கன்னிநிலம் கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ,
கன்னிநிலம் முடியும் வரை உங்களுக்கு கடிதமெழுத வேண்டம் என்று தான் இருந்தேன். ஒவ்வொரு அத்தியாயத்தை பற்றியும் ஒவ்வொரு கடிதம் எழுதலாம். அவ்வளவு இருந்தது, இருக்கிறது. கதையின் துவக்கமே தேவதேவனின் கவிதை கொண்டு ஆரம்பித்தது மிகப்பொருத்தம். கதையில் கவிதைகள் கொட்டிகிடக்கிறது. எனக்கு இப்பொழுதெல்லாம் கவிதை எழுதும் உற்சாகமே குறைந்து விடுகிறது. “இந்த ஆள் இப்படி அருமையான கவிதைகளாய் கோர்த்துக் கோர்த்து கதையே பண்ணுகிறாரே” என்று. சத்தியமாய் ஜெமோ, இந்தக்கதையை கிழித்துப் போட்டால் கவிதைகளாய் மிஞ்சும்.

யுத்தமானாலும் களத்தை காடாக்கி புகுந்து விளையாடுகிறீர். காடு உங்களை பின்னியிருக்கிறதா? மங்கோலியப் போராளிகளை பற்றிய பதட்டம் எழாத அளவுக்கு அந்தக் காட்டை  ரசித்துக்கொண்டிருந்தேன். எல்லாம் ஜ்வாலா வரும்வரைதான். ஆச்சர்யம் என்னவென்றால் அந்த மரணங்கள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே. யுத்தத்தில் மரணத்தை பற்றிய சாதாரண எண்ணம். மீண்டும் நாயர் முன்னாள் தோன்றும் வரை அவர்களை பற்றிய ஞாபகம் நெல் யைப்போல் எனக்கும்  வரவில்லை.

“எங்கள் கண்கள் சந்தித்தன. ஒருகணம் எதுவோ ஒன்று பிறந்து வளர்ந்து நடுவே நின்று சிரித்தது” -இங்கே தொடங்கி விடுகிறது கனவின் சாலை.
அத்தியாயம் 9, 10 முழுக்க காதலின் உச்சம். அதுவும் ” எக்ஸ்க்யூஸ் மி, ஐ யாம் எ தங்கோலியன். மேட் இன் கான்ஹாங்” இந்த வரியில் அவள் சிரிப்பதை முழுவதுமாய் உணர்ந்தேன். மனதிலிருந்து வாய் விட்டு சிரித்தேன். அவர்களை(என்னையும்) “நோ மேன்ஸ் லேண்ட்”  க்கு அழைத்து போவீர்கள் என்று மிகவும் நம்பினேன், அதை கேட்டு கடிதமெழுதலாம் என்றும் நினைத்திருந்தேன். ஆனாலும் உங்கள் போக்கிலே இருக்கட்டுமென அமைதியாகிவிட்டேன்.
என்ன தான் பிரச்சனை? எதார்த்தத்தை சொல்கிறேன் என்கிறீர்களா? நான் எதார்த்தத்தில் தானே வாழ்கிறேன்?  நான் செல்ல முடியாத இடங்களுக்கு என்னை அழைத்து செல்லும் வாய்ப்பு இருக்கும்போது அதை கைவிடுவத்தின் அர்த்தமென்ன? பயமா, அலுப்பா, பழக்கமா? என்ன?

கொஞ்சம் புரிகிறது, அந்த உச்சத்திற்கு அழைத்து சென்றாள் அதை பற்றிய பிரமிப்பு, ஆர்வம் போய்விடுகிறது. ஆனாலும் அதற்காக மனம் ஏங்குகிறது.. ஜ்வாலா வின் மனம். அவளுக்கு சந்தோஷத்தை அளிப்பதில் என்ன தடை? ஆயிரமாயிரம் போராளிகளின் முடிவு நமக்கு தெரியும். அதையே ஜ்வால வுக்கும் நிகழ்த்தி எதார்த்தத்தை சொல்வது எளிது, ஆயினும் அவள் விரும்பிய வாழ்க்கையை சுவாரசியங்களுடன் சொல்வதற்கான அருமையான வாய்ப்பை கடந்துவிட்டீர்களா?

கதை முடியும்முன் உங்களை குடைவதற்கு மன்னிக்கவும். எனக்கு பொறுமையில்லை. நீங்கள் முன்னமே கதையின் போக்கை தீர்மானித்து விட்டீர்கள் என்றே நம்புகிறேன்.

அன்புடன்,
ஆனந்த்

கன்னிநிலம் முன்னரே எழுதி முடிக்கப்பட்டுவிட்ட ஒரு ஆக்கம். இப்போதுதான் வெளியாகிறது. இப்படிச் சொல்லலாம், யதார்த்த உலகம் சலித்துப்போய் எழுதிய கற்பனாவாதக் கதை

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்!

நீங்கள் விரைவாக எழுதுகிறவர் என்று தெரியும். அதுவும் இணையத்தில் எழுதும் ஆக்கங்கள் ’கிளி சொன்ன கதை’ யோ தற்போது வெளி வந்து கொண்டிருக்கும் ‘கன்னி நிலமோ’ தினம் ஒரு அத்தியாயமாக வரும் வேகத்தைப் பார்க்கும்போது மலைப்பாகவே இருக்கிறது.  ‘கிளி சொன்ன கதை’யில் அனந்தனின் பார்வையில் சொல்லப்பட்டாலும் மிகவும் நுணுக்கமான சமையல் குறிப்புகள், சாப்பிடும் முறை, வட்டார வழக்கு, ஆங்காங்கே மாஜிக்கல் ரியலிசத்தின் வெளிப்பாடாக சின்னஞ்சிறு கதைகள் என்று பின்னப்பட்டிருந்தது.

கன்னி நிலத்தில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு உணர்ச்சி பிரதானப்படுவது போல் ஒரு பிரமை இருக்கிறது.  போர்வெறி, காமம், கனிந்து வரும் காதல், சித்திரவதை, விரக்தி, சூண்யம் என்று ஏதோ ஒரு தொடர்பு இருப்பது போல் இருக்கிறது. ஏனோ இது விரக்தியில் முடியும் ஒரு சோக சித்திரமாகவே இருக்கப் போகிறது என்றே தோன்றுகிறது. எப்படி முடிகிறது என்று பார்ப்போம்.

ஸ்ரீதர்

அன்புள்ள ச்ரிதர்

கிளி சொன்ன கதை ஒரு இயல்புவாத ஆக்கம். அதில் உச்சங்களுக்கு இடமில்லை. நுண்கவித்துவம் மட்டுமே சாத்தியம். கன்னிநிலம் ஒரு கற்பனாவாதக் கதை. இதில் எல்லாமே உச்சம்தான்

ஒட்டுமொத்தமாக ஒரு உருவ அமைதி வரும் என நினைக்கிறேன்
ஜெ

முந்தைய கட்டுரைபாலகுமாரன்,கடிதங்கள்
அடுத்த கட்டுரைகன்னிநிலம் – நாவல் : 14