அன்பு எழுத்தாளரே சற்று வாசித்தேன் உங்கள் சிந்தனைகளை !
இலக்கியம் என்பது சமகாலத்தைப் பிரதிபலிக்கும் என்பதில் எமக்கு உடன்பாடு உண்டு. ஆனால் சமூக மாற்றத்தில் எழுத்தாளனின் பங்களிப்பு என்ன என்பதைத் தெளிவுபடுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இதை ‘ நாலாப்பு ‘ என்று புறம்தள்ளி விடவேண்டாம்.
நன்றி
சி . விக்டர்
அன்புள்ள விக்டர்,
சமூகம் என்பது அதன் சாராம்சமாக உள்ள கருத்துக்களால் கட்டப்பட்டிருக்கிறது.
ஆகவே சமூக மாற்றம் என்பது அந்தக்கருத்துக்களில் உருவாகும் மாற்றத்தால் மட்டுமே சாத்தியமாகும்.
இக்கருத்துக்களில் பல வெளித்தெரியக்கூடியவை. பல வெளியேதெரியாமல் ஆழ்மனதில் செயல்படுபவை.நுட்பாமானவை.
சமூகத்தில் கருத்துமாற்றம் நிகழவேண்டுமென்றால் இரண்டு படிகளிலாக கருத்தியல் செயல்பாடு நிகழவேண்டும்.
ஒன்று சமூகம் தன் மனதை உண்மையாகத் ’தெரிந்து’கொள்ள வேண்டும். இரண்டு அதை ’மாற்றி’யமைக்கவேண்டும்
சமூகத்தை ஒரு மனிதருடன் ஒப்பிடலாம். அவரது மனம் என்பது அவரது கருத்துக்கள்தான். அதை மாற்றியமைத்தால்தான் அவர் மாறுவார்.
அதற்கு முதலில் அவரது மனதில் தெரிந்தும் தெரியாமலும் ஓடும் கருத்துக்களை தெரிந்துகொள்ளவேண்டும். அதற்காக ஒரு மனதத்துவமருத்துவர் அவரை மனோவசியம் செய்து கனவுநிலையில் பேசச்செய்கிறார். அந்நிலையில் அந்த மனிதர் தன் அகம் அனைத்தையும் வெளிப்படுத்துகிறார்
அதன் பின் அந்த மனவெளிப்பாட்டின் அடிப்படையில் மனதத்துவ மருத்துவர் அந்த மனிதர் தன்னை மாற்றிக்கொள்ள என்னென்ன செய்யவேண்டும் என்று வகுக்கிறார். அதன்படிச் செயல்படும்போது அந்த மனிதர் மாறுகிறார்
இதுவே சமூகமாற்ற்றத்தின் விஷயத்திலும் நிகழ்கிறது. சமூகத்தின் மனமாகச் செயல்படும் கருத்துக்களை உண்மையாகத் தெரிந்துகொள்ள உதவும் முதன்மையான வழி இலக்கியம். அது மனவசியத்தில் பேசுவதுபோன்றது.
மொத்த சமூகத்தின் ஆழ்மனதையும் ஒருசிலர் மொழியில் வெளிப்படுத்துவதே இலக்கியம். நல்ல எழுத்தாளர்கள் அவர்களின் சமூகத்தின் மிகச்சிறந்த மாதிரிகள்.
நல்லஇலக்கியம் ஒரு சமூகத்தின் ஆழ்மனதை வெளிக்காட்டுகிறது. அதில் வெளிப்படையாகவும் நுட்பமாகவும் சமூகத்தின் மனமாகச் செயல்படும் கருத்துக்கள் உள்ளன.
ஆகவே நல்லஎழுத்துக்கள் நேரடியாகச் சமூகமாற்றத்துக்காகப் பிரச்சாரம்செய்யாவிட்டாலும் அவைதான் சமூகமாற்றத்துக்கான உண்மையான கருவிகள். அவற்றை அவை ‘பேசும்’ நேரடியான கருத்துக்களுக்காக வாசிக்கக் கூடாது. அவை நுட்பமாக வெளிப்படுத்தும் சமூக உண்மைகளை ஆராய்ந்து உணர்வதற்காக வாசிக்கவேண்டும்.
அந்தக் கருத்துக்களை ஆராய்ந்து அறிந்து அவற்றில் எவை தேவையானவை எவை தேவையற்றவை என உணர்ந்து சமூகத்தை மாற்றியமைக்க செய்யவேண்டுவனவற்றை வகுப்பவர்கள் சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள். அவர்களை நாம் மனதத்துவ மருத்துவர்கள் எனலாம்.
அவ்வாறு அவர்கள் கண்டறிந்த வழிகளை அச்சமூகத்திடம் சொல்லி சமூகத்தின் கருத்தில் மாற்றத்தை உருவாக்குபவர்கள் உண்மையான அரசியல் செயல்பாட்டார்கள். அவர்களை மனதத்துவ சிகிழ்ச்சைகளை அளிக்கும் பயிற்சியாளர் எனலாம்
அந்த அரசியல்செயல்பாட்டார்களுக்கு அவ்வாறு கருத்துக்களை பரப்புவதில் உதவிசெய்யக்கூடியவர்கள் இரண்டாம்நிலை எழுத்தாளர்கள். அவர்கள் வெறும் பிரச்சாரகர்கள். அவர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பார்கள்.
இதுவே இலக்கியம் சமூக மாற்றத்திற்கு பங்களிப்பாற்றும் வழிமுறையாகும்
நேற்றைய நல்ல எழுத்தாளர்கள் சொன்னவற்றைத்தான் இன்று அரசியல்செயல்பாட்டாளர்களும் எளிய எழுத்தாளர்களும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இன்றையநல்ல எழுத்தாளன் நாளைக்கான மாற்றத்தைப்பற்றிச் சொல்கிறான்
இதுவே நல்லஎழுத்தாளர்களுக்கும் அரசியல்செயல்பாட்டாளர்களுக்கும் நடுவே எப்போதும் முரண்பாடு இருக்க காரணமாகும்
பலமுறை சொன்னதுதான். இம்முறை முடிந்தவரை எளிமையாகச் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன்
ஜெ