பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு –
நான் உங்களது திருச்சி நட்புகூடலில் கலந்து கொண்டேன். உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு இத்தனை எளிதாக கிடைக்கும் என்று நினைக்கவில்லை. மிக மகிழ்ச்சி.
உங்களிடம் நான் கேட்க நினைத்த பல கேள்விகளை கேட்கவில்லை. அனால் கேட்க நினைத்து கேட்காமல் விட்ட ஒரு கேள்வி…
நீங்கள் M.S.சுப்புலட்சுமி அவர்களது பூர்வீக வாழ்கையை விரிவாக எழுதி இருந்தீர்கள், அவரது ஆரம்ப கால வாழ்கை என்னைபோல பலரும் அறியாத ஒன்று. அதை சுப்புலட்சுமி அவர்களும் மறக்கவும் மறைக்கவும் விரும்பி இருக்கலாம். நீங்கள் அவர் மறைக்க முயன்ற சில தகவல்களை வெளிக்கொண்டு வருவதில் என்ன நன்மை இருக்கமுடியும்?
நான் உங்களது பல புத்தகங்களையும் கட்டுரைகளையும் மிக விரும்பி படிக்கின்றேன். ஆனால் நீங்கள் இதை எழுதியதின் நோக்கத்தை அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
கார்த்திக்
அன்புள்ள கார்த்திக்
இந்தக்கேள்விக்கு இந்த தளத்திலேயே நான்குமுறை பதில் சொல்லியிருக்கிறேன்.
இரண்டு கேள்விகள் நம் சூழலில் இருந்து திரும்பத் திரும்ப வருகின்றன. ஒன்று, இறந்தவர்களைப்பற்றி ஏன் எதிர்மறையான விஷயங்களைச் சொல்ல வேண்டும்? இரண்டு, ஒருவர் சொல்ல விரும்பாத விஷயங்களை ஏன் கண்டுபிடிக்க வேண்டும்?
இந்த இரண்டு கேள்விகளும் நம்முடைய நடுத்தர வர்க்க வாழ்க்கையின் அன்றாட செயல்பாடுகளுக்காக உருவாக்கிக் கொண்ட சில மனநிலைகளின் வெளிப்பாடுகள் மட்டுமே. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இந்த மனநிலை சரியானதே. இறந்தவர்கள் மீதான கோபதாபங்களை வைத்துக்கொள்வதும் சரி ,பிறரது அந்தரங்கங்களை தோண்டிக் கொண்டிருப்பதும் சரி சரியான மனநிலைகளே அல்ல.
ஆனால் வரலாறு முற்றிலும் வேறானது. வரலாற்றுக்கு இந்த நடுத்தர வர்க்க அன்றாட ஒழுக்க நெறிகள் செல்லாது. வரலாறு உண்மைகளை மட்டுமே கொண்டதாக இருக்க வேண்டும். ஆகவே வரலாற்றாய்வாளன் உண்மைகளை நோக்கி மட்டுமே செல்லவேண்டும்.
ஏனென்றால் வரலாற்றை நாம் ஆராய்வது இன்றும் நாளையும் நமக்குத் தேவையான விழுமியங்களையும் சிந்தனைகளையும் அடைவதற்காக. உண்மையில் இருந்து அடைந்தவையாக இருந்தால்தான் அவற்றுக்கு மதிப்பு. பொய்யில் இருந்து வந்தவையாக இருந்தால் அவையும் பொய்யே. அந்தப் பொய்கள் நம்மை தவறாக வழி நடத்தும். அழிவுக்குக் கொண்டு செல்லும்
ஆகவே ஒரு விஷயம் வரலாறாக ஆகிவிட்டிருக்கிறதென்றால் அது உண்மையாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் மேலைநாட்டுச்சூழலில் உள்ளது. இந்த மதிப்பீடு அங்கே பதினெட்டாம் நூற்றாண்டிலேயே உருவாகி வந்து விட்டது. ஒவ்வொரு தலைவரைப் பற்றியும் சிந்தனையாளரைப் பற்றியும் கறாரான வரலாற்று உண்மைகள் கண்டடைந்து முன்வைக்கப் படுகின்றன. வரலாற்றின் ஒவ்வொரு தருணம் பற்றியும் உண்மைகள் ஆராய்ந்து சொல்லப் படுகின்றன.
நம்முடைய கல்வி முறையின் கோளாறு காரணமாக அவ்வாறு மேலைநாட்டினர் எழுதிய வரலாற்றின் தகவல்களைத்தான் நமக்குத் தருகிறார்கள். அவற்றை மனப்பாடம் செய்து ஒப்பிக்கச் சொல்கிறார்கள். அந்த வரலாற்றை எழுதும் முறையை, அந்த மனநிலையை நமக்குக் கற்பிப்பதில்லை. ஆகவேதான் படித்தவர்கள் கூட இந்தக்கேள்வியைக் கேட்கிறார்கள்.
நாம் இன்னும் நம்முடைய பழங்குடி- நிலப்பிரபுத்துவ மனநிலைகளிலேயே இருக்கிறோம். நீத்தார் வழிபாடு மூத்தார் வழிபாட்டு மனநிலைகளையே வரலாற்றிலும் போட்டுக் கொண்டிருக்கிறோம். ஆகவே தான் இங்கே இன்னும் வரலாறுகள் அரிதாகவே எழுதப் படுகின்றன. காமராஜ் பற்றியோ அண்ணாத்துரை பற்றியோ ஒரு உண்மையான வரலாறு இன்னமும் இங்கு எழுதப்படவில்லை. நம்முடைய பழங்குடி மனநிலை நம்மை எழுதவும் விடாது
ஏன் இந்திய சீனப் போர் பற்றி அல்லது இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி ஒரு கறாரான வரலாறு நம்மிடம் இல்லை. இருப்பவை ஒற்றைப்படையான புகழ்பாடல்கள். காரணம் இதுதான் இறந்தவர்களைப்பற்றி நல்லதுதான் சொல்லவேண்டும் என்ற எண்ணம்.அவை வரலாறுகளே அல்ல, புராணங்கள்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி ஒரு வரலாற்று ஆளுமையாக இல்லை என்றால் , சாதாரணமான ஒரு பெண்மணி என்றால் அவரைப்பற்றி ஏதும் எழுதப்படவேண்டியதில்லை. அவரைப்பற்றி வரலாறு எழுதப்படும் என்றால் அது உண்மையாகத்தான் எழுதப்பட வேண்டும். சுப்புலட்சுமியின் வரலாறு ஏற்கனவே பலமுறை பலரால் எழுதப்பட்டது. தமிழ் பண்பாட்டு வரலாற்றின் ஓர் அத்தியாயம் அது.அப்போதுதான் உண்மையான வரலாறு என்ன என்ற வினா எழுகிறது. அதைத்தான் டி.ஜெ.எஸ்.ஜார்ஜ் எழுதினார்.
ஏன் உண்மையான வரலாறு தேவை? ஏனென்றால் அந்த வரலாற்றில் நம் உண்மையான கடந்த காலம் உள்ளது. கடந்தகாலத்தின் சிக்கல்களும் தீர்வுகளும் உள்ளன. வரலாறு என்பது உண்மையில் ஒரு பெரிய கட்டமைப்பு. அரசியல் வரலாறு, பண்பாட்டு வரலாறு, சமூக வரலாறு , தனிமனிதர்களின் வரலாறு எல்லாம் ஒன்றுதான். ஒன்றைக்கொண்டு இன்னொன்று முழுமைப் படுத்தப்படவேண்டும். சுப்புலட்சுமியின் வரலாறு நம்முடைய சமூக வரலாற்றின் ஒருபகுதி. நம் பண்பாட்டு வரலாற்றின் ஒரு பகுதி. ஆகவே தமிழ் வரலாற்றின் ஒரு பகுதி. அவரது வரலாற்றை எழுதுவதன் வழியாக நாம் நம் வரலாற்றைத்தான் எழுதி முழுமைப்படுத்திக் கொள்கிறோம்.
இதையெல்லாம் திரும்பத்திரும்பக் கேள்விக்குறியதாக்குபவர்கள் வரலாற்றை பொய்யாக எழுத நினைப்பவர்கள். வரலாற்றை தங்கள் சுயநலத்துக்காக மறைக்கவும் சிலபகுதிகளை திரிக்கவும் ஆசைப்படுபவர்கள். பொய்யான வரலாற்றை எழுதி அதை சுயநலநோக்குடன் நிறுவப் பாடுபடுபவர்கள்.
ஒருவர் என்னவாக தன்னை முன்வைத்தார் என்பதோ அவரை மற்றவர்கள் எப்படிச் சித்தரித்தார்கள் என்பதோ அல்ல வரலாறு. உண்மையில் அவர் யார், அவரது வாழ்க்கை என்ன என்பதுதான் வரலாறு. உண்மை ஒருபோதும் ஒருவரை கீழிறக்காது. அவர் எவரோ அவராகவே அவரைக் காட்டும். நாம் ஒருவரை மதிப்பதும் மதிக்காததும் நம்முடைய மனப்பிம்பங்களின் அடிப்படையில் இருக்கவேண்டியதில்லை. உண்மையின் அடிப்படையில் இருக்கட்டும்.
வரலாற்றெழுத்து என்பது எப்போதும் சுயநலமிகளின் அரைகுறை வரலாறுகளுக்கு எதிராக உண்மையைக்கொண்டு சென்று நிறுத்தும் போர்தான்
ஜெ