அன்புள்ள ஜெ
நான் மீண்டும் நீங்கள் எழுதிய சு ரா நினைவின் நதியில் நூலை படித்தேன். நீங்கள் எழுதியவற்றுள் இது சிறந்தது என்பது என் எண்ணம்
கடந்த ஞாயிறன்று நான் ஆர்.வி.ரமணி எடுத்த சுந்தர ராமசாமியைப்பற்றிய ஆவனப்படத்தைப் பார்த்தேன்.http://www.psbt.org/directors/245 தயாரிப்புPSBT
நல்ல ஆவணப்படம். சுந்தர ராமசாமியைப்பற்றி ஒரு நல்ல அறிமுகத்தை அளிக்கிறது. அதேசமயம் அது முழுமையற்றது. உங்களுடைய கூர்மையான தீவிரமான நூலுடன் ஒப்பிடும்போது அது மிகவும் முழுமையற்றது
இந்த ஆவணப்படத்துக்காக நீங்கள் ஏன் விரிவாக நேர்காணல்செய்யப்படவில்லை என்று புரியவில்லை. உங்கள் அளவுக்கு சுந்தர ராம்சாமியை நெருக்கமாக அறிந்தவர்கள் அதிகம் இருக்க வாய்ப்பில்லை. நீங்கள் ஏதோ மேடையில் பேசுவதன் ஒரு துண்டுக்காட்சி மட்டும் வந்துசென்றது.
அந்தப்படத்தை முக்கியமாக ஆக்குவது என்னவென்றால் ராஜமார்த்தாண்டன் அசோகமித்திரன் எம்.யுவன் மனுஷ்யபுத்திரன் நாஞ்சில்நாடன் ஞானி போன்றவர்களின் நேர்காணால்கள்தான். அனைத்தும் சேர்ந்து சுந்தர ராமசாமியைப்பற்றி ஒரு துளிச் சித்திரத்தை ஒரு புற வாசகனுக்கு அளித்தன
அத்துடன் சுந்தர ராமசாமியின் மிகச்சிறப்பான பேட்டிகளும் அதில் இருந்தனா. சுரா தனிப்பட்ட முறையில் எப்படிப்பட்டவர் என்பதை அவை காட்டின. நான் சென்னை ஃபிலிம் சேம்பர்ஸில் ஒரு பிரதி வாங்கிக்கொண்டேன்
அன்புடன்
கே.ஆர்.அதியமான்
http://nellikkani.blogspot.com
http://athiyamaan.blogspot.com
அன்புள்ள அதியமான்
பொதுவாக தமிழில் எந்த ஒரு விஷயமும் அதற்கே உரிய குழு மனநிலையுடன் மட்டுமே செய்யபப்டுகின்றன. இப்போது அந்த ஆவணபப்டம் எடுக்கப்பட்டிருந்தால் மனுஷ்யபுத்திரன் இருந்திருக்க மாட்டார். அந்த ஆவணப்படம் எடுத்தவர்கள் சுந்தர ராமசாமியை காட்டவிரும்பிய கோணத்துக்கு என் குரல் பொருந்தி வந்திருக்காது
இன்றும் சுரா நினைவின் நதியில் நூல் சுராவை இழிவுபடுத்துகிறது என்றுதான் காலச்சுவடும் அதன் அடிப்பொடிகளும் சொல்கின்றனர்.
ஒரு எழுத்தாளன் இன்னொரு எழுத்தாளனைப்பற்றி எழுதும்போது அது ஒரு பதிவாக இருப்பதில்லை எதிர்கொள்ளலாகவும் இருக்கிறது. சுரா அவரது எழுத்தை விட உரையாடலில் அதிகம் தீவிரமாக வெளிப்பட்ட ஆளுமை. எழுத்தில் அவர் தன்னை மிக இறுக்கிக் கொண்டார். ஆகவே அவரது உரையாடல் பதிவுபெறும்போது அது சிறப்பாக இருக்கிரது. அதை ஒரு படைப்பிலக்கியவாதி பதிவுசெய்யும்போது அற்புதமாக அமைகிறது
நானே நினைவின் நதியில் நூலை பலமுறை வாசித்திருக்கிறேன். சுரா காந்தி, தல்ச்தோய் பற்றி பேசும் பகுதிகளும் கவிதை வாசிக்கும் பகுதியும் எல்லாம் அபாரமான கவித்துவத்துடன் உள்ளன. அவை எளிய காலச்சுவடு வாசகரக்ளுக்கானவை அல்ல
ஜெ
அன்புள்ள ஜெ,
சமீபத்தில் சாரு நிவேதிதா-மனுஷ்யபுத்திரன் இருவரும் சுந்தர ராமசாமியைப்பற்றி நிகழ்த்திய விவாதத்தை கவனித்தீர்களா? சுந்தர ராமசாமி ஒரு காலாவதியான எழுத்தாளர் என நீங்கள் நினைக்கிறீர்களா?
செம்பூர் குமார்
அன்புள்ள குமார்
இத்தகைய விவாதங்களில் சொல்லப்படுவன தீர்ப்புகள் அல்ல, கருத்துக்கள். கருத்து சொல்பவரின் தகுதியே கருத்தின் தகுதி. சாரு சுந்தர ராமசாமி குறித்து எழுதிய ‘விமரிசனங்களை’ பாருங்கள். அவை வெறும் அக்கப்போர்கள். அந்த அளவுக்குத்தான் அக்கருத்துக்களுக்கு மதிப்பு.
சுந்தர ராமசாமி தமிழின் முக்கியமான படைப்பிலக்கியவாதி என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. அவரை மூன்று தளங்களில் அணுகவேன்டும். 1. இலக்கிய படைப்பாளி 2. இலக்கிய கோட்பாட்டாளர் 3 இலக்கிய மையம்.
சுந்தர ராமசாமி இலக்கியவாதியாக ஒரு புளிய மரத்தின் கதை, ஜே.ஜே.சிலகுரிப்புகள் போன்ற நாவல்களையும் கோயில்காளையும் உழவுமாடும் ரத்னாபாயின் ஆங்கிலம் போன்ற சிறந்த கதைகளையும் எழுதிய படைப்பாளி. உயர்தர அங்கதமும் நவீனத்துவ கவித்துவமும் கலந்த சிறந்த ஆக்கங்கள் அவை
கோட்பாட்டாளராக சுந்தர ராமசாமி தமிழில் நவீனத்துவ இலக்கிய நோக்கை உருவாக்கியவர். நவீனத்துவத்தின் சிறப்புகளும் பலவீனமும் அவரில் இருந்தன. கச்சிதமான வடிவம், கூரிய நடை ஆகியவற்றுக்காக அவர் வாதிட்டார். கட்டுப்படுத்தப்பட்ட வெளிப்பாடு சிந்தனைமைய நோக்கு ஆகியவற்றை முன்வைத்தார். முன்னது சாதகமானது பின்னது எதிர்மறையானது என்பது அவரது வழிவந்தவனாகிய என் கணிப்பு
இலக்கிய மையமாக சுந்தர ராமசாமி முப்பது வருடக்காலம் கேளிக்கைஎ ழுத்துக்கும் கல்வித்துறையின் உதாசீனத்துக்கும் எதிராக போராடியிருக்கிறார். முக்கியமான இலக்கியவாதிகளின் உருவாக்கத்தில் பங்கு வகித்திருக்கிறார். பிற்காலத்தில் காலச்சுவடு போன்ற ஓர் அமைப்பை அவர் உருவாக்கியபோது அமைப்புமனிதராக சில சறுக்கல்கள் அவருக்கு நிகழ்ந்தன
நிறைகுறைகளுடன் சுந்தர ராமசாமி நம் காலலட்டாத்தின் மாபெரும் படைப்பாளிகளில் , மகத்தான ஆளுமைகளுள் ஒருவர்
ஜெ