15
நான் விழித்துக் கொண்டபோது என் உடல் மெல்ல ஆடிக்கொண்டிருந்தது. நான் படுத்திருந்த தரை அதிர்ந்தது. உடனே முழு விழிப்பு வந்தது. அது ஒரு ராணுவ டிரக்தான். என்னைச்சுற்றி எம் 16 ரை·பிள்களும் எம் 4 கார்பைன்களும் கற்றாழைப்புதர்முட்களுடன் அடர்ந்திருப்பதுபோலச் சூழ்ந்திருந்தன. எழுந்துகொண்டேன். தலைசுழன்றது. இலேசாகக் குமட்டல் எடுத்தது.
”படுத்துக்கொள்ளுங்கள் லெ·ப்டினெண்ட்”என்றான் என் எதிரே அமர்ந்திருந்த ஹவல்தார் மேஜர்.
”நாம் எங்கே போகிறோம்?”
முன்னால் டிரைவரின் கேபினிலிலிருந்து நாயர் திரும்பி துணித்திரையை நீக்கி ” பேசாமல் படுங்க பிள்ளைவாள்… ”என்றான்
”இப்ப எங்க போறம்?”
”இம்பாலுக்கு”
”எதுக்கு?”என் வயிறு கிரானைட் விழுந்த மண் போல திம்ம்மென்று அதிர்ந்தது ” ஜ்வாலா? ஜ்வாலா எங்க?”
”பேசாம படுங்க…”
”நான் வரமாட்டேன்… நான் வரமாட்டேன்”என எழமுயன்றேன். என் கரங்கள் விலங்கிடப்பட்டு இரும்புப் படுக்கையுடன் இணைக்கபப்ட்டிருப்பதைக் கண்டேன்.
” இப்ப நீங்க கைதியா போறீங்க…”என்றான் நாயர்
நான் நடுங்கும் உடலுடன் அவனையே பார்த்தேன். பின்பு சோர்வுடன் படுத்துக் கொண்டேன்.
”உங்க லக் . லெ·ப்டினெண்ட் கர்னலுக்கு உங்கமேல அனுதாபம் போகவேயில்லை. உங்கள நேரா இம்பால் கொண்டுபோய் மெண்டல் செக் பண்ணச்சொல்லியிருக்கார். இனிஷியல் டிரீட்மெண்டுக்கு பிறகு உங்கள டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க… தண்டனை இல்லாம”
‘ஜ்வாலா? ”
”ஸ்டாப் த நான்சென்ஸ்!”என்றான் நாயர். ”அவளை இந்நேரம் சித்திரவதை செஞ்சு கொன்னிருப்பாங்க…. போதுமா? ”
”நோ”என்று நான் பயங்கரமாக வீரிட்டேன்
”லுக் லெ·ப்டினெண்ட். அவங்களோட புரூட்டல் மெதட்ஸ் உங்களுக்கு தெரியும். அவகிட்டே நம்மைப்பத்தி உங்களப்பத்தி ஏதாவது தகவல் இருக்குமான்னு பாப்பாங்க. இல்லேன்னு தெரிஞ்சதும் தீத்திருவாங்க. ” நாயர் சொன்னான் ”நீங்க மார்·பின் மயக்கத்தில எட்டு நாளா இருக்கீங்க. இதுக்குள்ள உலகமே தலைகீழா மாறியிருக்கும்”
நான் ”நோ”என்றேன். இம்முறை தீனமாக. என் குரல் எனக்கே அருவருப்பு ஊட்டும்படி.
”டேக் ரெஸ்ட். இப்பதான் கெளம்பியிருக்கோம். நாம போய்ச்சேர பன்னிரண்டு மணி நேரம் ஆகும்” நாயர் திரும்பிக் கொண்டான்
நான் படுத்தபடி தலையை அதீதவலி கொண்டவன்போல அசைத்தேன். ஜ்வாலா ஜ்வாலா என்று என் மனம் முடிவிலாத மந்திரம் போல அரற்றிக் கொண்டது.
ஒரு மலைவளைவில் டிரக் வேகம் குறைத்தது. ”ராஜர்.அலெர்ட்!”என்று நாயரின் குரல் ஒலித்தது. ரை·பிள்களும் கார்பைன்களும் கிளிக் கிளிக் என்று விடுவித்துக் கொண்டன. ஜவான்கள் டிரக்கின் கீழ்ப்புற இடைவெளிகளின் வழியாக துப்பாக்கி நீட்டி குறி பார்த்தபடி சீட்டுக்கு நடுவே அமர்ந்தார்கள். என்னை ஒரு நாயக் இழுத்து சீட் நடுவே குறுகி அமரச்செய்தான்.
நாயரின் குரல் டிரக் மேலிருந்த மைக்கில் ஒலித்தது ” செக் த வுட்ஸ் .போத் சைட். ஓவர்”
”செக்ட் . சே·ப். குட் . ஓவர்” என்றான் ஹவல்தார் மேஜர்
”குட்” என்றான் நாயர் ” ஜம்ப் ஆண்ட் டேக் பொஸிஷன் ஓவர்.”
சரசரவென துப்பாக்கிகளுடன் ஜவான்கள் கீழே குதித்தனர். டிரக்கின் அடியிலும் விலாவிலுமாக பதுங்கி இருபக்கமும் நோக்கினர். யாருமில்லை. ஒருவன் என் விலங்கை அவிழ்க்க நான் மணிக்கட்டுகளை கையால் உருவி விட்டபடி குதித்து டயர் அருகே குந்தி அமர்ந்தேன்.
டிரக்கின்முன் தூரத்தில் வெள்ளைநிற உடையணிந்த ஆள் நிற்பது தெரிந்தது.
எம்16 ஏ 2 கோல்ட் ரை·பிளின் எண்ணூறு மீட்டர் சுடுதொலைவை கணக்கிட்டு வண்டியை நிறுத்திருந்தான் நாயர். பிறகு டிரக் மெல்ல மெல்ல முன்னகர்ந்தது.
ஆளின் முகம் தெரிந்தது. சிறுவன் போலிருந்தான். மங்கோலிய முகங்களின் வயதை நம்மால் ஊகிக்க முடிவதில்லை. அவன் தன் கையில் வெண்ணிறத்துணி ஒன்றை ஆட்டிக் கொண்டிஒருந்தான் . கீச்சுக்குரலில் ” ஷீலௌ…! மெ பாலௌ! ” என்றான்.
நாயர் உரக்க ஆணையிட்டான் ” கையை தூக்கியபடி வா… கூட யார்?”
மணிப்புரி மொழியில் அவன் ” நை ”என்றான். ”ஷீலௌ… மெ பாலௌ ”
நாயர் ”என்ன சொல்கிறான்?”
“மச்சான், என் பாதுகாவலனே என்கிறான்… ” ஹவல்தார் மேஜர் சொன்னான்.
நாயர் அந்த ஹவல்தார் மேஜரை மட்டும் போகும்படி உத்தரவிட்டான். நீட்டிய கார்பைனுடன் அவன் நடந்துசென்று அந்த ஆளை நெருங்கி அவன் இடையையும் தோளையும் சோதித்தான்.
”பக்கா ! ஜீ சாப்” என்றான் ஹவல்தார் மேஜர்
”பிரிங் ஹிம்”
ஹவல்தார் சிரித்தபடி அவளை முன்னால் விட்டு நடந்து வந்தான். ” யெ பேட்டி ஹெ !”என்றான். ஜவான்களிடம் மெல்லிய சிரிப்பு பரவியது. அது இளம்பெண். பதினெட்டு வயதிருக்கும்.
அவள் அருகே வந்து ” மெஸெஜ் … லெப்டினெண்ட் நெல் ”என்றாள்
நாயர் கண்களை சுருக்கியபடி ” யாரிடமிருந்து?”என்றான்
அவள் ”ஜ்வாலா”என்றாள்
நான் பாய்ந்து அவளை அணுகி ”நான்… நான்தான் லெப்டினெண்ட் நெல்… ஜ்வாலா எங்கே…?” என்றேன். அவளை பிடிக்கப்போனேன்
அவள் மணிப்புரியில் ” அவளை நாங்கள் இரு தோழிகள் தப்புவித்து காட்டில் தங்க வைத்திருக்கிறோம்…. உங்களை தேடி காம்புக்கு போனோம். மலைமீதிருந்து பார்த்தோம்” என்றாள்.
நான் உரக்க ”என்ன என்ன?” என்று பதறினேன் . நாராயண் மொழிபெயர்த்துச் சொன்னார்.
நாயர் எங்கள் இருவரையும் குழப்பமாகப் பார்த்தான்
அரைக்கணம் கழித்துத்தான் அவள் என்ன சொல்கிராள் என்று எனக்குப்புரிந்தது. என் மூளையில் எல்லா நரம்புகளும் மின்சாரம் பாய்ந்து அதிர்ந்து சுருண்டன. ”அவள் எங்கே இருக்கிறாள்? நன்றாக இருகிறாளா?” நான் கண்ணிரும் பரவசமுமாக கூவினேன்.
” சிங்! சிங் !”என்றாள் . மலையை சுட்டிக்காட்டினாள். என்னுடன் வந்தால் கொண்டு போகிறேன் என்று கைகாட்டினாள்
”என்ன ?என்ன?” என்றேன். என்னுடைய எண்ணங்களை என்னால் தொகுக்க முடியவில்லை. என் தொடைகள் தன்னிச்சையாக துடித்துக்கொண்டிருந்தன.
நாராயண் ”மலையில் இருக்கிறாளாம்”என்றார்
அவள் சட்டைக்குள் கைவிட்டு ஒரு மதூக மலரை எடுத்தாள் ” கொரௌ ·ப்ளவர்” என்றாள் . என்னிடம் நீட்டினாள். ”ஜ்வாலா”
நாயர் கடிதம் என எண்ணி வாங்க கைநீட்டி தயங்கி நின்றான். அந்த இடைவெளியில் நான் அதை பாய்ந்து வாங்கி க்கொண்டேன். அதை மூக்குடன் சேர்த்துக்கொண்டு முகர்ந்தேன். அவள் அதை எடுக்கும்போதே அது மதூகமலர் என அறிந்திருந்தேன் என்று உணர்ந்தேன்.
”இதோ நான் வருகிறேன் .. வா. ”என்று கிளம்பினேன்.
”நோ…”என்றான் நாயர் திடமான குரலில். தன் எம்9 , 0.45 பெரெட்டா பிஸ்டலை நீட்டியபடி ”நீங்கள் என் கைதி லெ·ப்டினெண்ட். உங்களை பத்திரமாக இம்பாலுக்கு கொண்டுசெல்லும்படி உத்தரவு… கெட் இன் த டிரக். ஹவல்தார் மேஜர் நாராயண்.அரெஸ்ட் ஹெர்”
ஹவல்தார் மேஜர் முன்னகர்ந்தார்
”நாயர்…. நாலு வருஷம் உன் தோளில கைபோட்டு பழகினவன் நான்….. எல்லாம் உனக்கே தெரியும்…ப்ளீஸ்” என் குரல் எனக்கே அன்னியமாகும்படி தழைந்தது. என்னால் சொர்களை முடிக்க முடியவில்லை.
”நோ.. நான் என் டியூட்டியைத்தான் செய்வேன். கெட் இன் த டிரக் ஐ ஸே” தேர்ந்த ராணுவ வீரனுக்கே உரியமுறையில் நாயரின் கண்கள் என் கையசைவுகளில் கூர்மையாக பதிந்து நுட்பமாக என் அசைவுகளுடன் சேர்ந்து அசைந்தன.
”நாயர் ப்ளீஸ்.. ”என் குரல் தழுதழுத்தது. ”உன் காலைப்பிடிக்கிறதா நினைச்சுக்கோ…ப்ளீஸ்” அந்த நிலத்தில் அப்படியே விழுந்து அவன் கால்களை மண்டியிட்டுக் கெஞ்சியது என் பிரக்ஞ்ஞை. ஆனால் என் உடல் உயிரில்லாதது போல் நின்றிருந்தது.
”நோ….”என்றான் நாயர் உரக்க ”நான் உங்களை மாதிரி ஒரு ரொமாண்டிக் இடியட் இல்லை லெ·ப்டினெண்ட் . நான் ஒரு ஜெனூய்ன் சோல்ஜர். எனக்கு நாடுதான் முக்கியம். வேற எல்லாத்தயும் விட, என் உயிர விட டியூட்டிதான் முக்கியம்… கெட் இன்” மெல்ல துப்பாக்கியால் என்னிடம் உள்ளே ஏறும்படிச் சைகைசெய்தான்.
நான் அவன் கண்களைப் பார்த்தேன். அவை இளகாது என்று அறிந்தேன். என் மனம் மெல்ல உறுதியடைந்தது. அந்த உறுதி என் இறுகிய தசைகளை இளகச்செய்தது. பெருமூச்சுடன் ” இல்ல. அவளோட மெஸெஜ் வந்ததுக்கு பிறகு நான் உன் கூட வரமுடியாது. நான் போறேன். நீ என்னைச் சுடு…உன் குண்டால நான் செத்தா அதுவும் நியாயம்தான்…” என்றேன். மெல்ல முன்னால் நடந்தேன்
நாயர் தன் பெரெட்டாவை குறிபார்த்தான் ” லெ·ப்டினெண்ட் ஸ்டாப்… ஸ்டாப் ஐ ஸே…. நான் கண்டிப்பா சுடுவேன்….”
‘சுடு”நான் நடந்தபடியே இருந்தேன். என் முதுகெல்லாம் நுண்மையான கண்களாக மாறி விட்டிருந்தது.
”லெ·ப்டினெண்ட் டர்ன் பேக்… ” நாயரின் குரலில் அதே திடம் இருந்தது.
நான் திரும்பவில்லை
”லெ·ப்டினெண்ட் சார் … டர்ன் பேக்… டர்ன் பேக் ப்ளீஸ்”
நான் அந்த பெரெட்டாவின் கரிய ஓட்டைக்கண்ணை மனதுக்குள் கண்டேன். நடந்தபடியெ இருந்தேன் நிதானமாக. என் கால்கள் தளரவில்லை.
‘ஒன்… டூ .. ” நாயரின் குரலுக்கு எதிரொலிபோல தூரத்தில் காடு அதிர்ந்ததைக் கண்டேன்.
ஆனால் எனக்குப்பின்னால் ஓசைகள் மாறுபட்டன. பலவிதமான அசைவொலிகள். அவை எனக்கு ஏற்படுத்திய ஐயத்தால் நான் திரும்பினேன்.
ஜவான்கள் அத்தனைபேரும் நாயருக்கு குறிவைத்திருந்தார்கள்.
ஹவல்தார் மேஜர் நாராயண் என்னிடம் ,” நீங்கள் போங்கள் லெ·ப்டினெண்ட். ” என்றான். அந்தப்பெண்ணிடம் மணிப்புரி மொழியில் ” தி ஜாரா!” என்றான்
நான் அந்த ஜவான்களைப் பார்த்தேன். ஒருகணம் என் மனம் சிந்தனையில்லாமல் இருக்க அவர்களை ஒரு அழியாத ஓவியம் போல் என் நினைவில் அள்ளிக்கொண்டேன். மனிதர்கள் வழியாக அவர்கள் அறிந்திராத இன்னொன்று வெளிவந்து தன்னை நிகழ்த்திக்கொள்வதை அங்கே கண்டேன்.
பின் நான் அந்தப்பெண்ணைப் பிடித்துக்கொண்டு ஓடினேன். நாங்கள் மலைச்சரிவை ஏறி ஓட ஆரம்பித்தோம்
நாயர் கோப வெறியுடன் ” பாஸ்டர்ட்ஸ்…. ஐ வில் பனிஷ் யூ ஆல். பனிஷ் யூ சிவியர்”’ என்று கூவினான்
”வி வில் ராதர் டை ·பர் திஸ் ஸர்” என்றார் ஹவல்தார் மேஜர் நாராயண் ” டேக் கேர் லெ·ப்டினெண்ட் சர்”
நான் திரும்பி கையசைத்தேன். ஏறிச்செல்லும் மலைச்சரிவு களிமண்ணால் ஆனதாக இருந்தது. என் கால்கள் இருமுறை வழுக்கியபோது அந்தப்பெண் திறமையாக என்னைப் பற்றி மேலேற்றினாள்.
நாயர் உரக்க” பிள்ளைவாள்.. இது ஒரு டிராப்…நீங்க உங்க மரணத்தைப்பாத்து போறீங்க.. ப்ளீஸ் லிஸன் மீ .”என்று கூவினான்
”பரவாயில்லை நாயர்!” நான் காட்டுக்குள் நுழைந்தேன்.
அவள் எனக்கு விரைந்து வழிகாட்டினாள். காட்டின் மடிப்புகள் வழியாக மூங்கில் புதர்களும் பாறைக்கூட்டங்கலும் மண்டிய சரிவினூடாக சென்றோம். குளிர்ந்த காற்று என்னை மூடியது. உயர்ந்த கான்ஹாங் மலைச்சரிவில் இருந்து நிலம் நோக்கி வீசும் காற்று. மலைச்சிகரம் தூங்கும் குழந்தையை பார்க்கும் தாய் போல குனிந்து இந்நிலத்தைப் பார்க்கிறது. புதர்களில் பச்சை ஒளி விரிய மெல்லிய காற்றலையில் ஒளி அலையடித்தது. மலையின் மூச்சு போல.
என் நெஞ்சில் மூச்சு குளிர்ந்த பந்துகள் போல நிறைந்து வெளியேறியது. மூச்சு வழியாக நான் அடைந்த எல்லா துயரங்களும் வதைகளும் வெளியேறின. என் மனம் எடையிழந்தது. அந்த பசும்வெளி என்னிடம் இனி துயரமே இல்லை என்று சொன்னதுபோல. மண்ணில் மனிதனுக்கு பேரின்பம் என்பது விடுதலை. அந்த விடுதலையை உனர அவன் சிறைப்படவேண்டியிருக்கிறது.
மூச்சுவாங்க ஒரு இடத்தில் நின்றோம். அருகே ஓடிய சிற்றோடையில் அவள் கைப்பிடி நீரை அள்ளிக் குடித்தாள். சிறிய முயல்போன்ற பெண். சிறிய செம்புள்ளிகள் நிறைந்த மஞ்சள் சருமம் கொண்ட கன்னங்கள்.
நான் அவளிடம் ”நேபா குமார்?”என்றேன்
”ஹாங் . நேபா சாப். நேபா சாப் ”அவள் கண்களில் கண்ணீரைக் கண்டேன் ” நிங்தௌ மி நிங்தௌ…”தலையில் மன்னனின் கிரீடம் போல கைவைத்து ”நிங் தௌ! அங்கமி நிங்தௌ”என்றாள்.
ஒரு மன்னனின் மறைவு. ஆனால் அது ஓர் இலையுதிர்வதற்கு அப்பால் ஏதுமில்லை. அவன் அவனறியாத ஏதோபெரும் சக்தியின் கைப்பொம்மை. அவன் இருக்கும்போது சர்வ வல்லமை கொண்டவனாக ஒரு சொல்லில் பலநூறு உயிர்களை அழிப்பவனாக இருப்பான். ஆனால் சட்டென்று ஒருநாள் உதிர்ந்து போவான். அவனைச்சார்ந்தவர்கள் அனைவருமே உதிர்வார்கள். அவர்களைப்பற்றிய சொற்கள் அனைத்தும் மௌனச்சேற்றில் விழுந்து புதைந்து மறையும். அவனை வரலாறு மறந்துபோகும். அவன் வாழ்ந்த நிலத்தில் அவன் தலைமுறை நினைவுகளில் அவன் மொழியில் அவனது தடமே இருககது. போர் ஓயாது நீளும். காலங்கள் தோரும். சாவதற்காக பிறந்து வந்துகொண்டே இருப்பார்கள். மீண்டும்மீண்டும் வரலாறு அதை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது சலிப்பில்லாமல்…
மெல்லிய ஒளி பரவிய வானத்தால் விளிம்பிடப்பட்ட குன்றுக்கு மேல் ஏறி மறுபக்கம் சென்றோம். அப்பால் மூங்கில் புதருக்குள் ஒரு மெல்லிய சீட்டி ஒலி கேட்டது. தொடர்ந்து சிவப்புத் துண்டு ஒன்று அசைக்கப்பட்டது. என்னுடன் வந்த பெண் அதை நோக்கி தன் சிவப்பு துவாலையை அசைத்துக் காட்டினாள் ” ஜ்வாலா…”என்று கையை காட்டினாள்.
மூங்கில் காட்டுக்குள் ஒரு அங்கமிப் பெண் தெரிந்தாள். ஒரு கணம் என் மனம் உயர் அழுத்த மின்கம்பிபோல துடிதுடித்தது. அது ஜ்வாலா இல்லை. ஆனால்….. நான் அந்த திசை நோக்கி ஓடினேன். இருமுறை புற்களில் தடுக்கிவிழுந்து எழுந்து வாயால் மூச்சிரைத்தபடி மனம் ஜ்வாலா ஜ்வாலா ஜ்வாலா என்ற அழியாத பெயராக இருக்க ஓடினேன். அந்த அங்கமிப்பெண் உள்ளே நோக்கி ஏதோ சொல்ல உள்ளிருந்து ஜ்வாலா வெளிவந்தாள்.
”நெல்!” ஓசையில்லாமல் உதடுகள் நிலைத்தன. கண்கள் காலமிழந்து பிரமித்து நின்றன.ஒரு கணம்
மறுகணம் என்னை நோக்கி ஓசையில்லாமல் கதறியபடி ஓடிவந்தாள்.
ஓங்கி நின்ற மௌனமலையின் மடியில் நாங்கள் இருவரும் காட்டாறுகள் போல சந்தித்துக் கொண்டோம். அவளை அப்படியே அள்ளி என் உடலுடன் சேர்த்து இறுக்கிக் கொண்டேன். அவள் எலும்புகள் நொறுங்க மார்பு நெரிய…. அவள் முகத்திலும் கழுத்திலும் தோள்களிலும் வெறியுடன் முத்தமிட்டேன். முத்தம் ! முத்தம்! முத்தம்! முத்தம்! முத்தம்! முத்தம்! முத்தம்! முத்தம்! முத்தம்! முத்தம்! முத்தம்! முத்தம்! முத்தம்! முத்தம்! முத்தம்! முத்தம்! முத்தம்! முத்தம்! முத்தங்களன்றி வேறு எதுவுமே இல்லாத காலவெளியொன்றில் வெகுதூரம் சென்றோம்.
பின் விடுவித்துக் கொண்டு நெடுமூச்செறிந்தோம்.அவள் முகத்தை தூக்கி கண்களைப்பார்த்தேன். நீர் மூடிய நீலமணிகள். மலர்ப்பரப்புபோன்ற கன்னங்கள். புல்லிவட்டம் போல சிவந்த உதடுகள். அந்த முகத்தில் காயங்கள். மீண்டும், அக்கணமே இறந்துவிடுவது போன்ற ஆவேசத்துடன் இறுக அணைத்து முத்தங்கள் பொழிந்தேன். வெகுநேரம் கழித்து மீண்டபோது இருவருமே ஒருவர் கண்ணீர் ஒருவர் உடலில் சொட்ட அழுது கொண்டிருந்தோம்.
அங்கமி பெண் ஜ்வாலாவிடம் ஏதோ சொன்னாள். ”நேரமாகிறது ”என்கிறாள் என்றாள் ஜ்வாலா .” இந்தவழியாக கான்ஹாங் மலைச்சரிவுக்குச் செல்லமுடியும். நோ மேன்ஸ் லேண்ட் வழியாகவே பூட்டான் வரை எண்பது கிலோமீட்டர்”
” துமி ஜராய்கா” என்றாள் அங்கமிச்சிறுமி.
”நாம் போனால் இவர்களைப்பிடிக்க மாட்டார்களா?”
”இவர்களைப்பற்றி தெரியாது யாருக்கும்” என்றாள் ஜ்வாலா. பெரிய ராணுவத் தோள்பையை ஒரு பெண் என்னிடம் தந்தாள். உணவும் நீரும் அதில் இருக்கக் கூடும். நான் அதை மாட்டினேன். அவர்களிடம் விடைபெற்றேன். சாதாரணமாக ”பை”என்று சொல்லி கிளம்பிய ஜ்வாலா சட்டென்று கண்ணிருடன் மெல்ல விம்மியபடி அவர்களில் ஒருத்தியை ஆரத்தழுவிக் கொண்டாள். மூன்றாவது பெண் இருவரையும் சேர்த்து அனைத்தாள். கண்ணிருடன் முணுமுணுவென்று பேசினர். மீண்டும் தழுவினர்.
”போகலாம்”என்றேன்
ஜ்வாலா ” அமி ஜராய்கா ”என்று அவர்களிடம் விடை பெற்றாள். கைகள் கடைசி விரல்நுனிவரை தோட்டு உரசி பிரிந்தன. ஒருத்தி கையசைத்தபின் முகத்தைமூடிக் கொண்டாள். இன்னொருத்தி அவளை அணைத்தாள். ஜ்வாலா கண்ணிருடன் திரும்பாமல் முன்னால் ஓட நான் அவளை தொடர்ந்து ஓடினேன்.
[மேலும்]