அன்புள்ள ஜெ,
கடந்த மூன்று வருடங்களாகத் தொடர்ந்து உங்கள் பதிவுகளைப் படித்துவருபவன் என்ற முறையில் கேட்கிறேன். அதுவும் கடந்த சில வாரங்களாகத் தொடர்ச்சியாக இடப்படும் உங்கள் ‘மொண்ணைத்தனம் மற்றும் சினிமாவில் எழுத்தாளர்கள் பங்கு’ தொடர்பான பதிவுகளினால் உண்டான ஆயாசத்தினால் கேட்கிறேன். விஷயத்திற்கு வருவதற்கு முன்னால் ஒரு முன்னுரை.
வெற்று அரட்டைகளும், சினிமா செய்திகளும், அன்றன்றைய தலைப்புச்செய்திகளுக்கு தீவிர எதிர்வினையாற்றுவதுமாய் நிறைந்திருந்த தமிழ் இணையத்தைக் கைவிடும் எண்ணத்திலிருந்து என்னை விடுவித்தது சொல்வனமும் உங்கள் பதிவுகளும்தான். உங்கள் பதிவுகளில் நான் தொடர்ந்து கற்றுக்கொண்டேயிருப்பது வரலாறு, ஆளுமை, தத்துவம் குறித்தவைகளில். வரலாற்றெழுத்துக்களும் அது தொடர்பான விஷயங்களில் உங்கள் அவதானிப்புகளின் மேலும் என் பிரமிப்புகள் அதிகம். இந்தியாவில் தமிழ்த் தேசியத்தின் செல்திசை, நக்சலைட்டுகள் போன்ற சமகாலப்பிரச்சனைகளின் மீது நீங்கள் எழுதியா நீண்ட கட்டுரைகள் ரசவாதத்தன்மை கொண்டவை.
நான் காவல் கோட்டம் வாசித்து முடித்தபின் அதைப்பற்றி நீங்கள் ஏதேனும் எழுதியிருக்கிறீர்களா எனத் தேடினேன். பெரும் புதையலே கிடைத்தது. போரில் நாய்கள் முன்னால் ஓடுவதற்கும், குறவர்கள் ‘காது குத்தி’க்கொண்டிருந்ததற்கும் நீங்கள் எழுதியிருந்த பின்புலங்கள் மிக எளிமையாக, ஏதோ செய்திகள் என்று போகிற போக்கில் நான் நாவல் வாசிப்பில் தவறவிட்டவை. ராஜாஜி, காமராஜ், மபொசி கட்டுரையில் குலக்கல்வித்திட்டம் என்று இல்லவே இல்லாத ஒன்று எப்படி பொய்யான மேடைப்பேச்சுகளாலேயே உருவாக்கி வளர்க்கப்பட்டு அடுத்த தலைமுறையிடம் கையளிக்கப்பட்டதென்பதைப் படித்து வியந்து அது முழுக்க உண்மையே என்று காமராஜ் ஆட்சித்தொடர்பான முனைவர் ஆய்வு மேற்கொண்டிருக்கும் என் தம்பியிடமிருந்து ஒரு சில ஆதாரங்களை நானே நேரடியாகப் பார்த்தபோது உணர்ந்தேன். இந்தியா என்ற ஒரு நாடே கிடையாது அது பிரிட்டிஷ்காரர்கள் ஆளும் வசதிக்காக உருவாக்கிய வடிவம் என்று திண்ணமாகவே நான் ஒரு முடிவுக்கு வந்திருந்த காலங்களில், அரசியல் மாற்றங்களினால் தொடப்படாத, தொடப்படவும்முடியாத ஒரு தத்துவவலை இந்தியாவைப் பிண்ணிப்பிணைந்து கிடப்பதை உங்கள் இந்து மதம், அதன் தொகை வடிவம், அரவணைத்து முன்னேறும் தன்மை தொடர்பான ஒவ்வொரு கட்டுரைகளிலும் தெள்ளத்தெளிவாகக் கண்டேன். இதன் புண்ணியத்தில் உங்களுக்கு இந்துத்துவ முத்திரையும் இலவசமாகக் கிடைக்கிறது என்பதையும் புரிந்துகொண்டேன். ராஜீவ் மல்ஹோத்ரா/அரவிந்தன் நீலகண்டனின் ‘உடையும் இந்தியா’ வும் தேவிப்ரசாத் சட்டோபாத்யாயாவின் ‘இந்தியத் தத்துவ ஞான இயலு’ம் இன்று நான் வாசிக்கத் தொடங்கியிருப்பதில் கணிசமான பங்கு உங்களுடையது. இந்து மதம் சிறு தெய்வ வழிபாடுகளை உள்ளிழுக்கும்போது சிறுதெய்வங்களின் அசைவ உணவுப்பழக்கங்களை சைவமாக மாற்றுவது குறித்து நான் எழுப்பிய சந்தேகங்களை, புத்த, சமண மதங்களின் பாதிப்பின் ஒளியில் ஒரே குடும்பம் எவ்வாறு தத்துவப்பூர்வமாகவும் வழிபாட்டுரீதியாகவும் இரண்டு தளங்களில் செயல்பட்டிருக்கலாம் அவை ஒன்றையொன்று பாதித்திருக்கலாம் என்ற உங்களின் தனிப்பட்ட கடித விளக்கம், இப்படியெல்லாம் யோசிக்கிராரே மனுஷன் என்று ஆச்சரியப்படவைத்தது.
எண்பதுகளில் பிறந்த என்னைப்போன்றோரின் மேல் ஓஷோ போன்ற அறிவுஜீவிகளால் படரவிடப்பட்டிருக்கும் காந்தி குறித்தான தவறான புரிதல்களைத் (தன்மீது செலுத்திக்கொள்ளும் பட்டினியும் வன்முறைதான் என்று எளிமையாக காந்தியை முட்டாளாக்கிச் செல்வது நம் அகங்காரத்திற்கு வேண்டுமானால் உவப்பளிக்கலாம்) தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பது இந்திய வரலாற்றுக்குத் தங்களின் கொடை என்றே கருதுகிறேன். ராமச்சந்திர குஹாவின் ‘காந்திக்குபின் இந்தியா’ வை அறிமுகப்படுத்தி நீங்கள் எழுதியதில் சுதந்திரத்திற்குப்பின் இந்தியா என்று அவர் தலைப்புவைக்கவில்லை ஏனெனில் அது பிரிட்டிஷாரை மையமாகக்கொண்டது என்று எழுதியது இன்றும் என் நினைவில் உண்டு. உங்கள் அம்பேத்கரின் தம்மம் பேச்சு, இன்று யாராவது அம்பேத்கர் என்ற பெயரை உச்சரித்தால் சட்ட வல்லுனர், தலித் முகங்களெல்லாம் மறைந்து ஒரு புத்த ஞானியாக மனத்தோற்றம் உருவாகச் செய்கிறது. தன் மக்களுக்கு புத்தத்தை வெறும் மத ஆல்டர்னேட்டிவ்வாகப் பரிந்துரைக்கவில்லை; அறிவின் வழியைப் பரிந்துரைத்தார் என்ற உங்களின் கோணம் எனக்கு ஒரு திறப்பு. இன்னும் இன்னும் எழுதிக்கொண்டேபோக ஆயிரம் உண்டு. அது இக்கடிதத்தின் நோக்கமல்ல.
உங்கள் எழுத்துக்கள் சிந்தனைகளால் உருவாகியிருந்த மதிப்பு மேலும்மேலும் கூடிக்கொண்டேபோனது விமர்சனங்களையும் அவதூறுகளையும் நீங்கள் எதிர்கொண்ட வழியினால்தான். உங்கள் புத்தகத்தைக் கிழித்துவீசிக் காறித்துப்பவேண்டும் என்ற சாருவின் கடும் வசையையும், வக்கீல் நோட்டீஸ் என்ற பெயரில் (அது என்னாச்சு?) நம்பமுடியாத அளவுக்கு சொந்த வாழ்க்கைத் தொடர்பான அவதூறுகளையும் நீங்கள் எதிர்கொண்டவிதம் போற்றுதலுக்குரியது. எஸ்விஆரின் பங்களிப்பு என்று அவரின் பெயரைக் கேள்வியேபட்டிராத என் தலைமுறை வாசகர்களுக்கு ஒரு நல்லறிமுகமும் கொடுத்து பதிவுகளிட்டது சமனிலையின் உச்சம். நிற்க.
விஷயத்திற்கு வருகிறேன். தொடர்ந்து இந்திய சினிமா ஆழமான விஷயங்களுக்குள் செல்ல இயலாமல் கலைப்படைப்பாக ஆக்க இயலாமல் டெம்ப்ளேட்டுகளே ஏன் வருகின்றன என்பதற்கு ஆந்திர, தமிழக, கேரள மக்கள்தொகைகளில் இருக்கும் சமூகத்தின் பொதுத்தன்மைக் குறைபாட்டின் வித்தியாசத்தைக் காரணமாகக்காட்டியிருந்தீர்கள். ஹிந்தி சினிமா தெலுங்கை விட மோசமான, தட்டையான டெம்ப்ளேட்டுகளால் நிரம்பி வழிந்து சமீபகாலமாக ஏற்பட்டிருக்கும் மாற்றங்களையும் குறிப்பிட்டிருந்தீர்கள். நீங்களும் சினிமாவுக்கு வந்துவிட்டீர்களா என்ற கேள்விக்கு நீங்கள் தொடர்ந்து அளித்துக்கொண்டிருந்த ஒரு பதில், சினிமா நீங்கள் பார்த்துக்கொண்டிருந்த அரசாங்க(?) வேலைக்கான மாற்றே தவிர எழுத்துக்களுக்கு அல்ல என்பது. அதாவது அரசாங்க வேலையை விடக் குறைவான உழைப்பைக்கோருகிற ஆனால் பலமடங்கு ஊதியம் பெற்றுத்தருகிற ஒரு வேலை என்ற அளவில். ஆனால் சமீபகாலமாக உங்கள் கருத்துகளில் ஏதேனும் paradigm shift என்பார்களே அது ஏற்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. கொஞ்சம் கறாராக ஆனால் மிகைப்படுத்திச் சொன்னால் உங்கள் சமீப சினிமா தொடர்பான எழுத்துக்கள் எனக்கு அளிக்கும் சித்திரம் இது ; சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த வல்லது சினிமா. ஆக சமூக ரசனையை நெறிப்படுத்த அதில் எழுத்தாளர்கள் பங்கு அத்தியாவசியமானது. இப்போது தமிழில் பாரிய அளவில் இல்லாவிட்டாலும் தொடங்கிவிட்டது என்பதால் இது வரலாற்றுத்தருணம். இதை நிகழாமல் தடுக்க விரும்புவோர் சமூக விரோதிகள்!
அறிவு மொண்ணைத்தனம் போன்ற விவாதங்களும் சுழன்று சுழன்று சினிமாவில் வந்து நிற்பதும், நீங்களும் உங்கள் சினிமா பங்களிப்பு தொடர்பான உதாரணங்களாகக் காட்டுவதும், கூரிய அறுவைச்சிகிச்சைக்கத்தி, மோதி மிதித்தல், முகத்தில் உமிழ்தல் என்று தொடங்கிவிட்டதும், சில இடங்களில் தங்களின் வார்த்தைத் தேர்வுகளும் ஜெயெமோகன் வலைத்தளத்தை யாரும் ஹேக்கி விட்டார்களோ என்று அவ்வப்போது கொஞ்சம் துணுக்குறச்செய்கிறது. போதும் ஜெ. இரண்டாவது பத்தியின் முதல் வரியை தயவுசெய்து மீண்டும் படியுங்கள். நீங்கள் மீண்டு(ம்) எங்களுக்கு வேண்டும். ஒருமுறை நீங்கள் சிறுபத்திரிகைகளிலும் சினிமா விமர்சனம் என்று அரைகுறையாக எதாவதுதான் எழுதுகிறார்கள், என்ன, ஆங்காங்கே கொஞ்சம் தட்டைத்தன்மை, நெகிழ்வுதளம்(?) போன்ற வார்த்தைகளைக் கலக்கிறார்கள் என்று எழுதியதாக ஞாபகம். உங்கள் ஆளுமையை அறியாமல் உங்கள் சமீபத்திய பதிவுகளைப் புதிதாகப் பார்க்கும் ஒருவர் இந்த முடிவுக்கு வந்துவிடக்கூடாது என்ற ஆதங்கம்தான் எனக்கு. தொப்பி திலகத்தின் போது நீங்கள் கையாண்ட புகழ்பெற்ற filtering முறையை உங்கள் பதிவுகளில் மீண்டும் கையாள வேண்டிய நேரமோ என்று நினைக்கிறேன்.
இதுவே இந்த விஷயங்கள் தொடர்பான, என்னிடமும் பிறரிடமும் இருந்து உங்களுக்கு வரும், கடைசிக்கடிதமாக இருக்க பிரார்த்தித்துக்கொள்கிறேன்.
சிவானந்தம் நீலகண்டன்,
சிங்கப்பூர்.
அன்புள்ள சிவானந்தம்
நீங்கள் சொல்வதை முழுமையாகவே ஒப்புக்கொள்கிறேன். சிலசமயம் இப்படி ஆகிவிடுகிறது என்பதற்கு மேல் ஒன்றுமே சொல்வதற்கில்லை. என் மனைவி காலையில் கூப்பிட்டு பேசியதை பதினைந்து நிமிடம் கழித்து நீங்கள் மின்னஞ்சலில் அனுப்பியதுபோல உணர்ந்தேன்
நான் தமிழ் சினிமாவையோ அல்லது பரப்புக்கலை சார்ந்த எதையுமோ முன்வைக்கவோ நியாயப்படுத்தவோ இல்லை. நான் சொல்வது இதுதான், ஒரு சின்ன மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது. சுபமங்களா, இந்தியா டுடே, தினமணி வழியாக பேரிதழ் தளத்தில் தொண்ணூறுகளில் நிகழ்ந்தது. ஒருவேளைதான். ஆனாலும் ஒரு வாய்ப்பு என்பதே பெரியவிஷயம். அப்போது சுமபங்களாவில் எழுதுவதையும் அதில் எழுத்தாளர்களின் புகைப்படங்களைப் பிரசுரிப்பதையும் கடுமையாக எதிர்த்து சிலர் எழுதியதுண்டு. ஆனால் இப்போது நிகழ்வது அம்மாதிரி தூய்மைவாதமல்ல, இவர்கள் அந்தவகையான அடித்தளம் கொண்டவர்களுமல்ல. வெறும் பொறாமைக்காய்ச்சல்காரகள். நான் சொல்லவந்தது அது மட்டுமே.
சரிதான், எதிர்வினைகள் நம்மை நம் நிலையில் இருந்து கீழிறக்கவே செய்கின்றன. ஆகவேதான் பெரும்பாலும் எதிர்வினையாற்றுவதில்லை. நிறுத்திக்கொள்கிறேன்
ஜெ