காடு-கடிதங்கள்

அன்புள்ள சார்,
காடு படித்ததும் இந்த கடிதம்.
நாவல் படிப்பதற்கு முன்னால் நான் எதிர்பார்த்த அனைத்தும் இதில் உண்டு.
அப்படி என்ன எதிர்பார்த்தேன்?
என் வாசிப்புக்கு சவால் விடும்… எழுத்து. நான் பார்க்காத.. பார்க்க முடியாத வாழ்க்கை சூழலில் நானும் மனதளவில் வாழ தக்க ஒரு பேரனுபவம்.

உண்மையை சொன்னால் உங்களின் எல்லாப் புனைவுகளும் எனக்கு வாசிக்க சவால்தான். எதையும் சுலபமாக என்னால் தாண்டிப் போக முடியவில்லை.
அப்படித் தாண்டிப் போனால் என் ஆர்வம் குறைந்து விடுமோ என்னவோ!

பச்சைத் தண்ணியில் குளித்தாலே ‘ஜல்பு’ பிடித்துவிடும் என்று பயப்படும் என்னைப் போன்றவர்கள் எங்கே.. காட்டுக்குப் போவது? ஆனால், இந்த நாவலுடன் என்னால் செல்ல முடிந்தது. காட்டு இரவின் நீல நிறத்தின் அத்தனை… வர்ண வேறுபாடுகளையும் காண நேர்ந்தது.

காடு, பறவைகள் , வானம் எல்லாமே சேர்ந்து ‘நீலி’ என்று பெயர் சொல்லும் அந்த காட்சி… அற்புதம்.
இந்த வர்ணனை எல்லாம்.. முடிந்து கடைசியில்
பேச்சி மலையும் கூட சற்று குனிந்து அதே பேரை சொன்னது…
என்பது போல முடித்து இருப்பீர்கள்!

நான் படித்ததிலேயே அற்புதமான காட்சியது. அதையே மீண்டும்.. மீண்டும் படித்துப் பரவசப்பட்டேன்.

காடு காமத்தின் கதையானாலும்….
காமத்தின் அணைத்து முகங்களும்.. அவைகளுக்கே உகந்த தொனி உடன் கட்டமைக்க பட்டாலும்… என்னை அதிகம் பாதித்தவை இதில் காணும் தோல்விகள் தான்.

அடுக்கடுக்காக கிரிதரனின் வீழ்ச்சிகள்.
எவ்வளவு கனவுகள், கற்பனைகள், ஆவேசங்கள்.. ஏன் அப்படி பெரும் வீழ்ச்சியில் முடியவேண்டும்?

அவன் தோல்வியைப் பற்றி ஒரு கடிதத்துக்கு நீங்கள் எழுதிய ஒரு பதிலைப் பார்த்தேன். அது என்னை ஆற்றுப்படுத்தவில்லை.

உங்களின் விஷ்ணுபுரம் நாவலில் வரும் கதைமாந்தர்களின் கையறு நிலை போன்றதாக நான் இதை நினைக்கவில்லை.

அதில் உங்கள் கதை மாந்தர்கள்… நான் புரிந்து கொண்ட வரையில்… தாங்கள் ‘உண்மை’ என நம்பியவற்றுக்காக.. தேடலுக்காக உயிர் துறந்து இருப்பார்கள்… அஜிதனைத் தவிர..

கிரிதரன் அப்படி இல்லை…! எதற்கென்றே தெரியாமல்… வீழ்ச்சி அடைந்து கொண்டு இருப்பான்.

மாமாவின் பெண்ணை.. கல்யாணம் பண்ணிகொள்ளாமல் இருக்கும் வாய்ப்புகள் இருந்தாலும்… தாய் சொல்லைத் தட்டமாட்டன்!

காமம்தான் அவன் வீழ்ச்சிக்குக் காரணமா? அதுவே என்றால் இஞ்சினியர் மனைவிக்கு அடி பணியும் அவன்… மாமி மீது மோகம் இருந்தும் தவறு செய்ய மாட்டான்.

நீலியுடன் தூய்மையான காதலை ரசிப்பான்.

வாழ்க்கையின் பாதாளத்துக்கு வீழ்ந்து மெல்ல எழுகையில்… தனது வாசிப்பு, ரசனை எல்லாவற்றையும் துறந்து இருப்பான். லவ்கீகனாக மாறி இருப்பான்.
இதுதான் அவனின் உண்மையான தோல்வி என்று நினைக்கிறேன்.
அதுதான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இந்த முரண்பாடுகள்தான் வாழ்க்கையோ?

அவன் அய்யரிடம்.. தன் தோல்விகளுக்குக் காரணம் என்னவாக இருக்கலாம் என்று கேட்டதற்கு அவர் ‘அகங்காரம் தான். எல்லோரும் உன்னை பேணணும் என்று எதிர்பார்க்கிறே!’ என்று சொல்வார்.
அந்த வாக்கியத்தைப் படித்த பின்னும் எனக்கு கிரிதரனின் தோல்வி விளங்கவில்லை.

கிரிதரனின் பற்றி உங்கள் பதிலை எதிர்பார்த்து இதை எழுதவில்லை. என்னுடைய ஆற்றாமையைப் பகிர்ந்துகொள்ள நினைத்தேன்.
இந்த ஆற்றாமை பின்னால் பயம் கூட. நம் வாழ்க்கையும் அப்படியே ஆகிவிடுமோ என்று.

நாவலின் மரணங்களில் என்னைப் பெரிதாக பாதித்தது… கீரக்காதனின் முடிவுதான்.

காட்டுக்கு இளவரசனாக சுற்றி வந்த யானை..
சுழற்றி அடிக்கும் ஆற்றுக்குப் பின்னால்.. பரிதாபமாக நின்று கூப்பிடுவது நெஞ்சை என்னமோ செய்தது.
சண்முகம் பிள்ளை நாடார்… வீட்டில் அதன் தலை தொங்க விடப்பட்ட காட்சி கண்ணீரை வரவழைத்தது.

ஏன் நீலியின் மரணம் கூட என்னை அவ்வளவாக பாதிக்கவில்லை. தேவாங்கின் முடிவையும் சாதரணமாகத்தான் கடந்து சென்றேன்.

கதை மாந்தர்களின் மொழி என்னை மிகவும் கவர்ந்தது. நாவலின் ஆரம்பத்தில் எனக்கு மிகவும் அன்னியமாகப்பட்டது. உண்மையில் எனக்கு நாவலில் பல சொற்றொடர்கள், வாக்கியங்கள் புரியவில்லை. இருந்தும்… அந்த மொழியை சுவைக்க முடிந்தது.

குட்டப்பனின் மொழி.. நீங்களே வடிவமைத்த ஒன்று என்று என்னால் நம்பவே முடியவில்லை. அவ்வளவு சகஜமாக இருந்தது. பிரமிப்பாக இருக்கிறது.

அன்புடன்,
ராஜு

அன்புள்ள ராஜூ

ஒரு நாவலை வாசித்தபின் உடனடியாகப் பதிவுசெய்துகொள்வது ஒரு வழி என்றால் கொஞ்சம் கழித்து நினைவிலிருந்து மீட்டுப் பதிவுசெய்வது இன்னொரு வழி.நான் இரண்டையுமே செய்பவன். வெவ்வேறு வகையில் எனக்கு அவை உதவியிருக்கின்றன. முதல் குறிப்பில் நம்மைக் கவரும் பல விஷயங்கள் இரண்டாவது குறிப்பில் உருமாறியிருப்பதைக் காணலாம்

கிரிதரனின் தோல்விகளுக்கு என்னிடமும் பதிலோ விளக்கமோ இல்லை. வாழ்க்கை அப்படித்தான் என்று மட்டும் சொல்லமுடியும். காதல் என்பது சில கணங்களே நீடிக்கும் பொன்னிளவெயில் என்று மட்டும் சொல்லமுடியும்.

காடு நாவலின் மையமே அதுதானோ. காடு நாவல் காட்டும் காதலின் மொத்தக் கற்பனாவாதப் பேரெழிலும் அந்தக் குறிஞ்சி மலர் காணும் காட்சியில் முடிந்துவிடுகிறது. குறிஞ்சியின் முக்கியத்துவம் அதன் அபூர்வத்தன்மையில் மட்டுமே உள்ளது என்கிறது நாவல்.

ஜெ

முந்தைய கட்டுரைமுச்சீட்டு ஆட்டக்காரனின் கை
அடுத்த கட்டுரைதேவர்கள் அணிவகுக்கும் தோரணவாயில்