சடங்கும் அறிவும்

அன்புள்ள ஜெயமோகன்,

நல்ல பதிவு. சடங்குகள் கூடிய வழிபாடு என்று எதுவும் தினசரி வாழ்வில் இல்லை. விளக்கேற்றிப் பூ வைப்பது தவிர. நல்ல வாசனையான பூவும், பளிச்சென்று இருக்கும் விளக்கில் ஏற்றும் தீபமே ‘சித்திரை பிறக்கும்போது தொங்கவிடும் நெற்கதிரும், கொன்றைமலர் செண்டும் போல் நிறைவு தருகிறது. பண்டிகைகள் பொறுத்த மட்டில் ritualistic காரணங்களைக் காட்டிலும் அவை நம்மை நம் பண்பாட்டுடன் இணைக்கும் கண்ணிகளாக நினைத்துக் கொண்டாடுகிறேன். குறிப்பாகப் பொங்கல்.

ஆனால் நேர்த்திக் கடன்கள், ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்கள், குறிப்பாக சில கோயில்களுக்கு சென்று வர சொல்வது போன்றவை இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

அதே சமயம்,

வேண்டத்தக்கது அறிவோய் நீ

வேண்ட முழுதும் தருவோய் நீ”

என்ற திருவாசகம் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறதே. சடங்குகளிடம் இருந்து வந்து சேரும் இடமா இந்த திருவாசக வரிகள்?

கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?

கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!

கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே!

என்ற சித்தர் பாடலில் உள்ள defiance (maybe seeming defiance) சொல்ல வருவது என்ன?

முடிந்தால் தனி மடல் எழுதுங்கள்.

அன்புள்ள

மங்கை

அன்புள்ள மங்கை

இந்துமதம் தீர்க்கதரிசிகளினால் உருவாக்கப்பட்ட மதங்கள் போல ஒற்றை மையமும் ஒற்றைவழியும் கொண்டதல்ல. பல்லாயிரம் வருடங்களாக இந்தியப்பெருநிலத்தில் இருந்த பல நூறு வழிபாட்டுமுறைகளும் சடங்குகளும் சிந்தனைகளும் இணைந்து திரண்டு உருவானது இது. எல்லா வழிகளும் இங்கே எங்கோ ஓரிடத்தில் உள்ளன. எவையும் அழிக்கப்பட்டதில்லை.

அத்தனை வழிகளும் ஒட்டுமொத்தமாக இரு தரப்புகளாகத் தொகுக்கப்பட்டன. அந்த இருவழிகள் இரு சரடுகளாகப் பின்னி முரண்பட்டு முன்னகர்வதே இந்துமதத்தின் இயங்கியலாகும். அதை வெவ்வேறு பெயர்களில் சொல்லலாம் என்றாலும் பிரபலமான பிரிவினை ஞானகாண்டம் கர்மகாண்டம் என்பது.

ஞானகாண்டம் என்பது அறிதலின் வழி. அறிதலென்பது ஒருவகை மனவிலக்கம் மூலம் நிகழ்வது. மாறாக ஈடுபாட்டின் வழி கர்மகாண்டம். அது செயலின் வழி. ஞானகாண்டம் தத்துவமும் அந்த தத்துவத்தை உள்ளறிதலாக ஆக்கும் யோகமும் அடங்கியது.

கர்மகாண்டம் பக்தியும் வழிபாடுகளும் கொண்டது. அந்த வழிபாடுகளை உள்ளறிவாக ஆக்கும் தியானம் அதன் ஓர் உச்சநிலை.

அவரவர் இயல்புக்கேற்ப மனிதர்கள் ஞானகாண்டத்தையும் பக்திகாண்டத்தையும் தெரிவு செய்கிறார்கள். ஒருவர் தன் இயல்புக்கு மாறான ஒன்றில் ஈடுபாடும் நிறைவும் கொள்ளமுடியாது.

இந்து மரபில் இவ்விரு சரடுகளும் எப்போதும் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு மறுத்து விவாதித்து வந்துள்ளன. அந்த முரண்பாட்டின் விளைவாக அவை ஒன்றை ஒன்று கண்டுகொண்டு இணையவும் செய்துள்ளன.

கர்மகாண்டத்தைத் தேர்வு செய்யும் ஒருவர் உணர்வுபூர்வமானவர். உலகியல் சார்ந்தவர். அறிதலை விட ஈடுபடுதலே அவரது இயல்பு. அவர் வழிபாடுகளையும் சடங்குகளையும் செய்யும்போது அவரது உணர்வுகளும் உள்ளுணர்வுகளும் அதில் தோய்கின்றன. அவரது அகம் விரிகிறது. ஆன்மீகத்திறப்பை அடைகிறது.

ஞானகாண்டத்தைத் தெரிவு செய்யும் ஒருவர் தர்க்கபூர்வமானவர். அறிதலே அவரது வழி. அவர் அறியவேண்டியது அறிவு என்று தன்னுள் நிகழ்வதைத்தான். தன்னைத்தான். அதற்கு சடங்குகளும் வழிபாடும் உதவாது. அவற்றில் அவர் ஈடுபட முடியாது.

இந்துமதத்தில் இரண்டும் சமானமானவை. இரண்டும் முக்கியமானவை. பக்திமதங்கள் கர்மகாண்டத்தை ஒரு படி மேலாக முன்வைக்கும்.

ஆகவே சடங்குகளை வலியுறுத்தும் ஒரு வரியையும் சடங்குகளை நிராகரிக்கும் ஒரு வரியையும் எடுத்து ஒப்பிட்டுக் குழம்பவேண்டியதில்லை. இரண்டுமே ஒரே திசை நோக்கிய வழிகள். வெவ்வேறு மனிதர்களுக்கானவை.

ஜெ

முந்தைய கட்டுரைசினிமா விமர்சனங்கள்
அடுத்த கட்டுரைரப்பர்-கடிதம்