விவாதங்கள்-கடிதம்

”லோசாவும், மார்க்யூஸும் சண்டை போடுவார்கள். வோல் சோயிங்காவும் , சினுவா ஆச்சிபீயும் பூசலிடுவார்கள். ஆனால் ஃப்ரெடரிக் ஃபோர்சித்துக்கும், இர்விங் வாலஸுக்கும் இடையே சண்டை இல்லை. சிவசங்கரிக்கும், இந்துமதிக்கும் இடையே உரசல்கள் இல்லை.”

ஜெ..

இதில் எனது விவாதத்தை வைக்க விரும்புகிறேன்.

நிச்சயமாக உங்களது விவாதத்துக்கான பிண்ணனி விளக்கத்தை என்னால் ஒத்துக் கொள்ள முடிகிறது – முரண்படும் கருத்தியல்களே – சமநிலைப் புள்ளியை (மாறியபடியே இருக்கும்) உருவாக்குகின்றன என்பதுமே மிகச் சரியான விளக்கம்.

ஆனால், இதில்லாமல் இன்னொரும் கோணமும் உள்ளது என்றே நினைக்கிறேன். இதை நான் எனது குருமார்களின் வழிகாட்டுதல்களோடு உருவாக்கிக் கொண்டேன். narcisstic ஆக இருக்கும் – பொறுத்துக் கொள்ளவும். தற்பெருமைக்காக அல்ல.

ரமணரின் இரண்டு வாக்குகள் – தீமை நன்மை எனப் பிரி்ப்பதும் தவறே; தீமையை எதிர்க்காதே – வெறும் கோபமும், பொறாமையும் நிரம்பி வழிந்த ஒரு கிராமத்து மனிதனை ஆற்றுப் படுத்திய இரண்டு வாக்குகள். இதையே ஜே.கே – சரி தவறு என்று பார்ப்பதை விட்டு, ஒரு விஷயத்தை, நடுநிலையில் பார்க்கத் துவங்கும் கணத்தில் தன்னயறிதல் துவங்குகிறது என்கிறார்

இவற்றை எனது தொழில் முறையிலும் உபயோகித்துப் பார்க்கிறேன். எனது சிந்தனை முறைக்கு மாற்றாக இருக்கும் (தவறு என்று அல்ல) சிந்தனையை ஒரு தொழில் முனைவோனாக, உடனடியாக நிராகரிக்கிறேன். நுரை போல் பொங்கும் ஈகோ அடங்கியவுடன், அதை பரிசீலிக்கிறேன். எனது முறை தவறாக இருக்கும் பட்சத்தில் மாற்றிக் கொள்ளவும் செய்கிறேன். கோபத்தில் ஏதேனும் சொல்லியிருந்தால், சொல்லப் பட்ட மனிதரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.

ஆனால், பல சமயங்களில், எதிர்த் தரப்பு தவறாக இருக்கும் பட்சத்தில், கொஞ்சம் நேரம் உள் வாங்கி வெளியேறி விடுகிறேன். அதை ஒரு விவாதமாக்குவதில்லை. ஏனெனில், ஒரு சராசரிப் பார்வையே, லௌகீகத்தில், ஒரு குறைந்த காலப் பார்வையில் சரியாக இருக்கிறது. அது சரியாக மட்டுமல்ல, லௌகீக உலகின் அதிகார மையத்திலும் அது அமர்ந்திருக்கிறது. கல்கி / புதுமைப் பித்தன் சண்டை ஒரு நல்ல உதாரணம். நிச்சயமாக புதுமைப் பித்தனின் மோதி மிதித்து விடு மனநிலையை உணர முடிகிறது.

ஆனால், அதை ஒத்துக் கொள்ள முடியவில்லை. மிகப் பெரும் சக்தி விரயம் என்று தோன்றுகிறது. அதை விடுத்து, அதற்கு பதிலாக, இன்னும் இரண்டு காவியங்களைப் படைத்திருக்கலாம் என்பதே என் தரப்பு. காலம் ஒரு நல்ல படைப்பைத் தக்க வைக்கும் என்பது ஒரு சாதாரண வாதம் என்றாலும், அதுதானே உலகியல் உண்மை – இன்று பு.பிக்கு இருக்கும் இடமும், கல்கி / சுஜாதாவுக்கு இருக்கும் இடத்தையும் காலம்தானே கொடுத்திருக்கிறது. why fight?

ஒரு விவாதம் சரி சமமான நிலையில், இரண்டு கருத்தியல்களுக்கிடையே நிகழும் என்றால் – அது மிக ஆரோக்கியமானது. இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளும்.

அல்லது, கற்கும் ஆர்வமுள்ள ஒரு சாதாரணர், ஒர் தவறான கருத்தை எடுத்துக் கொண்டு, ஒரு கற்றறிந்தாருடன் மோதும் போது, அச்சாதாரணர், கற்றிருந்தாரிடம் இருந்து பெற்றுக் கொள்வதும் நிகழ்கிறது. உங்களுடன் மோதிய் / மோதிக் கொண்டிருக்கின்ற பல நடுநிலை மாணவர்களைப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.

எனது லௌகீக குருக்களில் ஒருவர் என்னிடம் சொன்னார் – choose your battles என்று. இதை விவாதத்துக்குத் துவங்கும் ஒவ்வொரு கணமும் நினைத்துக் கொண்டே இருக்கிறேன். கிட்டத் தட்ட 90% விவாதங்களைத் தவிர்க்க உதவியிருக்கின்றது. அந்நேரம் மிக ஆக்க பூர்வமாகச் செயல்பட முடிகிறது. நான் செய்வது, சமூகக் கட்டமைப்பை மாற்றும் “விதி சமைக்கும்’ தொழில் அல்ல. ஆனால், ஒரு நல்ல மேலாளனாக, ஒரு எறும்பு போல், நான் இயங்கும் சமூகத்தின் விதிகளை, நான் நம்பும் வழிமுறையை நோக்கி, மாற்ற முயன்று கொண்டே இருக்கிறேன். மிகச் சிரமமான காரியம். எங்கள் பாஷையில் சொல்வதென்றால் – Poor return on investment – ஆனாலும், இதைச் செய்வது என் கடமை என்று நம்புகிறேன்.

இதை விவாதத்துக்கான ஒரு விதிகளில் ஒன்றாக நான் மேற்கொண்டு வருகிறேன் – மதிக்கப் படும் இடங்களில் மட்டுமே கருத்தைச் சொல்வதும் – மற்ற இடங்களில் மௌனமும் – சிறந்த வழிகள் என்று தோன்றுகின்றன – என்னைப் பலரும் ஒரு தளுக்கான வியாபாரி என்பார்கள். so be it.

சொல்ல வேண்டுமென்று தோன்றியது. சொல்லி விட்டேன்.

பாலா

***

அன்புள்ள பாலா

சற்றே சோர்வூட்டுகிறது உங்கள் கடிதம். நான் திரும்பத்திரும்பச் சொல்லும் ஒரு விஷயத்தை சற்றும் செவிகொடுக்காமல் பேசும் பேச்சாகவே இதை நினைக்கிறேன். நம்மவர் மனநிலைகளில் இது முக்கியமானது. ஒரு வசதியான ஒற்றைவரியை உருவாக்கிக் கொண்டால் அந்தவரியை எங்கும் எதற்கும் தீர்வாகச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

நான் நாற்பதாவது முறையாக திரும்பவும் சொல்கிறேன். தனிப்பட்ட வாழ்க்கையிலும், வணிகத்திலும் கடைப்பிடிக்கும் கொள்கைகள் இலக்கியத்திலோ கருத்தியல்செயல்பாட்டிலோ செல்லுபடியாகாது. இலக்கியம் மற்றும் கருத்தியல்செயல்பாடுகள் தொடர்ச்சியான விவாதம் மூலம் மட்டுமே நிகழமுடியும். ஏனென்றால் அவற்றின் இயல்பான இயங்கியலே முரணியக்கம்தான். ஒரு தனிமனித மூளைக்குள்ளும் சரி, சமூகத்திலும் சரி.

அப்படி விவாதம் நிகழவில்லை என்றால் இலக்கியமும் கருத்தியலும் செயல்படவில்லை என்றே பொருள். இன்றுநேற்றல்ல, இலக்கியமும் கருத்தியலும் செயல்பட ஆரம்பித்த காலம் முதலே இதுதான் விதி. உலகில் எங்கும் படைப்புகள் மட்டுமே எழுதப்பட்ட சூழல் இருந்ததில்லை. படைப்புகள் விவாதம் மூலமே நிறுவப்படுகின்றன, உள்வாங்கப்படுகின்றன. பாலாவுக்காக அது மாறப்போவதில்லை

புதுமைப்பித்தன் காவியம் எழுதியிருக்கலாம்தான். ஆனால் அதை அவருக்கு பதில் இன்னொருவர் வாழ்நாள் முழுக்க பேசி நிறுவ வேண்டியிருக்கும். இல்லையேல் அது எவராலும் கவனிக்கப்படாது அழிந்திருக்கும். உலக இலக்கியத்தின் எல்லா பெரும்படைப்புகளும் அப்படித்தான் விவாதித்து நிறுவப்பட்டன. புதுமைப்பித்தனின் அழகியலை நிறுவ வேறு எவரும் இல்லாததனாலே அவர் பேச நேர்ந்தது

என்ன பயன் என்று உதட்டைப் பிதுக்குவதற்கு முன் ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். புதுமைப்பித்தனின் அந்த விவாதங்களால்தான் தமிழில் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நவீன இலக்கியம் என்ற ஒன்று உருவானது. அதன் விதிகளும் மனநிலைகளும் வரையறைசெய்யப்பட்டன. அதுதான் கல்கியையும் சுஜாதாவையும் வணிக எழுத்தாளர்களாக நிறுவியது. அதுதான் தமிழிலக்கியத்தின் தரத்தை தீர்மானித்தது.அது ‘தானாகவே’ நிகழவில்லை. அப்படி எதுவும் தானாகவே நிகழ்வதில்லை.

ரமணரை எல்லாம் இப்படி எளிமைப்படுத்திப்புரிந்துகொள்வது தேவையா? ஆன்மீக நிலையை உலகியல் விதிகளாகப் புரிந்துகொள்வது நம் சூழலில் இருக்கும் பெரிய சிக்கல்.

ஜெ

முந்தைய கட்டுரைபுழுக்கள் கடிதங்கள்
அடுத்த கட்டுரைபுழுக்களும் சினிமாவும்