சீனா – ஒரு கடிதம்

அன்புள்ள  ஜெ சார்,

நலமா? இப்போது சில நாட்களுக்கு முன் சீனா நமது எல்லையில் ஊடுருவி கூடாரம் அமைத்தும் அதற்கு இந்திய அமைச்சர்கள், இந்தியாவும் சீனாவும் நட்பு நாடுகள் இந்தப் பிரச்னை பேசி தீர்க்கப்படும் என்கிறார்கள், அவர்கள் தரப்பும் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்துக்கொண்டே துருப்புகளை மெதுவாக உள்ளே செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இந்தியத் தரப்பு ராணுவ நடவடிக்கை எடுக்காமல், பேச்சுவாரத்தை நடத்துவது நம் அரசின் தொடை நடுங்கித்தனமாக, நம்மை ஒரு வாழைப்பழ தேச குடிமகன்களாக நினைக்க தோன்றுகிறது.

ராணுவ நடவடிக்கை எடுத்தால் நம் தரப்பு உயிரிழப்பு, பொருளிழப்பு மற்றும் நிரந்தர பகைமை காரணமாக எல்லையை பாதுகாக்க பாகிஸ்தான் எல்லை போல நிரந்தர கண்காணிப்பு என்று நம் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு செல்லும் நிதியை ராணுவத்திற்கு செலவழிக்க நேரும் சூழல். இவை அனைத்தையும் மனதில் கணக்கிட்டாலும் இவ்விசயத்தில் பேச்சுவாரத்தை நடத்துவதை ஆதரிப்பது கோழைத்தனத்தை ஆதரிப்பதாக இருக்கிறதே ஒழிய யுத்தத்தை தவிர்க்கும் காந்திய வழிமுறையாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

அரசிற்கு எதிராக மக்களைத் திரட்ட காந்தியின் அகிம்சை வழி ஒன்றையே தீர்வாக வைக்கும் தாங்கள், அவ்வழிமுறைகளை நம்மைப் போன்ற சுற்றிலும் ஆபத்தை வைத்திருக்கும் ஒரு தேசம் பின்பற்ற வேண்டுமா? அல்லது வெளிநாட்டு உறவு என்று வரும்போது அந்தந்த நாடுகளின் செயலுக்கு ஏற்றவாறு வகுக்க வேண்டுமா? அல்லது அரசாங்கத்திற்கு காந்திய கொள்கைகளே தேவையில்லை, நடைமுறையில் அதை பின்பற்ற முடியாது, (சூழியல் பாதுகாப்பு, ஜனநாயக வழியில் மக்களைத் திரட்டுவது போன்ற உள்நாட்டு செயல்பாடுகளுக்கு மட்டும் போதும்) என்று நினைக்கிறீர்களா? இதில் உங்கள் கருத்து என்ன? அறிந்துகொள்ள ஆவல்.

நன்றி
கார்த்திகேயன்.

அன்புள்ள கார்த்திகேயன்,

பொதுவாக இம்மாதிரி தேசிய வெளியுறவுக்கொள்கை போன்றவற்றில் சாதாரண மக்களாகிய நாம் கருத்துக்கொள்வதும் சொல்வதும் சிக்கலான ஒன்று.

உண்மையில் என்ன நடக்கிறதென்று நமக்குத் தெரிவதில்லை. பெரும்பாலான ஊடகச்செய்திகள் அரைகுறையானவை, சுயதணிக்கை செய்யப்பட்டவை. அவற்றை வைத்துக்கொண்டு ஊகங்கள் செய்வதும் கொள்கைகள் வகுப்பதும் விவாதிப்பதும் பெரும்பாலும் வெறும் அறிவுத்தளப்பொழுதுபோக்குகள் மட்டுமே.

நான் ஓர் எழுத்தாளனாக – குறிப்பாக மலையாள எழுத்தாளனாக  – மிக அதிகமான தொடர்புகள் கொண்டவன். நான் அறியும் உண்மையின் மறுபக்கங்கள் மிக மிக சிக்கலானவை. அவை வாய்மொழி வரலாறாகவே உலவிக்கொண்டிருக்கின்றன. அவைதான் உண்மையான வரலாற்றுக்காரணிகளை நமக்குக் காட்டுகின்றன. ஆனால் அவற்றை நாம் பொதுத்தளத்தில் வைத்து பேசமுடியாது.

அந்த உண்மைகளை அறிந்துகொண்டு நம் இதழாளர்கள் அங்குமிங்கும் கிடைக்கும் தகவல்களைக்கொண்டு விவாதிப்பதைக் கண்டு நான் பலமுறை திகைத்திருக்கிறேன். சிரித்திருக்கிறேன்.

சீன இந்திய உறவு இரு முகம் கொண்டது. ஒன்று மாவோயிஸ்டுகளையும் பிற உள்நாட்டுச் சக்திகளையும் தூண்டிவிட்டு இந்தியாவுக்குக் குடைச்சல் கொடுப்பது. எல்லையில் சிக்கல்களை முன்வைப்பது. மறுபக்கம் இந்தியாவுடன் மிக அதிகமாக வணிக உறவுள்ள தேசம் சீனாவே. இந்த இரு தராசுத்தட்டுகளும் மாறிமாறி ஆடி சமரசம் செய்துகொண்டிருக்கின்றன. ஒன்றுக்காக இன்னொன்று.

இந்த விஷயத்தில் ராணுவமும் அரசும் கொள்ளும் உறுதியும் அதனடிப்படையிலான பேரமும்தான் நடைமுறை யதார்த்தம். அதற்குமேல் கொள்கைகளுக்கெல்லாம் அங்கே இடமில்லை.

வெளியுறவு விஷயங்களை சாதாரண மக்கள் கவனிக்கக்கூடாதென்று இதற்கு பொருள் இல்லை. கவனிக்கலாம். கருத்துக்கொள்ளலாம். இல்லையேல் நாம் அதிகாரத்தை அரசுக்கு முழுமையாக விட்டுக்கொடுத்தவர்களாவோம். ஆனால் நாம் நிபுணர்களல்ல, அரைகுறைச்செய்திகளை மட்டும் அறிந்தவர்கள் என்றும் எண்ணிக்கொள்ளவேண்டும்.

ஜெ

முந்தைய கட்டுரைஎன் சரித்திரம்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் – யார் வாசகர்கள்?