கிளிசொன்ன கதை:கடிதங்கள்

மதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்கள் வலை தளத்தினை ஏறக்குறைய கடந்த ஒரு வருடமாக படித்து வருபவன்.
பெரிதாக இலக்கிய அறிமுகம் இல்லாதாவன். ஒரு நண்பரின் பரிந்துரையின் பெயிரில் படிக்க துவங்கினேன்.
தற்போது அன்றாட வேலைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. பல முறை உங்களுக்கு எழுதலாம் என்ற எண்ணம் ஒரு வித தயக்கத்தினால் நிறைவேறாமல் போயிற்று.
நீங்கள் எழுதும அனைத்தையும் தொடர்ந்து ஆர்வமாக படித்து வருகிறேன். அதிலும் குறிப்பாக தத்துவம் பற்றி நீங்கள் எழுதும் அனைத்தும் மிக்க ஆர்வமாக இருக்கிறது.
என்னைப் பற்றி.. பெயர் இரா. கண்ணன், எகிப்த்தில் மென்பொருள் துறையில் வேலை.
கிளிசொன்ன கதை தொடரை படித்து நிறைய இடங்களில் என்னை மறந்து சிரித்தேன், அழுதேன், வியந்தேன்.
குறிப்பாக கடைசிப் பகுதி ரொம்ப ரசிக்கும்படி இருந்தது. அனைவரது வாழ்க்கையிலும் அம்மா என்ற உறவு ஏற்படுத்துகின்ற பாதிப்பை வேற எந்த உறவும் நெருங்க கூட முடியாதுஎன்பது என் திடமான எண்ணம். கடந்த 3 வருடமாக அம்மாவை பிரிந்து வாழ்வது எவ்வளவு சிரமம் என்று நன்கு உணர்ந்துள்ளேன். ஒரு வேளை இந்த பிரிவு தான் என்னை அம்மாவிடம் உள்ள நெறுக்கத்தை உணர வாய்ப்பாக அமைந்ததா என்று தெரியவில்லை.
தாங்கள் எழுதியதை அப்படியே மனது காட்சியாக ஒருவகப்படுத்தி அந்த காலகட்டத்திற்கே என்னை அழைத்து  சென்று விட்டது. பல நிகழ்வுகள் நினைவில் இல்லாதபோதும்..
என் சிறு வயது வாழ்வினை நினைத்து மகிழ்ந்தேன். அந்த நினைவுகள் எனக்கு எப்போதும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளன.
அனைவருடைய சிறு வயது நிகழ்வுகளை நிச்சயம் நினைவுறச் செய்திருக்கும். முகம் தெரியாத வாசகனை மகிழ்விக்கும் உங்கள் எழுத்து தொடர்ந்து தங்களிமிருந்து வற்றாமல் வரவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்,
என்னுடைய உள்ளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அமெரிக்க பயணம் நன்றாக அமைய வாழ்த்துக்கள்.
வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை உங்களை நேரில் சந்தித்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.

இரா கண்ணன்

அன்புள்ள கண்ணன்,

நலமாக இருக்கிறீர்கள் அல்லவா? இப்போது அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் மௌன்ட் சாஸ்தா அருகே இருக்கிரேன். கிளிச் சொன்ன கதையைப்பற்றிய உங்கள் கடிதத்தை படித்தேன். இளமையில் நம் அம்மா நமக்கு நம்மைச்சூழ்ந்திருக்கும் இயற்கை போல் இருக்கிறாள். பின்னர் நாம் இயற்கையை மறந்துவிடுவதுபோலவே அம்மாவையும் மறந்துவிடுகிறோம். அம்மாவுடன் தனியாக நேரம் செலவிடும் மனிதர்கள் மிக மிக குறைவு. ஒரு நண்பர் சொன்னார் ஒருமுறை அம்மாவை தனியாக கோயிலுக்கு அழைத்துச்செல்லும் கட்டாயம் ஏற்பட்டது என்று. அம்மா பேசிக்கொண்டே இருந்திருக்கிறார். அம்மா அந்த அளவுக்கு பேசுவார் என்று அவர் எகிர்பார்க்கவேயில்லை. எத்தனை வருடத்துப்பேச்சு அது!

நான் ஊர்திரும்பியதும் சந்திக்கலாமென நினைக்கிறேன்

அன்புடன்
ஜெ

அன்புள்ள எழுத்தாளர் அவர்களுக்கு!
என்னை உமது வாசகனாக அறிமுகப்படுத்தியதற்கு  நன்றிகள். கிளி சொன்ன கதையில் வரும் மூன்று நிலைகள் என்பது சரியாய் இருக்குமா?. அதில் வரும் அனந்தன் தாங்கள்தான் என்பது தெரிந்தது. சிறுவனின் சிந்தனை தளத்தில்  நடப்பதாக உள்ள கதையில் வரும் சூலல்யியல், வேளாண்மை, சமையல் போன்றவை என்னை மிகுதியாக கவர்ந்தன. பெண்களுக்கு   எப்போதும் சோகமான நிகழ்வுகள் அவர்களுடைய சுமையை வெளிபடுத்துகிறது. இது நாம் டிவி நாடகம் பார்த்தால் அழும் பெண்கள் மூலம் அறியலாம் அல்லவா? அவர்கள் காலம் காலமாக அழுவது சீதையிலிருந்து ஆரம்பிக்கிறதா என்ன? அம்மா அழுவதன் காரணம் போல் மற்ற அம்மாக்கள் அப்புறம்  ராகினிக்கும் காரணங்கள்  இருக்கும் அல்லவா? நான் உங்களிடம் சிறுவர் கதை கேட்டதும், அது இப்போது கிடைப்பதில்லை என்று அறிந்து வருந்தினேன். கிளி சொன்ன கதை படித்ததன் மூலம் நான் மீண்டும் சிறுவனாக உணர்ந்தேன். இதுவும் எனக்கு சிறுவர் கதைதான்(வளர்ந்த சிறுவர்களுக்கு). சிறுவயதில் நாம் புறக்கணிக்கப்படும்போது பெண்கள் அவர்கள் சார்ந்த சமையல் போன்றவை நம்மை கவர்கின்றன. என் இள வயது தாத்தா வீட்டில் கழிந்தது. அவர் இறந்ததும் என் பாடி பெரியம்மா வீட்டுக்கும், நான் எனது பெற்றோர் வீட்டுக்கும் வந்தோம். என்னால் என் அம்மாவுடன் பாசமாக இருக்க முடியவில்லை இதுவரையிலும். என் முதுகலை வகுப்பு  தோழியிடம் மட்டும் நான் பாசமாக இருந்தேன். நான் கல்வியையும் ஆராய்ச்சியையும் தேர்ந்தெடுதேன். நீங்கள் இலக்கியத்தின்பால்  செலுத்தப்பட்டிர்கள். இதையே சுஜாதாவும் சொல்லியிருக்கிறார் அல்லவா?
நன்றிகள்!
dhandapani

அன்புள்ள தண்டபாணி

கிளி சொன்ன கதையில் அனன்ந்தன் நான் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. என்னைப்போல என்று சொல்லலாம். ‘பய மண்ணு புண்ணாக்கா இருக்கானே. படிப்பு வல்லதும் கேறுதா?’ என்பது என்னைப்பற்றிய பொதுஜனக் கருத்துதான். பாவம் அவர்களைப்பற்றி எதிர்காலத்தில் எழுதப்போகும் ஒரு சிறு எலக்டிரானிக் பதிவுக் கருவி அது என்று அவர்கள் அறிந்திருக்கவில்லை.

அம்மா மட்டுமல்ல எல்லாபெண்களும் சீதையில் ஒருபகுதியை தங்களுக்குள் வைத்திருப்பவர்கள்தான். சீதையின் கதையை புரிந்துகொள்ளாத பெண்களே இந்தியாவில் இல்லை என்று சொல்லலாம்.

ஜெ

முந்தைய கட்டுரைகன்னிநிலம் – நாவல் : 9
அடுத்த கட்டுரைகிளி சொன்ன கதை: கடிதங்கள் மேலும்