எழுத்தாளர்களின் தனிவாழ்க்கை

அன்புள்ள ஜெ.

“சுஜாதாவைக் காப்பாற்ற வேண்டுமா?” இப்பொழுதுதான் படித்தேன். சில எண்ணங்கள் அது தொடர்பாய்.

ஒரு எழுத்தாளர் சில மதிப்பீடுகளைத் தன் புனைவுகளில் முன்வைக்கிறார்.ஆனால் நேரெதிர் முரணான வாழ்க்கை வாழ்கிறார்.அவரது எழுத்துக்களில் எந்த அளவிற்கு சத்தியம் சாத்தியம் ஜெ.? அப்படிப்பட்ட அவரது எழுத்து என்பது அவரது நிராசைகளின் , தோல்விகளின் , கபடங்களின் திரட்டாகத்தானே இருக்க முடியும் ? அந்த எழுத்து படிப்பவர் மனதில் பகல் கனவுகளை அல்லவா தூண்டும் ?

நான் ஒருவரைப் படிக்கிறேன். அவரது எழுத்து மூலம் நான் அடையும் தரிசனங்களில் மிகவும் உந்தப்பட்டு மேலும் அவரை நெருக்கமாக உணர்கிறேன்.அப்படி உணர்வதாலே என் ஆழ் மனம் விழிப்படைந்து மேலும் மேலும் அவர் கோடிடும் நுட்பங்களை என் அகம் இயல்பாகவே புரிந்து கொள்கிறது.ஆனால் விஷயம் என்னவெனில் அந்த எழுத்தாளர் அவர் எழுதியதைத்தான் வாழ்கிறார் அவர் எழுத்துகளில் சத்தியம் உள்ளது என்று என் மனம் நம்பினால்தானே அந்தச் செயல்பாடு இலகுவாக நடக்கும்? இல்லாமல் ஒருவர் எப்படி எப்படியோ வாழ்கிறார் என்று தெரியவருகிறது. ஆனால் முரணான வாழ்கையை மதிப்பீடுகளை எழுத்தில் வடிக்கிறார். வாசகரின் ஆழ்மனம் அந்த எழுத்துகளை நிராகரித்து விடாதா ?

நீங்கள் சொல்வது போல “எழுத்தாளனிடம் எழுத்தை எதிர்பார்க்கப் பழகுங்கள்.” இதற்கு வாசகரின் ஆழ்மனம் அல்லவா எழுத்தாளரிடம் உரையாட வேண்டும் ? அதற்கு அந்த எழுத்தாளரின் எழுத்துகளில் உண்மை இருக்க வேண்டாமா ? எழுத்தாளர்கள் , கலைஞர்கள் கற்பனையால் தூண்டப்பட்டு வித விதமான வாழ்கைபோக்குகளை எழுத்தில் ஆராய்கிறார்கள் , வாசகருக்கு ஒருவித தரிசன அனுபவத்தை அளிக்கிறார்கள் . அதற்காக அவர்கள் எழுதுவது போலத்தான் வாழ வேண்டும் என்று வாசகர் நிர்ப்பந்திக்க எல்லாம் முடியாது . எழுத்தாளர்களுக்கு அது தேவை அற்ற சுமை என்றும் தோன்றுகிறது . ஆனால் ஒருவர் உண்மையாய் சில மதிப்பீடுகளின்படி எந்த சமரசமும் இல்லாமல் கஷ்டப்பட்டேனும் வாழ்ந்து அதை எழுத்துக்களிலும் வடிக்கிறார் என்றால் அவ்வகை எழுத்து நேரடியாய் வாசகரின் இதயத்தை ஊடுருவாதா ? ஒரு எழுத்தாளருக்கும் அதுதானே நிறைவான ஒன்றாய் இருக்க முடியும் ?

பாரதி , ஜெயகாந்தன் எல்லாம் அவர்கள் எழுத்து போல் நேர்வாழ்கையிலும் ரௌத்திரமானவர்கள் என்பது அவர்கள் எழுத்தின் உண்மைக்கு மேலும் வலிமை சேர்க்கவில்லையா ?

நன்றி
ஜெயா

அன்புள்ள

ஜெயமோகன்,

எழுத்தின் நம்பகத்தன்மை எழுத்தாளனின் அந்தரங்கத்தோடு தொடர்பு கொண்ட ஒன்றா ?.

நான்கு சுவருக்குள் குடிகாரனாகவும் ,ஏமாற்றுபவன் என்றும் இருந்துவிட்டு எழுத்தில் அதற்கு எதிர் பாவனையுடன் எழுதும் பொழுது நம்பகத்தன்மை சேராது என்பது என் புரிதல்.

ஏன்னெனில் அந்தரங்கம்தான் ஒரு ஆளுமையின் மையப் புள்ளியாக இருக்க முடியும் ,மற்றவை அதைச் சுற்றிய பாசாங்கு வலை மட்டுமே.

நன்றி

முரளி .

அன்புள்ள ஜெயா, முரளி,


இந்த வினாவுக்கான பதிலை விரிவாகவே எழுதியிருக்கிறேன்.

எழுத்தாளர்களுக்கும் அவர்களின் எழுத்துக்களுக்குமான உறவு என்பது நேரடியானது என்று நினைப்பதில் இருந்துதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. இப்படி வைத்துக்கொள்வோம். ஒருவர் எழுதும் டைரிக்கும் அவருக்குமான உறவு நேரடியானது. அவர் நினைப்பதை அவர் எழுதுகிறார். ஆனால் ஒருவர் காணும் கனவுக்கும் அவருக்குமான உறவு நேரடியானது அல்ல. அது பலவகையான ஆழ்மன உள்ளோட்டங்களின் விளைவு. அவர் நினைக்காததைக் கனவுகாண முடியும். அவர் அறியவே அறிந்திராதவற்றைக் கனவுகாணமுடியும் இல்லையா?

ஓர் சிந்தனையாளன் எழுதுவது டைரி போல. அவர் சிந்திப்பதை அவர் எழுதுகிறார். ஆனால் இலக்கியம் என்பது கனவு போல. எழுத்தாளன் மொழியைக்கொண்டு ஒருவகை கனவுலகில் நுழையவும் கனவை மொழியில் பதிவுசெய்யவும் பயின்றவன் மட்டுமே. எந்த நல்ல எழுத்தாளனும் தான் நினைப்பதை, தனக்குத் தெரிந்ததை எழுதுவதில்லை. எழுதும் விஷயங்கள் மீது எழுத்தாளனுக்கு நேரடிக்கட்டுப்பாடு ஏதுமில்லை.

இந்தக்காரணத்தால்தான் இலக்கியம் பிறவகை எழுத்துக்களைவிட மேலதிக முக்கியத்துவம் பெறுகிறது. பிற எழுத்துக்கள் எல்லாமே அவை உருவான காலகட்டத்துடன் பிரிக்கமுடியாதபடி பிணைந்திருக்கும்போது இலக்கியம் ஒரு காலாதீதத்தன்மையை அடைகிறது. சிந்தனைகள் பழைமையாகும்போதும் இலக்கியம் என்றும் புதியதாக இருந்துகொண்டிருக்கிறது. ஏனென்றால் அது விழிப்புமனதின் உருவாக்கம் அல்ல. விழிப்புமனம் சமகாலத்துடன் நெருக்கமான தொடர்புள்ளது. ஆழ்மனம் தெளிவான காலஅடையாளமற்றது.

ஆகவே ஓர் எழுத்தாளன் எழுதுவது அவனுடைய வாழ்க்கையாக இருக்கவேண்டுமென்பதில்லை. அவன் அறிந்த ,சிந்திக்கக்கூடிய ,நம்பக்கூடிய விஷயங்களாக இருக்கவேண்டுமென்பதில்லை. அவனுடைய இலட்சியக்கனவுகள், ரகசிய அச்சங்கள், சபலங்கள் எதுவாகவும் இருக்கலாம்.

ஆகவே ஓர் எழுத்தாளன் எழுதுவனவற்றைக் கொண்டு அவனைப்பற்றி ஒரு பிம்பத்தை உருவாக்கிக்கொள்வது பிழையானதாகவே முடியும். ஒருவரின் கனவைப் பதிவுசெய்து உங்களுக்குக் கொடுத்தால் அதைக்கொண்டு நீங்கள் அவன் எப்படிப்பட்டவன் என்று முடிவுக்கு வந்துவிடுவீர்களா? அப்படி முடிவுகட்டினால் அது எந்த அளவுக்குச் சரியாக இருக்கும்?

எழுத்தாளர்கள் ஒரு சமூகத்தின் கூட்டு ஆழ்மனத்தின் பிரதிநிதியாக ஒலிக்கும் குரல்கள், அவ்வளவுதான் அவர்களின் இடம், அதுவே அவர்களின் முக்கியத்துவம். ஒரு பழங்குடிச்சமூகத்தின் ஆழ்மனமாக சாமிவந்து பேசும் பூசாரிபோல என்று வைத்துக்கொள்ளுங்கள்.

உலக அளவில் நல்ல எழுத்தாளர்களின் வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் எழுத்தும் வாழ்க்கையும் ஏறத்தாழ ஒன்றாக இருக்கும் எழுத்தாளர்கள் நிறையப்பேர் உண்டு. அவர்கள் தாங்கள் எழுதுவதைத் தாங்களே வாசித்து அதன்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளக் கடும் முயற்சி எடுப்பவர்கள். தங்கள் வாழ்க்கையை வைத்து எழுதியவர்கள் அல்ல. நான் அவ்வகை.

இன்னொருபக்கம் எழுதுவதை ஒரு உச்சமனநிலையில் நிகழ்த்திவிட்டு அதனுடன் சம்பந்தமில்லாமல் வாழக்கூடியவர்களும் உண்டு. அவர்களில் மாபெரும் இலக்கியமேதைகளைக் காணமுடியும். அவர்களின் எழுத்து அவர்கள் வாழும் சமூகத்தின் குரல், அவர்களின் குரல் அல்ல. அவர்களால் ஒருவேளை அந்தக் குரலைப் பின் தொடர முடியாமல் போகலாம். ஆனால் பிறர் அதைப் பின்பற்ற முடியும். அச்சமூகம் அதைப் பின்பற்றி மேலான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும்

இரு உதாரணங்கள் தல்ஸ்தோயும் வால்டேரும். தல்ஸ்தோய் தான் எழுதியதை வாழ முயன்றவர். வால்டேர் அவரது எழுத்துக்களை வாழ்க்கையில் இருந்து வேறாக வைத்திருந்தார். தனிவாழ்க்கையில் தல்ஸ்தோய் மேலானவர். வால்டேர் கௌரவமான தனிவாழ்க்கை கொண்டவர் அல்ல. பலவகைக் கீழ்மைகள் வெளிப்பட்டவர். ஆனால் உலகநாகரீகத்துக்கு தல்ஸ்தோய் அளித்த பங்களிப்பை வால்டேரும் அளித்திருக்கிறார்

ஜெ

முந்தைய கட்டுரைசாதி அடையாளமா?
அடுத்த கட்டுரைநம் வழிகள்…