ஆரோக்கியநிகேதனம்-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் ,

“மனிதனின் ஆன்மிகத் தேடல் என்பது அவனை மரணத்திற்காகத் தயார் படுத்தவா ?.”

ஆரோக்கிய நிகேதனம் நாவலை முடித்த பிறகு எழுந்த கேள்வி இதுதான் .

இந்த நாவலில் ஜீவன் பல முனைகளில் இருந்தும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் சிக்கிக் கொண்டாலும் “சடை விரி கோலமான அந்த மரண தேவதையையே ” இறுதி வரை தேடுகிறார்.

தான் பல முறை அதை மற்றவர்க்கு ஏற்படும்பொழுது கண்டாலும் ,அவருக்கு அது எப்பொழுதும் புதிராகவே உள்ளது .

ஏன் பெரும் படைப்புகள் அனைத்தும் மரணத்தைக் கருப்பொருளாகக் கொண்டு நிகழ்த்தப்படுகின்றன ,மரணம் நிச்சயம், ஆனால் மனிதனுக்கு வாழ்வு முழுமை பெறுவது இல்லை மேலும் மேலும் வாழ வேண்டும் என்று விரும்புகிறான் (இந்த நாவலில் வரும் மதியின் வயதான தாய் போல )…இந்த முழுமை எது என்பதுதான் அவன் தேடும் ஆன்மிகத்தேடலா ?…

அவ்வாறு ஒரு முழுமை கைக்குக் கிடைத்து விட்டால் வாழ்தலின் பற்று இருக்காதுதானே ?.

ஏதோ ஒரு ஓரத்தில் இருக்கும் அந்த இருள் (அல்லது நம்பிக்கை எனும் ஒளி ) தான் வாழ்வை முன்னகர்த்திச் செல்கின்றதா என்ன ?.

இந்த அற்புதமான நாவலை அறிமுகப்படுத்திய உங்களுக்கு என் நன்றிகள் .

முரளி .

ஆரோக்கிய நிகேதனம் அறிமுகம்

அன்புள்ள முரளி

ஜீவன் மஷாயின் பிரச்சினை அவரது வாழ்க்கை அல்ல, மானுட வாழ்க்கைதான். ஒரு மருத்துவராக அவர் எப்படி மரணத்தை எதிர்கொள்வது என்பது மட்டுமே. ஆகவேதான் அது மரணத்தைப்பற்றிய நாவலாக இருக்கிறது.

ஆனால் அது மரணத்தின் பின்புலத்தில் வாழ்க்கையைத்தான் பேசுகிறது. வாழ்க்கையை அலைக்கழிக்கும் பலவகையான ரிபுக்களைப்பற்றி. மனிதனின் அழியாத காம குரோத மோகங்களைப்பற்றி. ஒரு கோணத்தில் பார்த்தால் ஆரோக்கிய நிகேதன் பேசுவது வன்மத்தைப்பற்றி மட்டும்தானோ என்ற எண்ணம் ஏற்படுகிறது

தாராசங்கரின் கணதேவதை, கவி ஆகியநாவல்களும் தமிழில் வெளிவந்துள்ளன. த.நா.குமாரசாமி மொழியாக்கத்தில். வங்காள நிலமே எனக்கு ஒரு கனவுத்தன்மையுடன் மனதில் பதிந்துள்ளது. காரணம் முப்பெரும் பானர்ஜிகளின் நாவல்கள். காலம் பின்செல்லச்செல்ல அந்தக் கனவு மேலும் பிரம்மாண்டமாக ஆகிறது

ஜெ

முந்தைய கட்டுரைசாதிகளின் மாற்றம்
அடுத்த கட்டுரைகொற்றவை ஒரு கடிதம்