இரு திருத்தங்கள்

அன்புள்ள ஜெ,

// சினிமாவை ஒருபடி கீழானதாக, வணிகக்கலையாக காணும் வெங்கட்சாமிநாதன் போன்ற தூய்மைவாதிகள் என்றால் அதைப்புரிந்து கொள்ள முடிகிறது. //

நீங்கள் எப்படி இந்த எண்ணத்தை அடைந்தீர்கள் என்று தெரியவில்லை. நான் வாசித்த வரை, வெங்கட் சாமிநாதன், சினிமா என்ற *கலையை* ஒரு போதும் கீழானதாகக் கருதியதில்லை, மாபெரும் சாத்தியங்கள் கொண்ட ஒரு சிறந்த கலையாகவே கருதியிருக்கிறார். சத்யஜித் ரே, மணி கவுல், பாலு மகேந்திரா போன்ற சினிமா கலைஞர்களைக் குறித்தும், வீடு போன்ற தமிழ்ப் படங்களையும் குறித்தும் கூட விரிவான பதிவுகளை எழுதியிருக்கிறார். ஜான் ஆபிரகாம் போன்ற கலைப் பித்துப் பிடித்த சினிமாக் காரர்களுடன் அவருக்கு நல்ல தொடர்பும் இருந்தது.

அவரது ஆற்றாமை எல்லாம் – தமிழ் சினிமா என்பது இத்தனை நீண்ட காலத்திற்குப் பின்னரும் பெருமளவு மலினமான ரசனையை வளர்க்கும் வணிகக் கேளிக்கையாக மட்டுமே தேங்கி விட்டிருக்கிறதே என்பதும், அவ்வப்போது எழும் நன்முயற்சிகளும் நீடித்ததாக, காத்திரமாக இல்லாமல் தளர்நடை நடந்து விழுந்து விடுகின்றன என்பதும் தான்.. அவர் தமிழ் ஸ்டுடியோ தளத்தில் சமீபகாலமாக எழுதிவரும் தொடரில் கூட இதைத் தான் புலம்பியிருக்கிறார்.. அந்தப் புலம்பலுக்கு இடையிலும் ஆடுகளம், எங்கேயும் எப்போதும், அங்காடித் தெரு போன்ற படங்களைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.. இப்போது எண்பது வயதை நெருங்கும் வெ.சா இந்த வயதில் உட்கார்ந்து இவ்வளவு கூர்ந்து படங்களைப் பார்த்து விட்டு அதைப் பற்றி விமர்சிக்கவும் செய்கிறார் என்பது என்னை எப்போதும் ஆச்சரியப் படுத்தும் ஒன்று.

சினிமா விஷயத்தில் அவர் தூய்மைவாதி அல்ல, கலைநோக்குவாதி என்பதே சரியாக இருக்கும்.

அன்புடன்,
ஜடாயு

மதிப்பிற்குரிய ஜெ அவர்களுக்கு,

இது தங்களின் “இலக்கிய விவாதங்களும் எல்லை மீறல்களும்” என்ற பதிவில் வந்த கீழ்க்கண்ட வரிகள் குறித்து,

//அருட்பா விவாதம் இலக்கிய விவாதம் மட்டுமல்ல. ராமலிங்க வள்ளலார் சாதியில் குறைவான தொண்டை மண்டல முதலியார். [வேளாளார் அல்ல] ஆறுமுக நாவலர் சைவ மடங்கள் அனைத்தையும் கைவசம் வைத்திருந்த கார் காத்த வேளாளர். ஆகவே மடாதிபதிகள் வள்ளலாரைத் தாக்கப் பின்புலம் உருவாக்கினர்.//

ராமலிங்க வள்ளலார் சுருக்கமாக சொன்னால் கருணீகர் என்ற ஜாதியை சேர்ந்தவர் . வட தமிழகத்தில் ஊர்க் கணக்கு எழுதும் வேலை செய்து வந்த ஒரு சமுதாயம்.

அவ்வளவு பெரிய பேசுபொருள் கொண்ட கட்டுரைக்கு இந்தக் கடிதம் தகுதி இல்லை என்று தெரியும், வள்ளலாருக்கு ஜாதி தேவையும் இல்லை..மாறாக எனக்குத் தெரிந்த ஒரு சிறு உண்மையைக் கூற விழைந்த கடிதம்.

நன்றி.
கோகுல்

முந்தைய கட்டுரைவிருது கடிதங்கள்
அடுத்த கட்டுரைஉளச்சிக்கலும் இலக்கியமும்