எப்படிக்கிடைத்தது சுதந்திரம்?

அன்புள்ள ஜெ

சட்ட வல்லுநர் நாரிமன் எழுதிய “”The State of the Nation” என்ற நூலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அவர் அதில் ஒரு விஷயம் சொல்கிறார். பிரிட்டிஷ் பிரதமர் அட்லீ ஒருமுறை அவரிடம் ஏன் பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுச் சென்றார்கள் என்ற வினா எழுப்பப்பட்டபோது கடற்படைக் கிளர்ச்சிதான் அதற்குக் காரணம் என்று சொன்னாராம். மேலும் குறிப்பாகக் கேட்கப்பட்டபோது காந்தியின் தலைமையில் இந்தியாவில் நடந்த கிளர்ச்சி அந்த முடிவுக்கு சிறிதும் காரணமில்லை என்றும் சொன்னாராம்

இந்திய சுதந்திரப்போராட்டம் பற்றி மஜும்தார் எழுதிய நூலிலில் கூட [ History of the Freedom Movement in India” – Vol 3 – Dr. RC Majumdar (pp 609-610)] இதனுடன் இணைந்துசெல்லும் பார்வை வருகிறது

இது உண்மையென்றால் நாம் வரலாற்றைத் திருப்பி எழுதவேண்டியிருக்குமா? காந்தி தலைமையில் லட்சக்கணக்கானவர்கள் செய்த தியாகத்துக்கு என்ன அர்த்தம்?

ஜாஸ் டயஸ்

அன்புள்ள ஜாஸ் டயஸ் அவர்களுக்கு,

இந்தக் கருத்து ஒன்றும் புதிய விஷயம் அல்ல. இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த காலம் முதல் இது இடதுசாரிகளால் சொல்லப்பட்டு வருகிறது. குறிப்பாக 1952 முதல் தேர்தலின்போது தேசம் முழுக்க இடதுசாரிகள் முன்வைத்த முக்கியமான பிரச்சாரமாகவே இதுதான் இருந்தது. இந்திய சுதந்திரப்போராட்டத்தில் காந்தியும் காங்கிரஸும் எந்த பங்களிப்பையும் ஆற்றவில்லை என்றும், வன்முறையின் வழியே உண்மையான பயனை அளிப்பது என்றும் நிறுவுவதற்காக இதை அவர்கள் சொன்னார்கள். பின்னர் வலதுசாரி அமைப்புகள்- குறிப்பாக இந்துத்துவர்கள்- சொல்ல ஆரம்பித்தார்கள்

இந்த வாதம் வேறு எவரால் முன்வைக்கப்பட்டிருந்தாலும் இதிலிருக்கும் வரலாற்றுத்தர்க்க ஓட்டைகள் உடனடியாகச் சுட்டிக்காட்டப்பட்டு சிதறடிக்கப்பட்டிருக்கும். ஆனால் இது முன்வைக்கப்பட்டது ஆளும் தரப்பின் எதிர்தரப்பால். ஆகவே இதற்கு மறைக்கப்பட்ட உண்மை, வெளியே வராத உண்மை என்ற வண்ணம் கிடைத்தது. இதைச் சொல்பவர் கொஞ்சம் அதிகப்படியாக விஷயம் தெரிந்தவர், அதிகாரபூர்வ கூற்றுகளை நம்பாதவர் என்ற பிம்பம் கிடைத்தது. ஆகவே இது ஒரு தரப்பால் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஒரு தமிழ் சினிமாவில்கூட இது அசட்டுத்தனமாக முன்வைக்கப்பட்டது.

மிக எளிமையாகக் கேட்கப்படவேண்டிய கேள்வி, கடற்படைக்கலகம் நிகழ்வதற்கு முன்னால் அப்படிப்பட்ட ராணுவக்கலகங்கள் நிகழவில்லையா? இந்தியாவில் நிகழ்ந்த முதல் ராணுவக்கலகம் அதுதானா? முந்தைய கலகங்களை எப்படி பிரிட்டிஷார் எதிர்கொண்டார்கள்?

உண்மையில் கடற்படைக்கலகம் மிகமிக முதிரா முயற்சி. ராணுவ விவகாரங்கள் என்னைவிட உங்களுக்கு நன்றாகவே தெரியும். அந்தக் கலகம் பற்றிய தகவல்களைக் கொஞ்சம் வாசித்துப்பாருங்கள்,அதை ‘ராணுவக்கலகம்’என்று சொல்வதே அபத்தம் என்று தெரியவரும். இரண்டாம் உலகப்போரில் இந்திய ராணுவம் முழுமையாக பிரிட்டிஷாருக்கு விசுவாசமாக இருந்தது. இந்தியாவுக்குச் சுதந்திரத்தை அளிப்போம் என்று வாக்குறுதியளித்த ஜப்பானிய ராணுவத்தையும் அதன் ஆதரவுடன் வந்த இந்திய தேசிய ராணுவத்தையும் களத்தில் சந்தித்தவர்கள் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தினர்தான்

போருக்குப்பின் நிதிநெருக்கடியால் ராணுவ வசதிகள் தொடர்ந்து வெட்டிச்சுருக்கப்பட்டன. ஊதியம், வேலைநேரம் மட்டுமல்ல அன்றாட உணவு கூட ராணுவத்தினருக்கு முறையாக வழங்கப்படவில்லை. அதற்கு எதிராக உருவானதே கடற்படைக்கலகம். பின்னர் அதற்கு தேசியவாத நிறம் வந்து சேர்ந்தது. ஆனால் எந்த விதமான முறையான தலைமையும், வழிகாட்டலும் இல்லாமல் அது ஆரம்பித்தது. அதன் எதிர்ப்பு என்பது வெள்ளை அதிகாரிகளுக்கு இடதுகையால் சல்யூட் அடிப்பது, எதிர்ப்புக்கொடிகளை ஏற்றுவது என்ற அளவிலேயே இருந்தது. ஒருநாள் வேலைநிறுத்தம் மட்டுமே முழுமையாக நிகழ்ந்த எதிர்ப்புப் போராட்டம்.

சிப்பாய்க்கலகம் போன்ற நாடளாவிய பெரும் போராட்டங்களை ஒடுக்கிய பிரிட்டிஷாருக்கு இந்தப்போராட்டம் கொசு அடிப்பதை விட எளிய பணியாகவே இருந்திருக்கும். இந்தியக் கடற்படைக்கலகம் அளவுக்கான ஏராளமான சிறிய கலகங்கள் பிரிட்டிஷ் ஆட்சி முழுக்க இருந்திருக்கின்றன. அவற்றை அவர்கள் ராணுவ நடவடிக்கைக்கு வெளியே கொண்டுசெல்லவே அனுமதித்ததில்லை. பிரிட்டிஷாரின் ராணுவநிர்வாகத்திறனை எவரும் குறைத்து மதிப்பிடமுடியாது

மேலும் அப்போதும் கூட இந்திய ராணுவத்தின்மீது பிரிட்டிஷாரின் பிடி மிக வலுவாகவே இருந்தது. இந்திய ராணுவப்படைப் பிரிவுகளில் முதன்மையானவையான கூர்க்காப்படை, சீக்கியர் படை, மெட்ராஸ் ரெஜிமெண்ட் போன்றவை அப்போதும் பிரிட்டிஷ் விசுவாசம் மிக்கவையாகவே இருந்தன என்பதை 1947 ஆகஸ்டில் பிரிட்டிஷார் இந்தியாவிட்டு செல்லும்போதுவரை நாம் கண்டோம். நூற்றுக்கணக்கான ஆவணங்களும் நினைவுகளும் அதற்கு ஆதாரமாக உள்ளன. ஆம், பிரிட்டிஷார் இந்தியாவில் ஒருபோதும் ராணுவரீதியாக வலிமைகுன்றியவர்களாக இருக்கவில்லை.

அப்படியென்றால் பிரிட்டிஷார் ஏன் இந்தியாவை விட்டுச்சென்றார்கள். இந்தியாமீது பிரிட்டிஷாருக்கிருந்தது ராணுவ ஆதிக்கமல்ல என்பதே உண்மையான காரணம். அது ஒருவகைக் கருத்தியல் ஆதிக்கம். அதை வரலாற்றுப்புலத்தில் அமைத்தே புரிந்துகொள்ளமுடியும்

இந்தியாவில் இருந்த இஸ்லாமிய, மராட்டிய, நாயக்கர் பேரரசுகளின் சரிவுக்காலகட்டத்தில் பிரிட்டிஷார் இந்தியாவுக்குள் நுழைந்தனர். அந்த சரிவுக்காலம் இந்தியவரலாற்றின் மாபெரும் அராஜகக யுகம். குட்டிக்குட்டி ராணுவத்தலைவர்கள் எல்லாம் ஆட்சியாளர்களாக மாறி மக்களைக் கொடுமைப்படுத்தியும் ஒருவருக்கொருவர் போராடியும் ரத்தத்தை ஓடவிட்டகாலகட்டம். அப்போது வந்த பிரிட்டிஷார் இந்தியப்பெருநிலத்தில் அவர்கள் கைப்பற்றிய பகுதிகளில் உறுதியான சட்டத்தின் ஆட்சியை உருவாக்கினார்கள். மக்களுக்கு சமநீதியையும், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையையும் வழங்கினார்கள்.அது இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களுக்கு பிரிட்டிஷார் மீது ஆழமான நம்பிக்கையை உருவாக்கியது.

பிரிட்டிஷார் இந்தியாவில் முதலாளித்துவத்தை அறிமுகம் செய்தார்கள். நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் இருந்து முதலாளித்துவம் நோக்கிய பயணம் பிரிட்டிஷார் வழியாகவே இந்ங்கே நடந்தது. அனைவருக்குமான சமமான கல்வி, பொதுவான சமநீதி, சுந்தந்திரமான போக்குவரத்துவசதிகள், நவீன தொழில்முறை வாய்ப்புகள் ஆகியவை உலகநாகரீகத்துக்கு முதலாளித்துவத்தின் கொடைகள். அதை நாம் பிரிட்டிஷாரின் கொடை என்றே எண்ணிக்கொண்டோம். இன்றுகூட பிரிட்டிஷார் பற்றி அப்படி ஒரு மதிப்பு நம் எளிய மக்களிடம் உள்ளது

முதலாளித்துவத்தின் மறுபக்கம் என்பது மௌனமான, உக்கிரமான பொருளியல் சுரண்டல். அதன் எல்லா சீர்திருத்தங்களும் அந்தச் சுரண்டலுக்காகவே. பிரிட்டிஷாரின் சுரண்டல்வழியாக இந்தியாவின் பொருளியல் அடித்தளம் அழிந்தது. உலக வரலாற்றின் மாபெரும் பஞ்சங்கள் இந்தியாவில் உருவாகி மொத்த மக்கள்தொகையில் கால்வாசிப்பேர் செத்தழிந்தனர். கணிசமானோர் அகதிகளாகச் சென்றனர்.

ஆனால் இது பிரிட்டிஷாரின் சுரண்டல் வழியாகவே நிகழ்ந்தது என இந்தியாவின் எளிய மக்களுக்குத்தெரியாது. அவர்கள் பிரிட்டிஷாரை தேவதூதர்களாகவே எண்ணினர். இந்திய வரலாற்றை ஆராய்பவர்கள் ஒன்றை சொல்வதுண்டு. பிரிட்டிஷார் அவர்களின் நீதிமன்றங்களை அமைத்த கல்கத்தா, மும்பை, டெல்லி சென்னை ஆகிய பகுதிகளில்தான் இன்றும்கூட இந்திய நிலத்தில் மக்கள் நெரிசல் அதிகம். ஏனெறனால் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கோடிக்கணக்கானவர்கள் அப்பகுதிகளுக்குக் குடியேறினார்கள். அவர்கள் மன்னராட்சிப்பகுதிகளில் இருந்த சாதிவழி நீதிக்கும், அடிமைத்தனத்துக்கும் தப்பி ஓடி அடைக்கலம் புகுந்தவர்கள்.

இந்த மக்கள்நம்பிக்கையே பிரிட்டிஷ் ஆட்சியின் அடித்தளம். அந்த அடித்தளம் வலுவாக இருப்பதுவரை அவர்கள் எந்த ராணுவக்கலகத்தையும் அஞ்சவில்லை. ஏதாவது சிறு எதிர்ப்பு எழுந்தால்கூட அதைக் கிள்ளி தூரப்போட்டார்கள்.சிப்பாய்கலகம் நிகழ்ந்தபோது பிரிட்டிஷாரின் மிகப்பெரிய பலமே அவர்களுக்கிருந்த மாபெரும் மக்களாதரவுதான்

மிகப்பிந்திய காலகட்டத்தில், சொல்லப்போனால் 1870களில் இரண்டாவது வங்காள- தக்காணப் பெரும்பஞ்சம் முடிந்தபிறகுதான் பிரிட்டிஷ் ஆட்சியின் சுரண்டல் நம் தேசத்தை அழிக்கிறது என்ற புரிதல் நம் அறிவுஜீவிகளுக்கே வந்தது. ஆச்சரியம் என்னவென்றால் அவர்களுக்குக்கூட அது தானாக வரவில்லை. ஆங்கிலேயச் சிந்தனையாளர்களும் மனிதாபிமானிகளும் சொல்லித்தான் அவர்கள் அந்தப்புரிதலை அடைந்தார்கள். சொல்லப்போனால் பஞ்ச காலகட்டத்தில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திலும் பிரிட்டிஷ் ஊடகங்களிலும் அன்றைய ஆங்கிலேய முற்போக்காளர் பேசியதையும் எழுதியதையும் கண்டுதான் தாங்கள் சுரண்டி அழிக்கப்படுகிறோம் என்ற புரிதல் ஆங்கிலக்கல்வி பெற்ற சில இந்தியர்களுக்கு வந்தது.

ஆனால் அவர்களால் அதை மக்களிடம் சொல்லிப்புரியவைக்க முடியவில்லை. காரணம் அவர்கள் மக்களுடன் கலந்திருக்கவில்லை.அவர்கள் பெரும்பாலும் இங்குள்ள உயர்குடியினராகவே இருந்தனர். பஞ்சத்துக்குப்பின் ஆரம்பிக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் 1920 வரை மக்களால் ஏளனத்துடனும் எரிச்சலுடனும் மட்டுமே அணுகப்பட்டது. காரணம் அப்போது காங்கிரஸ் நடத்திய போராட்டங்களும் மக்களுக்கானவையாக இருக்கவில்லை. அவர்கள் படித்த உயர்வர்க்கத்தினரின் வேலைவாய்ப்பு , ஆட்சியுரிமை ஆகியவற்றுக்காக மட்டுமே போராடினர்

அங்கேதான் காந்தியின் இடம் உருவாகிறது. இந்தியாவுக்கு வந்த காந்தி இந்திய காங்கிரஸில் மக்கள்நோக்கைப் புகுத்தினார். அதை ஏழை மக்களின் பிரச்சினைகளுக்காகப் போராடும் அமைப்பாக மாற்றினார். தன் போராட்டங்கள் வழியாகக் கோடிக்கணக்கான மக்கள் அதில் பங்கெடுக்கச்செய்தார். அவர்களிடம் அவர்கள் மொழியில் பேசி பிரிட்டிஷார் நிகழ்த்தும் சுரண்டலைப்பற்றி அவர்களுக்குப்புரியவைத்தார். காந்தியின் எல்லாப் போராட்டங்களும் பொருளியல் சுரண்டலை மக்களுக்குப்புரியவைக்கும் நோக்கம் கொண்டவை. உப்புசத்தியாக்கிரகம், அன்னியத்துணிப் புறக்கணிப்பு போன்றவை அனைத்தும் பொருளாதாரச் சுரண்டலைக் குறியீடுகள் மூலம் மக்களுக்கு உணர்த்தக்கூடியவைதான்.

காங்கிரஸின் கொள்கைசார்ந்த தலைமைக்கு வந்த இருபதாண்டுக்காலத்தில் காந்தி இருநூறாண்டுக்காலமாக பிரிட்டிஷார் இந்திய மனதில் உருவாக்கியிருந்த நம்பிக்கையை அழித்தார். அவர்களை அடக்குமுறையாளர்களாகவும் சுரண்டல்காரர்களாகவும் வெளிக்காட்டினார். அதேசமயம் நீதி, நிர்வாகத் துறைகளில் பிரிட்டிஷார் செய்த சாதனைகளை கொஞ்சம் கூட நிராகரிக்காமல் இதை அவர் செய்தார் என்பதைக் கவனிக்கவேண்டும்.

இந்திய சுதந்திரப்போராட்டம் மிக விரிவான பல படிகள் கொண்ட ஒரு நடவடிக்கையாகும்.காந்தியின் போராட்டத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். முதன்மையானதும் முக்கியமானதும் அவர் இந்தியாவின் எளியமக்களை அரசியல்படுத்தியதுதான். நிலப்பிரபுத்துவ அமைப்புக்குள் வெறும் உழைப்பாளிகளாக நிலத்துடன் பிணைந்த மாற்றமில்லா வாழ்க்கையை வாழ்ந்த மக்கள் அவர்கள். உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் போராடுவதை காந்தி அவர்களுக்குக் கற்றுத் தந்தார்.

பஞ்சத்தில் அடிபட்டுக் கொடுங்கோலர்களால் வதைபட்டு வாழ்ந்த எளிய மக்களுக்கு அவர்களின் ஒற்றுமை அளிக்கும் வலிமையைத் தன் போராட்டங்கள் வழியாக காந்தி காட்டினார். கொஞ்சம் கொஞ்சமாக லட்சக்கணக்கான பெண்கள் உட்பட அனைவரையும் காந்தி பொதுவெளிக்குக் கொண்டுவந்தார்.சிறிய உரிமைகளுக்காக அன்று நாடெங்கும் எளிய மக்கள் செய்த போராட்டங்களின் முக்கியத்துவத்தை நாம் இன்னும்கூட புரிந்துகொள்ளவில்லை. நம் மக்களுக்கு ஜனநாயகம் என்ற கருத்துருவம் அப்படித்தான் அறிமுகமாகியது. இன்றும் அவர்களிடமிருக்கும் ஒரே ஆயுதம் அதுதான்.

இரண்டாவதாக, காந்தி இந்தியர்கள் தேர்தல்களில் பங்கெடுக்கச்செய்தும் ஆட்சியில் அமரச்செய்தும் அதிகாரத்தின் சுவையை அறியச்செய்தார். நம்மால் நம் நாட்டை ஆளமுடியும் என்ற நம்பிக்கையை அளித்தார். ஜனநாயகத்தின் அடிப்படைகளை நம் அரசியல்வாதிகள் கற்கச்செய்தார். ஜனநாயக நடவடிக்கைகளில் நாம் பெற்ற பயிற்சிதான் இன்று நாம் கொண்டுள்ள ஜனநாயகத்தின் அடிப்படை

மூன்றாவதாகவே காந்தி உருவாக்கிய போராட்டமுறைகளைச் சுட்டவேண்டும். அவை ஜனநாயகத்தின் அடிப்படைபலமான மக்கள்சக்தியை நம்பி நிகழ்ந்தவை. எண்ணிக்கை பலமே உண்மையான பலம் என்று காட்டியவை. அந்தப்போராட்டங்கள் பிரிட்டிஷ் இந்தியாவின் நிர்வாகக்கட்டுமானத்தை அசைத்தன.

இதெல்லாம்தான் காந்தியின் சாதனைகள். காந்தி இந்தியாவுக்களித்த பெரும் பங்களிப்பு என்பது இந்த ஜனநாயகக் கல்வியில்தான் உள்ளது. இன்றும் இந்தியா ஜனநாயகநாடாக நீடிக்க இதுதான் காரணம். நம்முடன் விடுதலை பெற்ற நாடுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியும்.

இந்த எளிமையான பாடம் அன்றைய மார்க்ஸியர்களுக்குத் தெரியாது.அவர்கள் அப்பாவித்தனமாக நேரடிவன்முறையை நம்பியிருந்தார்கள். அரசாங்கம் என்பது ஓரு வன்முறை அமைப்பு என்றும், அடக்குமுறைமூலமே அது நீடிக்கிறது என்றும், அதை எதிர்வன்முறை மூலம் ஒழிப்பதே சமூகமாற்றத்துக்கான வழி என்றும் அவர்கள் நினைத்தனர். ஆகவே உலகமெங்கும் அரசுகளுக்கெதிரான ஆயுதக்கலகங்களுக்கு மக்களை தள்ளிவிட்டனர். அந்த போரில் மக்களை கோடிக்கணக்கில் கொன்றழித்தனர்

மிக அபூர்வமாக அவர்கள் அதிகாரத்தைப்பிடிக்கமுடிந்தது. பெரும்பாலும் சில வரலாற்றுத்தற்செயல்களால். அவ்வாறு அதிகாரத்தை வென்ற இடங்களில் அவர்கள் அரசாங்கத்தை அடக்குமுறைமூலம் நிகழ்த்தினர். மேலும் மக்களைக் கொன்றழித்தனர். ரஷ்யாவும் சரி சீனாவும் சரி கம்போடியாவும் சரி பெரும் மக்களழிவையே நமக்குக் காட்டுகின்றன. அவ்வழிவினால் அம்மக்கள் பெற்ற நீடித்த லாபம் என ஏதுமில்லை.

ஐம்பதுகளுக்குப்பின் உலகமெங்கும் அறியப்பட்ட அண்டோனியோ கிராம்ஷி என்ற இத்தாலிய மார்க்ஸியர்தான் அதிகாரத்தில் மக்களுக்கும், மக்களின் கொள்கைகளுக்கும் உள்ள மைய இடத்தை அடையாளப்படுத்தினார். அந்தச்சிந்தனைகள் எண்பதுகளில்தான் இந்தியாவில் ஒருவழியாக வந்து சேர்ந்தன. அதன்பின்னர்தான் இந்திய மார்க்ஸியர்களிடம் காந்தியப்போராட்டங்களின் சில அடிப்படைகளைச் சொல்லி புரியவைக்க முடிந்தது.

கிராம்ஷி சொல்வதை எளிதாக இப்படிச் சொல்லலாம். ஒருசமூகத்தை அரசு, நிர்வாகம், குடிமைச்சமூகம் [civil society] என மூன்றாகப்பிரிக்கலாம். குடிமைச்சமூகத்தில் இருக்கும் நம்பிக்கைகளும் கொள்கைகளும்தான் அரசை உருவாக்குகின்றன. குடிமைச்சமூகத்தில் பெருவாரியினரின் அங்கீகாரத்துடன் மட்டுமே ஓர் அரசு செயல்படமுடியும். சிலசமயம் அந்த அங்கீகாரம் நேர்டியாக வெளித்தெரியும். சிலசமயம் அது தெரியாது.

ஆகவே ஒரு சமூகத்தின் அரசை மாற்ற ஒரேவழி அந்தச் சிவில்சமூகத்தின் கருத்தை மாற்றியமைப்பதுதான். அப்படி மாற்றாமல் அந்த அரசை ராணுவரீதியாகத் தாக்குவது என்பது அந்த சிவில்சமூகத்துடன் மோதுவதுதான், அதாவது மிகப்பெரும்பான்மையினரை மிகச்சிறுபான்மையினர் போருக்கு அழைப்பது அது.

மார்க்ஸியர் பெரும்பான்மை ஆதரவுள்ள அரசுக்கு எதிராக சிறுபான்மையினரை போருக்குத் தூண்டிவிட்டனர். காந்தி மெல்லமெல்லப் பெரும்பான்மையினரின் கருத்தை மாற்றினார். ஒரு கட்டத்தில் அரசு மாறியே ஆகவேண்டிய நிலை வந்தது. காந்தி இருபத்தைந்தாண்டுக்காலம் செய்தது பிரிட்டிஷாருடன் போராடுவதை அல்ல. இந்தியர்களின் மனதை மாற்றுவதைத்தான். அதன் வழியாகவே சுதந்திரம் வந்தது. அபப்டி வந்ததனால்தான் அது அரசு மாற்றமாக இல்லாமல் சமூக மாற்றமாக நீடித்தது.

காந்தி கால்நூற்றாண்டுக்காலம் இந்தியர்களுக்கு ஒரு பாடம் நடத்தினார், எப்படி பிரிட்டிஷாரிடம் இந்தியர்கள் தங்கள் அவநம்பிக்கையை அறைகூவிச் சொல்வது என்று. அந்தத் தருணம் 1942இல் வந்தது. வெள்ளையனே வெளியேறு இயக்கம் அந்த வரலாற்றுப் புள்ளியாகும். அதன் செய்தி மிக வெளிப்படையானது. ‘நாங்கள் உங்கள் மீது கொண்ட நம்பிக்கையைக் கொண்டு நீங்கள் இதுவரை எங்களை ஆண்டீர்கள். இப்போது அந்த நம்பிக்கை போய்விட்டது ’ என்றது இந்தியாவின் சிவில்சமூகம்.

அந்தச்செய்தி பிரிடிஷாருக்கு மிகவும் துல்லியமாகவே புரிந்தது. அவர்களுக்குத் தங்கள் உண்மையான வலிமை எது எனத் தெரியும். அது அழிந்துவிட்டது என்றும் புரிந்துகொண்டனர். அதற்குமேல் ஆட்சி செய்வதாக இருந்தால் கடுமையான நேரடியான வன்முறை மூலம் ஒரு ராணுவச்சுரண்டல் ஆட்சியைத்தான் நடத்தியிருக்கமுடியும். இயல்பில் அதைச்செய்யக்கூடியவர்கள் அல்ல அவர்கள். அத்துடன் அது லாபகரமானதும் அல்ல. அந்தத் தருணத்தில் அதற்கான பொருளியல் வல்லமையும் பிரிட்டிஷாரிடம் இல்லை. ஆகவே அவர்கள் வெளியேற முடிவெடுத்தனர்

அப்போதுகூட ராணுவ வல்லமையைக்கொண்டு மெலும் சிலகாலம் இந்தியாவில் நீடிக்கலாம் என்ற எண்ணம் கொண்டவர்கள் இருந்தார்கள். குறிப்பாக அசாமிய எண்ணெய்க் கிணறுகள் அப்போது முழுமையாக செயல்பட ஆரம்பித்திருந்தன. எண்ணெய் லாபி இந்தியச் சுதந்திரத்துக்கு எதிரான எண்ணம் கொண்டிருந்தது. கொஞ்சவருடம் ஒரு ராணுவ அடக்குமுறை ஆட்சியை நீட்டிக்கலாமென அவர்களுக்கு நப்பாசை இருந்தது அதைக் கடற்படைக்கலகம் சம்பந்தமான செய்திகள் மாற்றியமைத்தன.அதன் முக்கியத்துவம் அவ்வளவுதான்.

இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த வரலாறு இதுதான். அது முதன்மையாக காந்தியின் பங்களிப்பு. ஆனால் விவேகானந்தர் தொடங்கி இந்திய தேசிய உணர்ச்சியை ஊட்டி அதை வளர்த்தெடுத்த அனைவருக்கும் அதில் பங்குண்டு. அவர்கள் இந்திய சிவில் சமூகத்தில் இந்தியதேசியம் பற்றிய எண்ணத்தை உருவாக்கி வளர்த்தனர். நம்மை நாமே ஆளவேண்டும் என அது நினைக்கவைத்தனர். அதில் பெரும்பான்மையினர் அப்படி நினைத்தபின் சுதந்திரம் வந்தேயாகவேண்டியிருந்தது

அவ்வாறு சிவில்சமூகத்தின் எண்ணம் மாறாத நைஜீரியாவில் மேலும் பல ஆண்டுக் காலம் பிரிட்டிஷார் நீடித்தனர். அதை மேலும் ஒட்டச்சுரண்டிவிட்டே சென்றனர். அவர்கள் மாபெரும் எண்ணெய் வளம் இருந்தும்கூட இன்றும் நம்பமுடியாத வறுமையில் வாழ்கிறார்கள். அவர்களுடன் ஒப்பிட்டால் நாம் அடைந்ததன் அருமையும் நமக்குப்புரியும்.

ஜெ

முந்தைய கட்டுரைவாசிப்பு -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகடிதங்கள்