மத்தகம் ஒரு கடிதம்

  1. வணக்கம்

நேற்று மத்தகம் குறு நாவல் வாசித்தேன்.திரு முரளியின் கடிதத்தையும் வாசித்தேன் .இந்த படைப்பில் ஒரு குரூரத் தன்மை இருப்பதை மறுக்க முடியாது .ஆனால் என்னைப் பொறுத்த வரை அந்தக் குரூரம் இருத்தலின் குரூரம் .உயிரோடு இருப்பதற்காகவும் பிழைபதற்காகவும் நாம் அன்றாடம் செய்யும் சமரசங்களை வெளிப்படுத்துவதாலும் ,அதன் காரணமாக நமக்கே நம் மீது வரும் ஒரு வகையான அருவெறுப்பை உணர்துவதாலும் இந்தக் குரூரத் தன்மை தலை நீட்டுகிறது

இந்தக் குறு நாவலில் ஆதர்ச கதா பாத்திரங்கள் ஏதும் இல்லை .இலக்கியம் கொண்டாடும் புனிதமான அனைத்து அறங்களையும் ,விழுமியங்களையும் இந்தப் படைப்பு தகர்கிறது .நட்பாகட்டும் ,கற்பாகட்டும் ,தாய்-சேய் உறவாகட்டும் ,ஆசான் -மாணான் /சிஷ்யன் உறவாகட்டும் அனைத்தும் உயிர் பயத்தின் முன் தகர்ந்து தளர்ந்து போகிறது .மனைவியர் கணவனின் சிதை ஆறும் முன்னரே வேறு ஒரு ஆடவனை (நேரங்களில் கணவனின் மரணத்திற்குக் காரணமானவனை ) சகித்துக்கொண்டு சரசமாடும் தேர்வினை, தீர்வினை கைக் கொள்கிறார்கள் .யாருடைய இறப்பும், வாசகன் நீங்கலாக, யாரையும் ஒரு அளவிற்கு மீறி பாதிக்கவில்லை .இறந்தவர்களுக்கு என்ன கவலை ? இருப்பவர்களுக்குத்தான் துன்பம் .விழுமியங்களை ,அறங்களை ,கொள்கைகளை ,நம்பிக்கைகளை கைக்கொண்டு மரணிப்பதா ?அல்லது அவற்றைக் கைவிட்டு வாழ்வதா ? என்ற கேள்வி வரும் போதெல்லாம் கதை மாந்தர்கள் வாழ்வதையே தேர்ந்து எடுக்கிறார்கள் .(மார்குவஸின் கர்னல் தனது வாழ்கையின் இறுதி நாட்களில் பொன் மீன்களைப் பட்டறையில் உருவாக்கி வாழ்வதை போல ).

அந்த யானையாவது தன்னை உற்ற தோழனாக உணர்ந்த மஹாராஜாவின் மரணத்திற்குப் பிறகு உண்ணா விரதம் இருந்தோ ,கடலில் குதித்தோ ,மலையிலிருந்து விழுந்தோ தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் .அத்தகைய ஒரு முடிவு மனிதனுக்கும் விலங்கிற்கும் இடையே ஏற்பட்ட பாசப் பிணைப்பைக் கூறும் அமர காவியமாக இந்தப் படைப்பை மாற்றி இருக்கும் .என்ன செய்ய?.சம்சற்க தோஷம் .அந்த யானையும் கதை மாந்தர்களைப் போலவே சமரசம் செய்யத் தயாராக இருக்கிறது .அத்தகைய ஒரு முடிவிற்கு வருவதற்கு அதனை யாரும் துன்புறுத்த வேண்டிய அவசரத்தைக் கூட அது தரவில்லை .மனிதர்களைப் போலவே மிகவும் சாமர்த்தியமாக சிந்தித்து சதுரங்க ஆட்டக்காரனின் திறமையோடு செயல்படுகிறது.மத்தகத்தின் வெற்றியே இந்த நுண்ணிய சித்தரிப்பில் தான் இருக்கிறது .

யானையின் இறப்பு இந்தப் படைப்பை ஒரு வகையான துன்பியல் வட்டத்தில் செலுத்தி இருக்கும் . ஆனால் அது காரணமாக உருவாகும் catharsis முழுமையானதாக இருந்திருக்காது .வாசகன் கதைத் தலைவனைத் தன்னுடன் ஒப்பிட்டு அதன் ,அவன் துன்பத்தை தன் துன்பமாகக் கருதி அதன் காரணமாக உருவான உணர்வுப் பெருக்கே சரியான ஆழ்ந்த உணர்ச்சி தூய்மையை உருவாக்கும் .அத்தகைய ஒரு நிலையை இந்தப் படைப்பு உருவாக்குகிறது அந்த யானையைப் போல சில கொள்கைகளையும் ,விழுமியங்களையும் கைக்கொண்டு அதனைப் பறை சாற்றிப் பின்னர் உயிர் வாழ அவற்றைக் கை விட்டவர்கள் பலர்.அந்தத் துன்பம் தீரா நோயாக ஆத்மாவை அரிக்கும் .இந்தப் படைப்பை நீங்கள் ,வாழ்வின் பொருட்டு ,உயிர் வாழ்தலின் பொருட்டு சமரசங்கள் செய்தவர்களுக்கு சமர்ப்பணம் செய்யலாம் என்று தோன்றுகிறது .
இந்தப் படைப்பை மீண்டும் வாசிக்கும் போது literary Darwinism சார்ந்த கூறுகளைக் கொண்டதாகவும் தோன்றுகிறது .ஒரு விலங்குக் குழுவின் நடத்தைகள் அனைத்தும் கதை மாந்தர்களின் நடத்தையில் பிரதிபலிக்கிறது (ஒரு ஆண் விலங்கு வேறு ஒரு ஆண் விலங்கைத் தாக்கி அழிப்பது ,தோற்கடிக்கப்பட்ட விலங்கின் இணையை ஆட்கொளவது .குட்டிகளைக் கொல்வது /விரட்டுவது ).

இன்னும் ஒரு சந்தேகமும் உள்ளது .ஒரு விமர்சகனாக பதில் தர இயலுமா ?அவசியமில்லாமல் கோட்பாடுகளைப் பிடித்துக் கொண்டு இருப்பதாக எண்ண வேண்டாம் .என்னவோ இப்படித் தோன்றியது .ஐதீக மாலை கதையை மறு படைப்பு செய்திருப்பதால் மத்தகத்தை new historicist கூறுகளை உடையதாகக் கூற இயலுமா ?
முதலில் குறிபிட்டிருப்பது எனது கருத்து .இறுதிப் பத்திகள் வாசிப்பு முறைகள் சார்ந்த வினாக்கள்

பொறுமைக்கு நன்றி

தொடர்ந்து உரையாட விரும்பும்
அனீஷ் க்ருஷ்ணன்,நாகர்கோவில் .

அன்புள்ள அனீஷ்

மத்தகம் ஒரு விஷயத்தை மட்டுமே முன்னிறுத்துகிறது, அவலம். அவலங்கள் எல்லாமே இரு விஷயங்களில் குவிகின்றன. வாழ்க்கையின் மாபெரும் சிறுமை. நீ ஒரு அணுத்துளி என்று சொல்லி விரிந்திருக்கும் காலம், வெளியின் முன் மனம் உணரும் சிறுமை அது. அதையே இன்னொரு கோணத்தில் மனிதன் விதி என்றும் உணர்கிறான். மத்தகம் சொல்வதும் அதையே. வாழ்க்கையின் மகத்தான சிறுமை.

வரலாறு என்பது ஒரு பெரும் புனைவு. அதற்குள் எல்லா கதைகளும் சிறிய புனைவுகள். அவ்வகையில்தான் மத்தகம் அமைந்துள்ளது. ஐதீகமாலா சொல்லும் கேசவனின் கதையே ஒரு புனைவுதான். இது மறுபுனைவு. நவசரித்திரவாதம் என்று சொல்லலாம்தான்

ஜெ

முந்தைய கட்டுரைதிருத்தம்
அடுத்த கட்டுரைராஜ தமிழாய்வு