விஷ்ணுபுரம் கடிதம்

அன்புள்ள ஜெமோ ,
இன்று தான் விஷ்ணுபுரம் முடித்தேன் , பல நாள் முயன்று , கொஞ்சம் கொஞ்சமாய் “நாக ஹஸ்தி” யை போல், இதனை செரிக்க பழகிக் கொள்கிறேன் .

கவித்துவம், தர்க்கம், இலக்கியம்,உன்மத்தம் எல்லாம் இழைந்த நிழல் அடுக்கு சொற்ப கணங்களில் எல்லாம் நிலைகுலைந்து இருள் அடர்ந்த “சூனியத்தில் ” தள்ளி விடுகிறது விஷ்ணுபுரம் .அனைத்து கதை மாந்தர்களும், வாசகன் உள்பட ஒரு பிரளயத்தில் சிக்கி கொள்கிறனர் .கவித்துவம், தர்க்கம், இலக்கியம்,உன்மத்தம் இதில் ஒன்றையேனும் உச்சதில் தொட்ட ஒரு பாத்திரம், சூனியத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு , சூனியத்தில் நில்லாமல், அதன் நேர் எதிர் திசையில் மற்றும் ஒரு தரிசனத்திற்குள் தன்னை புகுத்தி கொள்கிறது (புகுத்தி கொள்ள விழைகிறது).

சுடுகாட்டு சித்தனையும் , குழந்தையும் கண்டு மனம் களிக்கிறது .ஏனோ மனம் ரமணரை ஞாபக படுத்துகிறது.
ஆனால் சூனியம் கூட தனக்கான வாரிசாகக் குழந்தையை விட்டுச்செல்கிறது .

எத்தனை நியதிகள், தர்க்கங்கள்,வாழ்க்கைகள், அவரவர்க்கான நியாய தர்மங்கள் .
எங்கள் ஊர் காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப்பெருமாள் , வரத ஹஸ்ததில் “மாசுச” என்று பொறிக்க பட்டிருக்கும். அதன் அர்த்தம் என்ன என்று என் தந்தையைக் கேட்டதற்கு “பெரியவனான உடன், நீயே உணர்ந்து கொள்வாய் ” என்று சொன்னார்.கீதையில் வரும் “மோக்ஷ சயாமி மாசுச”(“எல்லா தர்ம நியாயங்களையும் விட்டு என்னைச் சரணடைக “) , என்பதே விஷ்ணுபுரத்தின் திறவு கோல் . வரதனின் கையில் உள்ளதும் அதுவே . இன்னும் உணர்ந்து/திறந்து கொள்ள வேண்டும்

நன்றி ,
சிவகுமார்

அன்புள்ள சிவக்குமார்,

இன்று விஷ்ணுபுரம் பற்றி நினைக்கையில் ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது – அலகில் கொள்ளுவதைத்தான் கொத்த வேண்டும்.

விஷ்ணுபுரத்தின் ஞானதாகிகள் மனித மனதால் கொள்ள முடியாதவற்றை தேடினார்கள். சிக்கிக் கொண்ட பின் அலகுக்கு தக்க அதை வெட்டிக்கொண்டார்கள் என்று தோன்றுகிறது

எனக்கு வயதானதனால் வந்த ஞானமாக இருக்கலாம்

ஜெ

முந்தைய கட்டுரைஇரண்டு மதிப்புரைகள்
அடுத்த கட்டுரைபுழுக்கள் கடிதங்கள்