காந்தி கடிதங்கள்

உங்கள் “எப்படிக் கிடைத்தது சுதந்திரம்” படித்தேன். நல்ல கடிதம்

காந்தி வெள்ளைக்காரர்கள் என்று இன ரீதியாக எதிர்க்கவில்லை , காலனி ஆதிக்கம் எனும் ஆட்சி முறையைத்தான் எதிர்த்தார் என்றே நினைக்கின்றேன்.

காலனி ஆதிக்கம் எனும் ஆட்சி முறையே பொருளாதாரச் சுரண்டலை வெளிப்படையாகவும் , மையமாகவும் வைத்தே இயங்குவதே.

மேன்மை தாங்கிய பிரிட்டிஷ் ராணிக்கு இந்தியர்களைப் பல்லக்குத் தூக்க அனுமதித்தாலும் அவர்கள் பிரிட்டிஷ் குடிமகனுக்கு இணையான குடியுரிமையும் , சட்டப்பாதுகாப்பும் இந்திய மண்ணில் உள்ளவர்களுக்குக் கொடுக்கவில்லை. ஒரு பொழுதும் கொடுக்க உத்தேசித்ததும் இல்லை.

காந்திய சுதந்திரம் அதிகாரத்தை மாற்றி அமைப்பது இல்லை, மக்களை மாற்றி அமைப்பது என்றும் உங்கள் கட்டுரைகளில் முன்பே நீங்கள் சொல்லி இருந்ததுதான். காந்தி நாடு என நினைத்தது மக்கள் மனதைத்தான் , திரட்டிக் குவிக்கப்படும் அதிகார பீடங்களை அல்ல என்று உங்கள் பழைய காந்தி கட்டுரைகளில் சொல்லி இருந்ததும் நினைவுக்கு வந்தது.

புலிநகக் கொன்றையில் சுதந்திரம் ஒட்டிய கால கட்ட தமிழக வரலாறு காட்சி விரிவான பின் புலமாக வரும். உங்கள் வணங்கான், கோட்டி, கைதிகள், குருதி போன்ற கதைகளிலும் அதைப் பின்புலமாகக் கொடுத்து இருந்தீர்கள். பூமணியின் சமீபத்திய நாவலிலும் இதுவே பின் புலம் என்று நினைக்கின்றேன். இன்னமும் படிக்கவில்லை.

இன்று காந்தி இருந்தால் நாம் பூரண சுதந்திரம் அடைந்து விட்டோமா என்று கேட்டால் அவரது பதில் இல்லை என்றே இருக்கும். அரசியல் அதிகாரம் சுதேசி ஆகி விட்டது, ஆனால் தற்சமய அரசியல் காலனி ஆதிக்கம் போலவே செயல் படத் துடிக்கின்றது.

அன்புடன்
நிர்மல்

அன்புள்ள நிர்மல்

காந்தி இந்திய சுதந்திரநாளைக் கொண்டாடவில்லை. அது ஒரு சாதாரணத் தொடக்கம் மட்டும்தான் என அவர் நினைத்தார்

கிராமங்களின் பொருளியல் தற்சார்பு, பரவலாக்கப்படும் அதிகாரம், மையமில்லா நிர்வாக அமைப்பு, சூழியல்பாதுகாப்புள்ள உற்பத்திமுறை என இந்தியாவில் நிகழவேண்டுமென அவர் கனவுகண்ட விஷயங்கள் பல. எவையும் தொடங்கப்படவே இல்லை

ஜெ

திரு ஜெ அவர்களுக்கு,

காந்திஜி பற்றி தங்கள் வலைப்பதிவிலும், நவஜீவன் வெளியிட்ட அவர்
படைப்புகளையும் வாசித்து வருகிறேன்.
ஜூன் 19 இந்தியா டுடேஇதழில், ‘ மஹாத்மாவும், மனுபென்னும்’ எனும் கட்டுரை
வாசித்தேன். தாங்களும் வாசித்து இருப்பீர்கள் என நினைக்கிறேன். தங்கள்
கருத்துக்களைத் தெரியப்படுத்தவும்.

அன்புடன்
சேது வேலுமணி
செகந்திராபாத்

அன்புள்ள வேலுமணி

ஏற்கனவே உக்கிரமான வசைத்தொனியில் இதைப்பற்றிப் பேசியவர்கள் சொல்லாத எதுவும் இந்த டைரிகளில் இல்லை. சொல்லப்போனால் அப்போது உருவாக்கப்பட்ட பிழையான புரிதல்களை மாற்றக்கூடியவையாகவே இவை உள்ளன

1. இந்த டைரிகள் காந்தி சொல்லி மனுபென் எழுதியவை. காந்தி அவற்றின் பக்கவாட்டில் கையெழுத்திட்டிருக்கிறார். மனுபென் தன் ஆன்மசோதனையின் பகுதியாக இவற்றை எழுதவேண்டுமென காந்தி சொல்லியிருக்கிறார். இவற்றை அவர் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும், தன் தந்தையிடம் காட்டவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். ஆகவே இவை ஒன்றும் அதிரடியான டைரி வெளிப்படுத்தல்கள் அல்ல

2. இந்த டைரிகள் காட்டும் மனுபென் காந்தியால் கட்டாயப்படுத்தப்பட்ட அல்லது மூளைச்சலவைச் செய்யப்பட்ட சிறுமியாகத் தெரியவில்லை. தெளிவான சிந்தனை கொண்டவராகவே தெரிகிறார். காந்தியின் அந்த யோகப்பரிசோதனைகளில் அவர் இணைந்துதான் செயல்பட்டிருக்கிறார்.

3. ‘நவீனத்துவ’ உளவியலாளர் அவருக்கு ஏதோ ‘பாதிப்பு’ இருந்தாகவேண்டுமென தேடிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் மனுபென் காந்திய நோக்கில் சேவையையே தவமாகக் கொண்டு ஒரு மகத்தான வாழ்க்கையையே வாழ்ந்திருக்கிறார்

இந்தவிஷயத்தைப்பற்றி விரிவாகவே நான் முன்பு எழுதியிருக்கிறேன். இன்றைய காந்தி நூலிலும் உள்ளது

ஜெ

காந்தியும் காமமும் 1


காந்தியும் காமமும் 2

காந்தியும் காமமும் 3
காந்தியும் காமமும் 4

காந்திகாமம் ஓஷோ


காந்தியும் விதவைகளும்


தேவியர் உடல்கள்

ஆலயங்களில் காமம்


காந்தியும் காமமும் 3

முந்தைய கட்டுரைசிந்துவெளிநாகரீகம் பற்றி…
அடுத்த கட்டுரைகடைசி அங்கத்தில்…