கன்னிநிலம் – நாவல் : 14

 
 
14

என் அறைக்குள் செல்ல நான் அப்போது விரும்பவில்லை. நான்கு சுவர்களுக்குள் அடைபடுவதை மனம் எதிர்த்தது. வெட்டவெளியில் வானத்தின் கீழ் நிற்க ஏங்கினேன். ”கார்ப்பொரல் ப்ளீஸ்…என்னை அந்த அறைக்குக் கொண்டு செல்லாதீர்கள்…ஐ ஹேட் இட்”என்று கெஞ்சினேன்.

”நோ ஆர்டர்ஸ் ·பர் தட் ஸார்”என்றான் அவன்

”என்னை சிறையில்தானே போடவேண்டும்… இந்த வராந்தாவில் சங்கிலியால் கட்டிப்போடுங்கள்…. ப்ளீஸ். நான் வானத்தை பார்க்கவேண்டும்….”

”ஆர்டர் இல்லை சார்” என் புஜத்தைப்பற்றினான்

”மேஜரிடம் நான் கேட்கிறேன்….நான் கெஞ்சியதாகச் சொல்லுங்கள் ப்ளீஸ்”

ஆனால் அவன் அறைக் கதவை திறந்து ” ப்ளீஸ் கெட் இன் சர்” என்றான். அவன் குரல் கடுமையாகியது ” டு வாட் ஐ ஸே”

நான் தயங்கியபடி உள்ளே சென்றேன். கதவு மூடுவதற்குள் அதை தடுக்கும்பொருட்டு கதவைப்பற்றிக் கொண்டேன். ”அப்படியானால் கதவை மூட வேண்டாம். கட்டிப்போடுங்கள் . மூடவேண்டாம்…”

”நோ ஆர்டர்ஸ் சர்”

கதவை மூடி அவர்கள் சென்றதும் நான் சோர்ந்து சுவர் அருகே சென்று அமர்ந்தேன். கைகளால் முகத்தை மூடினேன். என் உடல் அதிர்ந்தபடியே இருந்தது.

ஜன்னலுக்கு அப்பால் ரேடியோ ஒலி கேட்டது. சிலோன் ரேடியோவா? ” ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்…” ஏராளமான பேர் சேர்ந்து பெரும் கோரஸாக அதைப்பாடினார்கள். பாடவில்லை, முழங்கினார்கள். முழக்கம் என்னைச் சூழ்ந்து அறையை நிரப்பியது. நான் எழுந்து ஜன்னல் மீது தொற்றி ஏறி வெளியே பார்த்தேன். மதூக மணம் ஜன்னல் வழியாக குளிர் காற்றுடன் கலந்து வந்தது. நிலவு தேய்ந்து பெங்காலி சங்குவளையல் துண்டுபோல வானில் நின்றது. அந்த பாடல் இப்போது மிக மிக சோகமாக இழைந்தது. ” இந்தப்பூக்களின் வாசமெல்லாம் ஓர் மாலைக்குள் வாடிவிடும். நம் காதலின் வாசம் மட்டும் எந்த நாளிலும் நிலைத்திருக்கும்”

நான் மனம் நெகிழ்ந்து அழுதேன். கம்பிகளில் கன்னம் அறுபட முகத்தைப் பதித்து வானத்தை முடிந்தவரை எட்டிப்பார்த்து கண்ணீர் கொட்ட தேம்பி அழுதேன்.

திடீரென்று நிலவின் ஒளி அதிகரித்தது. ” ” ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்… உன் காலடி ஓசையிலே …” இசை பெருத்து வலுத்து ஓங்கியது. நிலவு வளர்ந்தது. ஆமாம், பிரமை இல்லை. உண்மையாகவே வளர்ந்தது. முழுநிலவாக ஆயிற்று. செடார் மரங்களும் செடிகளும் இலைச்சுடர்கள் ஒளிர எழுந்தன. காம்ப் கூடார கூரைகளும் பாலொளியில் நனைந்து பளபளத்தன. முழு நிலவில் காம்ப் முற்றாகத்தூங்க அமைதி எங்கும் நிரம்ப அந்த இசை மட்டும் குரலற்ற பாடலாக மாறி பின் ஒலியற்ற பாடலாக சுழன்றபடியே இருந்தது.

நான் காலையில் ஜன்னலுக்கு கீழே கிடந்தேன். கதவு திறந்து முழு சீருடையில் வந்த நாயர் என்மீது குனிந்து ”லெ·ப்டினெண்ட்”என்றான்

எழுந்து அவனை வெறித்துப் பார்த்தேன்.

”கமான் லெட் அஸ் ரெடி. ஷி இஸ் லீவிங் டுடே”என்றான்.

நான் புரியாமல் பார்த்தேன்.

”நேத்து ராத்திரியே ஜ்வாலாவோட ஆட்கள் வந்தாச்சு. இண்ணைக்கு காலம்பற அவள கூட்டிட்டு போறாங்க…”  

நான் துடித்து எழுந்து ” எங்க? எங்க ஜ்வாலா? எங்க அவ?”என்றேன். கதவை நோக்கி ஓடமுயன்றேன்

நாயர் என்னைத் தடுத்தான். ”நீங்க பல்தேய்ச்சு ரெடியாகுங்க….”

நான் வேகமாகப் பல்தேய்த்து குளித்து வேறு சீருடை அணிந்தேன்.

”இது லெ·ப்டினெண்ட் கர்னலோட ஆர்டர். நீங்க அவ போறதைப்பாக்கணும். அப்பதான் உங்க மனசில உள்ள பிரமைகள் இல்லாம ஆகும். அவ போறா லெ·ப்டினெண்ட். அனேகமா அவளை மியான்மாருக்கு அனுப்பிடுவாங்க. ஒரு சேப்டர் முடியுது. திரும்ப நீங்க அவள பாக்கவே முடியாது…அதை நீங்க இன்னைக்கு உணர்ந்தாகணும்” நாயர் கூரிய பார்வையுடன் சொன்னான்.

நான் என் உடல் மெல்ல நடுங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். டீ கொடுத்தார்கள். என்னால் டம்ளரை கைகளால் பற்ற முடியவில்லை. தளும்பியது. மேஜைமீது வைத்துவிட்டேன்.

”ஈஸி… லெ·ப்டினெண்ட் சார். இது உங்க வாழ்க்கையில ஒரு முக்கியமான நாள். கனவு கலையற வலியை நான் புரிஞ்சுக்கறேன். ஆனா கனவுன்னா அதிலேருந்து வெளியே வந்துதானே ஆகணும் ? ”

மீண்டும் காரிடாரில் நடக்கும்போது நாயர் சொன்னான் ” இது லெ·ப்டினெண்ட் கர்னலோட ஏற்பாடு. அவர் சில விஷயங்கள தீர்மானமா சொல்லியிருக்கார். நீங்க அவகிட்டே பேசக்கூடாது. ஒரு வார்த்தைகூட பேசக்கூடாது. அந்த கண்டிஷன்மேலத்தான் நீங்க அவளை
பாக்கமுடியும்…”

நான் நின்றுவிட்டேன்

”ஆமா இதில மாற்றமே இல்ல”

”நான் அவகிட்டே பேசணும்”

”நோ. இனிமே மீண்டும் ஒரு டிராமா தொடங்கிறத லெ·ப்டினெண்ட் கர்னல் விரும்பல. கண்டிப்பா பேசறதுக்கு பெர்மிஷன் இல்லை…” நாயர் சொன்னான்.

”ப்ளீஸ்!” என் குரல் உடைந்தது

”நோ” என்றான் நாயர் ”நான் ஒரு ஒரு சோல்ஜர். எனக்கு என்ன ஆர்டரோ அதைத்தான் நான் செய்வேன்.அதில எந்த காம்ப்ரமைஸ¤ம் இல்லை. நீங்க ஒரு வார்த்தை அவ கிட்ட பேசக்கூடாது. அதுக்குத் தயார்னாத்தான் நாம இப்ப போறோம். ”

”ஒரு வார்த்தை…ஒரு வார்த்தை… நாயர்”

”ஒரு சைகைக்கு கூட பெர்மிஷன் இல்லை .ஸாரி…”

நான் விம்மியபடி நின்றேன்

”என்ன சொல்றீங்க?”

“ம்”

” நீங்க எனக்கு சத்தியம் செய்து குடுக்கணும்…. ” நாயர் கைநீட்டினான்.

‘நாயர்!”

“ப்ளிஸ் பிள்ளைவாள்….. சத்தியம் செஞ்சு குடுக்கணும்…அத நீங்க மீறமாட்டீங்கன்னு எனக்குத்தெரியும்”

நான் அவன் கைக¨ளைப் பிடித்து ”சத்தியம்”என்றேன்

என்னை அவன் கர்னலின் அறைக்கு அருகே மேஜரின் காபினுக்குள் கொண்டுசென்றான். அதன் கதவு கண்ணாடியாலானது. நான் உள்ளே சென்றதும் ஒரு ஜவான் வந்து அதை வெளியே பூட்டி ஒரு ஸ்டிக்கர் டேப்பை ஒட்டினான்.நாயர் அதை உள்ளே பூட்டி ஸ்டிக்கர் டேப்பை ஒட்டினான்.

”எதற்கு இது?”

லெ·ப்டினெண்ட் கர்னல்  ஆர்டர். டேக் நோ சான்ஸஸ்னார்… ” என்றான் நாயர் ”உக்காருங்க பிள்ளைவாள்”

நான் இரும்பு நாற்காலியில் அமர்ந்தேன். வெளியே காரிடாரையே பார்த்தேன்.

காப்டனும் மேஜரும் வந்தனர். தங்களுக்குள் மெல்ல பேசியபடி என்னை ஓரக்கண்ணால் பார்த்தனர். லெ·ப்டினெண்ட் கர்னலின் அறைக்குள் சென்று அமர்ந்தனர். சற்று நேரம் கழித்து லெ·ப்டினெண்ட் கர்னல் தன் ஏ.டி.சி தொடர வேகமாக வந்தார். தலைகுனிந்து நடந்து தன் அறைக்குள் நுழைந்தார். அந்த அறையின் கண்ணாடிக்கதவு வழியாக உள்ளே அவர்கள் சல்யூட் அடிப்பதும் அமர்வதும் தெரிந்தது. லெ·ப்டினெண்ட் கர்னல் அவர்களிடம் கவலை தோய்ந்த முகத்துடன் ஏதோ சொன்னார். அவர்கள் ஏதோ சொல்ல அவர் மெல்லிய புன்னகையுடன் என்னைப் பார்த்தார்.

நிமிடங்கள் மெல்ல கனத்து ஊர்ந்தன.

கார்பைன் ஏந்திய எட்டு ஜவான்களால் அழைத்துவரப்பட்ட ஆறு மணிப்பூர் போராளிகள் வந்தனர். ஒருவர் வயதானவர். அவர்களிடம் ஆயுதங்கள் இல்லை.

அவர்கள் லெ·ப்டினெண்ட்     கர்னல் காபினுக்குள் சென்றனர். அங்கே அமர்ந்தனர்.

”ஏ எல் எ·ப் போட ஏரியா கமாண்டர் அந்த ஆள்”என்றான் நாயர் .” சீரு தாபான்னு பேர்.  அவரையே அனுப்பியிருக்காங்க….” 

பெரிய தாம்பாளத்தில் பிஸ்கட்டுகளும் கெட்டிலில் டீயுமாக இரு சப்ராஸிகள் உள்ளே சென்றனர்.

”எங்க ஜ்வாலா?” என்றேன்

”வருவாள். ” நாயர் சொன்னான்.

சற்று நேரத்தில் இரு ஜவான்களால் ஜ்வாலா கூட்டிவரப்பட்டாள். அவள் முகம் வீங்கியது போலிருந்தது. புதிய ஷர்ட்டும் கவுனும் அனிந்திருந்தாள். தீ நிறமான அந்த உடையில் அவள் தழல் விட்டு எரிந்துகொண்டிருப்பது போல பட்டது. முகமும் கூந்தலும்கூட எரிந்தன. அவள் நடக்கும்போது தழல் ஓசையிலாது  எரிந்து செல்வது போலிருந்தது. ஜ்வாலாமுகி – அதற்கு என்ன பொருள்? நெருப்பை நோக்குபவள். நெருப்பே முகமானவள்…

அவள் உள்ளே சென்றாள். லெ·ப்டினெண்ட் கர்னல் அவளை வரவேற்று அமரச்செய்தார். சில சொற்கள் சம்பிரதாயமாகப் பேசப்பட்டன. மௌனை திரைப்படம் போல் நான் உணர்ச்சிகளை மட்டும் கண்டு கொண்டிருந்தேன். என் மனம் இரைந்து கொண்டிருந்தது.

அவர்கள் கும்பலாக எழுந்து வெளியே வந்தனர். கிழவன் ஜ்வாலாவின் தோள்களில் கையை வைத்து மெல்ல அணைத்துக் கொண்டு நடந்தான்.

லெ·ப்டினெண்ட்  கர்னல் கிழவனின் கையை குலுக்கினார். மேஜரும் காப்டனும் அவரிடம் கைகுலுக்கினர். ஜ்வாலா குனிந்த தலையுடன் அசையாமல் நின்றாள். அவள் கன்னத்தில் பூனைமயிர் மெல்லிய தங்கப்பிசிறாக நிற்பதைக் கண்டேன். அழுந்திய சிறு உதடுகளில் உள்ளே குமுறும் அழுகையை உணர்ந்தேன்.

”அவள் என்னை பார்க்கல….நாயர்…அவ என்னை பார்க்காமலே போயிடுவா” நான் என் நாற்காலி கைப்பிடியை இறுகப்பற்றினேன்

”அவளுக்கு தெரியும்” என்றான் நாயர் ”அவ உங்களை பாத்தாச்சு. ப்ளீஸ் நீங்க எந்திரிக்கக் கூடாது. யூ மேட் எ ப்ராமிஸ்”

”இல்ல… நீங்க அவகிட்டே சொல்லல… என்ன ஏமாத்தறீங்க”

”இல்லை லெ·ப்டினெண்ட். சொல்லியிருக்கோம். கூடவே அவளோட ஆட்கள் இருக்காங்க… அவ உங்களை பொருட்படுத்தாமத்தான் போவா…”

”நோ நோ… ஜ்வாலா.” நான் எழப்போனேன்

”நீங்க சத்தியம் பண்ணியிருக்கீங்க பிள்ளைவாள்…”

நான் அமர்ந்தேன். என் உடம்பே அதிர்ந்தது. மேஜைமீதிருந்து ஒரு பேனாவை எடுத்தேன் அது நடுநடுங்கியது. மேஜைமீது போட்டேன்

அவர்கள் திரும்பினர். ஜ்வாலாவின் கண்கள் இயல்பாக வந்து என்னைத் தொட்டன. ஒரு கணம், அல்லது அதில் ஆயிரத்தில் ஒரு பகுதி. நான் எழப்போனேன். உடல் அசையவில்லை.

அவள் உறைந்த முகத்துடன் திரும்பிக் கொண்டாள். அவர்கள் படி இறங்கினார்கள். அவர்களுடைய டொயோட்டா ஜீப் வந்து அருகே நின்றது. அதில் எம்16 ரை·பிள்களுடன் இருவர் இருந்தனர். கிழவனைத்தவிர பிறர் அதில் ஏறி தங்கள் ரை·பிள்களை எடுத்துக் கொண்டார்கள்.

கிழவர் லெ·ப்டினெண்ட் கர்னலை நோக்கி புன்னகையுடன் கையசைத்தார்.

ஜ்வாலா தலைகுனிந்து படியிறங்கியபோது அவள் உடைகள் படபடப்பதைக் கண்டேன் தீ போல . அவள் கால்கள் படிகளில் மிதித்தபோது என் நெஞ்சில் அந்த எடை அழுந்தியது. உடையின் தீ… தழல்….அவள் எரிந்து சாம்பலாகிவிடுவாள் என்று பட்டது….

கடைசிப்படி இறங்கியதும் எதிர்பாராதபடி ஜ்வாலா உச்சக்கட்ட வெறியுடன் அலறியபடி என்னை நோக்கி திரும்பினாள். அவள் கழுத்துநரம்புகள் புடைப்பதையும் முகம் கண்ணீருடனும் ஆவேசத்துடனும் வலிப்பு கொண்டிருப்பதையும் கண்டேன். அவளை கிழவர் பாய்ந்து புஜத்தைப் பற்ற ஒரே வீச்சில் அவரை தூக்கி சரித்துவிட்டு துப்பாக்கி முனைகளை தட்டி வீசி கண்ணாடிச்சுவர் நோக்கி வந்தாள். நான் எழுந்து கண்ணாடி மீது மோதி கைவைத்து நின்றேன். அவள் ஓசையிலாது கதறியபடி கண்ணாடியை வந்து மோதினாள். வேகமாக கையால் கண்னாடியை அறைந்தாள். தலையால் …. நெற்றி உடைந்து ரத்தம் மூக்கில் சிதறுவதைக் கண்டேன். குங்குமம் போல. இரு மணிப்பூர் போராளிகள் வந்து அவளைப் பிடித்தனர். அவள் திமிறி அவர்களை உதறி மீண்டும் பாய்ந்து வந்து கன்ணாடியை தலையால் மோதினாள். கண்ணாடி விரிசல் விட்டது.

”நெல்… மறக்காதீர்கள்… மறக்காதீர்கள் நெல்”என்று அவளது மெல்லிய அலறலைக் கேட்டேன்

விரிசலில் வாயை வைத்து நான் ” மறக்க மாட்டேன்…. மறக்க மாட்டேன்…ஜாவாலா ! ஜ்வாலா ! ”என்று கத்தினேன்

நாயர் ” பிள்ளைவாள்! ப்ளீஸ்! பிள்ளைவாள்! ப்ளீஸ்!  ”என்று என்னை பிடித்து இழுத்தான்.  ஆவேசமாக” ப்ளிஸ் லெ·ப்டினெண்ட் காப்டன்….”என்று கூவினான்’

நான் ”ஐ யம் ஸாரி”என்று அமைதியானேன்

அவர்கள் அவளை ஒரு திமிறும் குழந்தையை தூக்குவதுபோலக் கொண்டுசென்றார்கள். டொயோட்டா வெண்புகை விட்டு சீறி அதிர்ந்து கிளம்பிச்சென்றது. சூழ்ந்த ரைபிள் பயனெட் காட்டுக்குள் ஜ்வாலாவை கடைசிமுறையாகக் கண்டேன். அவளது நீட்டிய கையின் அசைவை…

அப்படியே மேஜைமீது முகம் புதைத்துக் கொண்டேன். கண்ணீர் மேஜைமீது கொட்டியது

”லெ·ப்டினெண்ட் சார்” நாயர் கூப்பிட்டான்

நான் அப்படியே அமர்ந்திருந்தேன்

”லெட் அஸ் கோ”

ஒரு ஜவான் வெளியே டேப்பை எடுத்து கண்ணாடிக் கதவை திறந்தான். நாயர் உள்ளே திறந்தான். வெளியே இருந்து ஒலிகள் உள்ளே பீரிட்டன.

லெ·ப்டினெண்ட் கர்னல் ”அவரை இங்கே கொண்டு வாருங்கள்”என்று சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்றார்

”எழுந்திருங்கள் லெ·ப்டினெண்ட் …”என்றான் நாயர். நான் எழுந்தேன். முகத்தை துடைத்துக் கொண்டேன். மேஜைக் கண்ணாடியில் என் கண்ணீர்துளிகள் கண்ணாடிமுத்துக்கள் போலஓளியுடன் சிதறிக்கிடந்தன

லெ·ப்டினெண்ட் கர்னல் அறையில் காப்டனும் மேஜரும் ஆம்ர்ந்திருந்தனர். மேஜர் முகம் சிவந்து கையில் பேப்பர் வெயிட்டை வைத்து உருட்டிக் கொண்டிருந்தார்.

லெ·ப்டினெண்ட்  கர்னல்”டேக் யுவர் ஸீட் லெ·ப்டினெண்ட்”என்றார்.நான் அமர்ந்தேன்

”என்ன சொல்வதென்று தெரியவில்லை. ”என்றார் லெ·ப்டினெண்ட்  கர்னல் ”ஆனால் ஒரு சேப்டர் முடிகிறது.அதை நீங்கள் உணர்ந்தாகவேண்டும்”

”நோ. அது அபப்டி முடியாது”என்றேன்.”நான் உயிரோடு இருப்பதுவரை அது முடியாது”

” லெ·ப்டினெண்ட், நாங்கள் இதை இந்த அளவுக்கு விட்டுக்கொடுத்து பார்க்கவேண்டிய அவசியமே இல்லை.  உங்களை இதற்குள் நாங்கள் சுட்டுத்தள்ளியிருக்கவேண்டும். சட்டப்படி கோர்ட் மார்ஷியலுக்கு அனுப்பியிருக்கவேண்டும்…. எங்களால் முடியவில்லை. பிகாஸ்….பிகாஸ் ஸ்டில் வி ஹேவ் எ லவ் ஆன் யூ”  லெ·ப்டினெண்ட்  கர்னல் ஒரு கணம் தன் மனதை கட்டுப்படுத்திக் கொண்டார். தமிழில் நெகிழ்ந்த குரலில்  ”அதை நீங்க புரிஞ்சுக்குவீங்களா? இல்ல அந்த பொண்ணோட லவ் தவிர எதுவுமே உங்களுக்கு புரியாதா”

”நான்…”

”இவனைப்பாருங்கள்… நாயர். இவன் தான் உங்களைப் பிடிச்சவன். உங்களை துரோகீன்னு தண்டிச்சா அதைக் கண்டுபிடிச்சதுக்காக இவனுக்கு இன்னும் ஒரு பிரமோஷன் கிடைக்கும். காப்டன் ஆயிருவான். ஆனா சேம்பருக்குவந்து என் காலில வந்து விழுந்து அழுதான்.  உங்களுக்கு பரிஞ்சு பேசினா இவன் மேலேயும் சந்தேகம் வரும். ஆனா அதைத்தெரிஞ்சுக்கிட்டே உங்களுக்காக உயிர்ப்பிச்சைகேட்டு அழுதான்…  உங்களை மாத்திக்காட்டுறேன்னு உங்க கிட்ட வந்தான். இவனோட அன்புகூட உங்களுக்கு முக்கியமில்லையா?  நாடு குடும்பம் நட்பு எல்லாத்தையும்விட பெரிசா நீங்க சொல்ற அந்த பிளாட்டானிக் லவ்?”

என் தொண்டை அடைத்தது. சட்டென்று திரும்பி நான் நாயரின் கைகளைப் பற்றினேன்.”தெரியும் சார். ஐ நோ ஹிம்…”அதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை. ”…ஆனா …ஆனா அவள மறக்க என்னால முடியாது. மறந்தா நான் இல்லை. நான் அப்டியே செத்து உலர்ந்து சருகு மாதிரி ஆயிடுவேன்….”

”புல் ஷிட்”என்றார் மேஜர் வெறுப்புடன்.

”கீப் கொயட்”என்றார் லெ·ப்டினெண்ட் கர்னல்

”ஐ வில் கீப் கொயட் சார்” மேஜர் கடும் சினத்துடன் சொன்னார் ”பிகாஸ் ஹி இஸ் எ டமில் ஆண்ட் யு ஆர் ஆல்ஸொ எ டமில்”

”வாட் யூ மீன்?”

”ஐ மீன் வாட் ஐ மீன்….இதுவே ஒரு பஞ்சாபியாக இருந்தால் இதற்குள் நாயை சுடுவதுபோல சுட்டுத்தள்ளியிருப்பீர்கள்.”

”நோ மேஜர். நோ. நான் ஆர்மிக்கு வந்து இருபத்தேழுவருடமாகிறது. என்றுமே நான் அப்படி இருந்தது இல்லை. இவர்கள் நம் பிள்ளைகள். இவர் வயதில் எனக்கும் ஒரு மகன் இருக்கிறான்.”

மேஜர் தலையை அதிருப்தியாக ஆட்டினார்.

நான் எழுந்தேன். அதை புரிந்துகொண்டு ஜவான் கார்பைனுடன் அருகே வந்தான்.

” பாத்ரூம்? இங்கேயே நீங்க போலாம்” என்றார் லெ·ப்டினெண்ட் கர்னல்

நான் கதவை திறந்து பக்கவாட்டு அறைக்குள் சென்றேன். குரல் கேட்டது.

”பிளாட்டானிக் லவ். அதைப்பற்றிக் கேட்டதோடு சரி. இப்போதுதான் பார்க்கிறேன் . இட் இஸ் ரியலி எ மேட்னெஸ்.. மேட்னெஸ் டு த கோர்”

நான் திரும்பினேன்

நாயர் ”சார்”என்றான்

“எஸ்” என்றார் லெ·ப்டினெண்ட்  கர்னல்

“எங்க ஊரில இதுக்கு கைவிஷம்னு சொல்லுவாங்க…. அந்த ஆதிவாசிகள் ஏதாவது…”

”வசிய மருந்து?”

”ம்”

”அதுக்கு?”

“யாராவது இதைப்பத்தி தெரிஞ்சு பாக்கிறவங்க கிட்ட காட்டினா…”

“மந்திரவாதிகள்ட்ட?”

“ம்”

“புல் ஷிட்! வாட் யூ ஸே?” என்றார் மேஜர்.

காப்டன் ”ஆக்சுவலி நானும் அதைத்தான் நினைத்தேன்.  அவர் கண்களைப் பாருங்கள். ஒரு வெறி இருக்கிறது. போதை மருந்து உண்பதுபோல… தேர் இஸ் சம்திங்”

நான்  வெளியே வந்து அவர்களருகே சென்று ”நோ சார். ஐயம் கம்ப்லீட்லி சேன்”என்றேன். ”எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை. நான் முழுக்கமுழுக்க தெளிவா இருக்கேன்”

”ஓக்கெ.. ஓக்கே. இப்ப நீங்க போய்ட்டு வாங்க”

நான் திரும்பும்போது அறையே பதற்றமாக இருந்தது. மேஜர் வயர்லெஸ் மைக்கில் ”வாட் இஸ் இட் ? டாமிட்!” என்று கூவிக் கொண்டிருந்தார்

லெ·ப்டினெண்ட் கர்னல் என்னைப்பார்த்து ”அவரை அறைக்குக் கொண்டுசெல்லுங்கள்”என்றார்

நாயர் என்னைப்பிடித்து ”கமான்”என்றான்

மேஜர் வெடித்தார் ” டாமிட்…இட் இஸ் எ சீட்! மை காட்!” கர்னலிடம் ” அது உண்மைதான் லெ·ப்டினெண்ட் கர்னல்,  நேபாகுமார் நேற்று காலையிலேயே கொல்லப்பட்டுவிட்டார். அவருடைய லெ·ப்டினெண்ட்  … தலைமைக்கு வந்துவிட்டான்…. ”

”ஓ நோ”என்றார் லெ·ப்டினெண்ட் கர்னல். என்னை பார்த்து ”டேக் ஹிம் அவே”என்றார்”அப்படியானால் இன்று இவளைக்கூடிச்சென்ரவர்கள் யார்? எனக்கு ஒன்றுமே புரியவில்லை” என்றார் மேஜர்.

இரு ஜவான்கள் என்னை இழுத்தார்கள். நான் திமிறி ”ஜ்வாலா… ஜ்வாலாவுக்கு என்ன ஆயிற்று ? ”என்றேன்

” அவர்களின் தலைமையை தீர்மானிப்பவர்கள் பர்மியர்கள்…அல்லது சீனா… நேபாகுமார் நம் மேஜரை விடுவித்ததுமே அவர்கள் அவர்மீது ஐயப்பட ஆரம்பித்திருப்பார்கள். உடனே தலைமையை மாற்றிவிட்டார்கள்.” மேஜர் சொன்னார். காப்டனிடம் ” ஆர்டர் த கம்பெனி டு சேஸ் தெம்…”என்றார்

காப்டன் “எஸ் சார்”என்று சல்யூட் வைத்து வெளியே பாய்ந்தார்.

”அப்படியானால்…” லெ·ப்டினெண்ட் கர்னல் என்னைப்பார்த்து ”டேக் ஹிம் அவே” என்று சீறினார்

என்னை தரதரவென இழுத்து வெளியே கொண்டுவந்தனர். நான் ”ஜ்வாலா ஜ்வாலா…அவளுக்கு என்ன ஆச்சு…” என்று கூவி திமிறினேன்

நாயர்”கூல் கூல்…நான் எல்லாவற்றையும் வந்து சொல்கிறேன்   …நீங்கள் சும்மா இருந்தால் எல்லா தகவலையும் சொல்கிறேன்”என்றான்

மீண்டும் என் அறை. என்னை கட்டினார்கள். கதவை மூடவில்லை. நாயர் வெளியே ஓடினான். நான் சுவரில் ஓங்கி கைகலால் அறைந்து ”ஜ்வாலா ! ஜ்வாலா ! ஜ்வாலா! ஜ்வாலா ! ”என்று கூவினேன்.

நாயர் உள்ளே வந்தான்

”நாயர்!ஜ்வாலா ? ”

”அவர்கள் ஜ்வாலாவின் அப்பாவைக் கொன்று விட்டார்கள். நம்முடைய அதிகாரிகளை விடுவித்ததை மியான்மாரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கொல்ல உத்தரவிட்டுவிட்டார்கள். அடுத்த தலைவன் வந்துவிட்டான். ”

”ஜ்வாலாவை யார் கொண்டுபோனது?”

“அந்த இரண்டாவது தலைவனின் ஆட்கள். அது ஒரு புத்திசாலித்தனமான நாடகம்”
நான் பிரமை பிடித்து நின்றேன்

”அவளைக் கொல்ல மாட்டார்கள். அவளிடம் நம் முகாம் பற்றிய தகவல்கள் இருக்கின்றன….”

“சித்திரவதை செய்வார்கள்! ” நான் வீரிட்டேன்.

நாயர் தலை குனிந்தான்

நான் மிருகம் போன்ற பயங்கரக் குரலில் ” ஜ்வாலா!”என்று அலறினேன். சங்கிலியை பிடித்து இழுத்தேன். என் நெற்றியை ஓங்கி ஓங்கி விலங்கால் அறைந்தேன். சொட்டும் குருதி என் கண்களை மறைத்தது.

நாயர் வெளியே போய் கம்பெனி டாக்டருடன் வந்தான். ஏழெட்டு ஜவான்கள் என்னை பிடித்து அமுக்கினர். டாக்டர் என் தொடையில் ஊசியை செருகினார். பெதடின் அல்லது மார்பின்.

நான் நாயரின் கனத்த புஜங்களைப் பிடித்திருப்பதைத்தான் கடைசியாக உணர்ந்தேன்.

 

[more]

முந்தைய கட்டுரைகன்னிநிலம் கடிதங்கள்
அடுத்த கட்டுரைகன்னிநிலம் – நாவல் : 15