புத்தக விற்பனை-கடிதம்

ஜெ,

இதில் வேறு சில காரணங்களும் உள்ளன
. குறிப்பாக புத்தகங்கள் கிடைப்பதில்லை மற்றும் அவை சரியாக அறிமுகம் செய்து வைக்கப்படவில்லை.

நான் ஐந்து வருடங்களாக ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும் உங்களது ‘பின் தொடரும் நிழலின் குரல்’ புத்தகத்தை சென்னையிலுள்ள பெரும்பாலான புத்தகக் கடைகளில் தேடுகிறேன் ஆனால் கிடைக்கவில்லை. நீங்கள் இணையத்தில் landmark ebook அல்லது google books மூலம் வெளியிடலாம். அதன் மூலம் இன்னும் பெரிய வாசகர்களை சென்றடையலாம். வியாபாரத்துக்காக சொல்லவில்லை. உண்மையாக படிக்க ஆர்வம் இருப்பவர்களுக்கு தற்கால இலக்கியங்கள் சென்று சேரும்.

திருமணமான புதிதில் என் மனைவி நான் படித்த புத்தகங்களை பார்த்து நான் ஒரு அரைக்கிறுக்கன் என்று நினத்துக் கொண்டாள். என்னிடம் ஒரு ஆங்கிலப்புத்தகம் கூடக் கிடையாது. அவற்றை நான் படித்ததும் இல்லை. ஆங்கிலத்தில் எந்த புத்தகம் இருந்தாலும் எனக்கு பாடப்புத்தகம் போலவே தோன்றும். மூணாவது பக்கம் படிப்பதற்குள் தூங்கி விடுவேன். அதனால் ஆங்கில படங்கள் பார்ப்பதோடு சரி. என் மனைவியிடம் உங்களது அறிவியல் சிறுகதைகளை link கொடுத்து படிக்க சொல்லி கட்டாயப்படுத்தினேன். படித்து விட்டு she was thrilled. ரமணி சந்திரனையும், விகடனையும் ஆங்கில romantic,thriller நாவல்களை மட்டுமே படித்து வரும் படித்த பெண்களிடம் தமிழின் சிறந்த எழுத்துக்களை அறிமுகம் செய்து வைத்தால் நிச்சயம் 10,000 பிரதிகளாவது கூடுதலாக விற்கும்.

நன்றி,

ராஜேஷ்.

அன்புள்ள ராஜேஷ்

நான் இதைப்பற்றி முன்னரும் எழுதிவிட்டேன்

புத்தக விற்பனைக்கான ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பு தமிழில் இல்லை. இங்கே புத்தகங்கள் அதிகம் விற்காமைக்கு ஒரு காரணம் அதுதான். அது உண்மை

ஆனால் புத்தகங்கள் ஓரளவேனும் விற்றால் மட்டுமே அப்படி ஒரு அமைப்பு மெல்லமெல்ல வளர்ந்து நிலைகொள்ள முடியும். தமிழில் இணையத்தில் வளவளப்பவர்களிலேயே கூட பத்துசதவீதம்பேர் புத்தகங்கள் வாங்குவதில்லை. ஆகவே விற்பனை இல்லை. அதன்விளைவான நிதிச்சுழற்சி இல்லை. நிதிச்சுழற்சி இல்லையேல் எந்த வினியோக அமைப்பும் விரைவில் தேங்கிவிடும். இணையத்தில் நூல்விற்பனை சார்ந்து செய்யப்பட்ட பெரும்பாலான முயற்சிகள் வாசக ஆதரவில்லாமல் அழிந்துவிட்டன என்பதே உண்மை.

காரணம் நம் சூழலில் நம் இளைஞர்களுக்கு ஒரு நூலை வாசித்து உள்வாங்கும் பயிற்சியே இல்லை என்பதுதான். என் தளத்தில் எட்டு பக்க கட்டுரை வந்தாலே நீளமாக உள்ளது என புகார் வருகிறது. இவர்கள் எங்கே ஒரு நூலை வாசிக்கப்போகிறார்கள்? இங்கே கல்விக்கூடங்களில் அளிக்கப்படும் பாடங்களை நெட்டுருப்போடுவதும் திருப்பி எழுதுவதும்தான் பயிற்சிதரப்பட்டுள்ளது. அவர்களில் மிகமிகமிகச் சிலரே ஏதேனும் ஒரு நூலை வாசிக்கும் மன அமைப்பு கொண்டவர்கள். அவர்களிலும் மிகமிகமிகச் சிலரே தீவிரமாக வாசிக்கக்கூடியவர்கள். அதுதான் உண்மையான சிக்கல்

ஜெ

புத்தகவிற்பனை பற்றி

வாசிப்பு

முந்தைய கட்டுரைராஜமார்த்தாண்டன்
அடுத்த கட்டுரைகுமரி உலா – 4