சினிமா விமர்சனங்கள்

அன்புள்ள ஜெமோ

Tree of life பற்றி எழுதியிருந்தீர்கள். இந்த இணைப்பைப் பாருங்கள். நம்மவர் உலகசினிமா பார்க்கும் லட்சணத்தை விமர்சனம் எழுதும் கேவலத்தைப் பார்த்து நொந்துபோவீர்கள்

http://cinemajz.blogspot.in/2012/02/tree-of-life-2011.html

சரவணன்

அன்புள்ள சரவணன்,

ஒரு கலைவடிவம் என்பது ஒரு பண்பாட்டில் இருந்து ஊறிவரக்கூடியது. அந்தப்பண்பாட்டைப்பற்றிய பொது அறிதல் இல்லாமல் அந்தக் கலைவடிவத்தை ரசிக்க முடியாது. தமிழ்ப்பண்பாடு பற்றிய அறிதலே இல்லாமல் பரதநாட்டிய நிகழ்ச்சியை ரசிக்கமுடியுமா என்ன?

ஒரு கலையை ரசிக்க அந்தக் கலை உருவான பண்பாட்டைப் பிறகலைகள் இலக்கியங்கள் மற்றும் வரலாறு மூலம் அறிவதென்பது மிக அவசியமான ஒன்று. ஐரோப்பியப் பண்பாடு, கிறித்தவ மதம், அதனுள் செரிக்கப்பட்டிருக்கும் பாகன்மதங்களின் கொள்கைகள் என கொஞ்சமேனும் புரிதல் உள்ள ஒருவரால்தான் உண்மையில் ஓர் நல்ல அமெரிக்க ஐரோப்பிய திரைப்படத்தை உள்வாங்கமுடியும்

அதாவது சினிமா என்பது ஒரு தனித்த கலை அல்ல. அதை இலக்கியத்திலிருந்தும் வரலாற்றிலிருந்தும் பிரிக்கமுடியாது. கொஞ்சம்கூட வாசிக்கும் பழக்கம் இல்லாத ஒருவருக்கு நல்லசினிமாவும் அன்னியமானதாகவே இருக்கும். அதை அவர்கள் குத்துமதிப்பாகவே புரிந்துகொள்வார்கள்.

நம் இளைஞர்களுக்கு இங்கே எதுவும் வாசிக்கக் கற்றுத்தரப்படுவதில்லை. வாசிக்கும் மனநிலையே அவர்களிடம் கூடுவதில்லை. அவர்களுக்கு நவீன ஊடகங்கள் வழியாக சினிமா மட்டும் வந்து சேர்கிறது.அதை உட்கார்ந்து பார்க்கிறார்கள். ஏதோ ஒன்றை ரசிக்கிறார்கள். அவர்கள் வாசித்ததெல்லாம் ’ரஜினிகாந்துக்கு ஐஸ்வரியாவுக்கும் காதல், அது வடிவுக்கரசிக்குப் பிடிக்கவில்லை’ என்ற வகையில் கதைச்சுருக்கம் எழுதி, நடிப்பு சூப்பர் திரைக்கதை சுமார் என்று மார்க் போடும் நம்மூர் வணிக இதழ் விமர்சனங்களைத்தான். அதை எழுதி வைக்கிறார்கள்.அவர்களுக்கு வேறு என்ன தெரியும்? எதை எழுதமுடியும்?

என்ன பிரச்சினை என்றால் என் வீட்டுக்கு சில ‘தீவிர’ சினிமா விமர்சன இதழ்கள் வருகின்றன. அவ்வப்போது உயிர்மை போன்ற சிற்றிதழ்களில் சினிமா விமர்சனங்களை வாசிக்கிறேன். அவையும் இந்த ரக விமர்சனங்கள்தான். என்ன, பக்கம் பக்கமாக சப்பையான உரைநடையில் நீட்டி இழுத்து வைத்திருப்பார்கள். சிலர் பிரச்சினைப்பாடு, ’…மயமாக்கம்’ ’காட்சிவெளி’ ‘கருத்தாக்கம்’ போன்ற சொற்களை என்ன ஏதென்று அறியாமல் போட்டுத்தாளித்திருப்பார்கள்,அவ்வளவுதான்

ஜெ

முந்தைய கட்டுரைசோற்றுக்கல்வியும் சரியான கல்வியும்
அடுத்த கட்டுரைசடங்கும் அறிவும்