அன்புள்ள ஜெயமோகன்,
அவ்வப்போது இணையத்தில் உலாவும்போது சில புதிய தகவல்கள் சிக்கி என்னை வியப்பில் ஆழ்த்துவதுண்டு. அப்படி எனக்குக்கிடைத்த தகவல் இதோ http://en.wikipedia.org/wiki/Madurai_Sultanate. இதை நான் பள்ளி சரித்திரப் பாடத்தில் படித்ததில்லை. இந்த குறுகியகால ஆட்சியைக்குறித்து நமது நாட்டார் கதைகளிலோ அல்லது நவீன புனைவுகளிலோ ஏதேனும் குறிப்பு உண்டா? இதைப்போலவே எனக்கு முன்பு தெரியாதிருந்த விஷயங்கள் பின்வரும் இந்த சுட்டியிலும் கிடைத்தது
இதில் குறிப்பிடப்பட்டுள்ள சைய்யது இப்ராஹிம் வலியுல்லா குறித்த தகவல்கள் எனக்கு மிகவும் புதிது – இதுவும் எந்தப் பாடப் புத்தகத்திலும் நான் படித்திராதது. இது போன்ற நூல்கள் தமிழில் உள்ளதா?
கான்சாகிப் சண்டை என்ற நாட்டார் பாடல் குறித்து கமல்ஹாசன் ஒரு பழைய பேட்டியில் (1990 பொம்மை இதழ்) சொல்லி இருந்தார் – அதைத்தேடும் போது கிடைத்தது இந்தப் புத்தகம்.
எனக்கு மிகவும் ஆச்சர்யம் அளிப்பது – இது போன்ற புதையுண்ட சரித்திரத்தில் நமது நிகழ்கால சமுதாயச் சிக்கல்கள் பிணைந்திருப்பது மிகத்தெளிவு. இதை வலதுசாரி அரசியல்வாதிகள் தமது பிரச்சாரங்களில் திரித்து ஒருவித பிளவு அரசியல் செய்வதை இந்தச் சுட்டியில் காணலாம். – http://www.sandeepweb.com/
இதைப்பொதுவில் வைத்து ஆராய்வதே சமுதாயங்கள் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் மன்னித்து பிணக்குகளையும் அவநம்பிக்கைகளைக் களையும் என்று நான் நினைக்கிறேன். இதைக்குறித்து தாங்கள் எழுத வேணும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றியுடன்,
வா.ப.ஜெய்கணேஷ்.
அன்புள்ள ஜெய்கணேஷ்,
மதுரையில் குறுகியகாலம் சுல்தான்களின் ஆட்சி நடைபெற்றது. சுல்தான்கள் என்பது ஒரு மங்கலவழக்குதான். மாலிக் காபூர் மதுரையைக் கைப்பற்றி அழித்துவிட்டுச் சென்றபோது வரிவசூலுக்காக தன் படைப்பிரிவை மதுரையில் நிறுத்திவிட்டுப்போனார். மதுரைக்கும் டெல்லிக்குமான தூரம் படைத்தலைவர்களை சுல்தான்களாக அறிவித்துக்கொள்ளும் தைரியத்தை அளித்தது.
தமிழ் வரலாற்றின் மிகக்குரூரமான ஒரு பகுதி இது. மாறிமாறி மாமனும் மருமகனும், அண்ணனும் தம்பியும் வெட்டிக்கொன்று தள்ளினார்கள். இரண்டுவருடங்களுக்கு ஒரு சுல்தான் என்ற மேனிக்கு யார் யாரோ வந்தமர்ந்து கொல்லப்பட்டார்கள். மசூதியில் தொழுகைக்காக வாளை உருவி வைத்துவிட்டு குனிந்தவரை இமாமே வெட்டிக்கொன்ற நிகழ்ச்சிகூட உண்டு.
இவையெல்லாம் இஸ்லாமிய வரலாற்றாளர்களால் பதிவுசெய்யப்பட்டவை. ஆனாலும் இவற்றைக்கொண்டு முறையாக எந்த வரலாற்று நூலும் தமிழில் எழுதப்படவில்லை. நான் என்னுடைய கழு என்ற நாவலுக்காக இக்காலகட்டம் பற்றி கொஞ்சம் எழுதினேன். அந்நாவலை நான் முடிக்கவில்லை.
ஜெ