பண்பாட்டை ஏன் சுமக்கவேண்டும்?

1Aug 24, 2009 @ 0:09

 

அன்புள்ள  ஜெயமோகன்,
தென்றல் இதழில் உங்கள் பேட்டியை படித்தேன். அதில் நீங்கள் புலம்பெயர் இந்திய தமிழர்கள் வேற்று நாட்டையே தங்கள் நாடாக கொண்டு வாழ்வதை பற்றி ஒரு கசப்புடனே சொல்லியிருந்தீர்கள். வேறு நாட்டை தங்கள் வாழ்விடமாக கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? அமெரிக்காவிலோ அல்லது இங்கிலாந்திலோ வாழ்வு தரம் சற்று மேம்பட்டு இருப்பதனால் தானே அவ்வாறு செய்கின்றனர். நீங்கள் பண்பாட்டு ரீதியாக உள்ள இழப்பை பற்றி பேசுகிறீர்கள். ஆனால் இந்த பண்பாட்டு அடையாளம் என்பது என்ன? பல்லாயிரக்கணக்கான வருடங்கள் உருவாகி வந்த பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக நம்மை நாமே உணர்வது தானே? ஏன் அப்படி ஒரு மரபின் நீட்சியாக நம்மை நாமே உணர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா என்ன? வேறொரு மரபில்  பிள்ளைகள் தங்களை இணைத்து கொண்டால் என்ன? அமெரிக்க/ஐரோப்பிய பண்பாடு என்ன கீழானதா?

அடையாளம் சார்ந்து சில இழப்புகள் இருக்கலாம் என்பதை புரிந்து கொள்கிறேன்.ஏனென்றால் மனிதர்கள் நிறம் சார்ந்து, சாதி சார்ந்து.மதம் சார்ந்து தங்களை அடையாளப்படுத்தி கொள்கின்றனர். அந்த அடையாளத்தை துறந்தவர்களுக்கு நட்புகளை ஏற்படுத்தி கொள்வதிலோ அல்லது திருமண உறவுகள் ஏற்படுத்தி கொள்வதிலோ சில சிரமங்கள் இருக்கலாம். ஆனால் இந்த பண்பாடு விஷயம் எனக்கு உண்மையில் புரியவில்லை. சற்று தெளிவு படுத்த முடியுமா?

அன்புடன்,
பிரபு

 

indian-village-scene-QM75_l

அன்புள்ள பிரபு

ஒரு மனிதர் இன்னொரு நாட்டுக்குச் சென்று அங்கே தன்னை வேரூன்றிக்கொள்ளச் செய்வதில் எந்த பிழையோ குறைபாடோ இருப்பதாக நான் நினைக்கவில்லை. அது வரும்காலத்தில் உலகமெங்கும் எல்லா இனத்துக்கும் நடக்கப்போகும் ஒரு நிலை. மனிதகுலம் மண்மீது பரவி வாழும். அதுவே உயர்ந்த நிலையும் கூட. அதை சிலாகித்தே எழுதிவந்திருக்கிறேன். என் குரலில் கசப்பு இருந்தது என்று எண்ணினீர்கள் என்றால் அதற்கு நான் பொறுப்பல்ல. பொதுவாக பேட்டிகள் பிறரால் எழுதப்படுபவை. சொல்தேர்வுகள் சற்றே தவறிவிடக்கூடும்.

ஆனால் பண்பாட்டு இழப்பு என்பது அத்தகையது அல்ல. உலகம் முழுக்க பரவி வாழும்போது மனிதர்கள் தங்கள் பண்பாட்டை இழந்து ஒற்றைப் பெரும்பண்பாட்டை மேற்கொண்டார்கள் என்றால் அது ஒரு மாபெரும் இழப்பே. அதை மனிதர்கள் பல நாடுகளில் பரவுவதன் இயல்பான ஒரு விளைவாக நான் கொள்ளவில்லை. அதையே நான் மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறேன்.

உலகம் முழுக்க பொதுவாக இருக்கும் ஒற்றைப்பண்பாடு என ஒன்று இல்லை. அது உருவாகப்போவதும் இல்லை. உலகப்பண்பாடு என்பது பலநூறுபண்பாடுகளின் தொகுதியே. அந்த அமைப்பில் எல்லா பண்பாட்டுக்கும் அதற்கான பங்களிப்பு உண்டு. தமிழுக்கும் இந்தியாவுக்கும் அந்தப் பங்களிப்பு இருந்தாகவேண்டும்

முதல் விஷயம், நீங்கள் சொல்வதுபோல பண்பாடு என்பது வெறும் வசதியோ அடையாளமோ மட்டும் அல்ல. அதெல்லாம் புறக்கூறுகள். பண்பாடு என்பது அகம் சார்ந்தது. அதை இழக்கும்போது நம் இழப்பது அடையாளத்தை மட்டும் அல்ல.நம்முடைய அடிப்படையான அகக்கட்டுமானத்தைத்தான்.

நம் மனம் என்பதை கவனித்தால் அது எப்போதும் படிமங்கள் மற்றும் குறியீடுகள் வழியாகவே செயல்படுகிறதென்பதைக் காண்பீர்கள். அப்படிமங்கள் நமக்கு நாம் வாழும் சூழலில் இருந்து கிடைக்கின்றன. அச்சூழல் என்பது நம்முடைய பண்பாட்டால் உருவாக்கபப்ட்டது. பல்லாயிரம் வருடங்களாக மெல்லமெல்ல உருவாகி வந்த ஒரு மாபெரும் கட்டுமானம் அது.

இந்த கட்டுமானம் நம் மொழியில் புறவயமாக உள்ளது. நம்மைச்சுற்றியிருக்கும் சடங்குகளில் உள்ளது. நம் பழக்கங்களில் உள்ளது. அவற்றில் இருந்து நம் ஆழ்மனம் அந்தப்படிமங்களை வாங்கியபடியே உள்ளது. அவற்றின் வழியாகவே நாம் சிந்திக்கிறோம். நாம் கற்பனைசெய்கிரோம். கனவு காண்கிறோம்.

நம்முடைய உணர்ச்சிகள் அந்தப் படிமங்களால்தான் உருவாக்கப்படுகின்றன. படிமங்கள் வழியாகவே வெளிவருகின்றன. படிமங்கள் இல்லாமல் நாம் பேசவே முடியாதென காண்பீர்காள். ஒரு சிறு விஷயத்தைக்கூட பண்பாடு சார்ந்த படிமம் இல்லாமல் நம்மால் பிறருக்கு தெரியப்படுத்த முடிவதில்லை. பண்பாடு என்பது நாம் அணிந்திருக்கும் ஆடை போன்றதல்ல. நாம் மீன்களாக நீந்தும் கடல் அது

இன்னும் விரிவாகப் பார்த்தால் நம் ஆழ்மனமே பண்பாட்டால் உருவாக்கப்பட்டதுதான். ஆழ்மனம் என்பது ஆழ்படிமங்களினால்[ஆர்கிடைப்] ஆனது என்று ஒரு வசதிக்காகச் சொல்லிக் கொள்ளலாம். அந்த ஆழ்படிமங்கள் பல்லாயிரம் வருடங்களாக பண்பாட்டில் திரண்டு வந்தவை

சி.ஜி.யுங் ஆழ்படிமங்களை இவ்வாறு விளக்குகிறார். உப்பு ஒரு படிகத்தின் தோற்றம் கொள்கிறது. அந்தப்படிகத்தின் கணித அமைப்பை நாம் ஆழ்படிமம் என்று சொல்லலாம். அது நம் ஆழ்மனத்தில் ஒரு நுண்ணிய அமைப்புவிதியாக உள்ளது. நாம் ஒரு புதிய படிமத்தை உருவாக்கும்போது அந்த ஆழ்படிமத்தின் சாயலிலேயே மீண்டும் மீன்டும் உருவாக்குகிறோம். மானுடம் முழுமைக்கும் பொதுவான ஆழ்படிமங்கள் உண்டு. ஒரு பண்பாட்டுக்குச் சொந்தமான ஆழ்படிமங்கள்தான் அதிகம்.  அவையே பண்பாட்டின் அடிபப்டை அலகுகள்.

ஆகவே பண்பாட்டால்தான் நம் ஆழ்மனம் உருவாக்கபப்ட்டிருக்கிறது. நம் மனதின் வயது நம் வயதே.நம் ஆழ்மனத்தின் வயதுக்கு நாம் நம் தொல்பழங்குடிகள் வரை சென்று மூலம் கண்டுபிடிக்க வேண்டும். பண்பாட்டையும் மொழியையும் இழப்பதென்பது அந்த ஆழத்தை ஒட்டுமொத்தமாக இழப்பது மட்டுமே.

மொழி என்பதை ஒரு தொடர்புறுத்தும் சாதனம் மட்டுமே என்று சொல்லும் இயந்திரவாத கண்ணோட்டத்தை விரிவாக மறுத்து இப்போது மிக விரிவாகவே மொழியியல் பேசிக்கொன்டிருக்கிறது. மொழி என்பது பண்பாட்டின் புற வடிவம். மொழியை இழக்கும்போது நீங்கள் இழப்பது ஒரு வகை ஊடகத்தை அல்ல. ஒரு மாபெரும் தொடர்ச்சியை.

நான் மதத்தைப் பற்றியும் அதையே சொல்வேன். உங்களுக்கு கடவுள் வேண்டாம் என்றிருக்கலாம். எனக்கும்தான் கடவுள் இல்லை. ஆனால் எனக்கு மதம் தேவை. மதத்தின் கட்டமைப்பு அல்ல. நம்பிக்கை அல்ல. அதன் மாபெரும் குறியீட்டமைப்பு. அதன் மாபெரும் ஆழ்மனக்கட்டமைப்பு. அதன் பிரம்மாண்டமான மரபுத்தொடர்ச்சி. அதை இழந்தால் நாம்  காட்டுவாழ்க்கையில் இருந்து மீன்டும் ஆரம்பிக்கிறோம்

சரி,செல்லும் இடத்து பண்பாட்டை ஏற்றுக்கொண்டால் என்ன என்று நீங்கள் கேட்கலாம். அதை நம் மூளை ஏற்றுக்கொள்ளும். நம் ஆழ்மனம் ஏற்றுக்கொள்ள தலைமுறைகள் ஆகும். அதுவரை நாம் பண்பாடற்ற  யந்திர மனம் கொண்டவர்களாகவே இருப்போம். நமக்கு மேலான கலைகளை உருவாக்க முடியாது. மேலான சிந்தனைகளைக்கூட உருவாக்க முடியாது.

நான் என் குழந்தைகளுக்கு இந்து தெய்வ நம்பிக்கையை அளிக்கவில்லை. ஏன் என்றால் நான் பக்தன் அல்ல. ஆனால் இந்துப்பண்பாட்டை அவர்களுக்கு அளிக்கிறேன். அதன் பல்லாயிரம் கதைகளை குறியீடுகளை அவர்களுக்கு அளிக்கிறேன். அவற்றை என் அம்மா எனக்கு அளித்தார்

நான் என் பிள்ளைகளுக்கு தமிழ்வெறி எதையும் ஊட்டவில்லை. ஆனால் நல்ல தமிழைச் சொல்லித்தந்தேன். நல்ல தமிழ் கவிதைகளை ரசிக்கவும் நூல்களை வாசிக்கவும் கற்றுத் தந்தேன். மலையாள சினிமாவை ரசிக்க அவர்களை இட்டுச்சென்றேன். ஏன் என்றால் இவை செல்வங்கள் என்றும் எந்நிலையிலும் அவர்களுக்கு அவை கூடவரும் என்றும் நினைக்கிறேன். ஒரு பெரும் நீட்சியின் நுனியில் அவர்களை இணைக்கிறேன்

ஆகவேதான் பண்பாட்டின் தொடர்ச்சியைப்பற்றி நான் பேசுகிறேன். எங்குசென்றாலும் எப்படி வாழ்ந்தாலும் பல்லாயிரம் வருடத்து மரபின் நீட்சியாக உள்ள ஒரு பெரும் செல்வத்தை– நம் ஆழ்மனத்தை– அதில் உள்ள ஆழ்படிமங்களை– நாம் ஏன் இழக்க வேண்டும்?

ஒருவேளை அது இல்லாமல் நாம் தப்பிப்பிழைக்கலாம். ஏன் வெற்றிகூட அடையlaaம். ஆனால் அது இருப்பது நம் பலத்தை நாம் பலமடங்கு பெருக்கிக் கொள்வதல்லவா? ஓர் அமெரிக்க குடிமகனுக்கு ஆதிச்சநல்லூர் முதல் நீண்டுவரும் தமிழ்ப் பண்பாட்டின் ஆழ்மன நீட்சி இருக்குமென்றால் அது ஒரு மாபெரும் செல்வம் அல்லவா? அதை நம் பிள்ளைகளுக்கு ஏன் நாம் மறுக்க வேண்டும்?

ஏன் என்றால் நாம் தாழ்வுமனப்பான்மை கொன்டவர்களாக இருக்கிறோம். வெள்ளையர்களை உலகை உருவாக்கியவர்களாக வெற்றிகொண்டவர்களாக நாம் நினைக்கிறோம். அவர்களின் பண்பாட்டுடன் உருகி இணைய ஏங்குகிறோம். அது வெற்றியை அளிக்கும் என எண்ணுகிறோம். அதற்காக எதையும் இழக்கச் சித்தமாக இருக்கிறோம்.

உண்மையில் அது நிகழ்வதில்லை.  மலையாளத்தில் ‘உப்பு அளவுக்கு வருமா உப்பில்போட்டபண்டம்?’ என்று ஒரு பழமொழி உண்டு. நாம் அமெரிக்க பண்பாட்டை பின்பற்றும் வரை நாம் போலி அமெரிக்கர்களாகவே இருப்போம். ஆங்கிலோ சாக்சன் பண்பாட்டை அவர்கள் அமெரிக்காவுக்குக் கொண்டுவந்தார்கள். யூதப்பண்பாட்டை அவர்கள் கொன்டுவந்தார்கள். அவர்கள் எல்லாம் வென்றார்கள். நாம் ஏன் தமிழ் பண்பாட்டை க் கொண்டுவரக்கூடாது?

அதற்கு தமிழ்ப் பண்பாடு உயர்ந்தது என நீங்கள் நம்பவேண்டும். இந்துஞானம் உயர்ந்தது என நீங்கள் நம்ப வேண்டும். அந்த நம்பிக்கை உள்ளூர இருந்ந்தால் இக்கேள்வி இவ்வகையில் வந்திருக்காது

நம்புங்கள், நாம் எவருக்கும் குறைந்தவர்கள் அல்ல. மாபெரும் நாகரீகங்களை உருவாக்கிய மாபெரும் பரம்பரையினர் நாம். அந்த தொடர்ச்ச்சி  நமக்குச் செல்வமே ஒழிய சுமை அல்ல.

ஜெ

மறுபிரசுரம் /முதற்பிரசுரம் Aug 24, 2009 @ 0:09

 

முந்தைய கட்டுரைரப்பர் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 57