவொரு சமூகப்பணியும் காந்திய வழியில் நிகழ்ந்தால் மட்டுமே நிலைத்த பலனைத் தரும் என நினைக்கிறேன்.

அகங்காரத்தை விட்டு, பெயர் புகழைப் பற்றி கவலைப்படாமல் தன்னறத்தைப் பற்றற்ற முறையில் செய்து வாழ்வது என்பதற்கு ஒரு மகத்தான உதாரணமாக காந்தியைக் கண்டுகொண்டேன்.

இப்புரிதலை, எனது குழப்பங்களுக்கான விடையைத் தங்கள் எழுத்தின் மூலமே கண்டுகொண்டேன்.

சங்கரன்

அன்புள்ள சங்கரன்

யோசிக்கும்போது இடதுசாரிகள் உட்பட எல்லாருமே ’மக்களை’ப் பற்றியே பேசுகிறார்கள். ஆனால் மக்களை வழிநடத்தவேண்டிய இடத்தில் தங்களை வைத்துக்கொள்கிறார்கள். மக்களுக்குச் சேவை செய்பவராக அல்ல. இடதுசாரிகளை கவனித்தால் இது தெரியும். அவர்களை மக்கள் எதிர்க்கையில் அவர்கள் மக்கள்சக்தி பற்றிப் பேசுவதே இல்லை. மக்கள் மூடர்கள் , கண்ணற்ற கும்பல் என்றே பேசுவார்கள். உலகமெங்கும் முகமற்ற மக்கள்திரளை இடதுசாரிகள் கொன்றழித்தமைக்குக் காரணமும் அதுவே

அங்கேதான் காந்தி மாறுபடுகிறார்
ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/37130

1 ping

  1. காந்தியைப்பற்றி…

    […] காந்தி ஒரு கடிதம் […]

Comments have been disabled.