சித்திரப்பாவை

அன்புள்ள ஜெ,

நலமா? அகிலனின் சித்திரப்பாவை என்ற நூலுக்காக அவர் ஞானபீட விருது பெற்றார். அந்த நாவலை நேற்றுதான் படித்து முடித்தேன். அந்த நாவல் குறித்து தங்கள் வலைத் தளத்தில் ஏதேனும் எழுதியுள்ளீர்களா என்று தேடினேன். இரண்டு பதிவுகளில் அதுவும் இரண்டு மூன்று வரிகளில் மட்டும்தான் எழுதியிருந்தீர்கள். அந்த நாவல் குறித்த விமர்சனம் எதுவும் எழுதியுள்ளீர்களா? நான் வாசிப்பின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் எனக்கு அது எத்தைகைய படைப்பு என்று தெரியவில்லை. சமீபத்தில் சித்திரப்பாவை ஒரு குப்பை என்றும் ஏன்அதற்குப் போய் ஞானபீட விருதென்றும் ஒருவர் விமர்சித்துப் பேசியிருந்தார்.

அந்த நாவல் தமிழ் நாவல்களில் முக்கிய நாவலா? அது வணிக ரீதியில் மட்டும்தான் வெற்றி பெற்றதா.? தற்கால இலக்கியத்தில் அது குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றியுள்ளதா? வழக்கமாக உங்களிடம் கேள்வி கேட்டு விட்டு நேரமிருந்தால் பதில் அளியுங்கள் என்பேன். இந்த நாவல் குறித்து நீங்கள் அதிகம் எழுதாததாலும்(ஒருவேளை எழுதியிருந்தால் link அனுப்பவும்), அந்த நாவல் ஞானபீட விருது பெற்றிருந்தும் ஒருவர் அதனைக் குப்பை என்பதாலும், நல்ல எழுத்தையும், எழுத்தாளர்களயும் எவ்விதக் காழ்ப்புணர்ச்சியுமின்றி நீங்கள் பரிந்துரைப்பதாலும் தயவுகூர்ந்து இந்த என் கேள்விக்கு விடையளியுங்கள். நன்றி

ஆரோக்கிய புஷ்பராஜ்

அன்புள்ள புஷ்பராஜ்,

அகிலனின் சித்திரப்பாவை ஓர் இலக்கியப்படைப்பு அல்ல. அதை ஒரு முக்கியமான நூலென்றும் சொல்லமுடியாது. அது ஒரு காலகட்டத்தின் பொழுதுபோக்கு எழுத்து மட்டுமே. இன்று அதற்கு எந்தவகையான இலக்கிய முக்கியத்துவமும் இல்லை.வரலாற்றாய்வுக்காக அதைக் கருத்தில்கொள்ளலாம், அவ்வளவுதான்

இது என்னுடைய எண்ணம் மட்டுமல்ல, நவீனத்தமிழிலக்கியத்தில் உள்ள பொதுவான விமர்சனக்கருத்தும் கூட. அகிலனின் சித்திரப்பாவை வெளிவந்தபோதே அதைப்பற்றி க.நா.சு அது ஒரு வணிகக்கேளிக்கை எழுத்துதான் என்று சொன்னார். அகிலனும் அவரது ரசிகர்களும் அதற்கு மிகமிகக் கடுமையாக எதிர்வினையாற்றினார்கள். பின்னர் அகிலன் அந்நாவலுக்காக ஞானபீட விருது பெற்றபோது சுந்தர ராமசாமி கடுமையாக எதிர்வினையாற்றினார். வெங்கட் சாமிநாதன் விரிவாக நிராகரித்து விமர்சித்தார்.

அப்போதெல்லாம் அந்நாவலுக்குப் பெரிய வாசகர்வட்டம் இருந்தது. தமிழில் தொடர்கதை என்ற வடிவம் வார இதழ்கள் வழியாக செல்வாக்குடன் இருந்த காலகட்டம் அது. ஆனால் தொண்ணூறுகளுக்குப்பின்னர் வணிகஎழுத்துக்கள் மங்கத் தொடங்கின. பரவலாக நல்ல இலக்கியம் அறிமுகமாகியது. விளைவாக அகிலன் வாசகர்களிடையே மதிப்பிழந்தார். க.நா.சுவும் சுந்தர ராமசாமியும் வெங்கட் சாமிநாதனும் சொன்னவை நிறுவப்பட்ட உண்மைகளாக ஆயின

ஆனால் நம்முடைய கல்வித்துறை பின்னரும் சிலகாலம் கல்கி, நா.பார்த்தசாரதி, அகிலன் என பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தது. இன்றும் கல்வித்துறையில் இந்த நிலைப்பாட்டை மதநம்பிக்கை போல சுமந்தலையும் பழமைவாதிகள் நிறையப்பேர் உண்டு. [ஓர் ஆட்சிப்பணித்தேர்வில் நீங்கள் ஒருபோதும் அகிலனுக்கு எதிராக எதையும் எழுதிவிடக்கூடாது. நம்மூர் பேராசிரியப்பெருந்தகைகள் பழிவாங்கிவிடுவார்கள்]

என்ன காரணம் என்றால் தமிழின் மகத்தான படைப்பாளிகளான மௌனி, கு.அழகிரிசாமி. கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, ப.சிங்காரம் போன்றோர் எழுதிய காலகட்டத்தில் அவர்களை முழுமையாகவே உதாசீனம் செய்து , புகழ்பெற்ற வணிக எழுத்தாளர்களை இலக்கியவாதிகளாக முன்னிறுத்தினர் நம் கல்வித்துறையினர். இன்று அவர்கள் செய்த கேனத்தனம் அவர்களுக்கே தெரிகிறது. அதை ஒப்புக்கொள்ளாமல் வீம்புடன் நீடிக்க விரும்புகிறார்கள்.

ஏன் சித்திரப்பாவை இலக்கியம் அல்ல? பலகாலம் பேசப்பட்டுவிட்ட விஷயம் என்றாலும் புதியவாசகர்களுக்காக அதை மீண்டும் மீண்டும் சொல்லவேண்டியிருக்கிறது

எளிமையாகச் சொன்னால் இலக்கியம் நான்கு தனித்தன்மைகளைக் கொண்டது. 1. சமரசமற்ற உண்மைத்தன்மை 2. பிறிதொன்றிலாத புதுமை 3. நுண்ணிய மொழியழகு 4. வாசகனின் கற்பனையை விரிவடையச்செய்யும் தீவிரமும் செறிவும்

ஓர் ஆக்கம் இலக்கியமா அல்லவா என்று அறிவதற்கான முதல் பரிசோதனையே அதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பதே. அதை எந்த ஒரு நேர்மையான வாசகனும் தன் அந்தரங்கத்தால் உணர்ந்துவிடமுடியும். அவனுடைய சொந்த வாழ்க்கைதான் அதற்கு ஆதாரம். வேறு நிரூபணமே தேவையில்லை.

நல்ல இலக்கியத்தை வாசிக்கையில் தன் வாழ்க்கையுடன் அதைத் தொடர்புபடுத்தி அந்த ஆக்கத்தில் உள்ள வாழ்க்கையுண்மையை வாசகன் உணர்ந்துகொண்டே இருப்பான். அவனுடைய வாழ்க்கையில் அவன் அறிந்தவைதான் அந்த ஆக்கத்தைப்புரிந்துகொள்ள அவனுக்குத் துணைநிற்கின்றன.அதேபோல அந்த ஆக்கம் அவன் வாழ்க்கையை மேலும் மேலும் நுட்பமாகப் புரிந்துகொள்ள உதவும்.

அடிப்படையான கேள்வி ஒன்றே, படைப்பு வாசகனின் வாழ்க்கையை மேலும் நுணுக்கமாகவும் முழுமையாகவும் புரிந்துகொள்ளச்செய்கிறதா? ஆம் என்றால் அது இலக்கியம்.

அந்த உண்மை இருவகை. ஒன்று, அன்றாட உண்மை. அதாவது, நாம் அறியும் புறவுலகம் சார்ந்த உண்மை. இன்னொன்று தரிசன உண்மை. நாம் அதை அன்றாடவாழ்க்கையில் காணமுடியாது. ஆசிரியனின் தரிசனம் அந்த உண்மையை உருவாக்குகிறது. நாம் அந்த தரிசனத்தை நம் வாழ்க்கையில் காணமுடியும். அதைக்கொண்டு அந்தப்படைப்பின் உண்மையை உணரமுடியும்.

அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோட்டின் கதாநாயகன் சந்திரசேகரன் ஒரு சிறுவனாக இருந்து அரசியல்கொந்தளிப்பைக் கண்டு முதிர்ந்த மனிதனாக மாறுவது புறவுலகம் சார்ந்த உண்மை. நாம் அதை நம் வாழ்க்கையில் அறிந்திருப்போம். அந்த நிகழ்ச்சிகளுடன் நாம் நம்மை அடையாளம் கண்டுகொள்வோம்

காஃப்காவின் உருமாற்றம் கதையின் கதாநாயகன் கரப்பாம்பூச்சியாக உருமாறுவது புறவய யதார்த்தம் அல்ல. ஆனால் அது என்ன என நமக்குத்தெரியும். காஃப்காவின் தரிசனம் வழியாக அந்த உணர்ச்சிகளை அறிகிறோம்.

அவ்வாறு உண்மையை முன்வைக்கும் ஓர் இலக்கியம் அந்த ஆசிரியனின் அந்தரங்கத்தில் இருந்து வந்திருந்தால் அது பிறிது ஒன்றிலாத தனித்தன்மையுடன் இருக்கும்.ஏனென்றால் ஒவ்வொருவரின் கைரேகையும் தனித்தன்மைகொண்டது என்பது போல மனமும் மொழியும்கூடத் தனித்தன்மை கொண்டதுதான். அந்தப்புதுமை இலக்கியத்தின் அடையாளமாகும்

இலக்கியம் மொழியின் கலை. நல்ல இலக்கியம் ஓர் மொழியனுபவம். நாம் அறிந்த மொழியை இன்னும் நுட்பமாக நாம் மீண்டும் பார்க்கச்செய்கிறது இலக்கியம். சிந்தனைகளை, உணர்ச்சிகளை, கனவுகளை, காட்சிகளை எல்லாம் நாம் மொழியாகவே அறியவும் மொழியாக மாற்றிக்கொள்ளவும் செய்கிறது.ஒரு நகரம் பற்றிய படைப்பு அந்ந்நகரை ஓரு மொழியனுபவமாக ஆக்கி உங்களுக்கு அளிக்கும்.

கடைசியாக, நல்ல இலக்கியப்படைப்பு வாசகனின் கற்பனையைத் தூண்டிவிடக்கூடியதாக இருக்கும். அது சொன்னது கொஞ்சமாகவும் ஊகிக்கவைப்பது அதிகமாகவும் இருக்கும். அந்தப் படைப்பை வாசகன் ஆசிரியனின் மொழியின் வழியாகத் தன் கற்பனையில் உருவாக்கிக்கொள்ள முடியும்

இந்த நான்கு பொது அளவுகோலிலில் சித்திரப்பாவை ஒரு இலக்கியமல்ல என்பதைக் காணலாம். அதன் கதை அகிலனின் வாழ்க்கையனுபவத்தில் இருந்தோ அவரது வாழ்க்கைத்தரிசனத்தில் இருந்தோ உருவானது அல்ல.

அதற்கு அன்றாட உண்மையுடன் தொடர்பே இல்லை. அந்தக் கதாநயகன் கதாநாயகி இருவருக்கும் தமிழ்வாழ்க்கையில் இருந்து வந்தவர்கள் அல்ல. அவர்களைப்போன்றவர்களை நாம் எங்கும் சந்தித்திருக்க மாட்டோம். ஆனால் வேறுவேறு வடிவில் வணிகக்கதைகளில் அவர்களைப் பார்த்துக்கொண்டிருப்போம்

சித்திரப்பாவையின் கதாநாயகன் மென்மையான, இலட்சியவாதியான ஓவியன். அவன் காதலி உயர்ந்த இலட்சியங்களும் மெல்லியல்பும் கொண்ட அழகி. இவ்விரு கதாபாத்திரங்களையே பார்ப்போம். இவை தமிழ் வாழ்க்கையில் இருந்தோ அகிலனின் அனுபவ மண்டலத்தில் இருந்தோ உருவானவை அல்ல. அவை வணிகஎழுத்துக்கான ‘மாதிரி’க்கதாபாத்திரங்கள் மட்டுமே

இந்தவகையான ‘மாதிரி’ கதாபாத்திரங்கள் உண்மையில் தரமான இலக்கியங்களில் இருந்தே உருவாகின்றன. அவற்றை சுயமாக உருவாக்கும் கற்பனை வணிகஎழுத்துக்கு இருப்பதில்லை.பதினேழாம்நூற்றாண்டைச்சேர்ந்த ஐரோப்பியக் கற்பனாவாத இசைநாடகங்களில் இருந்து எடுக்கப்பட்ட கதாபாத்திரங்கள் இவை. இசைநாடகங்கள் கதைச்சந்தர்ப்பங்களை இசைக்கேற்ப ‘ரொமாண்டிக்’ ஆக ஆக்குவதற்கு இவ்வகைக் கதாபாத்திரங்களை சற்று மிகையாக உருவாக்கின. அந்தக்கதாபாத்திரங்களை வணிகக்கேளிக்கைக் கலைவடிவங்கள் எடுத்துத் தங்களுக்கேற்பத் தட்டையாக்கிக் கொண்டார்கள்.

இலட்சியவாதியான கலைஞன் அல்லது கவிஞன், அவனைக் காதலிக்கும் அழகி போன்றவை ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டில் வணிகக்கேளிக்கை நாடகங்களில் பிரபலமாக இருந்தவை. அவை செதுக்கி உருவாக்கப்பட்ட ‘ரெடிமேட்’ கதாபாத்திரங்கள். அங்கிருந்து அவர்கள் வணிகக்கேளிக்கை இலக்கியத்துக்கு வந்தார்கள். பதின்பருவ வாசகர்களின் பகற்கனவுகளுக்கு ஏற்ப அவர்கள் செம்மைப்படுத்தப்பட்டுப் பல்வேறுவகைகளில் உருவம் கொண்டார்கள்.

ஆங்கிலம் வழியாக உலகம் முழுக்க வணிகக்கேளிககை எழுத்தும் சினிமாவும் உருவானபோது அக்கதாபாத்திரங்கள் எல்லா மொழிகளுக்கும் சென்று சேர்ந்தார்கள். அகிலனின் சித்திரப்பாவையின் நாயகனை அதற்கு முன்னரே நீங்கள் தமிழ் சினிமாவில் டி ஆர் மகாலிங்கமாக, ஜெமினிகணேசனாக, சிவாஜியாகப் பார்த்திருக்கலாம். நான் சட்டென்று நினைவுகூர்வது சபாஷ்மீனா படத்தில் சிவாஜி பாடும் சித்திரம் பேசுதடி என்ற பாடல்.

இந்தக்கதாபாத்திரங்களைக் கொண்டு அகிலன் உருவாக்கும் கதையில் அவரது தரிசனம் என ஏதேனும் இருக்கிறதா? அண்ணாமலை ஓவியன். பெரும் கலைஞனாக ஆக விரும்புகிறான்.ஆனந்திக்கு அவன் மேல் காதல்.ஆனால் அவளை மாணிக்கம் விரும்புகிறான். ஒருநாள் மாணிக்கம் ஆனந்தியை வலுக்கட்டாயமாக முத்தமிடுகிறான். ‘கறைப்பட்டு’போன தன் உடலைக் காதலனுக்கு அளிக்கவிரும்பாத ஆனந்தி முத்தமிட்ட மாணிக்கத்தையே திருமணம் செய்துகொள்கிறாள்.

அண்ணாமலை தன் முறைப்பெண் சுந்தரியை மணக்கிறான். சுந்தரிக்கு ஓவிய ஈடுபாடு இல்லை.சுந்தரி தற்கொலை செய்துகொள்கிறாள். மாணிக்கம் ஆனந்தியை கொடுமைசெய்கிறான். ஒரு சண்டையில் ஆனந்தியின் தாலி மாணிக்கத்தின் கையோடு வந்துவிடுகிறது. ஆனந்தி அண்ணாமலையைத்தேடி வருகிறாள். அங்கே அண்ணாமலை கையொடிய ஆனந்தியின் ஓவியத்தை வரைந்துகொண்டிருக்கிறான். அவள் வந்து அவனுடன் இணைகிறாள்.

இதில் என்ன தரிசனம் இருக்கிறது? இது உருவாக்கும் உலகம் எந்த தத்துவார்த்த உண்மையை நமக்கு காட்டுகிறது? இதன் நோக்கம் வாழ்க்கையைச் சொல்வது அல்ல. நம்முடைய யதார்த்தபோதத்துடன் உரையாடுவது அல்ல. இது ஒரு கற்பனையுலைச் சொல்கிறது. நம் பகற்கனவுகளுடன் உரையாடுகிறது.

இந்த ‘டெம்ப்ளேட்’டை நூற்றுக்கணக்கான கதைகளில் நீங்கள் கண்டிருக்கலாம். ஸ்ரீதர் சினிமாக்கள் எல்லாமே இந்தவகைதான். இன்றும்கூட ரமணிசந்திரன் இதே டெம்ப்ளேட் கதைகளை எழுதிக்கொண்டே இருக்கிறார். இந்த டெம்ப்ளேட் சரியாக அமைந்த புகழ்பெற்ற நாவல் என்றால் சார்ல்ஸ் டிக்கன்ஸின் டேல் ஆஃப் டூ சிட்டீஸ்தான். ஆனால் அது இலக்கிய ஆக்கம்.காரணம் அதன் பின்னணி.

இன்னொரு உதாரணம் தகழி சிவசங்கரப்பிள்ளையின் செம்மீன். பாடகனாகிய காதலன். அழகிய காதலி.முக்கோணக்காதல். ஆனால் அந்தக்கதைக்குள் தகழி கடல் என்ற மாபெரும் இருப்பை கொண்டுவந்து நிறுத்துகிறார். சமூகமாக, விதியாக, காலமாக ,கடவுளாக மாறிக்கொண்டே இருக்கும் கடல் செம்மீனை இலக்கியமாக ஆக்கிவிடுகிறது.

அதாவது ஒரு டெம்ப்ளேட் கதையில்கூட ஆசிரியனின் தரிசனம் இலக்கியத்தை உருவாக்கிவிடமுடியும். அங்கே புறவய யதார்த்தம் இல்லை. ஆனால் ஆசிரியன் உருவாக்கும் தரிசன யதார்த்தம் உள்ளது. சித்திரப்பாவையில் இவை இரண்டுமே இல்லை.

ஆகவே அதில் புதுமையை எதிர்பார்ப்பதில் பொருளே இல்லை. சொல்லிச்சொல்லிப் பழகிய கதை. சொல்லித்தேய்ந்த களம். வார்ப்புரு கதாபாத்திரங்கள். வழக்கமான கதைத்திருப்பங்கள். வழக்கமான வசனங்கள். வழக்கமான முடிவு.

சித்திரப்பாவையின் உரைநடையைப் பரிதாபம் என்றே சொல்லவேண்டும். அக்காலத்தில் வார இதழ்களின் வாசகர்கள் அதிகமும் பெண்கள். அவர்கள் அன்றெல்லாம் சராசரியாக எட்டாம் வகுப்பைத் தாண்டாதவர்கள். அவர்களுக்காக எழுதப்பட்ட கதைகளில் மொழி என்பது ஒருவகை ‘சின்னப்புள்ளை நடை’ தான். வணிக எழுத்தில் நடை என்ற அம்சம் குடியேறியதே எழுபதுகளின் இறுதியில் சுஜாதா நுழைந்தபோதுதான்.

அகிலனுக்கு மொழிநடையில் முன்னுதாரணமாக இருந்தவர் வி.ஸ.காண்டேகர். அவரது நாவல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீ. மொழியாக்கத்தில் தமிழில் வந்து பெரும் வரவேற்பைப்பெற்ற காலம் அது. காண்டேகர் முக்கியமான இலக்கியவாதி. அவர் தன் படைப்புகளினூடாக ஒரு தனித்த வாழ்க்கைப்பார்வையைத் தொகுத்துவைக்க முயன்றவர். அவரது படைப்புகளில் அவர் சிந்தனைகளை முன்வைப்பார்; கதைமாந்தர் அவற்றைப்பேசுவார்கள். அவை அன்றைய வாசகர்களுக்குப் பிடித்திருந்தன

காண்டேகரை முன்னுதாரணமாகக் கொண்டு எழுதியவர் அகிலன். ஆனால் அவரது சிந்தனைகள் அசலானவை அல்ல. சூழலில் இருந்து பொறுக்கிக்கொண்ட எளிய கருத்துக்கள்மட்டும்தான் அவை. ஆகவே அவற்றுக்கு மொழிநடைசார்ந்து எந்தத் தனித்தன்மையும் அமையவில்லை. அகிலன்நடை என்ற ஒன்று உருவாகவேயில்லை

கடைசியாக, அகிலன் வாசகர்களின் கற்பனையைத் தூண்டும் நாவலாசிரியரே அல்ல. நல்ல நாவல் பறவைபோல நமக்குமேல் பறக்கும். நமக்கு முன் அதன் நிழல் பாய்ந்தோடும். நாம் நம் முழுமூச்சாலும் அதைப்பின்தொடர்வோம். சுமாரான நாவல்கள் குதிரைபோல நமக்கு முன்னால் ஓடும். எளியகதைகள் நம்முடன் அவையும் ஓடும். அகிலன் நாம் வெகுதூரம் ஓடி திரும்பிப்பார்க்கையில் நமக்குப்பின்னால் மூச்சிரைக்க வந்துகொண்டிருக்கிறார்.

எந்தவகையிலும் அகிலன் எழுதியவை இலக்கிய ஆக்கங்கள் அல்ல. அவை அக்கால வணிகப்படைப்புகள் மட்டுமே. அப்படியென்றால் எப்படி ஞானபீடம் கிடைத்தது? அதற்கான பதில் தமிழில் விருதுகள் படைப்புக்களை அடையாளம்காட்டக்கூடியவை அல்ல என்பதே.

அகிலன் காங்கிரஸ்காரர் என்பதே அவர் விருது பெற முக்கியமான காரணம்.அத்துடன் அகிலன் கல்வித்துறையில் ஆழமான தொடர்புகள் கொண்டிருந்தார்.அவரது படைப்புகளில் ஆய்வுசெய்து சாதாரணமான ஒரு முனைவர்பட்ட ஏடு வெளியிட்ட எழில்முதல்வன் என்பவர் அதற்காக சாகித்ய அக்காதமி விருதுபெற்றிருக்கிறார்.

சரி, அந்நாவலில் சாதகமான அம்சம் என ஏதுமில்லையா? ஒட்டுமொத்தமாகவே அகிலனின் நாவல்களுக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. அவை இந்தியா சுதந்திரம் பெற்ற காலகட்டத்தின் மனநிலைகளை எளிய கருத்துக்களாகப் பிரதிபலிக்கக்கூடியவை. அன்றைய கனவை, இலட்சியவாதத்தின் கொப்பளிப்பை அவை ஓரளவு காட்டுகின்றன.

அன்றைய வணிக எழுத்தும் வாசிப்பும் கற்பனாவாதம் சார்ந்தது. காதல் அதற்கு இன்றியமையாதது. காதலுக்கு இலட்சியவாதம் சரியான கூட்டு என்பதனாலேயே அவர் அவற்றைக் கலந்தார். ஆனாலும் நாம் மறந்துவிட்ட இலட்சியவாத உலகை அவை காட்டுகின்றன என்பது அவற்றை இன்று கவனிக்கத்தக்கவையாக ஆக்குகிறது

ஜெ

முந்தைய கட்டுரைபுரவி-கடிதம்
அடுத்த கட்டுரைவிருது கடிதங்கள்