புழுக்களும் சினிமாவும்

அன்புள்ள ஜெ

புழுக்கள் பற்றிய கட்டுரை வாசித்தேன். வாசகர்களும் சற்றே உணர்ச்சியும் அறிவும் கொண்டவர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கிருக்க வேண்டும் என நினைக்கிறேன். இணையத்தில் வம்பு வளர்ப்பவர்கள் எழுதுவதை நாலைந்து வரி வாசித்ததுமே அவை எந்த தரத்தைச் சேர்ந்தவை என்று வாசகனால் உணர முடியும். ஒருவேளை அப்படி உணராத வாசகன் இருந்தானென்றால் அவனுக்கு ஒருபோதும் உங்கள் எழுத்துக்கள் பிடிபடப்போவதில்லை. அப்படியென்றால் எதற்காக அந்த கடுமையான கடிதம்?

இப்படிப்பட்ட கடுமையான கட்டுரைகளால் எவரையாவது திருத்த முடியும் என நினைக்கிறீர்களா?

சந்திரசேகர்

அன்புள்ள சந்திரசேகர்,

அக்கட்டுரையிலும் சரி அதற்கு முந்தைய கட்டுரையிலும் சரி நான் கடுமையான எதிர்வினைகளை ஆற்றியமைக்குக் காரணம் அவை என் மீதான அவதூறுகள் என்பதனால் அல்ல. அதைவிட கேவலமான அவதூறுகளை நான் புறக்கணித்தே வந்திருக்கிறேன்.

அவை சினிமாக் கலைஞர்களை இழிவுபடுத்துகின்றன என்பதே என் கோபத்துக்கான காரணம். இந்த இலக்கியக் காழ்ப்புகளுக்கு அப்பாலிருக்கிறார்கள் அவர்கள். வாசிக்கும் வழக்கம் கொண்டிருப்பதனால் இலக்கியம் மீதும் இலக்கியவாதிகள் மீதும் மதிப்பைக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த புழுக்கள் தங்கள் வம்புகளுக்குள் அவர்களை இழுத்து அவமதிப்பது வழியாக ஒரு முக்கியமான கலாச்சாரச் சாத்தியக்கூறை அழிக்கிறார்கள்.

இருபதாண்டுக்காலத்துக்கு முன் நான் திருவனந்தபுரம் இண்டியன் காஃபி ஹவுஸில் ஒருமுறை எழுத்தாளர் பி.கெ.பாலகிருஷ்ணனைச் சந்திக்கச் சென்றேன். அன்று மம்மூட்டி, எம்.ஜி.சோமன் போன்ற உச்ச நடிகர்களும் ஜி.அரவிந்தன், பரதன் போன்ற இயக்குநர்களும் கானாயி குஞ்சிராமன் போன்ற சிற்பியும் எழுத்தாளர்களும் ஒன்றாக அமர்ந்து பேசிச் சிரிப்பதைக் கண்டேன். எனக்கு மிகுந்த மன எழுச்சி ஏற்பட்டது. தமிழில் அப்படிப்பட்ட நிலை எப்போது உருவாகுமென ஏங்கினேன்

அந்த இணைப்பே மலையாளக் கலாச்சாரச்சூழலின் வெற்றிகளை உருவாக்கியது. தமிழில் நிகழ்ந்தாக வேண்டியது அது. ஆனால் அதற்கான வழி அமையவில்லை. இங்கே சினிமாக்காரர்கள் அவர்களின் தனியுலகில் வாழ பிற கலைஞர்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பே இல்லாமலிருந்தது. அசோகமித்திரன் அல்லது சுந்தர ராமசாமியின் பெயரை அறிந்த சினிமாக்காரர்களே இல்லை என்ற நிலை.

ஒருவகையில் அந்த எல்லைச்சுவரை உடைத்தவர் பாலு மகேந்திரா. இன்றுதான் மெல்ல மெல்ல இலக்கியவாதிகளுக்கும் சினிமாக் கலைஞர்களுக்கும் நடுவே ஓர் ஆக்கபூர்வமான உறவு உருவாகி வருகிறது.வசந்தபாலன், சசி,மணி ரத்னம்,பாலா போன்றவர்கள் அதில் இன்று ஓர் முன்னோடி இடத்தை வகிக்கிறார்கள். ஓர் உரையாடல் நிகழ ஆரம்பித்திருக்கிறது

இதை சினிமாவில் எழுத இலக்கியவாதிகளுக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்ற அளவில் புரிந்து கொள்ளப்படவேண்டிய ஒன்றல்ல. இந்த உரையாடல் ஒரு வாசல். இதன்வழியாக பலர் உள்ளே வரலாம். எழுத்தாளர்களின் இடம் சினிமாவுக்குள் அடையாளம் காணப்பட்டால் மிக விரிவான ஓர் ஊடாட்டம் நிகழலாம் பலவகையான கருத்துக் கலப்புகள் நிகழலாம். இன்று உள்ளே செல்லும் இலக்கியவாதிகளுக்கு பங்களிப்பாற்றுவதற்கான இடம் பெரிதாக இல்லை. ஆனால் எதிர்காலத்தில் மெல்ல மெல்ல உருவாகி வரலாம்.

மலையாள சினிமாவில் ஐம்பதுகளில் நிகழ்ந்த மாற்றம் இது. தகழியும் தேவும் பஷீரும் உள்ளே சென்ற காலகட்டம். அதற்கு முன்னர் எழுத்தாளர்களுக்கான இடம் இருக்கவில்லை. முதுகுளம் ராகவன்பிள்ளை, நாகவள்ளி ஆர் எஸ் குறுப்பு போன்ற மேலான எழுத்தாளர்கள் கூட வசனகாரர்களாக ஸ்டுடியோக்களில் வேலை பார்த்தார்கள். மாற்றத்தைக் கொண்டு வந்தவர் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஏ.வின்செண்ட். அவர்தான் எழுத்தாளர்களை உள்ளே கொண்டு வந்தார். அவருக்கும் எழுத்தாளர்களுக்குமான தனிப்பட்ட நட்பே அவ்வாசலைத் திறந்தது.

அந்த வாசலில் இந்த புழுக்கள் கூச்சலிடுகிறார்கள். மெல்ல உருவாகி வரும் இந்த உறவை சிதிலப்படுத்த திட்டமிட்டு முயல்கிறார்கள். எந்த புதிய உறவும் ஐயங்களுடன் ஆர்வங்களுடன் மெல்ல மெல்லத்தான் உருவாகி வரும். சினிமாக் கலைஞர்களுக்கு எழுத்தாளர்கள் சினிமாவில் என்ன செய்ய முடியுமென்று இன்னமும் தெரியவில்லை. சினிமாக்காரர்கள் செயல் பட்டுப் பழகிய முறைக்குள் இன்னும் எழுத்தாளர்களுக்கான இடம் உருவாகி வரவுமில்லை. ஆனால் இப்போதே இந்தவகையான அவதூறுகள் மூலம் அவநம்பிக்கைகளை உருவாக்குவதென்பது மிகப்பெரிய அழிவுச் செயல். சினிமாவுக்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த பண்பாட்டுக்கே அது தீங்கானது.

இருவகையில் இதைச்செய்கிறார்கள். ஒன்று சினிமாவுக்குள் செல்லும் எழுத்தாளர்களை வீழ்ச்சியடைந்தவர்கள், சமரசம் செய்துகொண்டவர்கள் என வசைபாடுகிறார்கள். ஏற்கனவே இருக்கும் சினிமாவுக்குள் மட்டுமே எழுத்தாளன் நுழையமுடியும். அதில்மட்டுமே அவன் தன் இடத்தை மெல்ல மெல்ல உருவாக்கிக் கொள்ள முடியும். அதை நன்கறிந்திருந்தும் கூட எழுத்தாளன் பங்களிக்கும் சினிமாவுக்கான முழுப்பொறுப்பும் அவனே என்றெல்லாம் எழுதி, வசைபாடி அவனை சிறுமை செய்கிறார்கள்.

சினிமாவுக்குள் நுழையும் எழுத்தாளன் நல்ல நோக்கம் மட்டுமே கொண்டிருக்க முடியும். அதற்காக போராட முடியும். அவனை மீறிய பல நிகழ்வதை அவன் தடுக்க முடியாது. ஏனென்றால் சினிமா கூட்டுக்கலை. இவர்கள் சினிமாவுக்குள் எழுத்தாளன் அடையும் சிறிய தோல்விகளைக்கூட மிகைப்படுத்தி அவனை அவமதிக்கத் துடிக்கிறார்கள்.

என்னை எடுத்துக்கொள்ளுங்கள், நான் தமிழ் சினிமாவில் இன்றுவரை தரமான படங்களில் மட்டுமே பணியாற்றியிருக்கிறேன். கஸ்தூரிமான், நான்கடவுள், அங்காடித்தெரு, நீர்ப்பறவை ,கடல் என நான் பணியாற்றிய படங்கள் எல்லாமே விருதுகள் பெற்றவை. கடல் தவிர பிற படங்கள் வணிக வெற்றிகளும் கூட. ஆனால் தமிழ்ச்சினிமாவில் நான் ‘வீழ்ச்சி’ அடைந்திருப்பதாகச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

இப்படிச் சொல்பவர்கள் யார்? சினிமாவை ஒருபடி கீழானதாக, வணிகக்கலையாக காணும் வெங்கட்சாமிநாதன் போன்ற தூய்மைவாதிகள் என்றால் அதைப்புரிந்து கொள்ள முடிகிறது. எந்தச்சமூகத்திலும் தூய்மைவாதிகளுக்கு ஓர் இடம் உண்டு. இவர்கள் அப்படிக் கிடையாது. இவர்கள் எல்லாருமே சினிமா சம்பந்தமான சபலங்கள் கொண்டவர்கள். சினிமாவுக்குள் நுழைய முட்டிப் பார்த்தவர்கள். கூழைக்கும்பிடு போட்டவர்கள். திறமையின்மையால் வெளியே தள்ளப்பட்டவர்களும் உள்ளே நுழைய முடியாதவர்களும்தான் இவர்களில் அதிகம்

உதாரணம் ஞாநி. கடந்த பத்து வருடங்களாக எழுத்தாளர்களுக்கும், சினிமாக்காரர்களுக்குமாக உருவாகிவரும் நல்லுறவைச் சிதைக்க எல்லாவகையிலும் அவர் முயன்றுவருவதைக் காணலாம். சினிமாக்களைப்பற்றி அவர் எழுதுவதே அவற்றில் உள்ள எழுத்தாளர்களை வசை பாடுவதற்காகத்தான். எழுத்தாளர்கள் சினிமாவுக்குள் செல்வதை சினிமாக்காரர்கள் அஞ்சும்படிச் செய்வதே அவரது இலக்கு.

அவரது சொந்த நோக்கங்கள் மிகக் கீழ்த்தரமானவை. தொலைக்காட்சியில் நாலாந்தரத் தொடர்களை எடுத்து காசு பார்த்த வணிகக் கேளிக்கையாளர் ஞாநி. ஆனால் இதற்காக அவர் நல்ல சினிமாவின் காதலர் என்று ஒரு வேடத்தை அணிந்து கொள்கிறார். சினிமாவில் நடிப்பதற்காக ஏங்கி அலைந்த அசட்டு நடிகர் அவர். அந்த ஏமாற்றங்களைத் துப்ப சட்டென்று தன்னை எழுத்தாளனாகக் காட்டிக்கொள்கிறார்.

இந்தப் புழுக்களுக்கு சினிமா என்பது கலை அல்ல. இவர்கள் எவருக்கும் சினிமாவை ஒரு கலை என அணுகும் ரசனை இல்லை. ஏன் எந்தக் கலையையும் இவர்களால் ரசிக்க முடியாது. இவர்கள் சினிமாவைக் கவனிப்பது அதிலுள்ள பணம் புகழ் இரண்டினாலும்தான். சினிமாவுக்குள் நுழையும் எழுத்தாளன் பணமும் புகழும் பெறுகிறான் என்ற பொறாமை மட்டுமே இவர்களை இயக்குகிறது.

கலை என்பது ஒற்றைப் பிராந்தியம். சினிமா, ஓவியம் ,இசை ,எழுத்து எல்லாமே ஒன்றுடன் ஒன்று கலக்கும் ஒருவெளி தான் உண்மையான கலையை உருவாக்கும். அதற்கான சாத்தியங்கள் தமிழ்ச்சூழலில் இன்று மிகமிகக் குறைவு. சிற்றிதழ்களுக்குள் புழங்கி வந்த இலக்கியம் பொது வாசிப்புக்கு வந்தது தொண்ணூறுகளில். அதன்பின்னரே சினிமாக் கலைஞர்களில் ஒருசாரார் இலக்கியம் வாசிக்க ஆரம்பித்தனர். இலக்கியவாதிகள் மீது அவர்கள் கொண்ட மதிப்பு ஒரு மெல்லிய உரையாடலுக்கு வழி திறந்திருக்கையில் இந்தப்புழுக்களின் சிறுமை அந்தச் சாத்தியத்தை அடைக்கிறது. என் எதிர்வினை அதற்கு எதிராக மட்டுமே.

இவர்களின் பாவனைகளைப் பாருங்கள். தினமும் எழுத்தாளர்களைச் சிறுமை செய்து எழுதிக் குவிப்பவர்கள் சினிமாவில் எழுத்தாளர்கள் மதிக்கப்படுவதில்லை என்று கவலைப் படுகிறார்கள். எழுத்தாளர்களில் எவரேனும் சற்று புகழ் பெற்றால் அவன் மேல் பாய்ந்து பிராண்டுபவர்கள் சினிமாப் போஸ்டர்களில் இலக்கியவாதிகளுக்கு உரிய இடமில்லை என்று அழுகிறார்கள். வாழ்நாளில் ஒரு நல்ல இலக்கியப் படைப்பைப் பற்றி ஒரு நல்ல வரி எழுதாதவர்கள் சினிமாவில் எழுத்தாளர்கள் கலைச்சாதனை புரியவில்லையே என ஏங்குகிறார்கள்.

நான் மலையாளச் சினிமாவில் நுழைந்தபோது ஓர் எழுத்தாளனாக என் இடம் தெளிவாக அமைந்திருப்பதைக் கண்டேன். அது எம்.டி.வாசுதேவன்நாயர் உருவாக்கியளித்த இடம். ‘யானைபோனவழி அது.நாம் நெடுஞ்சாலையில் செல்வதுபோலச் செல்லலாம்’ என்றார் ஒரு திரைக்கதையாசிரியர்

மலையாளத்தில் பெரும்பாலும் தயாரிப்பாளர்கள் என்னைமுதலில் அணுகுகிறார்கள். என்னிடம் கதை வேண்டுமென கேட்கிறார்கள். எவ்வகையான கதை என்று சொல்லிக் கேட்பவர்களும் உண்டு. முழுமையாகவே கதையைக் கேட்டு முடிவு செய்தபின் முன்பணம் கொடுத்து அக்கதையை தனக்கு உறுதி செய்கிறார்கள். அதன்பின் நான் அவர்கள் எனக்கு அமைத்து தரும் ஒரு வசதியான இடத்தில் அமர்ந்து திரைக்கதையின் முழுமையான வடிவை எழுதுகிறேன். காட்சிகளாக, அனைத்து விவரங்களுடன்

அதன்பின் அதற்கான இயக்குநரை தயாரிப்பாளர் முடிவெடுக்கிறார். அபூர்வமாக தயாரிப்பாளருடன், இயக்குநரும் வருவதுண்டு. இருவரும் என்னுடன் விவாதித்து நடிகர்களை முடிவுசெய்கிறார்கள். அதன் பின்னர்தான் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள். அவற்றை முடிவுசெய்வதிலும் எழுத்தாளன் பங்கெடுக்க வேண்டும். கலை, இசை,ஒளிப்பதிவு உட்பட அனைத்துத் தளங்களிலும் தன் கற்பனையை எழுதி அளிக்க வேண்டும்

அதாவது மலையாளச் சினிமாவின் தொடக்கம் எழுத்தாளன்.அதன் உருவாக்கத்தில் அவன் இடம் இரண்டாவது. இயக்குநருக்குக் கீழே இடம்பெறும் பெயர் அவனுடையது. தமிழில் இன்னமும் அந்த வகையான திரைப்பட உருவாக்கமுறை உருவாகி வரவில்லை. இங்கே பழங்காலம் முதல் இருவகையில்தான் எழுத்தாளர்கள் பங்களிப்பாற்றினர். ஸ்டுடியோக்களில் அவர்கள் கதை இலாகாக்களில் பணியாற்றினார்கள். நடிகர்களிடம் தனிப்பட்ட எழுத்தாளர்களாக பணியாற்றினர். வேறுவகை பங்களிப்பு இங்கே இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.

ஆனால் இந்நிலைமை மாறக்கூடும். எழுத்தாளர்களும் சினிமாக் கலைஞர்களும் கொள்ளும் உரையாடல் அதற்கு வழி வகுக்கக்கூடும். எஸ்.ராமகிருஷ்ணனோ, நானோ, பாஸ்கர் சக்தியோ, இரா.முருகனோ, நாஞ்சில்நாடனோ அதில் போதிய வெற்றி பெறமுடியாமல் போகலாம். ஆனால் இந்த தொடக்கம் இன்னும் ஆற்றல் வாய்ந்தவர்களை உள்ளே கொண்டுவர வழிவகுக்கலாம்.

அந்த மாற்றம் நிகழ்ந்து விடக்கூடாதென நினைக்கிறார்கள் புழுக்கள். ஆரம்பத்திலேயே கசப்புகளை உருவாக்க முயல்கிறார்கள். அந்தச் சிறுமையை தெளிவாகவே அடையாளம் காட்டவேண்டியிருக்கிறது. ஏனென்றால் இது ஒரு வரலாற்றுத்தருணம்.

ஜெ

முந்தைய கட்டுரைவிவாதங்கள்-கடிதம்
அடுத்த கட்டுரைகதிர்காமம்- ஒரு பாடல்