எழுத்துப்பிழைகள்:கடிதங்கள்

 
அன்புள்ள ஜெயமோகன்,
 
சில நாட்கள் ‘நேரம்’ மெதுவாக நகர்வது போன்ற ஒரு உணர்ச்சி வரும் போது இரண்டு அல்லது மூன்று மணி நேரம் உங்கள் வலையில் மூழ்குவது உண்டு. அது போன்ற ஒரு வேளையில் படித்துதான் தாங்கள் ரத்தனுக்கு எழுதிய பதில். [ஏப்ரல் மாதம் 19 ம் தேதி]
 
இது  தாங்கள் கைப்பட தட்டியதா? அல்லது உதவியாளர் உபயமா?  எழுத்துபிழை கொஞ்சம் தூக்கலாகவே தெரிகிறதே! குறிப்பாக எல்லோரும்  தமிழில் எழுத ஆர்வம் வேண்டும் என்கிற நல்லெண்ணத்திற்கு நேர் எதிராக அமைந்தது வருந்துகிற  விஷயமாகும். பள்ளிக்காலத்திலிருந்தே ஆங்கில மொழியில் பழகியதின் விளைவு தமிழில் தட்டிஎழுத [தாய் மொழி] தாளம் போட வேண்டி இருக்கு! விடா முயற்சியின் பயனே இக்கடிதம். சுலபமாக எழுத [without resorting to Unicode] வழி இருந்தால் சொல்லுங்கள்.  நன்றி .
 
http://jeyamohan.in/?p=2336
இப்படிக்கு,
சங்கரன்.

அன்புள்ள சங்கரன்

நீங்கள் சொல்வது உண்மை. பலசமயம் எழுத்துப்பிழைகள் மிக அதிகமாக இருக்கின்றன. அதற்கான காரணங்களில் முதலாவது அத்தகைய எழுத்துக்களை நான் ஏதாவது இணைய நிலையத்தில் இருந்ந்து எழுதியிருப்பேன் என்பதுதான். தமிழ்நாட்டில் பெரும்பாலான இணைய நிலையங்களில் தட்டச்சுப்பலகை எழுத்துக்கள் மிகவும் சிதைந்திருக்கும். சில எழுத்துக்கள் பதியாது. குறிப்பாக ஷிஃப்ட் பெரும்பாலும் வேலைசெய்யாது. சில சமயம் எழுதுக்கள் தேய்ந்துபோய் அவற்றை குத்து மதிப்பாக பார்த்து அடிக்க வேண்டியிருக்கும். ஆகவே பிழைகள் நிகழும். அந்த இடத்தில் பிழைகளை திருத்தி அனுப்பவும் பொறுமை இருக்காது. நான் ஒருநாளில் பெரும்பாலும் ஐம்பது மின்னஞ்சல்கள் வரை பதில் அளிக்கிறேன்.
ன்
மேலும் ஒரு காரணம் நான் வழக்கமாக எழுதும் செயலி பெரும்பாலும் இணைய நிலையங்களில் கிடைப்பதில்லை. கிடைத்த ஏதாவது ஒன்றில் அடிக்கும்போதும் பிழைகள் நிறைகின்றனா

ஆகவே பிழைகள் அதிகமான கடிதங்கள் அவ்வப்போது நிகழ்ந்துவிடுகின்றன. அதை நியாயப்படுத்தவில்லை. சரிசெய்ய முயல்கிறேன்

எனக்கு உதவியாலர் எவரும் இல்லை. நானே ஒரு அலுவலக உதவியாலர்தான்

ஜெ

உயர்திரு ஜெ மோ சார்,
இதை நான் எழுதலாமா வேண்டாமா என்று ரொம்பநாட்களாக யோசனை செய்து விட்டு எழுதுகிறேன். அது, தங்களின் வலைதளத்தில் எழுதப்படும் கட்டுரைகளில் எழுத்துப்பிழைகள் அதிகம் இருப்பதாக தோன்றுகிறது. இதை சுட்டிக்காட்டிய என்னை தயவு செய்து தவறாக நினைக்கவேண்டாம். ஏனென்றால் நீங்கள் தங்களின் வலைத்தளத்தை இலவசமாகவே  படிக்க  அனுமதித்துள்ளீர்கள். ஒரு  சொலவடை  கூட  உண்டு  “” புண்ணியத்துக்கு  உழுத  மாட்டை  பல்லை பிடித்து பார்க்கிறாய்”” என்று. இதை சுட்டிக்காட்டிய என்னை தயவு செய்து தவறாக நினைத்து விடாதீர்கள் please,please.
இதில் வேடிக்கை என்ன வென்றால் நான் உங்களுக்கு அனுப்பும் மெயிலில்  கூட எழுத்துப்பிழை உண்டு.
என்றும் உங்கள்
மாணவன்
பெருமாள்
கரூர்

 

அன்புள்ள பெருமாள்
உண்மைதான். பல சமயம் இதற்காக நானே வருந்துவதும் உண்டு. ஆனால் பல்வேறு இடங்களில் இருந்துகொண்டு பல்வேரு வகை கணிப்பொறிகளில் பல்வேரு நேரங்களில் எழுதுகிறேன். ஆகவே பிழைகள் அதிகம். பிழைகளை சரிசெய்ய அவகாசமும் அதிகம் இல்லை

பார்ப்போம்
ஜெ

முந்தைய கட்டுரைமறுபாதி
அடுத்த கட்டுரைஜெயமோகன் நிகழ்ச்சிகள்