சராசரிகள்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களது பல கட்டுரைகளில் “சராசரி(கள்)” மனிதர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள். அதற்கு உங்கள் அளவுகோல் என்ன? ஒவ்வொரு முறை அந்த வார்த்தையைப் பார்க்கும்போதும் நானும் அதில் ஒருவன்தான் என்னும் ஐயம் வலுக்கிறது.

ஒரு கல்லூரியில் ஆசிரியனாகவும், உங்கள் எழுத்தை கடந்த ஏழு வருடங்களாக வாசிப்பவன் என்பதைத் தாண்டி உருப்படியாக நான் எதுவும் செய்ததில்லை.

இப்படிக்கு,
எந்த ஒரு தனித்தன்மையும் இல்லாத உங்கள் வாசகன்
கௌரிஷ்

அன்புள்ள கௌரிஷ்,

நீங்கள் சராசரியா அல்லவா என்பது நீங்கள் உங்களை எப்படி உருவகிக்கிறீர்கள், எப்படி வாழ்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

சராசரிகள் என்பதை ஒரு முழுமையான வகைப்பாடாக நான் சொல்லவில்லை. எந்தத் தளத்தில் பேசுகிறேனோ அந்தத் தளத்தில் சராசரி என்ற பொருளிலேயே சொல்கிறேன்.

நான் பேசுவது கலையிலக்கிய சிந்தனைத்துறை பற்றி. அங்குள்ள சராசரிகளையே நான் குறிப்பிடுகிறேன். அங்கே சராசரியல்லாத ஒருவர் பிற தளங்களில் சராசரியாக இருக்கலாம்.

உதாரணமாக, குடிமைச்சமூகத்தில் நான் ஒரு சராசரி. ஒரு சராசரிக்குடிமகனுக்குரிய சிந்தனைகளும் கவலைகளும் பொறுப்புகளும் கொண்டவன். சராசரியின் எல்லா குறைகளும் எனக்கிருக்கும். ஒரு தகப்பனாக, கணவனாக நான் ஒரு சராசரி. ஒரு அலுவலக ஊழியனாக நான் ஒரு சராசரி. ஆனால் இலக்கியம், சிந்தனைத்தளத்தில் நான் சராசரி அல்ல.

சராசரி என்பது எப்போதும் ஓர் எதிர்மறை அடையாளம் அல்ல. அது மிகச்சரியானது என்ற பொருளிலும் இருக்கலாம்.

இலக்கியத்தில் நான் எந்தப்பொருளில் சராசரி என்று சொல்கிறேன்? இவ்வாறு வரையறை செய்ய முயல்கிறேன்.

ஒரு மனிதனுக்கு இருவகை பண்பாட்டுக்கல்விகள் கிடைக்கின்றன. ஒன்று சமூக, குடும்பச் சூழலால் இயல்பாகவே அவன் அடையும் பண்பாட்டுக்கல்வி. இரண்டு, தன் சுயமான தேடலால் அவனே அடையும் பண்பாட்டுக்கல்வி.

முதல்வகை பண்பாட்டுக்கல்வி கொண்டவர்தான் சராசரி. அவருக்கு இருக்கும் பண்பாட்டுப்பயிற்சி என்பது தமிழ்ச்சமூகத்தில் ஏறத்தாழ அனைவருக்குமே இருக்கும். அவர் குழந்தையாக இருக்கையில் இயல்பாகவே அவருக்குக் கிடைக்கும். பள்ளியில் கல்லூரியில் அலுவலகத்தில் சினிமாக்களில் நாளிதழ்களில் தொலைக்காட்சியில் இருந்து அவருக்கு தொடர்ந்து கிடைக்கும். அது மூச்சுக்காற்று சூழலில் இருந்து கிடைப்பதுபோல. ஆகவே அவர் கோடிகளில் ஒருவர். கோடிகளின் சரியான பிரதிநிதி.

அதற்கு மேல் ஒரு தனிப்பட்ட பண்பாட்டுப்பயிற்சி உண்டு என அவர் அறிந்தே இருக்கமாட்டார். ஆகவே அவர் தன் பண்பாட்டுப்பயிற்சி பற்றி அபாரமான நம்பிக்கை கொண்டிருப்பார். அறிவுச்செயல்பாடுகளை நிராகரிக்கவும் அவமதிக்கவும் முற்படுவார். எந்த அறிவுத்தளத்திலும் எந்தவகைப் புரிதலும் இல்லாமல் தன்னம்பிக்கையுடன் நுழைய முற்படுவார்.

முன்பு அதற்கான வாய்ப்புகள் குறைவு. ஒரு சராசரியிடம் கலை, அறிவுத்துறை சார்ந்த ஒரு இதழ் சென்று சேர்வதில்லை. ஓர் அறிஞனை அவர் சந்திக்கவும் முடிவதில்லை. ஆனால் நவீன இணைய உலகம் அதற்கான ஏராளமான வாய்ப்புகளை அளிக்கிறது. ஆகவேதான் சராசரிகள் பெரும் பிரச்சினையாக இணையத்தில் உருவாகியிருக்கிறார்கள்.

அத்துடன் சராசரிகளால் அப்படி அல்லாத ஒருவரை புரிந்துகொள்ளவே முடிவதில்லை. சராசரிகளுக்கு அவர்களுக்கு மேலே உள்ள எந்த உலகமும் அறிமுகம் இல்லை என்பதனால் அவற்றைப்பற்றி எந்த மதிப்பும் அவர்களுக்கிருக்காது. அந்த அறியாமை காரணமாக அவற்றைப்பற்றிய அச்சமும் இருக்கும்.

சராசரிகள் பிறரையும் தங்களைப்போன்ற சராசரிகளாகவே நினைப்பார்கள். ஆகவே சராசரிகள் பிற அனைவரையும் சராசரிகளாக நடத்துவர். அப்படி அவர்கள் இல்லை என்றால் வலுக்கட்டாயமாக மாற்ற முயன்றபடியே இருப்பார்கள். சராசரிகளே ஒரு சமூகத்தின் மிகப்பெரும்பான்மை என்பதனால் இந்த ஆதிக்கம் என்பது எப்போதும் சராசரிக்கு மேலானவர்களால் பெரும் வன்முறையாகவே உணரப்படும்.

சூளைச்செங்கல் குவியலிலே
தனிக்கல் ஒன்று சரிகிறது

என ஞானக்கூத்தனின் கவிதை வரி. அந்த மொத்தச் செங்கல் அடுக்கும் அந்த தனிச்செங்கல் மீது தன் எடையை முழுக்கச் செலுத்தும். அதை உடைக்க முயலும்.

சராசரிக்கு அப்பால் உள்ளவர்கள் தங்களை அப்படி மேலே தூக்கிக் கொண்டவர்கள். ஓர் அடிப்படைத்தேடல் அவர்களுக்கே இருக்கிறது. தொடர்ச்சியான தேடல் மற்றும் உழைப்பு மூலம் அவர்கள் தங்களை மேலும் மேலும் தகுதிப்படுத்திக்கொள்கிறார்கள்.

இந்தத் தகுதிப்படுத்தலின் போக்கில் அவர்கள் தங்கள் தனித்தன்மையைக் கண்டடைந்து வளர்க்கிறார்கள். ஆகவே சராசரி அல்லாதவர்கள் தங்களுக்கென ஆளுமையில் ரசனையில் சிந்தனைப்போக்கில் தனித்தன்மையைக் கொண்டிருப்பார்கள். அவர்களை சராசரிகளிடமிருந்து பிரித்துக்காட்டும் அம்சம் அதுவே.

சராசரிகள் பொதுமைப்பண்புகளை வெளிப்படுத்துவார்கள். அதற்கு அப்பாலுள்ளவர்கள் தனிப்பட்ட பண்புகளை வெளிப்படுத்துவார்கள்.

அறிவுச்செயல்பாடு என்பது எப்போதுமே சராசரிக்கு எதிரான போர்தான். சமூகம் சராசரிகளால் ஆனது. அவர்கள்தான் சமூகத்தின் பொதுவான கருத்துக்களையும் மனநிலைகளையும் வெளிப்படுத்துகிறார்கள். அவர்களை சமூகத்தின் நிலைச்சக்திகள் எனலாம்.

சமூகம் சிந்தனைத்தளத்தில் வளர்வது அதன் மீறல்கள் மூலம்தான். அதை நிகழ்த்துபவர்கள் சராசரிக்கு அப்பால் செல்லும் தனித்தன்மை கொண்டவர்கள். அவர்கள் பலவகையில் பல்வேறு கருத்துத்தரப்புகள் கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக அவர்களே சிந்தனையில் புதிய திறப்புகளை உருவாக்குகிறார்கள். அதன் வழியாகவே சமூகம் முன்னகர்கிறது. அவர்களை சமூகத்தின் செயல்சக்திகள் எனலாம்.

ஆகவே சராசரிகளை எதிர்த்து மோதி முன்னகரும் தன்மை அறிவுச்செயல்பாட்டுக்கு எப்போதுமுண்டு. கொஞ்சமேனும் அறிவுத்தளத்தில் செயல்படக்கூடியவர் வேறுவழியே இல்லாமல் சராசரிகளுடன் மோதிக்கொண்டேதான் இருப்பார்.

வெவ்வேறு வகையில் பிளேட்டோவில் இருந்து அரவிந்தர் வரை, மார்க்சில் இருந்து அன்டோனியோ கிராம்ஷி வரை இதைப்பற்றிப் பேசியிருக்கிறார்கள்.

சராசரிகளை பழிக்கவேண்டியதில்லை. சராசரிகள் சமூகத்திற்குப் பயனற்றவர்களும் அல்ல. அவர்கள்தான் சமூகமே. ஆனால் ஒரு சமூகத்தில் ஒருபோதும் அவர்களின் குரல் ஓங்கி ஒலிக்க அனுமதிக்கப்படலாகாது. அவர்கள் சராசரிகள் என்று அவர்களுக்கு உணர்த்தியாகவேண்டும். அவர்கள் அறிவுத்தளத்தில் வெல்லப்பட்டாக வேண்டும். அப்படி நிகழாமல் சராசரிகள் ஓங்கும் சமூகம் தேங்கி நாறிவிடும்.

ஆகவே ஓர் அறிவியக்கவாதி சராசரிகளை அடக்க, வெல்ல கடமைப்பட்டவன். அவர்களின் அவமதிப்பையும் வசைகளையும் புறக்கணிப்பையும் ஏற்கவும் விதிக்கப்பட்டவன்.

ஆனால் ஓர் அடிப்படைத்தெளிவு இருக்கவேண்டும். ஒருவர் சராசரிகளுடன் மோதுவது இன்றியமையாத சமூக முன்னகர்வுக்காக மட்டுமே. அவர் சராசரிகளை அடக்குவது தன்னுடைய தனித்தன்மையைக் காத்துக்கொள்வதற்காக மட்டுமே. தன்னை சராசரிக்குமேலாக உணர்வது தன்னுடைய படைப்பூக்கத்தை அடையாளம் காண்பதற்காக மட்டுமே.

அது ஒருபோதும் சராசரிகள் மீதான ஏளனமாக மாறிவிடக்கூடாது. காழ்ப்பாக ஆகிவிடக்கூடாது. தற்செருக்காக அது மாறுமென்றால் அறிவியக்கவாதி தேங்க ஆரம்பிக்கிறான். அதன் பின் அவன் செய்வதெல்லாம் சுயபிம்ப உருவாக்கத்துக்காக மட்டுமே என்றாகிவிடும். அதன்பின் அவனால் சமூகத்திற்கு எந்தப்பயனும் இல்லை.

சராசரி மனிதர்கள்தான் சமூகம். ஓர் அறிவியக்கவாதி அந்த சராசரிகளுக்காகவே தன்னை அர்ப்பணம் செய்துகொள்கிறான். இறுதியாகப்பார்த்தால் அவன் அவர்களுக்கான களப்பலிதான். அவர்கள் மீதான ஆழ்ந்த அன்புடன் மட்டுமே அவன் தன்னை தனித்து விலக்கிக் கொள்கிறான். அவர்கள் நலனுக்காகவே அவன் தன்னை அவர்களை விட முன்னே கொண்டுசெல்கிறான்.

ஜெ

தேர்வுசெய்யப்பட்ட சிலர்

விதிசமைப்பவர்கள்

முந்தைய கட்டுரைசமூக வலைத்தளங்கள் ஜனநாயகக் களமா?
அடுத்த கட்டுரைஆங்கில இந்தியச்சமூகமும் தமிழிலக்கியமும்