யாவரும் கேளிர் பற்றி…

அன்புள்ள சிவா ,

யாவரும் கேளிர் கதை வாசித்தேன். இயல்பான உரையாடல்கள் வழியாகச் செல்லும் கதை திட்டவட்டமான கால இடச்சூழலில் ஓர் யதார்த்ததை நிறுவிக்காட்டுகிறது. அதற்குரிய அனைத்து நுண்ணிய தகவல்களும் கதையில் உள்ளன. ஒரு பழைய வந்தேறி புதிய வந்தேறியை பார்க்கும் பார்வையில் உள்ள மெல்லிய அன்னியத்தன்மையும், மெதுவாக உருவாகும் அண்மையும் அழகாக உரையாடல்கள் வழியாகவே பதிவாகியிருக்கின்றன. அந்த அம்சமே இக்கதையைச் சுவாரசியமானதாக ஆக்குகிறது.

தனக்கெதிரான பேதங்களுக்கு எதிராகப் பொங்கும் மனம் தான் காட்டும் பேதங்களை இயல்பான ஒன்றாகவே எடுத்துக்கொள்கிறது. இது இன்று ஓர் இந்திய மனநிலை என்று கதை சொல்கிறது. ஆனால் எப்போதும் உலகமெங்கும் இது இப்படித்தான் இருந்துள்ளது. பிரிட்டிஷ் இந்தியாவில் இந்தியர்களை அவமரியாதையாக நடத்திய பிரிட்டிஷ் அதிகாரிகளில் பலர் அந்த நூற்றாண்டின் மனித உரிமைப்போர்களின் விளைவான எளிய அதிகாரத்தை அடைந்த தொழிலாளர்களின் பிள்ளைகள்.

ஏனென்றால், பிறர் நம்மிடம் காட்டும் பேதம் நம்மை வெளியேதள்ளுகிறது. அதை உடைக்க முயல்கிறோம். நாம் பேதங்கள் வழியாக நம்மை உள்ளே அடைத்துக்கொள்கிறோம். நவீனக்குடியேறிகள் நடுவிலேயே கூட எண்பதுகளுக்கு முன்னால் வந்தவர்கள் பின்னால் வந்தவர்கள் என்ற பேதம் இருப்பதை நான் அமெரிக்காவில் கண்டேன். அந்தப்பேதங்கள் வழியாகவே அடையாள உருவாக்கம் நிகழ்கிறது.அ

எப்போதும் நாம் கண்ணெதிரே காணும் ஓர் யதார்த்தம் நோக்கி வலுவாகச் சென்று சேர்ப்பதனாலேயே இக்கதை முக்கியமானதாக ஆகிறது. யாவரும் கேளிர் என்ற அழியாத பெரும்கனவைச் சொன்ன பண்பாட்டின் யதார்த்தம். அந்த அங்கதமும் எனக்கு பிடித்திருந்தது.

அங்கதம் என்பதனாலேயே கதை சொல்லவந்த விஷயத்துடன் முடிந்தாலும் அழகியல் குறைபாடு இல்லை. ஆனால் பெரும்பாலான அங்கதங்களுக்கு சமகால மதிப்பு மட்டுமே உண்டு. காலப்போக்கில் அவை மறைந்துவிடும். மறையாத அங்கதங்களை உருவாக்கியவர்கள் காலாதீதமான மானுட இயல்புகளை நோக்கி புன்னகை செய்தவர்கள்

இரு உதாரணங்கள் சகி மற்றும் எடித் வார்ட்டன். அவர்களின் எழுத்து உங்களுக்கு வழிகாட்டியாக அமையட்டும்

ஜெ

கதைகள்

12. பயணம் . சிவேந்திரன் [email protected]

11. வாசுதேவன் சுனீல்கிருஷ்ணன் [email protected]

10. வேஷம் பிரகாஷ் சங்கரன் [email protected]>

9. கன்னிப்படையல் ராஜகோபாலன் [email protected]

8. சோபானம் ராம்

7. வாசலில் நின்ற உருவம் கே ஜே அசோக் குமார்

6. வாயுக்கோளாறு ராஜகோபாலன் [email protected]

5. பீத்தோவனின் ஆவி வேதா

4. தொலைதல் ஹரன் பிரசன்னா [email protected]

3. காகிதக்கப்பல் சுரேந்திரகுமார் [email protected]

2. யாவரும் கேளிர் சிவா கிருஷ்ணமூர்த்தி [email protected]

1. உறவு தனசேகர் [email protected]

முந்தைய கட்டுரைஈரோட்டில் ஓர் உரை
அடுத்த கட்டுரைகைக்குட்டைகள் : வடிவமும் மறுவடிவமும்