புழுக்களின் ரீங்காரம்

அன்புள்ள ஜெ

திரையுலகில் நுழையும் முயற்சியில் இருப்பவன் நான். உங்களிடமும் உதவி கேட்டிருந்தேன். ஒரு சிறிய விஷயத்துக்காக இக்கடிதத்தை அனுப்புகிறேன். சமீபத்தில் இணையத்தில் வந்த சில எதிர்வினைகளில் நீங்கள் சினிமாவில் சேர்ந்து அங்கே அவமதிப்புகளை தாங்கிக்கொள்வதாகவும், காக்கா பிடிப்பதாகவும் ஃபேஸ் புக்கில் நிறையபேர் எழுதினார்கள். பாலா உங்களையும் எஸ்.ராமகிருஷ்ணனையும் பற்றி எழுதியவற்றை மேற்கோள் காட்டினார்கள். உண்மையில் சினிமாவில் அந்த நிலை இருக்கிறதா என்ன?

ராம்

அன்புள்ள ராம்,

உண்மையில் அந்நிலை இல்லை என்பது கொஞ்சம் இணையத்தை வாசிப்பவர்களுக்கே தெரியும். வசந்தபாலன் என்னைப்பற்றி இணையத்தில் எழுதியவை அவர்களுக்கே வாசிக்கக் கிடைக்கும். அவற்றில் உள்ள மதிப்பும் பிரியமும் மிகச்சிறந்த வாசகர்களுக்கும் , நண்பர்களுக்கும் மட்டுமே உரியவை.

நான் சினிமாவில் என்னுடைய நெருக்கமான நண்பர்களுடன் மட்டுமே இதுவரை பணியாற்றியிருக்கிறேன். வசந்தபாலன் நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்னரே என் நண்பர். அவரது வாழ்க்கையின் சுகதுக்கங்களில் பங்குள்ளவன் நான். லோகியும் அப்படித்தான். என் நெருக்கமான நண்பர் சுகா வழியாக அறிமுகமான பாலாவும் என் நண்பர். மணி ரத்னமும் என் நெருக்கமான நண்பரே. அதை அவர் எங்கள் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்ததில் இருந்தே அறியலாம். எங்கள் நிகழ்ச்சிகளில் சாதாரண பங்கேற்பாளனாக வந்து அமரக்கூடியவர் அவர்.

நான் சொன்னேன் என்பதற்காக பொருளியல் இக்கட்டில் இருந்த எழுத்தாளருக்காக பெருந்தொகை கொடுத்து அவர் வாழ்க்கையை அமைத்துக்கொடுத்தார் மணி. அந்த எழுத்தாளர் இன்று இணையத்தில் கூச்சலிடும் ஒருவரின் நிறுவனத்தில் பணியாற்றினார். எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் கொடுப்பதாக கணக்கெழுதி லட்சக்கணக்கில் பணம் பெற்று தின்று உழலும் அந்த ஆசாமி உடல்நலம் குன்றிய நிலையில் இருந்த எழுத்தாளரை தன் கணக்குவழக்குகள் வெளியேறிவிடும் என்பதற்காகவே ஈவிரக்கமில்லாமல் வெளியேற்றினார்.

அதை அந்த எழுத்தாளரே சொல்லக்கேட்டு சமீபத்தில் நான் கசந்து உறைந்து போனேன். அவர்தான் இன்று பேராசிரியர் என்ற தோரணையில் சினிமாக்காரர்களை வசைபாட வந்து நிற்கிறார். இவர்களின் கூச்சல்கள்தான் இங்கே ஓங்கி ஒலிக்கின்றன.

என் திரை நண்பர்களுடனான என் உறவு எப்போதும் நட்பின் மதிப்பும், அன்பும் கொண்டது. என் மீதான மதிப்பினால்தான் என் நண்பர்களுக்குக் கூட அவர்களிடம் மதிப்பு மிக்க உறவு உள்ளது. பாலாவோ, வசந்தபாலனோ, மணியோ எந்த ஒரு எழுத்தாளனிடமும் அதே பெருமதிப்புடன் மட்டுமே இருப்பார்கள். அதை நான் கவனித்திருக்கிறேன். அது அவர்கள் சிறந்த வாசகர்கள் என்பதனால். அவர்களுக்கு இலக்கியத்தின் மதிப்பு தெரியும் என்பதனால்.

எனக்கான இடம் அமையவில்லை என நான் உணர்ந்த இரு படங்கள் ரேனிகுண்டா, அரிதாஸ். இரண்டில் இருந்தும் உடனடியாக விலகி விட்டேன். அந்த இயக்குநர்களிடம் மரியாதையாகச் சொல்லிவிட்டுத்தான். முழுக்க எழுதிக்கொடுத்திருந்தேன். பெரும்பாலும் அவைதான் படத்திலும் இருந்தன. ஆனாலும் நான் ஊதியத்தைக்கூட கருத்தில் கொள்ளவில்லை. அசௌகரியமாக வேலை செய்வது என் இயல்பே அல்ல. என் இதுநாள் வரையிலான சினிமா வாழ்க்கையில் எவரும் பணம் பாக்கி வைத்ததில்லை. எவரிடமும் பணத்தைக் கொடுங்கள் என நான் கோரவும் நேரவில்லை.

பாலா எப்போதும் தன்னைப்பற்றியும் பிறரைப்பற்றியும் எள்ளலுடன் பேசுபவர். அவரது அவ்வரிகளில் கூட அவர் தன்னைத்தான் எள்ளி சிரிக்கிறார் என்று தெரியாதவர்கள் பாலா படம் பார்ப்பதைக்கூட விட்டுவிடுவதே சரியாகும். நான் பாலாவுடன் பணியாற்றிய இத்தனை ஆண்டுக்காலத்தில் ஒருமுறைகூட அவர் என்னை தன்னைச் சந்திக்க வரும்படி சொன்னதில்லை. என் நேரத்தைக் கேட்டு நான் [அவர் செலவில்] தங்கியிருக்கும் ஓட்டல் அறைக்கு வந்து மட்டுமே சந்தித்திருக்கிறார். விக்ரமாதித்யன் ஒரு நடிகராக செட்டுக்கு வரும் ஒவ்வொரு முறையும் ‘வாங்க கவிஞரே’ என அவர் எழுந்து வரவேற்பதைக் கண்டிருக்கிறேன்.

தன் வாழ்க்கையை மாற்றியவை நாஞ்சில் நாடனின் கதைகள் என வாழ்க்கை வரலாற்றில் எழுதியவர் பாலா. நாஞ்சில்நாடனை சந்தித்தபோது அவர் காலில் விழுந்து வணங்கியவர். பாலு மகேந்திராவின் பள்ளியில் இருந்து இலக்கியத்தின் மீது பெரும் ஈடுபாட்டுடன் மட்டுமே ஒருவர் வெளிவர முடியும். அது பாலு ஆற்றிய இருபத்தைந்தாண்டுக்கால பணி.

கலைஞர்களுக்குள் இருக்கும் மதிப்பும் மரியாதையும் வேறு உலகைச் சேர்ந்தவை. அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்தும் அலுவலக குமாஸ்தாக்கள் அதிகாரி முன் காலில் விழுவதும் அதுவும் ஒன்றல்ல. உஸ்தாத் படே குலாம் அலிகானை சந்தித்தபோது ஜி.என்.பி காலில் விழுந்து வணங்கியதாக நண்பர் ராம் சர்மா ஒருமுறை சொன்னார். அதை செம்மங்குடியும் பிறரும் ஏற்கவில்லை. ‘எதுக்கு துலுக்கன் காலிலே விழறே?’ என்றார்களாம். ‘அவர் சரஸ்வதி’ என்றாராம் ஜி.என்.பி.

அது ஒரு இந்திய மனநிலை. கற்றுக்கொள்ளச் செய்யும் அனைவரும் குருநாதர்களே என்ற தன்னுணர்வே ஒரு இந்தியக் கலைஞனை உருவாக்குகிறது. எனக்குக் கற்றுத்தந்த எவர் காலையும் தொட்டு வணங்குவதில் எனக்கு தயக்கமில்லை. அதற்குத் தடையாக என் அகந்தை வந்து நின்றுவிடக்கூடாதென்றே நினைப்பேன்.

அதேஅமயம் அதிகாரத்தில் இருப்பவர்களை வணங்குவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. நான் மதிக்கும் பிறர் அதைச் செய்யும்போது கூட மிகக்கடுமையாக எதிர் வினையாற்றியிருக்கிறேன். மு.கருணாநிதியை புகழ்ந்து பேசிய எழுத்தாளர்களை நான் கண்டித்தபோது இங்கே நிகழ்ந்த பரபரப்பு நினைவிருக்கலாம். நான் ஒருமாதம் தலைமறைவாக இருக்க நேர்ந்தது அன்று.

அவதூறு செய்பவர்கள் வேண்டுமென்றே அதைச் செய்கிறார்கள்.ஒருவித ஆற்றாமையுடன் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள் அவர்களுடைய நோக்கம் தங்கள் சொந்த வாழ்க்கையின் அவமதிப்புகளை மறைத்துக் கொள்வதே. அதன் மூலம் என்னை அவர்கள் அவமதிக்கவில்லை. இலக்கிய ஆர்வமும் , வாசிப்பும் கொண்ட திரைப்படக்காரர்களையும்தான் அவமதிக்கிறார்கள்.

எந்தத் துறையானாலும் மதிப்பும் மதிப்புக்குறைவும் ஒருவர் சொந்த நடத்தையால் ஈட்டிக்கொள்வதே. பலவீனங்கள்தான் மதிப்பின்மையை உருவாக்குகின்றன. குடி, பெண்கள் மீதான ஈடுபாடு, புறம் பேச்சு முதலியவை. நான் இன்னும் முழுமையான வணிக சினிமாவின் பக்கம் செல்லவில்லை. ஆனால் வணிக சினிமாவில் ஈடுபட்டிருந்த சுஜாதா அங்கும் அந்தப் பெருமதிப்பை இழந்ததே இல்லை . அதற்குக் காரணம் அவரது நடத்தை. தங்கள் சில்லறைத்தனம் மூலம் மதிப்பை இழந்த பலர் உண்டு. அவர்கள் பிறரையும் அப்படிக் காட்ட முயல்கிறார்கள். அதற்கு சினிமாவே தேவையில்லை. அலுவலகத்திலேயே ஐம்பது ரூபாய் கைமாற்று கேட்டு கைநீட்டுங்கள் ,மரியாதை விட்டு விலகிச் செல்லும்.

நான் ஒரு தருணத்திலும் ஒரு பலவீனத்தையும் அடையாதவன். ஆகவே எங்கும் எப்போதும் தலை நிமிர்ந்தே நின்றிருக்கிறேன். குமாஸ்தாவாக பணியாற்றிய அலுவலகச் சூழலில் கூட. ஒரு சிறு வேண்டுகோள் விடுக்காத காரணத்தால் என்னுடைய ஓய்வூதியம் இரண்டுவருடம் தாமதமாக கிடைத்தது. ஆனால் தலை நிமிர்ந்திருக்க வேண்டுமென்பதே என் இலக்காக இருந்தது. பலவீனக்கள் கொண்டவர்களுக்கு அது சாத்தியமாவதில்லை.

நான் எழுத்தாளனாக புகழ் பெற்ற பின் திரையுலகுக்குள் நுழைந்தவன். அங்கே என்னுடைய ‘தூய்மை வாதம்’ எனக்கு மதிப்பை பெற்றுத்தந்தது. கூடவே விலகலையும் என்பதையும் மறைப்பதில்லை. என்னைக் கண்டதும் மதுப்புட்டிகளை எடுத்து மறைப்பார்கள். ஆகவே நான் முன்னரே தெரிவிக்காமல் எவரையும் சந்திக்க முடியாது. மது ஆறாக ஓடும் மலையாள உலகிலும் அப்படித்தான்.

கடைசியாக சினிமா என்பது செய்து காட்டியாக வேண்டிய துறை. இங்கே கூழைக் கும்பிடோ காக்கா பிடிப்பதோ ஒன்றையும் அளிக்காது. உங்களால் என்ன செய்ய முடியும், செய்ததில் எவை வெற்றி என்பது மட்டுமே அடையாளமாக இருக்க முடியும். தகுதிப்படுத்திக் கொண்ட ஒருவனைத் தேடி வாய்ப்புகளும் பணமும் வரும். அவனுக்கு மட்டும்தான் வரும். கூழைக்கும்பிடு போடுபவனுக்கு சாயங்காலத்து மதுவில் ஒரு கோப்பை மட்டுமே கிடைக்கும். சினிமாவுக்கு நான் அறிமுகம் செய்தவர்களிடமும் அதையே சொன்னேன். அவர்களுக்கும் அதுவே சரியான வழியாக அமைந்தது

நீங்கள் அனுப்பிய இணைப்புகளை நான் வாசிக்கவில்லை. அதற்கான தேவையும் இல்லை. அவர்கள் பரிதாபத்துக்குரிய எளிய மனிதர்கள். அவர்கள் இருவகை. கும்பிடுவதும், குழைவதும் வெற்றிக்கு வழி என நினைத்து அவமதிக்கப்,பட்டவர்கள். அலுவலகங்களில் காக்கா பிடித்து அவமதிப்புக்குள்ளாகும் புழுக்கள். திறமையின் வழி என ஒன்றிருப்பதே அவர்களுக்குத் தெரியாது.

ஜெ

முந்தைய கட்டுரைஅரவிந்தன் கன்னையன்
அடுத்த கட்டுரைமொண்ணைத்தனம்- கடிதங்கள்