கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்

நடைமுறையில் உள்ள கல்வி முறை கொஞ்சம் வருத்தமடைய வைக்கிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

பாடத் திட்டத்தை மாற்ற ஒரு பெரிய முயற்சி அல்லது ஒரு புரட்சி தேவை. அது விரைவில் ஏற்படக் கூடியது அல்ல.

ஆனால் நல்ல கல்வியைத் தன் மக்களுக்கு உண்மையிலேயே கொடுக்க நினைக்கும் பெற்றோர் ஒன்று செய்யலாம் என்பது என் அபிப்ராயம்.

என்ன செய்ய முடியும்?

முதலில் பள்ளிக் கல்வி முறையை மட்டும் எதிர் பார்க்காமல் தாங்கள் தங்கள் குழந்தைகளுக்கு உதவ முடியும்.

நாம்தான் அவர்களுக்கு நல்ல இசையையும், ஒவியத்தையும், இலக்கியத்தையும் அறிமுகம் செய்து வைக்க இயலும்.

தொடர்ந்து அவர்களுடன் உரையாடியும், ஊக்குவித்தும் அவர்களுடன் பயணித்தும் மற்றதோர் உலகத்தில் நாட்டம் கொள்ளச் செய்தும் வந்தால் அது அவர்களுக்கான மற்றொரு இலக்கைக் காட்ட முடியும் என்பது என் எண்ணம். அதற்கு பெற்றோர் தான் மெனக்கெட வேண்டும்.

இப்படிச் செய்யும் போது பெற்றோருக்கும் ஒரு இனிய அனுபவம் உண்டாகும். குழந்தைகள் கலையில் மேதாவியாக வராவிட்டாலும் அதை அனுபவிக்கக் கற்றுக் கொள்வார்கள்.

இதுவும் ஒரு வகையான கல்விதானே? அனுபவித்தலும் இன்பம் தான் இல்லையா?

பணம் சம்பாரிக்க நடைமுறைக் கல்வி.

வாழ்க்கையை ரசிக்க பெற்றோர் முறை கல்வி!

இதற்குப் பெற்றோர் மனதும், நேரமும் வைத்தால் நடக்கக் கூடிய ஒன்றே என்பது என் எண்ணம்.

அன்புடன்
மாலா

அன்புள்ள மாலா

கல்வி என்பதைத் தனியாக மாற்றியமைக்க முடியுமா என்ற ஐயம் எனக்கிருக்கிறது. ஒரு சமூகம் பொருள்வய வாழ்க்கையை மட்டுமே உயர்வாகக் கருதுமென்றால் அங்கே பண்பாட்டுக்கல்வி எப்படி நிகழமுடியும்?

கல்விபற்றிய விவாதங்கள் ஒட்டுமொத்தப் பண்பாடுபற்றியவையாக அமைந்தாகவேண்டியிருக்கிறது

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

வாழ்க்கைமரம் பதிவை வாசித்தவுடன் மீண்டுமொரு முறை படம் பார்த்தேன். இரண்டாண்டுகளுக்கு முன்பு அப்படத்தைப் பற்றிய என்னுடைய பார்வை ” இப்புவியின் பிரம்மாண்ட பரிணாம வளர்ச்சியின் முன் அன்றாட மானுட வாழ்க்கையின் மதிப்பு என்ன? பல்லாயிரம் ஆண்டுகளில் எண்ணிலடங்கா உயிர்களின் வளர்சிதை மாற்றத்திற்குப் பின் நமக்களிப்பட்ட வாழ்க்கையை எவ்வாறு கையாள்கிறோம்? எத்தனை கீழ்மை! எத்தனை சுயநலம்! சக மனிதரின் மீது எத்தனை அதிகாரம், தன் மனைவியின் மகனின் மீது கூட! எத்தனை சிறுமையாக வாழ்கிறோம்! ” என்பதாகவே இருந்தது.

ஆனால் இப்போது அப்படியல்ல.. பூமியின் பரிணாமவளர்ச்சிக்கு இணையான பிரம்மாண்டமே நம்மின் இயல்பான உணர்சிகளிலும் குடிகொண்டுள்ளது. நம் அடிப்படை உணர்ச்சிகள் அனைத்திலும் இயற்கை உறைந்துள்ளது. பூமியை இவ்வளவு தூரம் கொண்டு வந்து சேர்த்தவற்றின் நீட்சியே நம்முள்ளும் உள்ளதென நினைக்கிறேன். இதையே படத்தில் இயற்கையின் பாதையென சுட்டப்பட்டுள்ளது. இதுவே நம்மில் ஆசையாக, சுயநலமாக, வாழ்க்கையின் இச்சா சக்தியாக வெளிப்படுகிறது.

அதே சமயம் இவற்றால் நாம் நிறைவடைவதில்லை. ஏதோவொரு ஒரு தவிப்பு இதையெல்லாம் தாண்டிச் செல்லத் துடிக்கிறது. அதற்காக மனிதன் கண்டடைந்த பாதையே கருணையின் பாதை. இது பல நூறு வருடங்களாக பல்வேறு பாதைகளைப் பரிசோதித்து எவற்றிலும் முன்னேற முடியாமல் முட்டி நின்று இறுதியாகக் கண்டடைந்த பாதையாக இருக்குமோ? இது நம்மில் தியாகமாக, விட்டுக்கொடுப்பதாக வெளிப்படுகிறது இல்லையா?

நம் அனைவரிலும் இவ்விரு பாதைகளின் ஊசலாட்டம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. கணந்தோறும்! படத்தில் அச்சிறுவனுக்கு நிகழ்வதைப் போல.

இறுதியில் ஜாக் தன் வாழ்க்கைப் பாதையின் நெடுந்தூரத்தைக் கடந்து வந்து கருணைப் பெருங்கடலின் கரையில் தன்னை நேசிப்பவர்களைக் கண்டடைந்து ஆரத்தழுவிக் கொள்கிறான். உண்மையில் நாம் அனைவரும் செல்ல வேண்டிய இலட்சிய இடம் அந்தக் கரையல்லவா?

ஜாக்குடன் வேறு பல மனிதர்களும் இருக்கிறார்கள். ஆனால் தனித்தனியாக! அப்படியானால் இவ்வளவு தூரம் கடந்து வந்தபிறகு அவர்களறிவது தன்னை நேசித்த ஒருவர் கூட தன் வாழ்வில் இல்லை என்பதையா? இறுதியில் அவர்கள் அடைவது வெறுமை ஆர்ப்பரிக்கும் கடலை மட்டும் தானா?

மிக்க அன்புடன்,
பாலாஜி
கோவை

அன்புள்ள பாலாஜி

ஆம், நீங்கள் சொல்வது சரிதான். வாழ்க்கைமரம் மிகச்சாதாரணமான ஒரு வாழ்க்கைச்சரடை பிரபஞ்சத்தின் முன்வைக்கிறது. தனித்தனியாகப்பார்த்தால் அர்த்தமின்றியும் ஒட்டுமொத்தமாகப்பார்த்தால் முழுமையுடனும் அந்த வாழ்க்கை தெரிகிறது

ஜெ

முந்தைய கட்டுரைபிள்ளையின் பெயரும் தந்தையின் கொள்கையும்
அடுத்த கட்டுரைகம்பராமாயண அகராதி