ஃபாசிசமும் காந்தியும்

மதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம். நான் அருண், சென்னையில் மென்பொருள் ஆலோசகராக பணிபுரிகிறேன். இணையத்தில் தங்களின் கட்டுரைகளையும் கடிதங்களையும் தொடர்ந்து படித்து வருகிறேன். தங்களின் ‘வெறுப்புடன் உரையாடுதல்’ கடிதத்தை படிக்கையில் சில கேள்விகள் எழுந்தன. அவற்றை இங்கு பதிவு செய்ய இந்த மின்மடல்.

அறவழிப்போராட்டம் உண்மையின் பண்முகத்தை அங்கீகரிக்கிறது; அதனாலேயே அது முரண்பாடுகளுக்கிடையே ஒரு பேச்சுவார்த்தையை ஊக்குவிக்கிறது என்பது என் புரிதல். மேலும் நாம் யாருடன் போராடுகிறோமோ அவர்களின் மனசாட்சிக்குள்ளும் இந்த பேச்சுவார்த்தை நடந்து சமரசத்திற்கு வழி காட்டும் என்று புரிந்துகொண்டேன். என் பார்வையில் அறவழிப்போராட்டத்தின் சாத்தியக்கூறு யாருடன் முரண்படுகிறோம் என்பதை பொறுத்தே அமைகிறது. இந்தியாவிலும் தென்ஆப்ரிக்காவிலும், காந்தியும் மண்டேலாவும் போராடியது ஆங்கிலேயரையும் அவர்களின் வழி வந்தவர்களையும் எதிர்த்தே. மார்டின் லூதர் கிங்கும் அவ்வழியே. தென்ஆப்ரிக்காவில் காந்தி போராடியபோது தன் அறவழிப்போராட்டத்தின் மீது நம்பிக்கை குறைவாக இருந்த நண்பர்களிடம் ‘ஆங்கிலேயர் இந்தியர்களை மதிக்காமல் இருக்கலாம். அனால் அவர்கள் தம் சட்டத்தை மிகவும் மதிப்பவர்கள். லண்டனில் உள்ள ஊடக தொடர்புகள் மூலம் நிலைமையை உலகறிய செய்தால் கண்டிப்பாக வழி பிறக்கும்’ என்ற சாயலில் ஆதரவு திரட்டுவார். ஒருவகையில் ஊடக தொடர்புகள் அவரை ஆதரிக்காமலிருந்தால் காந்தியையும் அறவழியையும் உலகம் அறிந்திருக்குமா என்பது கேள்விக்குறியே.

அறவழியின் அடிநாதமே எதிரிக்கு மனசாட்சி உண்டு, அவனுக்கும் ஒரு ஒழுக்க அல்லது சட்ட கட்டமைப்பு உண்டு; அதை முன்னிறுத்தி போராடினால் நீதி கிட்டும் என்ற நம்பிக்கையில் தானே அறவழி வாழ்கிறது. ஒரு வேலை அவ்வாறில்லாத ஒரு சூழ்நிலையில் அறவழி போராட்டம் எப்படி இயங்க முடியும்? ஒரு வேளை இந்தியா ஜெர்மனியின் காலனியாக இருந்திருந்தால் ஹிட்லர் காந்தியை விட்டுவைத்திருப்பாரா? உலகளவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக மட்டுமே அறவழிப்போராட்டம் வெற்றி பெற்றுள்ளது என்பது என் கருத்து. அது காந்தி மேற்கோள் காட்டியது போல் ஆங்கிலேயர் தம் சட்ட அமைப்பின் எல்லைகளுக்கு கட்டுப்பட்டு இயங்கியதின் விளைவாக பெற முடிந்த வெற்றி என்று தோன்றுகிறது. பாசிச கொள்கைகளும், எதிர்மறை, வெறுப்பு, இனவாத அரசியலும் , மனித ஊடக உரிமைகள் பறிப்பு கொண்ட நாடுகளில் அறவழி போராட்டத்தின் இயங்குதளம் எவ்வாறு இருக்கும்?

அன்புடன்
அருண்

அன்புள்ள அருண்

உங்கள் வினாவுக்கான பதிலை நான் விரிவாக காந்தியும் ஹிட்லரும் என்ற கட்டுரையில் எழுதியிருக்கிறேன்.

இன்னொரு கட்டுரை காந்தியின் துரோகம் அதுவும் இதனுடன் இணைத்து வாசிக்கத்தக்கது

ஜெ

காந்தியும் ஹிட்லரும்

முந்தைய கட்டுரைவெண்கடல்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாந்தி, குடி – கடிதங்கள்