பயணக்கட்டுரை

y

[நகைச்சுவை]

 

பயணம்சென்ற அல்லது செல்லாத ஒருவர் அப்பயணத்தில் நிகழ்ந்த அல்லது நிகழ்ந்ததாக அவர் எண்ணுகிற அல்லது அப்படி சொல்ல விரும்புகிற அனுபவங்களை எழுதுவது பயணக்கட்டுரை என்று சொல்லப்படுகிறது.பயணக்கதை என்றும் சொல்லப்படுவதுண்டு. இரண்டுக்கும் அதிக வேறுபாடு இல்லை.

பயணக்கதைகள் தமிழகத்தில் ராணுவ வீரர்களினால் உருவாக்கப்பட்டவை என்பதற்கான கல்வெட்டு ஆதாரம் உள்ளது என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். தமிழர்கள் அதிகமாக ஊர்விட்டு ஊர் சென்றது பட்டாளத்துக்குத்தான். போன இடத்தில் என்ன செய்தாலும் வந்த இடத்தில் அனுபவங்கள் பெருகுவதென்பாது  மானுட இயல்பே. மேலும் ராணுவம் என்பது ஒரு ஒற்றைப்பெரும் அமைப்பு. அதில் உள்ள ஒருவரின் அனுபவம் என்பது அனைவருடைய அனுபவமும்தான் அல்லவா?

ஆகவே பொதுவாக ராணுவத்துக்குப் போய்வந்த அனைவருமே ”எழுவத்தெட்டிலே நான் சியாச்சினிலே இருந்தப்ப இப்டித்தான்…” என்று ஆரம்பிப்பது மரபாக உள்ளது. சியாச்சின் என்பது ராணுவ வீரர்கள் அன்றாடம் சென்றுவரும் கொல்லைப்பக்கம் என்றா நம்பிக்கையே நம் நாட்டில் பரவலாக கிராமப்புறங்களில் நிலவியது. ”சியாச்சினிலே எல்லாம் ஒண்ணுக்கடிச்சா மூத்திரம் அப்டியே பனிக்கம்பியாட்டு வளைஞ்சு நிக்கும்லா?”. ”பொறவு?”. ”அப்ப்டியே நுனிய ஒடிச்சுவிட்டுட்டு வந்துட்டே இருப்போம்ல?”

எச்சில் துப்பி அந்தப் பனியுருளையைப் பயன்படுத்தி கோலி விளையாடுவது சியாச்ச்சினிலே சாதாரணம்.ஏன் ஒரு சர்தார்ஜி அப்புக்குட்டன் அண்ணனின் தலையில் தேங்காயெண்ணையை எடுத்து அடிக்க அவருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டுத் தழும்பாகிவிட்டது. ”எண்ணைக்குப்பியயா எடுத்து அடிச்சான் பாவி?”.  ”லே மயிராண்டி , வெறும் எண்ணையைலே…சியாச்சின்னுன்னா பின்ன என்னான்னு நெனைக்கே? தேங்காயெண்ணை குளுந்து கல்லாட்டு கெடக்கும்லா?”

பயணக்கட்டுரைகளின் இரண்டாவது  ஊற்றுமூலம் என்பது தீர்த்த யாத்திரைகள். தமிழர்கள் வீட்டை விட்டு வெளியே கிளம்பவேண்டுமென்றால் மூதாதையர் எதையாவது சாமிக்கு வேண்டித்தொலைத்திருக்க வேண்டும். பயணம் போவதற்கென்றே ”எப்பா பழனியாண்டவா இந்தபெயலுக்கு சொறி குணமானா உனக்கு இவனைக்கொண்டு ஒரு மொட்டையெ போட்டு விட்டுருதேன்பா” என்று கூப்பாடு போடும் பாட்டிகள் நம் நாட்டில் அனேகம். போய் வந்தால் போன கதையைக் கேட்க அண்டை அசல் வந்து கூடும்.

”யக்கா என்னாத்த சொல்ல போங்க…இந்தால நிக்கு ஒளுகிணசேரி வண்டி. அதைப்பிடிக்கதுக்கு என்னா பாடுங்குதீய? கூட்டமானா கூட்டம் அம்புட்டு கூட்டம். ஒருத்தி நிக்கா பட்டும் பவிசுமாட்டு..அவா மொகத்திலே மாவு மாதிரில்லா படுவரு போட்டிருக்கா…மூளியலங்காரி…” என ஆரம்பித்துப் பயணத்தின் நுணுக்கமான தகவல்கள் அடங்கிய பயணக்கதைகளில் கண்டிப்பாக அற்புத அம்சம் உண்டு

” …உன்னாணை அக்கா, உள்ள போயி நிண்ணேன் பாரு, பழனியாண்டவன் என்னைய பாத்து சிரிச்சு, வந்தியா குட்டீ வாடீன்னு சொல்லுகதை என் கண்ணால கண்டேன்..இனி இந்த சென்மத்துக்கு போரும்…” என்று முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொள்வதுண்டு. கதை கேட்பவர் கிளாம்பிச் செல்லும்போது ”எளவு, பூசாரி கண்ணைக் காட்டினத பாத்துப்போட்டுவந்து பளனியாண்டவன் கண்ணாடிச்சான்னு கதை விடுகா…எங்க போனாலும் சவத்து மூதிக்கு கண்ணை காட்டுத சோலிதான்லா…” என்று மனதுக்குள் பினாத்தியபடி செல்வார்.

பயணக்கட்டுரைகள் பின்னர் அச்சிதழ்களில் வளர்ச்சி பெற்றன.  மேலே சொன்ன இரு வகைகளும் இரு மாதிரிகளாக ஆகின. முதல்வகையை மணியன் என்பவர் தமிழில் பிரபலப்படுத்தினார். இரண்டாவது வகை தொ.மு.பாஸ்கர தொண்டைமான் மற்றும் பரணீதரன் ஆகியோர் வழியாகப் பிரபலம் அடைந்தது.

முதல்வகை ஆச்சரியங்களும் திடுக்கிடும் திருப்பங்களும் நிறைந்தது. ”அலாஸ்காவிலே ஐஸ்கிரீம் செய்வதில்லை. முற்றத்தில் ஒரு டம்ளரில் சீனி போட்டு வைத்து விடுகிறார்கள். எடுத்து சாப்பிட வேஎண்டியதுதான்.” என்பது போன்ற வரலாற்றுத்தகவல்கள். ”அண்டார்டிகாவில் பெங்குயின்களைப் பழக்கி வீட்டு வேலைக்கு வைத்திருக்கிறார்களாம்” போன்ற ஆம்கள் ஆச்சரியத்தை அளிக்காமல் போகுமா என்ன. ‘வக்காலி ,இங்க பார்லே’ என்று கிராமத்தில் வியப்பொலிகள் கிளம்பும்.

உணவும் உடையும் இவ்வகைக் கட்டுரைகளில் சிறப்பாகப் பேசப்படவேண்டும். அதாவது உணவின் பெருக்கமும் உடையின் சுருக்கமும். ”சிங்கப்பூரில் நண்டின் அருகே ஒரு மீனைக் கொண்டு செல்கிரார்கள். நண்டு மீனைத் தன் கால்களால்  பிடித்ததும் இரண்டையும் சேர்த்து அவ்வாறே பொரித்துவிடுகிறார்கள். இது நண்டுமீன் என்று அங்கே பிரபலம்” என்றவகை குறிப்பு ஒருபக்கம் என்றால் ”கஜகஸ்தானில் ஒரே ஒரு மாமிக்கு மட்டும்தான் தயிர்சாதம்செய்யத் தெரியும். அந்தமாமியை என் நண்பர் டெலெக்சில் தொடர்புகொண்டபோது அவர் தாஜிஸ்தானில் இருந்து ரயிலில் வந்துகொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. நாங்கள் காரில் கிளம்பி கஜகஸ்தானுக்குச் சென்றபோது சித்ராமாமி தயிர் சாதத்தைக் கிளறிக்கொன்டிருந்தார். மணம் மூக்கை நிறைத்தது. ஆ! களக்!” என்றவகை எழுத்துக்கு திருவல்லிக்கேணி- மயிலாப்பூர் -ஆழ்வார்பேட்டை வட்டாரங்களில் தனி மதிப்பு உண்டு.

பக்திச்சுற்றுலா என்பது இருவகை. பெரும்பாலான தமிழ்க் கோயில்கள் ஒரேவகையானவை என்பாதனால் ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஆகவே ”கோபுரத்தை தாண்டிச் சென்றதுமே கன்னிமூலை கணபதி அமர்ந்திருந்தார் .அவருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு நேராக செம்புக் காப்பு போடப்பட்ட கொடிமரத்துக்கு வந்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினோம். கொடிமரத்துக்கு அப்பால் விரிந்ந்த  முகமண்டபம். அந்த மண்டபத்து சிலைகள் மிக அற்புதமானவை…”என எந்த கோயிலைப்பற்றியும் எழுதிவிடமுடியும்

எந்தக்கோயிலும் அர்ச்சகர் [பெயர்கூட அனேகமாக சாமா, சம்பு என்றுதான் இருக்கும்] கிட்டத்தட்ட ஒரே கதையைத்தான் சொல்வார். அனேகமாக ஏடாகூடம் நிறைந்த கதை. ”ஒருமுறை நாரதருக்கு முதுகில் நமைச்சல் ஏற்பட்டபோது இதற்கு என்ன பரிகாரம் செய்யலாமென அவர் பராசரரிடம் கேட்க ‘எந்த ஊரில் சிவபெருமான் நமைச்சல்தீர்த்தநாயகனாக அமர்ந்திருக்கிறாரோ அங்கே போய் அங்குள்ள வில்வமரத்தில் முதுகைத்தேய்த்தால் போதும் ‘ என்று சொல்ல அவர் இந்தத் தலத்துக்கு வந்தாராம். அதற்கேற்ப இங்கே வில்வத்தில் முள் இருந்ததை நாங்களே கண்ணால் பார்த்தோம். மேலும் அந்த வில்வமரத்தடி தேய்ந்து போயிருந்தது. ” போன்ற கதைள். கூடவே அல்லிக்கேணி அகன்றறியா அய்யர்கள் அப்பாவித்தனமாக ”இந்தத் தலத்தில் உள்ள யானைக்கு சிலசமயம் ஐந்தாவது கால் ஒன்று இருப்பதையும் கண்டோம்” என்று அற்புதப்படுவதும் உண்டு.

இரன்டாவது வகை எழுத்தில் சகஜமாக நடை ஒழுகுவதற்காக மாமாத்தனமான நகைச்சுவைகள் பரிமாறப்படுவதுண்டு. ”என்ன ஓய், கும்பகோணம் போனா கும்பம் கரைஞ்சிடும்கிறாளே நெஜம்மா?” என்றார் நண்பர். ’அதெப்டி சொல்றீர்’என்றேன் நான். ’அப்டித்தான் ஓய்…’ என்றார் அவர். ‘ எப்டி ,சொல்லுமேன்?’ என்றேன். அவர் ’எதைச் சொல்றது போங்கோ’ என்றார் ’சொல்லும் ஓய் , ரொம்ப பிகு பண்ணாதீம்’என்றேன். அவர் உடனே ஒருவாய் பாக்கைக் கடித்துவிட்டு சொல்ல ஆரம்பித்தார்…” என்று சம்பிரமமாக கட்டுரையை எடுப்பது பொதுவான வழக்கம்.

முதல்வகைக் கதைகள் சரசமாக அமைய ஒரு நண்பர் தேவை. இவர் அப்பாவியாக, குடிகாரராக, அல்லது அதிஜாக்ரதைக்காரராக இருப்பார். அப்படியானால் அவர் கண்டிப்பாக இல்லா ஆள்தான் என நாமே ஊகிக்கலாம். ”நண்பர் பாஸ்போர்ட்டை எடுத்துக் கடலிலே போடப்போனார். ”அடாடா ஏன்யா?” என்றோம். ”இங்கே பாஸ் தெ போர்ட் அன் தென் டு ஸீ என்று போட்டிருக்கிறதே ” என்றார்”. என்பது போன்ற நகைச்சுவைகள் விழுந்து விழுந்து சிரிக்க வைப்பவை., அதற்குரிய அம்பிகளை.’ ”ஏர்போர்ட்டிலே இறங்கியதுமே மாமா ”அமெரிக்கால்லாம் கம்யூனிச நாடா என்ன? எல்லா இடத்திலேயும் அரிவாள்னு எழுதி வச்சிருக்கே” என்றார். ”அய்யோ மாமா அது அரைவல் என்று சொன்னோம்” இந்தமாதிரி பல…

திடுக்கிடும் திருப்பங்கள்! ”அந்த ஏழடி உயரமான நீக்ரோ கருப்பர் எங்களை நோக்கி வந்தார். அவரது வருகையே ஏதோ விபரீதம் நிகழப்போகிறது என்பதை எனக்கு உணர்த்தியது. நான் சப்தநாடியும் ஒடுங்கிப்போனேன். தொடரும்” என்று முடித்து அடுத்த இதழிலே ”அந்தக் கறுப்பர் ஏன்னிடம் ”எக்ஸ்யூஸ் மி வேர் கேன் ஐ கெட் எ கப் ஆஃப் பீர்?” என்று கேட்டார். நாங்கள் பப்பை சுட்டிக்காட்டியதும் ”தேங்க் யூ பிரதர்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்” என்று முடிக்கும்போது ஒருவாரமாகக் கூச்செறிந்து நின்றா தலைமயிர் சமநிலைக்கு வருகிறது.

இந்தப் பயணக்கட்டுரைகள் இப்போது ஆழமான தத்துவ விசாரங்களுடன் தனிக்கட்டுரை தொடர் வடிவம் கொண்டிருப்பதை இங்கே சுட்டிக்காட்டியாகவேண்டும். ”படுகாப்பூரில் தெருக்களில் அலைந்துகொன்டிருந்தபோது ஒரு யானையின் பிடரி எலும்பைக் கண்டடைந்தேன். அந்த எலும்பைத் தூக்கிக்கொண்டு தெருக்களில் அலைந்து கொண்டிருந்த போது இந்த யானை எத்தனை பேரைத் தன் மத்தகத்தில் ஏற்றியிருக்கும் இப்போது இதன் மத்தகத்தை நான் ஏற்றிக்கொண்டு அலைகிறேனே என்று எண்ணிக் கண்கலங்கினேன்” என்று எழுதலாம். யானை எலும்பைக் கண்டு அந்த ஊரில் போக்குவரத்து ஸ்தம்பிக்கவில்லை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை

பொதுவாக இவ்வகைக் கட்டுரைகளில் சற்றே ஞானக்கசிவு இருந்துகொண்டிருக்கும். ”ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றைப் பார்த்தபோது இந்த ஆறு இப்படியே எத்தனை காலம் ஓடிக்கொண்டிருக்கிறாது இன்னும் எத்தனை காலம் ஓடும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆறுபோலத்தான் நாமும் ஓடிக்கொன்டிருக்கிறோம் இல்லையா?” என்று முடிக்கும் போது கவித்துவம் உருவாகிறது.

இதேபோல செல்லுமிடங்களில் இருந்து எதையாவது எடுத்துக்கொண்டு வரலாம். “இமையமலையில் இருந்து ஒரு சிறு துண்டு கல்லை எடுத்துக்கொண்டு வந்தேன். இமையத்தை கொண்டுவர முடியாது அல்லவா?” [கொண்டுவந்தால்கூட ஷோ கேஸ் அந்த அளவுக்கு பெரிதாகச் செய்யமுடியாது அல்லவா?]

பயணக்கட்டுரைகள் வந்துகொண்டுதான் இருக்கும். இதில் ஆகப்பெரிய சிக்கல் என்னவென்றால் அமெரிக்கா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஆன்மீக எழுத்தாளர்கள் பயணம்செய்யும்போது கூடவே அவரை அழைத்தவர்களும் வந்து கொண்டே இருப்பதுதான். இதனால் கட்டுரைகளில் சுவைக்காக பெருங்காயம் வெந்தயம் போன்றவை சேர்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த வேண்டாத சாட்சிகளைக் களைய பதிப்பகத்தார் ஆவன செய்தால் ஆன்மீக பயணக்கட்டுரை இலக்கியம் மேலும் தழைக்க வாய்ப்புள்ளது.

 

[ மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Jul 25, 2010]

முந்தைய கட்டுரைவெண்முரசின் கார்வை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று-‘மாமலர்’-1