ஃபுகோகா ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

மசானபு ஃபுகோகாவின் “ஒற்றை வைக்கோல் புரட்சி” வாசித்தவுடன் இதை எழுதுகிறேன்.

புத்தகத்தின் ஆரம்ப பக்கங்களிலேயே தெரிந்துவிட்டது என் வாழ்வின் மிக முக்கியமான புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன் என. முக்கியமாக ஃபுகோகா தன் தாவரவியல் ஆராய்ச்சியாளர் பணியை உதறி விடக் காரணமாயிருந்த தருணம் கிட்டத்தட்ட ஒரு காவிய நிகழ்வு போல கண் முன்னே விரிந்தது.

இள வயதிற்கே உரித்தான பெருங்கனவு கொண்டு இரவு பகலாக ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். பல சமயம் கூடத்திலேயே மயங்கி விழுகிறார். கிடைத்த ஓய்வு நேரங்களில் நகரில் சுற்றும்போது தற்செயலாக பெண் பிரபலங்களை சந்திக்கிறார். இயல்பாக அவர்களது சிறு சிறு அற்பத்தனங்களையும் கீழ்மைகளையும் கண்டு கடந்து செல்கிறார். திடீரென கடும் குளிர்க் காய்ச்சலால் அவதிப்பட்டு மரண விளிம்பு வரை சென்று மீள்கிறார்.

நோயிலிருந்து மீண்டதும் அவரது வாழ்க்கை மொத்தமாய் மாறிப் போகிறது. மரணத்தின் முன் வாழ்க்கையின் மதிப்பென்ன என்ற கேள்வி அவரைத் துரத்திக் கொண்டே இருக்கிறது.இரவு பகலாக நிம்மதியற்று அலைகிறார்.

இப்படியாக ஓர் நாள் இரவு முழுவதும் அலைந்து ஓர் மலைச் சரிவில் மயங்கி விழுகிறார். பொழுது புலர்கிறது உறக்கமும் விழிப்பும் அற்ற நிலையில் அவருக்கு ஏற்படும் அனுபவம் அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடுகிறது. காலைப் பனி மெதுவாக விலக ஒரு பறவை தீனமான குரலில் ஒலியெழுப்பியபடி சிறகடித்து மேலே பறக்கிறது.அந்தக் கணத்தில் எல்லாமே தெளிவாகி விடுகிறது தன் வாழ்க்கை எதை நோக்கியென. தன் வாழ்க்கை மட்டுமல்ல மானுட வாழ்க்கை செல்ல வேண்டிய திசையும் புலப்பட்டு விடுகிறது. தன்னிச்சையாக அவர் “இந்த உலகில் எதுவுமே இல்லை” என கூறுகிறார். எல்லாமே தெளிவடைந்து விடுகிறது.

பின்னாளில் தான் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலையும் இத்தரிசனத்தை வைத்தே முடிவெடுக்கிறார். அவரது தரிசனத்தை சுருக்கமாக இப்படிக் கூறலாம்.

1) மனித மனம் எதையுமே அறிந்திருக்கவில்லை. வாழ்க்கையின் பொருளென்பது நம் அறிதலுக்கு அப்பாற்பட்டது. நாம் செய்ய வேண்டியது கிடைத்த வாழ்க்கையை எளிமையாக இயற்கையோடு ஒத்திசைந்து வாழ்வது தான்.
2) ஒன்றைப் பகுத்தாராயும் போதே நாம் உண்மையிலிருந்து விலக ஆரம்பிக்கிறோம். நவீன அறிவியல் சிபாரிசு செய்யும் பகுத்தாராயும் முறையென்பது துண்டுபட்ட அறிதல் முறை. அது இயற்கையின் சமன்குலைவுக்கே வழிவகுக்கும்.
3) நாம் குழந்தைகளுக்குரிய களிப்புடன் அணுகும் போதே இயற்கை தன்னைத் திறந்து காட்டுகிறது. அதற்கு நாம் நம் பகுத்தாராயும் நோக்கால் இயற்கையை அறிய முடியாதென்பதை உணர வேண்டும். அப்படி உணர்ந்து இயற்கையோடு இயைந்து வாழும் மனிதன் என்றேனும் ஓர் நாள் இயற்கையை அறிந்து கொள்வான்.
4) அனைத்து வாழ்க்கைச் சிக்கல்களுக்கும் காரணம் நம்முடைய சார்பு மனநிலையே. ஒன்றை இன்பம் என்று நினைப்பதாலேயே தவிர்க்கவே முடியாமல் மற்றொன்று துன்பத்தின் எல்லைக்குள் சென்று விடுகிறது. அதன் பின் வாழ்க்கை இன்ப துன்பத்தின் போராட்டக் களமாக மாறி விடுகிறது. இதை அபராமான எளிமையுடன் ஓரிடத்தில் ஃபுகோகா சொல்லிச் செல்கிறார். தனது ஆராய்ச்சியாளர் பணியின் பிரிவு உபச்சார விழாவின் போது இவ்வாறாகக் கூறுகிறார். “நமக்கு இப்பக்கத்தில் கப்பல்துறை மேடை உள்ளது. அப்பக்கத்தில் பாலந்தாங்கி எண்.4 உள்ளது. இப்பக்கம் வாழ்க்கை உள்ளது என்று நீங்கள் எண்ணினால், அப்பக்கம் இறப்பு உள்ளது. இறப்பை நீங்கள் தவிர்க்க எண்ணினால், இப்பக்கம் வாழ்க்கை உள்ளது என்பதை மறக்க வேண்டும். இறப்பும் வாழ்க்கையும் ஒன்றுதான்.” இது எனக்கு ஒரு சீனப் பழமொழியை நினைவு படுத்தியது. “One Happiness scatters a Thousand Sorrows”.

இத்தரிசனங்களை வாழ்க்கையின் எல்லாத் தளங்களுக்கும் விரிதெடுத்துச் செல்கிறார். இயற்கை வேளாண்மை, இயற்கை உணவு, வணிகக் கலாச்சாரம், மனித நுகர்வு, என விரித்து சென்று இறுதியாக ஞானத்தின் பாதையாகவும் கூறி முடிக்கிறார்.

இதில் எனக்கு ஒரு முக்கியமான சிக்கல் ஒன்றுள்ளது. ஒரு கோணத்தில் அவர் மனித சிந்தனையை முற்றாக நிராகரிப்பதாகவே படுகிறது. சிந்திப்பதால் நாம் உண்மையை நெருங்கவே முடியாது . ஏனென்றால் உண்மை சிந்தனைக்கு அப்பாற்பட்டது, மானுடனால் அறிய முடியாதது. மனிதன் செய்ய வேண்டியது அந்ததந்தக் கணத்தில் எளிமையாக இயற்கையோடு இயைந்து வாழ்வது மட்டுமே என்கிறார். 100 சதவீத மக்களும் வேளாண்மையில் ஈடுபடுவதுதான் சரியானது எனகிறார்.
ஆனால் அவரது இயற்கை வேளாண்மை முறையில் சறுக்கல்கள் ஏற்படும் போதெல்லாம் சிந்தனையின் வாயிலாகவே முன்னகர்கிறார். உதாரணமாக முதல்முறையாக அவர் ஆரஞ்சு மரங்கள் பயிரிடும் போது ஏற்பட்ட அழிவுகளுக்குப் பிறகு 8 வருடம் அறிவியல் வேளாண்மைக்கும் இயற்கை வேளாண்மைக்கும் இடையே உள்ள உறவைக் குறித்து ஆராய்ந்த பிறகே மீண்டும் விவசாயத்திற்கு வருகிறார்.

அதேபோல் புத்தகங்களைப் பற்றிய அவரது கருத்துக்கள். “தங்களுக்குப் புரியாததால் தான் மக்கள் படிக்கிறார்கள். ஆனால் அப்புரிதலைப் பெற படிப்பு அவர்களுக்கு உதவப் போவதில்லை.” எனக் கூறுகிறார். ஆனாலும் இதை அவர் இந்தப் புத்தகத்தின் வாயிலாகவே சொல்கிறார்.

இந்த முரண்பாட்டை எப்படி விளங்கிக் கொள்வதெனத் தெரியவில்லை. ஒரு வேளை அவர் மேற்கூறியதரிசனங்களெல்லாம் உயர் தத்துவத்தளங்களைச் சேர்ந்ததா? சிந்தனையின் எல்லைகளை உனர்ந்தவர்களுக்காக கூறப்பட்டவையா? இதை நேரடியாக “அப்படியே” பொருள் கொள்ளக் கூடாதா? தங்களின் விளக்கங்கள் தெளிவைத் தருமென நம்புகிறேன்.

எது எப்படியோ ஃபுகோகாவின் பல கவித்துவ வரிகள் மீண்டும் மீண்டும் சிந்தித்து விரிவுபடுத்திக் கொள்ள வேண்டியவை. உதாரணமாக மனிதனின் பேதபுத்தியைப் பற்றிய கீழ்க்கண்ட வரிகள்:

” மக்கள் பூமியில் இருந்து கண்களை வானத்திற்கு திருப்பி விண்மீன்கள் தெரிகிறது என்று நினைக்கின்றனர். பசுமையான இலைகளில் இருந்து ஆரஞ்சுபழத்தை பிரித்து வைத்துவிட்டு, தங்களுக்கு இலைகளின் பச்சை வண்ணமும், பழத்தின் ஆரஞ்சு வண்ணமும் தெரியுமென சொல்கின்றனர். ஆனால் ஆரஞ்சையும் பச்சையையும் வேறுபடுத்திப்பார்க்க ஒருவர் தொடங்கியதும், உண்மையான வண்ணங்கள் மறைந்துவிடுகின்றன.”

ஒரு மகத்தான புத்தகத்தை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி ஜெ!

மிக்க அன்புடன்,
பாலாஜி
கோவை

அன்புள்ள பாலாஜி,

ஃபுகோகாவின் சிந்தனை என்று நீங்கள் எடுத்துக்கொள்வதை சரியாக வரையறுத்துக்கொள்ளாததே சிக்கல் என நினைக்கிறேன்.

ஃபுகோகா எதை எதிர்க்கிறார்? பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் உருவாகி வந்த எந்திரவியல் சார்ந்த அணுகுமுறையையும், அதன் விளைவான நிரூபணவாத அறிவியலையும்தான். இப்பிரபஞ்சத்தை ஒரு பெரும் இயந்திரமாக உருவகித்து அதை பற்பல பகுதிகளாகப்பிரித்து ஆராய்ந்து முடிவுகளுக்கு வருவது, அதனடிப்படையில் தீர்வுகளை உருவாக்குவதும் அவரால் நிராகரிக்கப்படுகின்றன. இயற்கையையும் பிரபஞ்சத்தையும் முற்றிலும் பிழையாக புரிந்துகொள்ள அது வழிவகுக்கும் என நினைக்கிறார். அவற்றை ஒட்டுமொத்தமாக ஒரு முழுமையுடன் மட்டுமே உணரமுடியும், நாம் வாழும் வாழ்க்கைக்கான தேவைக்கு ஏற்ப நம் எல்லைக்குள் உள்ளவற்றை மட்டுமே புரிந்துகொள்ளமுடியும் என்கிறார். அவர் தர்க்கசிந்தனை என்று சொல்லி நிராகரிப்பது இதைத்தான்.

ஆனால் ஒரு விவசாயியாகச் செயல்படும்போது பட்டறிவின் விளைவாகக் கிடைக்கும் நடைமுறைஞானத்தை அவர் நிராகரிப்பதில்லை. அது விவசாயியின் சொத்து என்றே நினைக்கிறார். அந்த ஞானம் அழிந்துவிடலாகாது என்றும் சொல்கிறார். அவர் விவசாயப் பிரச்சினைகளைப்பற்றிச் சிந்திப்பது அந்த தளத்தில்தான். ஆப்பிள்மரங்களைப்பற்றியும் நெல்வயலில் கோழிகள் மேயவேண்டியதைப்பற்றியும் அவர் புரிந்துகொள்வது இவ்வாறாகத்தான்.

ஜெ

முந்தைய கட்டுரைபுறப்பாடு 10 – கரும்பனையும் செங்காற்றும்
அடுத்த கட்டுரைரப்பர் – கடிதம்