ஊழலுக்கெதிரான அண்ணா ஹசாரே போராட்டம் ஆரம்பித்த நாட்களில்தான் சுனீல் கிருஷ்ணன் நெருக்கமாக ஆனார். அதற்கு முன்னரே வாசகராக தெரிந்தவர்.காரைக்குடியில் ஆயுர்வேத மருத்துவராக இருக்கிறார். அவரது குடும்பம் அரிமளம் என்ற ஊரைச்சேர்ந்தது. அவரது முன்னோர்களும் தந்தையும் ஆயுர்வேத மருத்துவர்கள். அண்ணா ஹசாரேவுக்காக ஏதாவது செய்யவேண்டுமென ஆசைப்பட்டார். விளைவாக அவர் அண்ணா ஹசாரேவுக்காக ஓர் இணையதளத்தை ஆரம்பித்தார். பின்னர் அது காந்திக்கான இணையதளமாக ஆகியது.
[சுனீல் கிருஷ்ணன் தம்பதி]
காந்தி டுடே என்ற தளம் அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. பொதுவாக ஓர் உற்சாகத்தில் இணையதளங்களை தொடங்குவது எளிது. விடாப்பிடியாக நடத்துவது கடினம், ஏனென்றால் காந்தியைப் பற்றிய தீவிரமான கட்டுரைகளை மட்டுமே வெளியிடும் ஒரு தளத்துக்கு அதிக வாசகர்கள் வரமாட்டார்கள். ஒரு கட்டத்தில் எதற்காக இதை நடத்துகிறோம் என்று தோன்றிவிடும். அத்துடன் அதில் பிரசுரிப்பதற்காக கட்டுரைகளை மொழியாக்கம் மூலம் உருவாக்கவும் வேண்டும்.
சுனீல் கிருஷ்ணன் அதை ஓர் அர்ப்பணிப்புடன் செய்தார். அத்தகைய முயற்சிகளுக்கு மெல்ல மெல்ல முக்கியத்துவம் உருவாகி வரும். இன்று காந்திடுடே தமிழில் ஒரு முக்கியமான இணையதளமாக ஆகிவிட்டிருக்கிறது. அதற்கு தொடர் வாசகர்கள் இருக்கிறார்கள். முக்கியமான ஒரு ஆவணத்தொகை அது.
சுனீல் கிருஷ்ணனின் திருமணம் சென்ற மே 23 ஆம் தேதி பாண்டிச்சேரியில் நடந்தது. சுனீல் கிருஷ்ணன் சொல்புதிது குழும நண்பர். அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் நெருக்கமானவர். ஆகவே குழும நண்பர்கள் திரண்டு வந்திருந்தனர். சென்னை , பெங்களூர், கோவை ,சேலம், ஈரோட்டிலிருந்தெல்லாம் வந்த நண்பர்களை பாண்டிச்சேரியில் உபசரித்து தங்கவைக்கும் பொறுப்பை கடலூர் சீனுவும் சிவாத்மாவும் ஏற்றுக்கொண்டர்கள். சிவாத்மா என்னும் சிவராமன் கட்டிட வரைவாளர். அவரது மனைவி ராகி எங்களூர். திருவட்டார் அருகே ஆற்றூர்.
நான் மலையாள சினிமா வேலைகளுக்காக கிளம்பி பலநாட்களாகி விட்டிருந்தன. எர்ணாகுளத்தில் இயக்குநர் ஜோஷி மகன் திருமணத்துக்குச் சென்றேன். அங்கிருந்து திருவனந்தபுரம். திருவனந்தபுரத்திலிருந்து விமானத்தில் சென்னை. விமான நிலையத்துக்கே நண்பர் ராஜகோபாலனும் ஸ்கந்தநாராயணனும் வந்திருந்தனர். வாடகைக்காரில் பாண்டிச்சேரிக்கு 22 ஆம் தேதி மதியம் வந்து சேர்ந்தோம். மாலைக்குள் இருபத்தைந்து நண்பர்க்ள் வந்து கூடிவிட்டார்கள்.
விடுதியறையின் மேலே ஒரு பொதுத்தங்குமிடத்தில் அனைவரும் தங்க ஏற்பாடு. நாஞ்சில்நாடனுக்கும் தேவதேவனுக்கும் தனியறை. தரையில் விரிக்கப்பட்ட மெத்தைகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். நண்பர்கள் வந்து கொண்டே இருந்தனர். மாலையில் திருமண வரவேற்புக்குச் சென்றோம். அங்கிருந்து பாண்டிச்சேரி அருகே தனிமையான ஒரு கடற்கரைக்கு. நிலவொளியில் கடல் அலையடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டு பேசிக்கொண்டிருந்தோம்.
அன்றிரவு பன்னிரண்டுமணி வரை பேச்சு. இந்தவகையான உரையாடல்களுக்கு ஒரு முறை உள்ளது. அரைமனிநேரம் சிரிப்பு கிண்டல் என்று செல்லும். உடனே அதைப்பற்றிய பிரக்ஞை ஏற்பட்டு மெதுவாக தீவிரமான உரையாடலுக்குத் திரும்பும். அதன் உச்சியில் இருந்து மீண்டும் வேடிக்கை. வேடிக்கையான பேச்சுகள் நடுநடுவே வருவதனால் நேரம் வீணாகிறது என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவை அங்கே கூடியிருப்பவர்களிடையே ஒரு இணக்கமான சூழலை நட்பை உருவாக்குகின்றன. அவை அந்த தீவிரமான உரையாடலுக்கான அழகிய களமாக அமைகின்றன.
சமீபகாலமாக நண்பர்களின் திருமணங்களில் என்னுடைய ஒரு நூலை தேங்காய்ப்பையுடன் அன்பளிப்பாகக் கொடுக்கும் வழக்கம் உருவாகி வந்திருக்கிறது. சங்கசித்திரங்கள், வாழ்விலே ஒருமுறை, அறம் போன்ற நூல்கள் அவ்வாறு கொடுக்கப்பட்டிருக்கின்றன. சுனீல் கிருஷ்ணன் என்னுடைய நலம் என்ற நூலை அனைவருக்கும் அளித்தார். [சொல்புதிது பதிப்பகம். கடலூர்]
இந்த வகையில் புத்தகங்களை அளிப்பது இதுவரை அதிகமும் கொங்கு வட்டாரத்தில்தான் நிகழ்ந்துள்ளது. இப்படிக் கொடுக்கலாமா என்ற ஐயம் எனக்கிருந்தது. நூல்களைத் தூக்கி வீசி விடுவார்கள் என்று கிருஷ்ணன் சொல்லி வந்தார். ஆனால் நம்மவர்கள் அப்படி நூலை அவமதிப்பவர்கள் அல்ல. வாசிக்காதவர்கள் இன்னொருவருக்குக் கொடுப்பதே வழக்கம். பெரும்பாலானவர்கள் வீட்டில் சும்மா வைத்திருப்பார்கள் என்று நான் சொன்னேன். அவற்றை ஒருவேளை குழந்தைகள் வாசிக்கக்கூடும் என்றேன்.
ஆனால் இப்படி அளிக்கப்பட்ட எல்லா நூல்களும் வாசிக்கப் பட்டிருக்கின்றன என்பது நான் வியக்கும் விஷயங்களில் ஒன்று. அவை உடனடியாக எனக்கு புதிய வாசகர்களை கொண்டுவந்து சேர்க்கின்றன. அதை கொங்கு வட்டாரத்தில் தெளிவாகவே காணமுடிகிறது. நம் சூழலில் ஒருவரிடம் புத்தகம் அதுவே வந்து மோதினால்தான் உண்டு. மற்றபடி அதைத் தேடிச்செல்ல வேண்டுமென்று நம்மிடம் எவரும், எங்கும் சொல்வதில்லை. அப்படி மோதும்போது நம்மவர்களில் பலர் உள்ளே வந்துவிடுகிறார்கள். பதிப்பாளர்களுக்கும் அது மிக உற்சாகமளிக்கிறது.
மறுநாள் காலை எழுந்ததுமே மீண்டும் பேச்சு. இருபத்தைந்து பேராகக் கிளம்பி திருமணத்துக்குச் சென்றோம். சுனீல் மகிழ்ச்சியே உருவாக இருந்தார். பெண் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது என்று அனைவருக்கும் தெரியும். திருமணம் முடிந்தபின் அனைவரும் ஆரோவில் வரை ஒரு நடை சென்று வரலாமென நினைத்தோம்.
ஆரோவில் சர்வதேச நகரம் அரவிந்தரின் எதிர்கால சமூகம் பற்றிய கனவின் அடிப்படையில் ஸ்ரீஅன்னையால் உருவாக்கப் பட்டது. அங்கே நான் 1982ல் சென்றிருக்கிறேன். அதன்பின் இப்ப்போதுதான். அந்த மாபெரும் கோளவடிவக் கட்டிடம் அன்று பெரும் மன எழுச்சியை உருவாக்கியது. அன்று அங்கே தங்கியிருந்த ஒரு துறவியின் உதவியுடன் உள்ளே சென்றேன். இம்முறை அதற்கு முன் அனுமதி பெறவில்லை. தூரத்தில் இருந்து அதைப்பார்த்த போதே கனவுக்கு நிகரான ஒரு மனவிரிவு ஏற்பட்டது. அது மண்ணை சேர்ந்ததல்ல, விண்ணில் இருந்து விழுந்தது என்று தோன்றிக் கொண்டே இருந்தது. தமிழகத்தில் உள்ள நவீனக் கட்டிடக்கலைப் படைப்புகளில் முதன்மையானது அதுதான்
>
அங்கே இருந்தபோது கட்டிடம் என்ற அமைப்பிற்கும் தத்துவத்துக்கும் உள்ள உறவை பற்றிய எண்ணம் வந்தது. ஒரு தரிசனம், தத்துவம் மூலம் விளக்கப் படுகிறது. கலைப்படைப்பாக மாற்றப் படுகிறது. அந்தக் கலைப்படைப்பாகவே அதன் பின் அது வரலாற்றில் நீடிக்கும். இப்பிரபஞ்சம் ஒரு நடனம் என்பது தரிசனம். சைவசித்தாந்தம் அதன் தத்துவம். நடராஜர் அதன் கலைவடிவம். நாம் அறியக்கூடிய எளிய வடிவம், நேரடியாக நம் ஆழத்துக்குச் செல்லக்கூடிய வடிவம், நடராஜர்தான்.
ஆனால் தத்துவத்துடனும், தரிசனத்துடனும் மிக நெருக்கமான கலைவடிவங்கள் காவியங்களும், கட்டிடங்களும்தான் என்று தோன்றியது. அவை தங்கள் ஒட்டுமொத்த முழுமை வழியாக தத்துவத்தரிசனத்தை கண்முன் எழுப்பி நிறுத்திவிடமுடியும். சிதம்பரம் பேராலயம் சைவ சித்தாந்தத்தின் கண்கள் கண்டறியும் வடிவம். அரவிந்த தரிசனத்திற்கான வடிவம் ஆரோவில்லின் மாத்ருமந்திர் என்று தோன்றியது.
சைதன்யா இரண்டு வயதான குழந்தையாக இருந்தபோது ஒருநாள் அவளுடன் நடக்கச் சென்றேன். கையில் கிடைத்த பூக்களை எல்லாம் பறித்து ஒரு செண்டு போல கொண்டு வந்தாள். பூக்கள் அவளுக்களிக்கும் பெரும் பரவசத்தை கவனித்து க்கொண்டிருந்தேன். அந்த பரவசம் அஜிதனுக்கு கிடையாது. எந்த ஆண்குழந்தைக்கும் கிடையாது. அது அவளுக்குள் இருந்த பெண்மையின் வெளிப்பாடு.
அப்போதுதான் ஸ்ரீஅன்னையை கூர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். அன்னையின் ஞானதரிசனம் பூக்கள் வழியாகவே நிகழ்ந்தது,வெளிப்படுகிறது என்பது அந்த சமயம் நினைவில் எழுந்தது. ஏனென்றால் நவ இந்தியாவில் நாமறிந்த ஞானிகளில் பெண் அவர் மட்டும்தான் பூக்கள் நிறைந்த பூமத்தியரேகைப் பகுதி என்பதனாலேயே அவர் இந்தியாவை அதிகம் நேசித்தார் என்று தோன்றும். அன்னை உருவாக்கிய அந்த கட்டிடம் ஒரு மாபெரும் கட்டிடமலர்.
மாலையில் ஒவ்வொருவராகக் கிளம்பிச் சென்றார்கள். நானும், சீனுவும், சிவாத்மாவும், நண்பர் சந்திரனும் கவிஞர் ரமேஷை சென்று பார்த்தோம். சந்திரன் புதுச்சேரியில் ஒரு மரக்கடை வைத்திருக்கிறார். பிரேம்-ரமேஷ் என்ற பேரில் இரட்டையர்களாக எழுதிய காலகட்டத்திலேயே அவர்கள் என் நண்பர்கள். என் வீட்டுக்கு வந்து தங்கியிருக்கிறார்கள்.
ரமேஷ் அன்று மிகுந்த உற்சாகத்துடன் பேசக்கூடியவர். ஒருமுறை மூன்று வயதான அஜிதனை அவர் வெளியே கூப்பிட்டுக் கொண்டு போய்விட்டு திரும்பி வந்தார். பாண்ட் இடதுகால் முழுக்க கொழகொழவென்று ஈரம். அஜிதனுக்கு அன்று நல்ல உமிழ்நீர் வளம் உண்டு. தூங்காத போது கூட கொஞ்சம் ஒழுகும். மடியில் தலை வைத்து தூங்கியிருக்கிறான். வெளியே வந்து காரில் செல்லும்போது அஜிதனிடம் செல்பேசியில் ‘டேய்,ரமேஷ் மாமாவைப்பார்த்துவிட்டு வருகிறேன்டா’ என்று சொன்னேன். ’நான் எச்சில் விட்டேனே அவருதானே?’ என்றான் எழுத்தாளர்கள் எப்படியெல்லாம் வரலாற்றில் இடம் பெற நேர்கிறது!
இப்போது பிரேம் ரமேஷை பிரிந்து டெல்லியில் இருக்கிறார். அவர்களிடயே மனவேறுபாடு. ரமேஷ் தனியாக இருக்கிறார். உடற்பருமனாலும் உயர் ரத்தஅழுத்ததாலும் துன்பப்படுகிறார். பணி ஏதும் செய்ய முடியாத நிலை. தனியாக ஒரு வீட்டில் வசிக்கிறார். மனோமோகன் , குமார் போன்ற அரிய நண்பர்கள் அவருக்கு பலவகையிலும் உதவி செய்வதனால் தாக்குப் பிடிக்கிறார்.
[ரமேஷ்]
ரமேஷின் அனைத்துக் கவிதைகளையும் ஒரே தொகுதியாக புதுஎழுத்து மனோன்மணி கொண்டு வருகிறார். ரமேஷ் ஒரு நாவலை எழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். 200 பக்கங்களவுக்கு இருக்கும் என முன்னதாகவே பக்கங்களைச் சொன்னார். கொஞ்சம் ஆச்சரியம் அடைந்தேன். என் படைப்புகள் எவ்வளவு பக்கம் வரும் என்று என்னால் சொல்ல முடியாது. அவன் பெயர் சொல் என்று நாவலுக்குப்பெயரிட்டிருப்பதாகச் சொன்னார்
நான் ரமேஷிடம் அவரது படைப்புகளைப்பற்றித்தான் அதிகம் பேசிக்கொண்டிருந்தேன். ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகள் நாவலாசிரியனுக்குரிய மாபெரும் மூலப்பொருட்கள் என்றார் ரமேஷ். அவர் அவற்றிலிருந்து ஒரு நாவலை உருவாக்கும் முயற்சியில் இருந்தார். பிரபஞ்சனின் இரு நாவல்கள் அவற்றை அடிப்படையாகக் கொண்டவைதான். ஆனால் அவை சில ஏடுகளையே முன்வைக்கின்றன. அன்றைய அரசியல், சமூகச்சூழலின் விரிவான சித்திரத்தை அளிக்கும் அந்நாட்குறிப்புகளில் இன்னும் பல நாவல்கள் உள்ளன.
இரவு ஒன்பது மணிக்கு கே.பி.என் பேருந்தில் திரும்பினேன். தொடர்ச்சியாக கேரளத்தில் இருந்தேன். பத்துநாள் மூணாறில் . எஞ்சிய நட்கள் எர்ணாகுளம் மரைன் டிரைவ் அருகே ஒரு விடுதியில். எங்கும் இளமழை, குளிர். அங்கிருந்து நேரடியாக புதுச்சேரி வந்து இறங்கியதும் சூளையில் புகுந்தது போலிருந்தது. நாகர் கோயில் திரும்பி வந்தால் குளிர்ச்சாரல், காற்று. ஏசி வாய்கள் போல சன்னல்கள் காற்றை ஊதின. நாகர்கோயில் அருமை ஆரல்வாய்மொழி தாண்டி சென்றும் மீண்டால்தான் தெரிகிறது. ஆனால் இன்று பகல் மட்டும் நாகர்கோயில். மாலை மீண்டும் எர்ணாகுளம் பயணம்
[ மேலும் படங்கள் ]
http://www.gandhitoday.in/