புழுக்கள் கடிதங்கள்

அன்புள்ள ஜெ.

என் கடிதம் தங்கள் ப்ளாகில் வந்ததில் எனக்கு மிக சந்தோஷம் , பெருமை. இசைஞானிக்கே பிலிம் காட்டி இருக்கிறார்கள் என்று தெரிந்த பொழுது காமெடியாகவும் இருந்தது . செம கடுப்பாகவும் இருந்தது.இப்படியே இந்த அசடுகளிடம் மாரடித்து கொண்டிருப்பது கலைஞர்களுக்கு தேவை இல்லாத நேரம் விரயம் , சக்தி விரயம் இல்லையா ? உங்கள் “புழுக்களின் ரீங்காரம் ” படித்தபோதும் இதுதான் தோன்றியது. ஆயாசமாகவும் இருந்தது ஜெ. இன்னும் இந்த டாபிக் எவ்ளோ நாள் நீளுமோ என்று.

விகடன் மேடை பதில்கள் வந்தபோதே இந்த கேள்வி படித்தேன். நன்றாக நினைவிருக்கிறது . பாலா நீங்கள் மற்றும் எஸ்.ரா குறித்து கூறிய பதிலில் அவர் உங்கள் இருவர் மீதும் கொண்டுள்ள ஆழமான நட்பு மற்றும் உரிமைதான் எனக்கு தெரிந்தது. அதை என்ன என்னவோவாக திரித்து கூறுவது அதிர்ச்சியாகவும், அருவருப்பாகவும் உள்ளது . நீங்கள் இவர்களுக்கு எதற்கு இவ்வளவு பெரிய விளக்கமெல்லாம் தருகிறீர்கள் ஜெ ? “புழுக்களின் ரீங்காரம்” கட்டுரையை நீங்கள் மிகுந்த கோபத்தில் மனவருத்தத்தில் எழுதி இருந்தது போல் பட்டது . செம எரிச்சலாக இருக்கிறது. i pray the ALMIGHTY to give you peace and calmness sir. plss plsss dont stress yourself for all these stupidities sir.

நன்றி
ஜெயா

அன்புள்ள ஜெயா,

அப்படி கடுமையான வருத்தமோ கசப்போ இல்லை. என் நண்பர்கள் என்னை அறிவார்கள். என்னை நேரில் அறிந்திருந்தால் அம்மாதிரியான உணர்ச்சி வேகங்களுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என உங்களுக்கும் தெரிந்திருக்கும். நான் எப்போதுமே என் விளையாட்டுத்தன்மையுடன் மட்டுமே இருப்பவன்

இக்கட்டுரையை அதன் தேவை கருதி எழுதினேன்.மிகச் சமநிலையுடன். அந்த கூரிய மொழி அப்படி உருவாவதே. மிகக் கறாராக ஒரு கத்தியின் கூர்மையுடன் அவ்வரிகளை அமைத்தேன். காரணம் இதை எளிதாக செய்துவிட்டுச் செல்ல இந்த புழுக்களை அனுமதிக்கக் கூடாது என்பதுதான். புழுக்களுக்கு பெரிய தண்டனையே வெட்டவெளிதான். தாங்கள் வெறும் புழுக்கள் என அப்போதுதான் அவை உணர்கின்றன.

ஜெ

அன்புள்ள ஜெ

புழுக்கள் வாசித்தேன்

இந்த வகையான கடுமையான விவாதங்களால் என்ன லாபம்? தவிர்க்கமுடியாதா?

ராஜ்

அன்புள்ள ராஜ்

யோசித்துப்பாருங்கள். நோயுற்று நலிந்த ஓர் எழுத்தாளரை எழுத்தாளர்களின் பெயர் சொல்லி கோடிக்கணக்கில் அன்னியநிதி பெறும் ஒருவர் நிதி ரகசியங்கள் கசியக்கூடாதென்று தன் நிறுவனத்திலிருந்து ஈவிரக்கவில்லாமல் வெளியேற்றுகிறார். நடுத்தெருவில் பட்டினியுடன் உழன்ற அந்த எழுத்தாளரை ஒரு சினிமாக்கலைஞர் வெளித்தெரியாமல் மதிப்புடன் உதவி செய்து வாழவைக்கிறார். அந்த அன்னியநிதி ஆசாமி அவ்வாறு உதவிய சினிமாக் கலைஞர் எழுத்தாளர்களை அவமதிப்பவர் என்று நீளமாக எழுதித் தள்ளுகிறார். கீழ்மைக்கும் ஓர் எல்லை இல்லையா என்ன?

விவாதங்களைப்பற்றி நான் எழுதிய கட்டுரையை மீள்பதிவு செய்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் கடிதம்
அடுத்த கட்டுரைவிவாதங்கள்-கடிதம்