தமிழில் சிறுபான்மை இலக்கியம்

வீரமாமுனிவர்
வீரமாமுனிவர்

பூங்காற்று ஆசிரியரின் கோரிக்கைக்கு ஏற்பவே இத்தலைப்பில் எழுதத் துணிகிறேன். வகைப் படுத்தாமல் இலக்கியத்தை அறிந்து கொள்ளுவது சிரமம் என்பதனால், வரலாற்றுப் பின்னணியை மட்டும் கருத்தில் கொண்டு, எல்லைக்குட்பட்டு மட்டும் பெரும்பான்மை சிறுபான்மை இலக்கியங்கள் என்ற பிரிவினையைச் செய்யலாமே ஒழியச் சாதாரணமாக இப்படி ஒரு பிரிவினையைச் செய்வது அபாயகரமான ஒன்று. வகுப்பு வாதத்தின் பிடியில், அழிவை நோக்கி செல்லும் இந்த தேசத்தில், அது மேலும் பிளவு உருவாகவே வழி வகுக்கும். விமரிசன தளத்துக்கு அப்பால் வாசக தளத்தில் இப்பிரிவினை ஒரு போதும் நிகழ்ந்து விடலாகாது . காரணம் இலக்கிய அனுபவத்தில் மத, இன, மொழி பிரிவினைகள் இல்லை .

மதச் சிறுபான்மையினரால் எழுதப் பட்ட ஆக்கங்களே இக்கட்டுரையில் சிறுபான்மை இலக்கியம் எனும்போது குறிக்கப் படுகிறது. பிற மதங்கள், கருத்தியல்கள் ஆகியவற்றின் பாதிப்பே ஒரு இலக்கியத்தை அடுத்த கட்டம் நோக்கி நகரச் செய்கிறது. பெளத்த, சமண மதங்களின் வருகையினாலேயே தமிழிலக்கியம் காப்பிய கால கட்டம் நோக்கிய பாய்ச்சலை நிகழ்த்தியது என்பது நாமறிந்ததே. இந்திய மொழிகளிலேயே தமிழுக்கு மிக முக்கியமான சிறப்பம்சம் ஒன்று உண்டு. முழுமையான பெளத்த காவியமும் [மணிமேகலை], இஸ்லாமிய காவியமும் [ சீறாப்புராணம்] உள்ள ஒரே மொழி தமிழ் தான். பல காரணங்களினால் இவ்விரு காவியங்களின் முக்கியத்துவமும் இங்கு உணரப் படவில்லை. நவீனச் சூழலிலும் பேசப் படவில்லை. [சீறாப்புராணம் குறித்து நான் மலையாளத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன்] தமிழின் நீதி, மருத்துவ, இலக்கண நூல்களில் கணிசமானவை பெளத்த, சமண மதங்களின் கொடையாகும். விவாதத்துக்கு உரிய கணிப்பென்றாலும், என் தரப்பு தத்துவ விவாதத்தை இம்மதங்களே தமிழுக்கு கொண்டு வந்தன என்பதே உண்மை.

ஹெப்ஸிபா ஜேசுதாசன்
ஹெப்ஸிபா ஜேசுதாசன்

தமிழகத்துக்கு அடுத்து வந்த பெரும் மதம் இஸ்லாம். வெகுகாலம் இஸ்லாம் வணிகர்களின் மதமாக, அரபு மொழி சார்ந்ததாக இருந்து வந்திருக்க வேண்டும். அதைத் தமிழக வெகு ஜன மொழிக்கும் இலக்கிய தளத்துக்கும் கொண்டு வந்தவர் தமிழக இஸ்லாமிய வரலாற்றின் திருப்பு முனையான மார்க்க மாமேதை சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள். அவரது மாணவரான வள்ளல் சீதக்காதி இரண்டாமர். இருவருமே இலக்கியவாதிகளல்லர். துரதிர்ஷ்டவசமாக தமிழ்க் கலாசாரத்தின் முக்கியமான ஆளுமைகளான இவர்களைப் பற்றி இங்கு அதிகம் பேசப் பட்டதில்லை. [ஆழமாக இவர்களை படித்தும் கூட நானும் மலையாளத்திலேயே இவர்களைப் பற்றி எழுத முடிந்துள்ளது. அதற்கு தமிழ் இஸ்லாமிய சமூகத்தின் மனநிலை குறித்த என் அச்சமே காரணம். மேலும் சிறு விமரிசனக் குறிப்பைக் கூட அபாயகரமாக திரித்து விடும் அளவுக்கு எனக்கு இலக்கிய எதிரிகள் இங்கு உண்டு].

சமகாலத்தவர்களான இவ்விருவருக்கும் உள்ள பொது அம்சம் அது வரை கலாச்சார ரீதியாக இஸ்லாமுக்கும், பிறருக்கும் இடையே இருந்த இடைவெளியை இவர்கள் குறைத்தார்கள் என்பதுதான். ஹிஜ்ரி 1042 ல் காயல் பட்டினத்தில் பிறந்த சதக்கா தன் அரபு மொழிப் புலமையாலும் மார்க்கத் தேர்ச்சியாலும் சதக்கத்துல்லாஹ் என புகழ்பெற்றார். இல்லறத் துறவு வாழ்க்கையை மேற் கொண்ட இவர் தமிழிலும் பெரும் பண்டிதர். படிக்காசுத் தம்புரான், நமச்சிவாயப் புலவர் போன்ற அக்கால சைவ அறிஞர்கள் பலர் இவருடைய மாணவர்களாக இருந்தனர். ஏராளமான மாற்று மதத்தினர் — அவர்கள் எண்ணிக்கை ஐயாயிரத்துக்குமேல் — இவரிடம் கல்வி பயின்றுள்ளார்கள். தமிழகம் முழுக்க பெரும்பாலான ஊர்களில் இவர் வந்து சென்றதாக ஐதீகக் கதை உள்ளது. அக்கால சூஃபி க்கள் பெரும்பாலானவர்களிடம் இவர் உரையாடியுள்ளார் என்றும் சொல்லப் படுகிறது . 73 வயது வரை உயிர் வாழ்ந்தார் .

‘ ‘ செத்தும் கொடுத்த சீதக்காதி ‘ ‘ என்று படிக்காசுப் புலவரால் பாடப்பட்ட சீதக்காதியின் இயற் பெயர் ஷேக் அப்துல் காதர். சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் மாண்வர் இவர். கடல் வணிகம் செய்த பெரும் செல்வந்தர். ராமநாதபுரம் கிழவன் சேதுபதியிடம் அமைச்சராக இருந்த போது இவர் பொறுப்பில் தான் ராமநாதபுரம் கோயில் புதுப்பிக்கப் பட்டு இன்றைய நிலையில் அமைக்கப் பட்டது. மேலும் பல ஆலய்ங்களுக்கு திருப்பணியும் குடமுழுக்கும் செய்வித்துள்ளார். இந்தியக் கட்டடக் கலையின் அமைப்பில் பல மசூதிகளை கட்டியுள்ளார். ராமநாதபுரம், மதுரை பகுதிகளில் ஏராளமான அன்னச் சத்திரங்களும் அமைத்தவர். தமிழறிவு மிகுந்த சீதக்காதி தமிழறிஞர்களின் புரவலராக இருந்தார். இஸ்லாமிய இலக்கியங்கள் தமிழில் உருவாக இவர் பெரு முயற்சி எடுத்தார்.

எச். ஏ.கிருஷ்ணபிள்ளை
எச். ஏ.கிருஷ்ணபிள்ளை

தமிழ்க் காவியங்களில் இலக்கியச் சுவையில் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், பெரியபுராணம் ஆகியவற்றுக்கு நிகராக வைக்கத் தக்க பெருங்காப்பியமான ‘சீறாப்புராணத்தை’ எழுதிய உமறுப் புலவர், வள்ளல் சீதக்காதி கேட்டுக் கொண்டதற்கேற்ப , சதக்கத்துல்லா அப்பா அவர்களிடமும் அவரது மாணவர் மஹ்மூது தீபி அவர்களிடமும் மார்க்க கல்வி பெற்று, அதன் பின்னரே எழுதினார் என்பது வரலாறு. இவர் முடிக்காமல் விட்ட நபியின் வரலாற்றை பனீ அஹம்மது மரைக்காயர் என்பவர் இயற்றியுள்ளதாகவும் அது சின்ன சீறா எனப் படுவதாகவும் தெரிகிறது. பின்பு முன்னா முகம்மது காதிரி என்பவர் இரு பகுதியையும் இணைத்து தானும் சில பகுதிகளை சேர்த்து முழுமைப் படுத்தியதாக தெரிகிறது. இந்நூல்களை நான் பார்த்ததில்லை. அச்சில் உள்ளனவா என்றும் தெரியவில்லை.

இங்கு ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும். சதக்கத்துல்லாஹ் அப்பா உள்ளிட்ட கணிசமான இஸ்லாமிய அறிஞர்கள் அரபு மொழியில் எழுதியுள்ளனர். அவற்றை தமிழ் இலக்கியம் என்று கொள்ளாவிட்டாலும் தமிழக இலக்கியத்தின் பகுதியாக கருத வேண்டும். வட மொழியிலும், ஆங்கிலத்திலும் எழுதப் பட்ட தமிழர் ஆக்கங்கள் அவ்வண்ணமே கருதப்படுகின்றன.

தமிழிலக்கியத்தில் செவ்வியல் பண்பு கொண்ட இஸ்லாமிய இலக்கியங்கள் குறைவெனவே கொள்ள வேண்டும். சீறாப்புராணம் போல காவியச் சுவை உடைய எந்தப் படைப்பும் இல்லை என்பது என் எல்லைக்குட்பட்ட வாசிப்பிலிருந்து அடைந்த முடிவு. பிற்கால இஸ்லாமிய இலக்கியங்கள் நாட்டார் இலக்கியங்களின் தொடர்ச்சியாக எழுதபட்டவை. மாலை, கண்ணி எனும் வடிவங்கள் பிரபலமாக இருந்திருக்கின்றன. இன்று இவை தற்செயலாக கிடைத்தால்தான் உண்டு. இஸ்லாமிய இலக்கியங்களுக்கான ஆய்வு மையமும், ஆவணக் காப்பகமும் இன்று பெரிதும் தேவையாகின்றன. ஹிஜ்ரி 1270 களில் கண்ணகுமது மகதூம் முகம்மது புலவர் தன் தனிப்பட்ட முயற்சியால் அச்சில் ஏற்றி வெளிக் கொணராவிடில் இஸ்லாமிய இலக்கியங்கள் முற்றிலும் அழிந்து விட்டிருக்கும். ஏறத்தாழ் அறுபது நூல்களை இவர் பதிப்பித்திருக்கிறார். உ.வே.சாமிநாதய்யர் தமிழுக்கு செய்த சேவையுடன் ஒப்பு நோக்கத் தக்க இப்பெரும் பணி எவ்வகையிலும் தமிழில் அங்கீகரிக்கப் படவில்லை.

செய்குத்தம்பிப்பாவலர்
செய்குத்தம்பிப்பாவலர்

இன்று ஒரு கூர்ந்த வாசகனுக்கு கூட இஸ்லாமிய இலக்கியங்களின் பெரும் பகுதி கிடைப்பதில்லை. சிற்றிலக்கியங்களில் பெரும்பாலோர் வாசித்திருக்கக் கூடிய குணங்குடி மஸ்தான் சாகிப் பாடல்களையே நானும் வாசித்திருக்கிறேன். ஹிஜ்ரி 1207 ல் பிறந்த சுல்தான் அப்துல் காதிர் ஒரு பக்கீராக சென்னையில் ராயபுரத்தில் வாழ்ந்து குணங்குடி சித்தர் என அனைத்து மக்களாலும் வணங்கப்பட்டு அங்கேயே இறந்தார். இவரது பாடல்கள் இவர் மாணவர் முஹம்மது ஹுசைன் புலவர் என்பவரால் எழுதியெடுக்கப் பட்டு சீயமங்கலம் அருணாசல முதலியார் என்பவர் பதிப்பித்தார் என்பதும் வரலாறு. என் பெரியப்பா குணங்குடியார் பாடல்களை சிறப்பாகக் கற்றிருந்தார். தமிழ் இஸ்லாமிய இலக்கியத்தில் சீறாப்புராணம் ஒரு சிகரம் என்றால் குணங்குடியார் பாடல்கள் இன்னொரு சிகரம்.

இசைப் பாடல்களில் இஸ்லாமியப் பாடல்கள் பெரும் புகழ் பெற்றிருந்த காலம் ஒன்று இருந்தது. பல பாடல்களை நானே கேட்டதுண்டு. கோட்டாறு சையிது அபூபக்கர் புலவர் எழுதிய சீறா கீர்த்தனைகள் ஒருகாலத்தில் குமரி மாவட்டத்தில் புகழ் பெற்றிருந்தன. சதாவதானி செய்குத்தம்பி பாவலர் தமிழிசை இயக்கத்தில் தீவிரப் பங்கு பெற்றதும் முக்கியமான பல கீர்த்தனைகளை எழுதியதும் குறிப்பிடத் தக்கவை.

வீரமாமுனிவர் தமிழின் நவீன மயமாக்கலை தொடங்கி வைத்தவர். உரை நடையின் பிதா மகர்களில் ஒருவர் என்பது நாம் அறிந்ததே. அவரது தேம்பாவணி ஒரு முக்கியமான ஆக்கம். ஆனால் அது இலக்கியச் சுவை உடைய முக்கியமான காவியமாக எனக்குப் படவில்லை. இன்னொரு கிறித்தவக் காவியமான எச் . ஏ கிருஷ்ண பிள்ளையின் இரட்சணிய யாத்ரீகமும் வெறும் செய்யுளாகவே நின்று விட்டது. ஆனால் இன்னொரு கவனமான வாசிப்புக்குப் பிறகே இது குறித்து திட்டவட்டமாக என்னால் சொல்ல முடியும்.

கிறிஸ்தவ இலக்கியத்தின் மிக முக்கியமான தமிழ்ப் பங்களிப்பு பைபிள் மொழிபெயர்ப்பு தான். விவிலியத்தின் எளிய கம்பீரமான நடையின் தாக்கம் தமிழில் எழுதப் புகுந்த முக்கியமான எல்லா படைப்பாளிகளிடமும் உண்டு. மூத்த தலைமுறையில் சுந்தர ராமசாமி, வண்ணநிலவன், வண்ண தாசன் ஆகியோரின் உரை நடையிலும் புது படைப்பாளிகளில் நான், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரின் உரை நடையிலும் விவிலியத்தின் மொழித் தாக்கம் மிக வெளிப்படையானது. சரோஜினி பாக்கியமுத்து எழுதிய ‘விவிலியமும் தமிழும் ‘ என்ற ஆய்வு நூல் விவிலியத்தின் தமிழ் தாக்கம் குறித்து பேசும் முக்கியமான நூல்.

மாயூரம் வேதநாயாம்பிள்ளை
மாயூரம் வேதநாயாம்பிள்ளை

அதே சமயம் பொதுவான இலக்கியப் போக்கில் குர் ஆனின் தாக்கம் அனேகமாக ஏதுமில்லை என்றே சொல்ல வேண்டும். விவிலியத்தின் நடை உணர்ச்சிகரமான கவித்துவம் கொண்டது என்றால் குர் ஆனின் நடை கச்சிதமும் வீரியமும் உடையது. ஆனால் குர் ஆன் இஸ்லாமிய எழுத்தாளர்களில் கூட தாக்கம் செலுத்தவில்லை. இதுவே மலையாளத்திலும் உள்ள நிலைமை என விமரிசகர் குறிப்பிடுகின்றனர். அதற்குக் காரணம் என்ன என்பது யோசிக்கத் தக்கது . குர் ஆன் வெறும் வழிபாட்டுப் பொருளாகவே இஸ்லாமியரால் கூட எண்ணப் பட்டது என்பதும், அனைத்து மானுடருக்குமான இறைச் செய்தி என்ற முறையில் அது பரவலாக எடுத்துச் செல்லப் படவில்லை என்பதும் முக்கியமான காரணங்கள் என்று படுகிறது.

பைபிளை மனம் தோய்ந்து நான் படிக்கும் போது என் வயது பதினாறு. ஆனால் இருபது வருடம் கழித்தே குர் ஆன் என்னை ஆட்கொள்ளும் நூலாக ஆகியது. என் ஆசிரியரான நித்ய சைதன்ய யதி [நாராயண குருவின் மாணவரான நடராஜ குருவின் மாணவர். தத்துவப் பேராசிரியராக மேலை நாடுகளில் பணியாற்றியவர். 150 நூல்களை ஆக்கியவர்] தன் வாழ்வின் இறுதி வருடத்தில் குர் ஆனை கற்கவும் ஒரு பகுதியை அழகிய கவித்துவ மொழியில் மலையாளத்தில் மொழிபெயர்க்கவும் செய்தார். அவருடைய மாணவரான உஸ்தாத் ஷெளக்கத் அலியிடமிருந்து நான் குர் ஆனின் சில பகுதிகளை அறிந்த பிறகு தான் அம்மாபெரும் நூலை பயில ஆரம்பித்தேன் . குர் ஆன் அனுபவம் குறித்து மலையாளத்தில் இரு கட்டுரைகளையும் ஆக்கினேன். இந்த ஐந்து வருடங்களில் குர் ஆனை சற்றேனும் படித்த இஸ்லாமியரல்லாத ஒரே ஒரு தமிழ் எழுத்தாளரைக் கூட நான் கண்டதில்லை. அடிப்படையில் இது இஸ்லாமிய அறிஞர்களின் தோல்வியே.

gulam-kadir-navalar

நவீன இலக்கியத்தின் துவக்க காலத்தில் பண்டைய இலக்கியத்தை சமகாலத்துடன் பிணைக்கும் பணியில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் பெரும் உறுப்பினராக இருந்த குலாம் காதிர் நாவலரின் பங்களிப்பு முக்கியமானது. இவர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர். நன்னூலுக்கு இவர் எழுதிய எளிய விளக்கம் பிற்பாடு தமிழை நவீன காலகட்டத்துக்கேற்ப கற்பிக்கும் முயற்சிகளுக்கெல்லாம் முன்னோடியாக அமைந்தது ‘.

நவீன உரை நடை இலக்கியத்தில் முன்னோடிப் படைப்பாளிகளில் ஈழ எழுத்தாளரான சித்தி லெவ்வை மரைக்காயர் முக்கியமானவர். [1838 – 1898] அவரது இயற்பெயர் முகம்மது காசிம். இவர் எழுதிய ‘அசன்பே சரித்திரம்’ தமிழின் முதல் கட்ட நாவல்களில் ஒன்று என இலக்கிய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். இவர் ஈழ இஸ்லாமியர்களின் உரிமைக்காக வாதாடும் ‘முஸ்லீம் நேசன் ‘ என்ற இதழை நடத்தியவர் .

சித்தி லெப்பை மரைக்காயர்
சித்தி லெப்பை மரைக்காயர்

நவீன இஸ்லாமிய படைப்பாளிகள் பலர் முக்கியமானவர்கள் பெயர்களையெல்லாம் இங்கு சொல்லி விட முடியாது. ஆரம்ப கால எழுத்தாளர்களில் ‘கருணாமணாளன் ‘ இஸ்லாமிய வாழ்க்கையை பற்றிய சித்திரங்களை அளித்திருக்கிறார். ‘ ஜெ எம் சாலி ‘ நல்ல கதைகளை எழுதியிருக்கிறார். களந்த பீர்முகம்மது முக்கியமான படைப்புகளை ஆகியுள்ளார். ஆயினும் பொதுவாக இலக்கிய வீச்சும் வேகமும் கொண்ட முதன்மையான இஸ்லாமிய படைப்பாளி ‘தோப்பில் முகம்மது மீரான் ‘ என்றே ஓர் இலக்கிய விமரிசகனாக நான் கூறுவேன் . [அவரைப்பற்றி நான் விரிவாக எழுதியதுமுண்டு]. சமீபகாலமாக ‘மீரான் மைதீன் ‘ கவனிப்புக்குரிய கதைகளை எழுதிவருகிறார் .

கவிஞர்களில் அப்துல் ரஹ்மான், மு. மேத்தா ஆகியோர் அதிகமும் பேசப் படும் இஸ்லாமியக் கவிஞர்கள். ஆனால் இவர்கள் எழுத்து மீது எனக்கு மிகக் கடுமையான எதிர் விமரிசனம் உண்டு. ரகுமானின் பாண்டித்யம் மீது மிகுந்த மரியாதை உண்டு என்றாலும் அரசியல் நிலை பாடுகளை ஒட்டி போலியாக உருவாக்கப் படும் கவிதைகள் அவை என்பது என் எண்ணம். அத்துடன் ஒரு கவிஞன் கண்டிப்பாக காத்துக் கொள்ள வேண்டிய அறிவார்ந்த சுயமரியாதையை அவர் காத்துக் கொள்ளவில்லை. அரசியல்வாதிகளை புகழ்ந்து தரமிறங்கி அவர் எழுதிய வரிகள் மிக மோசமான முன்னுதாரணங்கள்.

மூத்த தலைமுறை தமிழ் கவிஞர்களில் அபி முக்கியமானவர்.  இஸ்லாமியக் கவிஞர்களில் பரவலாக அறியப்பாடாத நவீனக்கவிஞர்கள் ‘நாகூர் ரூமி ‘, ‘ஷாஅ ‘. இஸ்லாமிய கருக்களை எடுத்து எழுதுவதனால் கவனிக்கப் பட்ட முக்கிய கவிஞர்கள் ஹெச் ஜி ரசூல், ஹமீம் முஸ்தபா ஆகியோர். சல்மா சமீப காலமாக கவனிக்கப் பட்டு வரும் தமிழ்க் கவிஞர்.

தோப்பில்
தோப்பில்

ஆனால் இளைய தலைமுறை தமிழ் கவிஞர்களில் முக்கியமான நால்வரில் ஒருவராக நான் எப்போதுமே குறிப்பிட்டு வரும் ‘ மனுஷ்ய புத்திரன் ‘ தான் இவர்களில் முதன்மையானர். இஸ்லாமிய வாழ்க்கை சார்ந்த சித்திரங்களோ இஸ்லாமிய பிரச்சினைகளோ அவர் கவிதைகளில் அதிகமில்லை. ஆனால் இஸ்லாமிய தரிசன அடிப்படையின் உச்ச நிலையில் நின்று கனிவும், கூர்மையும் கூடிய பல கவிதைகளை அவர் எழுதியிருக்கிறார்.

நவீனத் தமிழில் கிறித்தவ இலக்கியம் அழுத்தமான பதிவை உருவாக்கியுள்ளது. பேராசிரியர் ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு ஒரு திருப்பு முனையாக அமைந்த படைப்பு என்பது இலக்கிய வரலாறு. கிறித்தவ வாழ்க்கைச்சித்திரங்களை முன்வைத்தவர்கள் டேவிட் சித்தையா ,ஐசக் அருமைராசன், மார்க்கு ,எம். ஜேக்கப் போன்றவர்கள். அவ்வரிசையில் கலையமைதிகூடிய படைப்புகளை எழுதியவர் காஞ்சிபுரத்துக்காரரான அ.எக்பர்ட் சச்சிதானந்தம் அவர்கள்தான்.முகையூர் அசதா சமீப காலமாக கவனத்துக்கு உள்ளாகி வரும் படைப்பாளி.

இஸ்லாமிய இலக்கியத்தை தமிழுக்குத் தொகுத்து தருவதில் மணவை முஸ்தபா அவர்கள் ஆற்றிய பங்கு முக்கியமான ஒன்று. ‘ தமிழில் இஸ்லாமிய இலக்கியம் ‘ அவருடைய முக்கியமான நூல். இஸ்லாமிய பண்பாட்டை விரிவாக அறிய உதவும் மாபெரும் ஆக்கம் 1977ல் ‘அப்துற்- றகீம் ‘ அவர்களால் தொகுக்கப் பட்ட இஸ்லாமிய கலைக் களஞ்சியம். நான்கு தொகுதிகள் வெளி வந்த இப்பெரும் பணி இஸ்லாமிய சமூகத்தால் ஆதரிக்கப் படாமல், தமிழ் சூழலின் வழக்கமான உதாசீனத்துக்கு ஆளாகி முழுமை பெறாது நின்று விட்டது.

பொதுவாக சொல்லப் போனால் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் கால கட்டத்தில் நடந்த ஒரு படைப்பூக்கக் கொந்தளிப்பை தவிர்த்தால் தமிழில் சிறுபான்மை இலக்கியம் தீவிரமான வளர்ச்சி எதையும் அடையவில்லை என்றே எனக்குப் படுகிறது. சீறாபுராணம் ஒரு சிகரம். குணங்குடியார் பாடல்கள் அபூர்வமான விதிவிலக்கு. தோப்பில் முகம்மது மீரானும் மனுஷ்ய புத்திரனும் மட்டுமே நாம் உலக இலக்கிய மரபை நோக்கி முன் வைக்க ஓரளவேனும் தகுதிவாய்ந்த படைப்பாளிகள். அண்டை மொழியான மலையாளத்திலோ அவர்களின் மிகச் சிறந்த படைப்பாளிகளே சிறுபான்மையினர்தான். வைக்கம் முகம்மது பஷீரும், சக்கரியாவும் எந்த உலக பெரும் படைப்பாளிக்கும் நிகரானவர்கள்.

இது ஏன் என நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். நமது பொதுச் சூழல் சிறுபான்மையினரின் எழுத்தில் அவர்களுடைய மிகச் சிறந்த தளத்தை எதிர்பார்ப்பதாக இருக்கிறதா? சிறுபான்மையினரின் கலாச்சார, இலக்கிய மரபு குறித்த போதிய புரிதல் பொதுச் சூழலில் இல்லை என்பது ஒரு பெரும் குறை. ஆகவே சிறுபான்மை சமூக எழுத்தாளன் தன் வாழ்க்கை குறித்து நேர்மையாக எழுதினால் அது பொதுச் சூழலுக்கு புரிந்து கொள்ளக் கூடியதாகவோ, ஏற்கக் கூடுவதாகவோ இல்லை. தோப்பில் முகம்மது மீரான் தன் நாவல்களின் நடையையும், சூழலையும் புரிய வைக்கவும், ஏற்கச் செய்யவும் கடுமையாக போராட வேண்டியிருந்தது.

மறுபக்கம் சிறுபான்மை சமூகம் தன் எழுத்தாளர்களை மதிப்பதாகவோ, அவர்களுடைய கருத்துச் சுதந்திரத்தை அனுமதிப்பதாகவோ இல்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். அதற்கும் தோப்பில் முகம்மது மீரான் போராட வேண்டியிருந்தது நாமறிந்ததே. சகஜமான சுதந்திரத்துடன் எழுத்தாளர்கள் எழுதும் போதும், அவர்களை சமூகம் கூர்ந்து கவனிக்கும் போதும் மட்டுமே உயர்ந்த இலக்கியம் உருவாகிறது. பஷீர் தன் சமூகத்தை மிகக் கடுமையாக விமரிசித்திருக்கிறார். ஆனால் அவர் எப்போதுமே உச்ச கட்ட அங்கீகாரத்தையே அடைந்திருக்கிறார்.

ஒரு மொழிச் சூழலில் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளன் தன் அடையாளத்தைத் தவிர்த்து விட்டு எழுதுகிறான். பொது மொழியையும், பொதுவான சூழலையும் தேர்வு செய்கிறான் என்றால் அச்சமூகம் கருத்தியல் அடக்குமுறை கொண்ட சமூகம் என்றே பொருள். படைப்பூக்கம் கொண்ட சுதந்திர சமூகத்தில் தன்னுடைய தனித் தன்மை கொண்ட மொழியும், சூழலும் அவனுக்கு ஒரு பெரிய சொத்தாகவே இருக்கும். வாழும் சமூகமும், மொழியும் ஒருபோதும் ஒற்றைப் படையான இயக்கம் கொண்டிருக்காது.

================================

[பூங்காற்று இஸ்லாமிய சிறப்பிதழுக்கு எழுதப் பட்டது. ஷிபா மீடியா 142/2வது தள/ வடக்கு வெளி வீதி, யானைக்கல், மதுரை 625001]

முதற்பிரசுரம் Apr 5, 2002/ மறுபிரசுரம்

ஹெப்ஸிபா ஜேசுதாசன்

கோட்டாறு ஞானியார் சாக்பு அப்பா 

தோப்பில் முகமது மீரான்

எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை 

——————————

இஸ்லாமிய இலக்கியம்

கிறித்தவ இசைப்பாடலாசிரியர்கள்

ஆபிரகாம் பண்டிதர்

ஆபிரகாம் பண்டிதர்
ஆபிரகாம் பண்டிதர் – தமிழ் விக்கி

து.ஆ.தனபாண்டியன்

து.ஆ.தனபாண்டியன்
து.ஆ.தனபாண்டியன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைநீலி மின்னிதழ்- ரம்யா
அடுத்த கட்டுரைவெண்முரசு வாசிப்பில் மீண்டும்…