இப்படி இருக்கிறார்கள்…

பாண்டிச்சேரி சென்றிருந்தபோது ஒரு நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். நண்பர் நல்லவாசகர், இனியவர்.இசையிலும் ஓவியத்திலும் ஈடுபாடு கொண்டவர். இத்தகையோரில் பெரும்பாலானவர்கள் ஒருவகை அப்பாவிகளாக, பிறர் தங்கள் மீது ஏறி அமர்ந்து காதைக்கடிக்க அனுமதிப்பவர்களாகவே இருப்பார்கள். அவரும் அப்படித்தான்.

தன் பக்கத்து வீட்டுக்காரர் நல்லவாசகர் என்றும் அவருக்கும் சங்கச் சித்திரங்களைக் கொடுத்திருக்கிறேன் என்றும் நண்பர் சொன்னார். அந்த பக்கத்து வீட்டுக்காரர் நான் பாண்டிச்சேரி வந்திருப்பதை அறிந்து சந்திக்க விரும்புவதாகவும் சொன்னார். பார்ப்போம் என்று நான் சொன்னேன். அந்த பக்கத் துவீட்டுக்காரர் ஒருகாலத்தைய திமுகக்காரர். அண்ணாத்துரை எழுதிய எல்லா நூல்களையும் வாசித்தவர், இன்றும் வாசிப்பவர் என்றார் நண்பர். அவர் என்னிடம் நிறைய ஐயங்களைக் கேட்க விரும்புவதாகச் சொன்னார். கேட்கலாமே என்றேன் நான்.

நான் ரமேஷை பார்த்து விட்டு நண்பர் வீட்டுக்கு வந்தேன். நாஞ்சில்நாடனும் தேவதேவனும் களைத்திருந்ததனால் கொஞ்சம் ஓய்வெடுக்க விரும்பினர். ஆகவே அவர்கள் நண்பர் வீட்டிலேயே இருந்தனர். நான் உள்ளே நுழைந்ததுமே நாஞ்சில் மிக மிக கோபம் கொண்டிருப்பதைக் கவனித்தேன். அவர் அமர்ந்திருந்த விதம் அதைக் காட்டியது. நான் அவர் உடலசைவுகளை நன்கறிவேன். அருகே பீதியடைந்த குழந்தை மாதிரி தேவதேவன்

நாஞ்சிலிடம் அந்த பக்கத்துவீட்டுக்காரர் உரத்த குரலில் பேசிக்கொண்டிருந்தார். கைநீட்டி, விரலை ஆட்டி, நாலாந்தர ஆசிரியர்கள் கற்பிக்கும் தொனியில் ‘நான் சொல்றது சரியா விளங்குதா? நல்லா கவனிச்சு கேட்கணும்… கண்ணதாசன் எழுதின கவிதை இது…. என்ன புரியுதா? சொல்லுங்க…புரியுதா இல்லியா?’

நாஞ்சில் கண்களில் கனலுடன் ’சொல்லுங்க’ என்றார்

‘நீங்க என்ன சாதி?’ என்றார் பக்கத்து வீட்டுக்காரர்.

‘அதை ஏன் நான் சொல்லணும்?’ என்றார் நாஞ்சில்

‘இல்ல, ஒருத்தர் கருத்த தெரிஞ்சுக்கிடணுமானா சாதிய தெரிஞ்சாகணும்’ என்றார் பக்கத்துவீட்டுக்காரர்

‘சொல்ற உத்தேசம் இல்ல’

அப்போ துதான் நான் உள்ளே வந்தேன். ‘இவருதான் ஜெயமோகன். சங்கச்சித்திரங்கள் எழுதினவர்’ என்றார் நண்பர்

‘அடேடே…நீங்களா ? வாங்க வாங்க..சந்தோஷம்…நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்’

நான் கைகுலுக்கிவிட்டு அவரை தவிர்த்து என் பெட்டியை நோக்கிச் சென்றேன்

‘உங்கள மாதிரி யங் பீப்பிள் நான் சொல்றத கேக்கணும்…’

‘சொல்லுங்க’ என்றேன்

‘கொஞ்சம் கவனிங்க…நான் சொல்றேன்ல?’ என்றார் அதட்டலாக.

நாஞ்சில் ‘நான் சந்திரன் கூட கொஞ்சம் வெளியே போய்ட்டு வாறேன்…’ என்றார். அவர் கோபத்தில் இருக்கும்போது செய்வதுதான். கொஞ்சம் திரவம் விட்டு குளிரச்செய்து விட்டு வருவார் என ஊகித்தேன். அவர் கிளம்பிச் சென்றார். தேவதேவன் பரிதாபமாக அமர்ந்திருந்தார்

‘உக்காருங்க சார்…நான் சில சந்தேகங்களை கேக்கிறேன்…தெரிஞ்சுதுன்னா சொல்லுங்க…நான் ரொம்ப சாதாரணமான ஆளு….நீங்க ரைட்டர்….சொல்லுங்க’

நான் அமர்ந்துகொண்டு ‘சொல்லுங்க’ என்றேன்.

என்னுடைய கோபம் கொதித்துக் கொண்டிருந்தது. நாஞ்சில்நாடனையோ தேவதேவனையோ அவமதிக்கும் ஒரு சொல்லை என் முன் ஒரு ஆசாமி சொல்வதை என்னால் சகிக்க முடியாது. ஆனால் இது இன்னொருவர் இல்லம். அதைவிட ஒருவேளை இந்த ஆசாமிக்குள் ஏதேனும் கொஞ்சம் விஷயம் இருக்கலாம். அவருக்கு நடந்து கொள்ள தெரியாமலிருக்கலாம். ஒரு விஷயமறிந்த மனிதரில் இருக்கும் எல்லா கோணல்களும் சகித்துக்கொள்ளத் தக்கவைதான்.

‘நீங்க ஒரு ரைட்டர்…நான் சில கேல்விகளை கேட்கணும்…’

‘சொல்லுங்க’ என்றேன்.

அவர் ஒரு காகிதத்தை எடுத்தார். வினாக்களை எழுதிக்கொண்டு வந்திருந்தார். முதல் கேள்வி ‘தம்பீ நான் படித்தேன் காஞ்சியிலே நேத்து – என்று வாலி எழுதியிருக்கிறாரே அந்த காஞ்சி என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்? தெரிஞ்சா சொல்லுங்க. இல்லாட்டி நல்லா யோசிச்சு சொல்லுங்க…’

நான் என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன். அந்தக் கேள்வியை அவர் எல்லோரிடமும் கேட்பார் என்று நண்பர் முன்னரே சொல்லியிருந்தார். ‘வாலி சமீபத்திலே டிவியிலேயே சொன்னார்…காஞ்சின்னு ஒரு பத்திரிகையை அண்ணாத்துரை நடத்தினார். அதைத்தான் அவர் எழுதியிருக்கார்’ என்றேன்

‘ஓ’ என்றார். ‘சரி…இப்ப இன்னொரு கேள்வி… தூக்கணாங்குருவிக்கூடு தூங்கக் கண்டான் மரத்திலேன்னு கண்ணதாசன் பாட்டு இருக்கே…அதிலே தூங்குறதுன்னா என்ன?…தெரிஞ்சா சொல்லுங்க…நல்லா யோசிச்சு சொல்லணும்’

நான் எரிச்சலை வெளிக்காட்டி ‘இந்தமாதிரி சினிமாப்பாட்டு ஆராய்ச்சில எல்லாம் எனக்கு ஆர்வமில்ல…ஏதாவது வாசிச்சிருந்தா அதைச் சொல்லுங்க’ என்றேன்

‘சினிமாப்பாட்டா? இது கண்ணதாசன் எழுதின கவிதை… அர்த்தம் தெரிஞ்சா சொல்லுங்க…இல்ல தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு மெதுவாச் சொல்லுங்க’

‘தூங்குறதுன்னா தொங்குறது’

நான் சொன்னது தூங்குதல் என்று கேட்டிருக்கும், கண்கள் மின்ன ’என்ன? சொல்லுங்க’ என்றார்

‘தூங்குதல்னா பழைய தமிழிலயும் மலையாளத்திலயும் தொங்குகிறதுன்னு அர்த்தம்..’ என்றேன்

‘சரிதான்…கரெக்ட்…’ என்றார் ஏமாற்றத்துடன். காகிதத்தைப்பார்த்து ‘தமிழ் ஸ்கிரிப்ட் எப்ப வந்ததுன்னு சொல்லுங்க. சம்ஸ்கிருதம் ஸ்கிரிப்டு எப்ப வந்ததுன்னு சொல்லுங்க’

‘ஸ்கிரிப்டுன்னா என்ன உத்தேசிக்கிறீங்க?’

‘தமிழ்…தமிழ் ஸ்கிரிப்டு…’

‘எழுத்துவடிவைச் சொல்றீங்களா?’

‘ஆமா’

‘சோழர் காலத்திலே…அதாவது பத்தாம் நூற்றாண்டு வாக்கிலே’

‘என்னய்யா சொல்றீங்க? தமிழ் தோன்றினது பி.சியிலே…பிசின்னா என்ன தெரியுமா? கல்வெட்டு எழுதுற காலகட்டம்! அப்ப வந்திருக்கு தமிழ்’

‘பத்தாம் நூற்றாண்க்கு முன்னாடி வட்டெழுத்திலே தமிழ எழுதினாங்க…கிபி ஒண்ணாம் நூற்றாண்டுக்கு முன்னாடி பிராமியிலே’

‘நான் பிராமியைச் சொல்லலை…நான் தமிழப்பத்தி சொன்னேன்…தமிழ எப்டி எழுதினாங்க? நல்லா சிந்திச்சு சொல்லணும்…தேவைப்பட்டா டைம் எடுத்துக்கிடுங்க’

ஆசாமி முழுமையாகவே ஒரு வெத்து வேட்டு என்று தெரிந்தது. ஆனால் இவர் இந்த ஒன்றேமுக்கால் தகவல்களைக் கொண்டு இப்பிராந்தியத்தில் ஒரு ‘அறிஞராக’ உலவி வருகிறார். அந்த அசட்டுத் தன்னம்பிக்கையுடன் நாஞ்சில்நாடனுக்கு ஞானம் அளிக்க வந்திருக்கிறார்.

‘பி.சியிலே சம்ஸ்கிருதமே கெடையாது…அப்ப அதை யாரும் எழுதலை…மொத்தம் மூணு ஸ்கிரிப்டு இருக்கு. சம்ஸ்கிருதம் பிராகிருதம் அராமிக்…பாலி ஸ்கிருப்டு…பாலி…தெரியுமா? பாலி…கேள்விப்பட்டிருக்கீங்களா?’

அவரை கிளப்பி விட்டுவிடவேண்டுமென நினைத்தேன் .’இங்க பாருங்க, நீங்க இவ்வளவு நேரம் இங்க சொல்லிட்டிருந்தது முழுக்க முட்டாள்தனம்…உங்கள நீங்களே இப்டி அவமானப்படுத்திக்காதீங்க…கெளம்புங்க’

அவர் ‘நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல முடியலைன்னா அதைச் சொல்லுங்க…நான் கேக்கிறத நீங்க நல்லா புரிஞ்சுகிடணும்’ என்றார்

‘இங்க பாருங்க…நானோ, நாஞ்சில்நாடனோ, இவரோ பல வருஷங்களா நெறைய வாசிச்சுத்தான் இந்த அளவுக்கு ஆகியிருக்கோம். நாங்க எழுதினத எங்கியாவது கொஞ்சம் வாசிச்சுப்பாருங்க…சும்மா உளறிட்டிருக்காதீங்க’

‘ஆமா…நீங்க ரைட்டர்ஸ்…நான் அந்தக் காலத்திலேயே அறிஞர் அண்ணா ஸ்பீச்செல்லாம் கேட்டவன்…கேள்விகளை நல்லா கவனியுங்க…அதாவது…’

நான் முடிவுசெய்தேன். இனி இந்த ஆளை இப்படி விடக்கூடாது. நான் இங்கே விருந்தினர் என்பதல்ல முக்கியம். இந்த மொண்ணைத்தனத்தை எங்கே நிறுத்துவது என்பதுதான். என் கோபம் தலைக்குள் அமிலம்போல நிரம்பியது. நாஞ்சில்நாடன் எழுந்து செல்லும்போது அவர் முகத்திலிருந்த கசப்பை நினைவு கூர்ந்தேன். சட்டென்று என் கட்டுப்பாடு அறுந்தது

‘வாய மூடுங்க..என்னய்யா நினைச்சிருக்கே நீ? நீ யாரு? ஒரு புத்தகம் ஒழுங்கா படிச்சிருப்பியா? உன்னோட வாழ்க்கையிலே ஒரு எழுத்தாளன நேரில பாத்திருக்கியா? உன் எதிர்ல உக்காந்திருந்தது நாஞ்சில்நாடன்… அவரு யாருன்னு தெரியுமா உனக்கு? தெரியுமாய்யா? அவருக்கு நீ கைய நீட்டி கிளாஸ் எடுக்கிறே…அவர் சொல்ற ஒரு வார்த்தைய நீ கேக்க ரெடியா இல்ல…ஆனா நீ கொண்டுவந்து அவர் மேல போடுற குப்பைய அவர் சகிச்சிட்டிருக்கணும் இல்ல?’ என்றேன்

அவர் எதிர்பார்க்கவில்லை. வாயடைந்துபோய் ‘நீ பாத்துப்பேசணும்…நான் …நான் பேசத்தான் வந்தேன்’ என்றார்

‘என்னய்யா பேசணும்? பேச நீ யாரு? நாஞ்சில்நாடன் முன்னாடி இப்டி உக்காந்து பேச நீ யாருய்யா? வாய அளக்கிறியா? ஒருத்தர் முன்னாடி வந்து உக்காருறதுக்கு முன்னாடி அவரு யாருன்னு தெரிஞ்சுக்கிட மாட்டியா? ஒரு ஸ்காலர் முன்னாடி வந்து வாயத்திறக்கிறதுக்கு முன்ன உனக்கு என்ன தெரியும்னு ஒரு நிமிஷம் யோசிக்க மாட்டியா? நம்ம நாட்டில மட்டும் ஏன் இப்டி வடிகட்டின முட்டாளுங்க கூச்சநாச்சமில்லாம திரிய முடியுது..’

‘ஆமா நான் முட்டாள்தான்…நீ பெரிய புத்திசாலி’

‘ஆமாய்யா நான் புத்திசாலிதான்… நீ வெத்து முட்டாள். ஏன்னா நான் என்னோட எடம் என்னன்னு தெரிஞ்சவன். அந்த எல்லைய மீறி எங்கயும் போயி அவமானப்பட மாட்டேன்…ஒரு அறிஞன் முன்னாடி என்ன பேசணும் எப்படி பேசணும்னு எனக்கு தெரியும்… உன்னை மாதிரி முட்டாளுக்குத்தான் தான் ஒரு முட்டாளுன்னுகூட தெரியாது….இப்ப நாஞ்சில் எந்திரிச்சு போனாரே, அவரு உன்னை முட்டாள்னு மனசுக்குள்ள திட்டிட்டுதான் போனார். அவரை விட எனக்கு உன் மேல கொஞ்சம் இரக்கம் ஜாஸ்தி. அதனால நான் உங்கிட்ட சொல்றேன். நீ ஒரு முட்டாள். அந்த ஒண்ணை மட்டுமாவது தெரிஞ்சுக்கிட்டேன்னா மேற்கொண்டு அவமானப்படாம இருப்பே…’

‘எனக்கு எழுபது வயசாச்சு…அதை நீ நினைக்கலை’

‘எந்திரிச்சு போய்யா…. எழுபது வயசுவரை மூளைய காலிச்சட்டி மாதிரி வச்சிருந்தா நீ பெரியாளாயிடுவியா? போய்யா” என்றேன்

சமீபத்தில் எப்போதும் ஒரு மனிதனிடம் நான் அந்த அளவுக்குக் கோபம் கொண்டதில்லை. சற்று நேரம் என் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. சினம் எதுவானாலும் அது சரியானதல்ல. ஆனால் சிறுமையின் முன் சினத்தை கட்டுப்படுத்துவதென்பது என் வரையில் சாத்தியமற்றதாகவே இருக்கிறது. அதற்கு நான் இன்னும் வெகுதூரம் செல்லவேண்டும்..

அவரது அசட்டுத்தனத்தை ஒருபோதும் அவர் புரிந்து கொள்ள மாட்டார். அறிவுத்துறை என்று ஒன்று உண்டு, அதில் எதையாவது அறிவதனூடாகவே நுழைய முடியும் என்ற எளிய உண்மையை ஒரு சராசரித் தமிழனுக்குச் சொல்லிப்புரிய வைக்க முடியாது. அவனுடைய அசட்டுத்தன்னம்பிக்கை அவனை கவசமாக நின்று காக்கும். அதற்குள் நின்றபடி அவன் எவரைப்பற்றியும் கருத்துச் சொல்வான். எவரையும் கிண்டலடிப்பான். ஆலோசனைகளும் மாற்றுக்கருத்துக்களும் தெரிவிப்பான்.இணையத்தில் இந்த ஆசாமியைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் உலவிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இவர் இனிமேல் நவீன எழுத்தாளர்கள் என்றால் ஒருவகை போக்கிரிகள் என்றாவது நினைப்பார். நெருங்க யோசிப்பார். தமிழகத்தில் அந்த ஒரு பாவனை மட்டுமே எழுத்தாளனுக்கு இன்று காவல்.

அவர் சென்றபின் கொஞ்ச நேரம் ஆகியது நான் குளிர.

தேவதேவன் ‘நான் நாஞ்சில்கிட்ட சொன்னேன்…ஜெயமோகன் வாறதுக்குள்ள இந்தாளை கிளப்பி விடுங்கன்னு…அவர் நல்லா முயற்சி செஞ்சார். இவர் போகமாட்டேன்னார்’ என்றார்.

‘எதுக்காக நாஞ்சில்நாடன் கிட்ட சாதி கேட்டார்?’ என்றேன்

‘ரொம்ப நேரம் நாஞ்சில்நாடனை அவமானப் படுத்துற மாதிரி என்னென்னமோ கேட்டிட்டிருந்தார். அண்ணாத்துரைக்கு அமெரிக்காவிலே டாக்டர் பட்டம் குடுத்தாங்கன்னெல்லாம் என்னென்னமோ சொன்னார். எல்லாம் வழக்கமா திமுக மேடையிலே சொல்றது….நாஞ்சில் எல்லாத்தையும் கேட்டுட்டு சும்மா இருந்தார். இவரு சட்டுன்னு தலித்துக்களைப்பத்தி கேவலமா பேச ஆரம்பிச்சார். அவங்கள்லாம் மனுஷங்களே கெடையாது. அவங்கள மேல கொண்டு வந்தா நாடு அழிஞ்சிரும்னு ஆரம்பிச்சார்…அப்பதான் நாஞ்சில் கொஞ்சம் கடுமையா சொன்னார். ஆனா இவரு அதையெல்லாம் கேக்கலை’

பத்தாதாண்டுகளுக்கு முன்பென்றால் அந்தப்பேச்சுக்கு நான் கண்டிப்பாக அறையாமல் அனுப்பியிருக்க மாட்டேன்.அப்படி அறைந்த பல நிகழ்ச்சிகள் செய்தியாகியிருக்கின்றன. இன்று எங்கோ இந்த கீழ்மக்களைப்பற்றிய ஆழமான ஒரு கசப்பு குடியேறி விட்டிருக்கிறது. ஆனால் அவர்களை அக்கணமே மறக்கவும் பழகியிருக்கிறேன்.

எங்கும் நிறைந்திருக்கிறார்கள் இவர்கள். ஆகவே எங்கும் நான் என்னை எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்வதில்லை. எவரிடமும் என்னை அப்படி அறிமுகம் செய்ய அனுமதிப்பதுமில்லை. எத்தனை அனுபவங்கள் !

இதேபோன்ற ஓர் அனுபவம் ஒருமுறை அ.கா.பெருமாளுடன் ரயிலில் சென்றபோது நிகழ்ந்தது.நானும் அ.கா.பெருமாளும் ரயிலில் பேசிக்கொண்டே சென்னை சென்று கொண்டிருந்தோம். ஒருவர் தன்னை ஓர் ஆடிட்டர் என்று அறிமுகம் செய்துகொண்டார். ‘சார் யாரு?’ என்றார்.

நான் என்னை அறிமுகம் செய்துகொண்டு ‘இவரு அ.கா. பெருமாள். தமிழகத்திலே இப்ப இருக்கிற பெரிய ஹிஸ்டாரியன். சுசீந்திரம் தாணுமாலையப்பெருமாள் கோயிலைப்பத்தி ஒரு புத்தகம் எழுதியிருக்கார். அதுக்காக தமிழக அரசு விருது கிடைச்சிருக்கு…அதை வாங்க சென்னை போறார்’ என்றி சொல்லி புத்தகத்தையும் காட்டினேன்

அந்த ஆள் புத்தகத்தை கையால் வாங்கவில்லை. உரத்த குரலில் ஆரம்பித்தார் . ‘சுசீந்திரம் கோயிலுக்கு நான் நாலஞ்சுவாட்டி போயிருக்கேன். அற்புதமான கோயில். அதோட சிறப்பு என்னன்னா அதிலே சிவன் விஷ்ணு பிரம்மா மூணு சாமியும் ஒண்ணா இருக்கு….நல்லா கேட்டுக்கிடுங்க…மூணு சாமி. கோயிலிலே ஒரு விசேஷம் என்னன்னா..’ என்று பேச ஆரம்பித்தார்

கிட்டத்தட்ட அரைமணிநேரம். அசட்டு தெருச்செய்திகளாக கொட்டினார். ஒரு கட்டத்தில் நான் எரிச்சலுடன் இடைபுகுந்து ‘சார் இதெல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்…நீங்க போங்க’ என்றேன்.

‘நான் சொல்றத கேளுங்க…சுசீந்திரம் பக்கம் கற்காடுன்னு ஒரு கிராமம். அங்கே…’ என்று அவர் மேலும் ஆரம்பித்து அரைமணி நேரம் பேசினார்

சட்டென்று நான் பொறுமை இழந்தேன். ‘ஏய்யா, உன்னோட கோழிமுட்டை வாழ்க்கையிலே இதுவரை ஒரு ஹிஸ்டாரியனை பாத்திருக்கியா? அப்டி பாக்கிறப்ப அவர் ஒருவார்த்தை பேசிக்கேக்கணும்னு உனக்கு நெனைப்பில்லை…நீ தெரிஞ்சு வச்சிருக்கிற அச்சுபிச்சு விஷயங்களை அவர்கிட்ட கொட்டணும், இல்லியா? வாழ்க்கையிலே புதிசா ஒரு வரிகூட தெரிஞ்சுக்கிட மாட்டியா?’ என்று ஆரம்பித்து கடித்து குதறி விட்டேன்

அப்படியே தளர்ந்து போய் படுத்துவிட்டார். அவர் வாழ்க்கையில் அப்படி எவரும் நேரடியாகப் பேசியிருக்க மாட்டார்கள்.நான் திட்டியதைக்கேட்டு அவரைவிட அ.கா.பெருமாள் ஆடிப்போய்விட்டார். ‘அப்டியெல்லாம் சொல்லியிருக்கவேண்டாம்…நம்மாளுகளோட கொணம் இதுன்னு தெரிஞ்சதுதானே?’ என்றார்

ஆனால் அரைமணிநேரம் கழித்து அந்த ஆடிட்டரின் மகள் என்னைக் கடந்துசெல்லும்போது அந்தரங்கமாக ஒரு புன்னகை புரிந்துவிட்டுப்போனாள்.

அதற்கு முன் ஒருவர் சுந்தர ராமசாமியை பார்க்கவந்தபோதும் இது நிகழ்ந்திருக்கிறது. இரண்டுமணிநேரம் அவர் சுந்தர ராமசாமிக்கு தமிழிலக்கியத்தில் புதுமைப்பித்தன் மௌனி என்று சிலர் கதைகள் எழுதியிருக்கிறார்கள் என்று கற்பித்தார்.சுந்தர ராமசாமி அவசியம் எட்கார் ஆலன்போ கதைகளை வாசிக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார். ராமசாமி ஒரு ‘வாங்கோ’ தவிர புன்னகை மட்டுமே அளிக்க முடிந்தது.

அவர் கிளம்பும்போது ராமசாமி அறியாமல் நான் பின்னால் சென்றேன். காரில் ஏறப்போன பேராசிரியரை மடக்கி அவர் தன் வாழ்நாளில் கேட்டிராத நாஞ்சில்நாட்டு தமிழில் சில கேள்விகளைக் கேட்டேன். அதன்பின் அவரை ஒருமுறை நான் ஒரு கல்லூரியில் சந்தித்தபோது அவர் முகம் வெளிறியதிலிருந்து நாஞ்சில்தமிழின் வல்லமையை புரிந்துகொண்டேன்.

மீண்டும் மீண்டும் இதேதான் நிகழ்கிறது இங்கே. ஒருவருக்குக் கூட ‘நீங்கள் எழுதுவதென்ன?’ என்று கேட்கத்தோன்றுவதில்லை. வாசித்தவர்கள் , வசிப்புப் பழக்கம் கொண்டவர்கள் மிகக் குறைவு. ஆனால் வாசிக்காதவருக்கு தான் ஒன்றும் வாசிப்பதில்லை என்ற விஷயம் கூடவா தெரியாது?

சொல்லப்போனால் இது ஒரு தமிழ்நாட்டுப் பொது மனநோய். 2010ல் கனடாவில் உஷா மதிவாணன் என்னை ஒரு இந்தியத்தமிழ் நண்பர் குழுவுக்கு அவர்கள் அழைப்பின் பேரில் விருந்தினராக அழைத்துச்சென்றார். என்னை அழைத்தவர்கள் ஈழத்தமிழர்கள். அவர்களின் மூன்று சந்திப்புக்கூட்டங்களில் நான் பேசினேன். தங்களிடமும் எழுத்தாளர் வந்து ஒரு நாள் பேசவேண்டுமென இந்தியத்தமிழர்கள் விரும்பினார்கள் என்று சொன்னார்கள்.

அன்று அங்கிருந்தவர்களில் பாதிப்பேர் மருத்துவர்கள், மீதிப்பேர் பொறியாளர்கள். எனக்கு முன்னதாகத் தெரிந்த நண்பர் வெங்கட் தவிர பிறர் என்னை அறிந்திருக்கவில்லை, அதற்கான எந்த முயற்சியும் அவர்கள் எடுத்துக்கொண்டிருக்கவுமில்லை.

நான் ஏதாவது பேசவேண்டுமென அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்களே பேசிக்கொண்டிருந்தார்கள். எந்த ஒரு புலம்பெயர் தமிழனும் பேசும் விஷயங்கள். ‘நல்லவேளை இந்தியாவிலிருந்து வந்தோம்’ என்று ஒரு சொற்றொடர். ஊரில் இருந்த நாட்களை நினைத்து நெகிழ்ந்து அடுத்த சொற்றொடர். அதன்பின் சாப்பாடு ,சினிமா, தொழில். நான் அவர்கள் பேசும் அந்த அற்பத்தகவல்களை கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தேன்.

பேச்சில் அற்புதமான தெறிப்புகள். ‘சுந்தர ராமசாமி இங்கே எங்க வீட்டுக்கு வந்திருக்கிறார்.சாப்பாடெல்லாம் போட்டிருக்கோம்’ என்றார் ஒரு பேர்வழி.

நான் ‘சுராவா? இங்கே வந்திருக்காரா?’ என்றேன். அந்த ஆளை சுரா பத்து நிமிடம் தாங்கிக்கொண்டிருக்க மாட்டார்.

இன்னொருவர், ‘இல்ல அவரு வேற ஒருத்தர். வேம்பூர் ராமசாமி… ‘ என்று ஏதோ ஒரு பெயரைச் சொன்னார்

டாக்டர் ஏப்பம் விட்டு ‘அப்டியா ரெண்டும் வேறுவேறா…இவரும் நல்ல ரைட்டர்தான்….கவிதையெல்லாம் எழுதுறார்…இப்பக்கூட நெறைய பேரு புதுசா வந்து என்னமோ எழுதுறாங்க…சுஜாதா பாலகுமாரன்…’ என்றார்

அந்த அசமஞ்சத்தனத்தை புரிந்துகொள்ள முடிகிறது. ஏதாவது ஒரு துறையில் கொஞ்சம் பணம் ஈட்டுமளவுக்கு சூழல் இருந்தால், ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் வாங்கிவிட்டால் தன்னை வாழ்க்கையில் வெற்றியடைந்தவர் என நினைத்துக்கொள்வார்கள். அதன்பின் எதுவும் தெரிந்து கொள்ளும் ஆர்வமிருப்பதில்லை. தெரியாதென்ற தகவல்கூட தெரியாது. ஆகவே எங்கும் மிதந்து கொண்டே நுழைய தயங்க மாட்டார்கள்.

நாஞ்சில் அமெரிக்காவில்கூட இப்படி ஒரு ஆசாமியை பார்த்ததாக அவருக்கே உரிய நக்கலுடன் சொன்னார். ‘நீ அமெரிக்கா வருவதற்கு முன் அமெரிக்கா பற்றி எத்தனை நூல்களை வாசித்தாய்?’ என்று ஒருவர் நாஞ்சில்நாடனிடம் கேட்டாராம். அவர் நாஞ்சில்நாடனின் ஒரு வரியைக்கூட வாசித்ததில்லை. அதைப்பற்றி அவருக்கு கவலையுமில்லை. ‘நீங்கள் நாஞ்சில் சம்பத் என்று நினைத்தேன்’ என்றாராம். அவர் அங்கே வசிப்பதனால் வாசிக்க நேர்ந்த சில்லறைப் புத்தகங்களை நாஞ்சில் வாசிக்கவில்லை என்று சுட்டிக்காட்டி ஒரு அற்பப்பெருமிதத்தை அடைந்து திரும்பும் நோக்கம்.

இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? நான் கனடாவிலும், அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் விமானநிலையக் காவலர்களில் இருந்து பரிசாரகர்கள் வரை விதவிதமான வெள்ளையர்களைச் சந்தித்திருக்கிறேன். ஒவ்வொருமுறையும் ஓர் எழுத்தாளன் என்பவனின் இடமென்ன என்று அவர்களுக்குத் தெரிந்திருப்பதையே கண்டிருக்கிறேன். மிகமிகக் கறாரான ஆஸ்திரேலிய சுங்கத்துறையில்கூட எழுத்தாளன் என்றதுமே ஊழியர்களின் பாவனையில் மரியாதை வருவதை கவனித்திருக்கிறேன்.

ஏன், என் இதுநாள் வரையிலான இலக்கியவாழ்க்கையில் எழுத்தாளன்மீது மதிப்பில்லாத, அவன் இடமென்ன என்று அறியாத ஒரே ஒரு ஈழத்தமிழரைக்கூட சந்தித்ததில்லை. ஒரு வரிகூட வாசிக்காத ஈழத்தமிழர்களை நூற்றுக்கணக்கில் சந்தித்திருக்கிறேன். கடுமையான கருத்துமுரண்பாட்டுடன் கோபம் கொண்டு என்னிடம் பேசவந்தவர்களையும் கண்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் எழுத்தாளன் என்ற மதிப்பை இழந்து ஒரு சொல் சொன்னதில்லை, ஒருமெல்லிய பாவனைகூட வந்ததில்லை.

அதைவிட முக்கியமாக ஓர் ஈழத்தமிழர் அப்படிச் செய்யக்கூடும் என்ற சிறிய ஐயம் கூட எனக்கு வந்ததில்லை.
ஒரு வெள்ளையரிடம், ஈழத்தமிழரிடம் , மலையாளியிடம், கன்னடனிடம் என்னை எழுத்தாளன் என அறிமுகம் செய்துகொள்ள் எனக்கு தயக்கமில்லை. ஆனால் ஒருபோதும் தமிழகத் தமிழரிடம் அப்படி என்னை முன்வைக்கும் தைரியம் வருவதில்லை. ஏனென்றால் எழுத்தாளன் என்றால் என்ன ,அவனிடம் எதைப்பேசலாம், எதைப் பேசக்கூடாதென்று அவர்கள் அனைவருக்கும் தெரியும்.

நாம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம்? நம்மிடம் மிக ஆழமான உளவியல் கோளாறு ஏதோ உள்ளது. அறிவுக்கு எதிரான ஒரு நரம்பு இறுக்கமா அது?

முந்தைய கட்டுரைகமகம்
அடுத்த கட்டுரைகடிதங்கள்