அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்
பெற்றோரும் கல்வியும் கேள்வி-பதிலைப் படித்தேன். கல்விமுறைகளை இருவகைகளாக வேறுபடுத்தி ஆளுமை வளர்ச்சி சார்ந்த கல்வி முறை பற்றிப் பேசுகையில் அதை மேம்படுத்த வழிமுறை தருவீர்கள் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம். லட்சத்தில் இருவர் என்ற விகிதத்தில்தான் கலை ஆளுமை சார்ந்த கல்வி தேவைப்படுகிறது; அதற்காகத் தற்போதைய கல்வி முறையை மாற்றவேண்டாம் என்ற விளக்கத்தில் எனக்கு உடன்பாடில்லை.
என்னைப் பொறுத்த மட்டில் கல்வியைத் தன்னிறைவுக்கான கல்வி, மனித வளர்ச்சிக்கான கல்வி என்று பிரிக்கலாம். தன்னிறைவுக்கான கல்வி வேலையையும் பணத்தை கொடுத்து அதன் மூலம் அடிப்படை தேவைகளைப் பூர்த்திசெய்ய உதவுகிறது. காலம் காலமாக தன்னிறைவு அடையாமல் போராடி வந்த நடுத்தர மற்றும் அடிமட்ட மக்களுக்கு, கடந்த 50 ஆண்டுகளில் கிடைத்த கல்வி வாய்ப்புகளால் 1st generation கல்வி கற்றோர் வளர்ந்துள்ளனர். இவர்களுடைய பார்வையில் கல்வி பணம் சம்பாதிக்க உதவும் ஒரு அந்தஸ்தைத் தரும் கருவி மட்டுமே. சமூகப் பார்வை, மனிதம், கலை பற்றி இவர்களுக்குக் கவலை இல்லை ( அவர்களின் வாழ்வியல் போராட்டம் அவர்களை ஒரு survival machine ஆகா மாற்றி உள்ளது). இந்த survival உணர்வுகள் ஒரு வகையில் அவர்களின் மரபணுக்களில் ஊறி விட்டதுபோல் தம் பிள்ளைகளையும் பணத்தைக் குறிக்கோளாய்க் கொள்ளும் பொருளாதார அடிமைகளாக மாற்றுகின்றனர். இதனால் வாழ்கையின் பயன் பணம் மட்டுமே என்ற தவறான புரிதல் வந்துவிடாதா?
லட்சத்தில் பெரும்பாலோர் உழைக்கப் பிறந்தவர்கள் மட்டுமே என்பது ஏற்புடையதல்ல. ஒரு முறை ஒரு அதிகாரியைக் காண அவர் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன்; அறையில் அவர் இல்லை; அவரின் 6 வயது மகன் தாளில் வரைந்து கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து வந்த அதிகாரி ‘என் இப்படித் தேவையில்லாமல் paper ல கிறுக்கிட்டு இருக்க… அதுக்கு பதில் 2 maths problem போடலாம்ல’ என்று கண்டித்தார். இதுவே நிதர்சன உண்மை. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சிறப்பம்சமும் திறமையும் உண்டு. பெரும்பாலான பெற்றோர்கள் அதைக் கண்டறிய முயல்வதில்லை. சிறு வயதிலிருந்தே பொருளாதரத்துவ கல்வி முறைகளைத் திணித்து வருவதின் விளைவே இன்றைய இளைஞர்களின் தட்டையான சமூக புரிதல். தவறு கல்வி முறையில் இல்லை; அவை தன்னிறைவை அடைய விரும்பும் 1st generationகு ஏற்றதே. ஆனால் ஒரு பரம்பரை அடுத்த நிலைக்கு வளர – முழுமையான மனிதர்களாக ஒவ்வொருவரும் மலர பெற்றோர்களின் கல்வியின் மீதான பார்வை மாற வேண்டும். குறைந்தது தன்னிறைவை அடைந்த பெற்றோர்களாவது இதைச் செய்யவேண்டும்.
அன்புடன்
அருண்
அன்புள்ள அருண்
முந்தைய பதில்களிலும் உரைகளிலும் நான் உண்மையான கல்வியைப்பற்றி நீங்கள் இக்கடிதத்தில் சொல்லியிருப்பனவற்றை இன்னும் விரிவாகப் பேசியிருப்பதை நேரம் இருந்தால் வாசிக்கலாம். குறைந்தது முப்பது கட்டுரைகள் இந்தத் தளத்தில் உள்ளன. சென்ற கட்டுரையிலேயே இணைப்புகள் இருந்தன.
ஆளுமை உருவாக்கக் கல்வியே உண்மையான கல்வி என்பதிலும் அதுவே ஒரு தேசத்தை அறிவார்ந்த அடித்தளம் கொண்டதாக ஆக்குமென்பதிலும் எந்தவிதமான ஐயமும் இல்லை.
ஆனால் சிக்கல் அந்த உண்மையான கல்வியை ஆர்வமில்லாதவர்களுக்கு எவரும் மேலிருந்து செலுத்தமுடியாதென்பதே. அந்தக்கல்விக்கான நாட்டமும் அதற்கான மனநிலையும் சமூகத்தில் இருக்கவேண்டும். அது இல்லாத நிலையில் கல்விமுறைச்சீர்திருத்தத்தால் எந்தப் பயனும் இல்லை. அதுதான் இந்தியாவில் திரும்பத்திரும்ப நிரூபணமாகிறது.
இந்தியாவில் பல கல்விநிறுவனங்கள் உண்மையான ஆர்வமும் திறமையும் கொண்டவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக விதவிதமான தேர்வு முறைகளை முன்வைக்கின்றன. அந்தக் கல்விநிறுவனங்கள் அளிக்கும் கல்விக்கு வணிக மதிப்பு உருவாகுமென்றால் உடனே அந்தத் தேர்வுமுறையை உக்கிரமான மனப்பாடப் பயிற்சிமூலம் வென்று கைப்பற்றுகிறார்கள். அதற்குள் சென்றமர்ந்து மனப்பாடம் செய்து 99.9 சத மதிப்பெண் வென்று மண்ணாந்தைகளாக வெளியேறுகிறார்கள்.
இந்தியாபோன்ற பிரம்மாண்டமான மக்கள்தொகை கொண்ட தேசத்தில், தனிப்பட்ட நேர்மை மிகமிகக் குறைவாக இருக்கும் தேசத்தில் இந்தத் தேர்வை ஆசிரியர்களின் தனிப்பட்ட முடிவுக்கு விட முடியாது. இங்கே நேர்மையற்றவர் என்ற பெயரை எவரும் ஓர் அவமதிப்பாக நினைப்பதில்லை. குறிப்பாகப் பேராசிரியர்கள். ஆகவே புறவயமான தேர்வுமுறைகளை, அதற்கான அமைப்புகளை உருவாகவேண்டியிருக்கிறது. அந்த முறைகள் இம்மாதிரி ‘பயிற்சி’ பெற்றவர்களால் கைப்பற்றப்பட்டு அவற்றின் நோக்கம் அழிகிறது.
இதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஆகவே உண்மையான பண்பாட்டு மாற்றம் ஏற்படாமல் கல்விச்சீர்திருத்தமெல்லாம் நடக்கக்கூடிய விஷயமே அல்ல. அதாவது கல்விமுறை மாற்றம் மூலம் பண்பாட்டுமாற்றம் வராது, பண்பாட்டுமாற்றம் மூலம் மட்டுமே கல்விமுறை மாற்றம் வரமுடியும்.
அந்தப்பண்பாட்டுமாற்றம் எப்படி வரும்? நாம் பொருளியல்தன்னிறைவை ஓரளவேனும் அடையும்போது பொருளியல்தகுதி பெறுவதற்காக மட்டுமே கற்கும் மனநிலைமீது சலிப்பு உருவாகலாம். அதற்கும் அப்பால் தேடிச்செல்லும் ஒரு சிறு குழுவினர் உருவாகலாம். அவர்களின் வெற்றி முன்னுதாரணமாக அமையும்போது படிப்படியாக அந்த திசை நோக்கிச்செல்பவர்கள் அதிகரிக்கலாம்.
அதுவரை இன்றுபோல சோற்றுக்கல்விதான் இயல்பான பொதுவழியாக இருக்கமுடியும். அதுதான் நடைமுறைச்சாத்தியம்
ஜெ
வயதடைதல்
கொட்டடிகள் வேதபாடசாலைகள்
கல்வி குறித்த கட்டுரைகள் இணைப்பு
சமச்சீர்க்கல்வி-கட்டுரைகள் இணைப்பு