அன்பின் அண்ணன் ஜெயமோகன் அவர்களுக்கு,
நெடுநாட்களாக எழுத நினைத்துள்ள ஒரு விஷயம் இது. கல்வி என்பது கற்றல் மற்றும் அறிவு வளர்ச்சிக்கான ஒரு விஷயம் – அதன் உபபலனாகக் கிடைப்பவை – வேலை மற்றும் மற்ற லௌகீக ஆதாயங்கள். அதே போல வேலை, பணம் இரண்டுமே இந்த உலகியல் வாழ்வை வாழ உதவும் சாதனங்கள் மட்டுமே. அவை நம் ஆளுமையை, ஆன்ம உணர்வை வளர்த்து மனதிருப்தியை தரும் விசயங்களைப் (ஒரு புத்தகத்தை வாங்க, கலையை ரசிக்க, உலகம் சுற்ற, நல்ல உணவை ரசிக்க) பெறுவதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, அவற்றைப் (வேலை, பணம்) பெறுவதற்காக ஆன்மாவை அழித்துக் கொள்ளத் தேவையில்லை. ஆனால் இந்தச் சில்லறை உண்மையைப் புரிந்து கொள்வது யாருக்கும் அவ்வளவு எளிதானதாய் இல்லை.
இந்தியாவில் ஒட்டுமொத்த முட்டாள்களில் அறுபது சதவீதம் பேர் மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். (சற்றே கடுமையான வசைதான் – ஆனால் உண்மையும் கூட. பத்து வருட தொழில்நுட்ப வாழ்வில் வெவ்வேறு பொருளாதார, கல்வி, பண்பாட்டுப் பின்புலம் கொண்ட சகாக்களுடன் வேலை செய்ததில் அடிப்படை அறிவும், மனிதனாய் இருத்தலுக்கான முயற்சியும் கொண்ட பத்து நபர்களை என்னால் காட்டமுடியுமா என்பது சந்தேகம்தான்.) இது புலம்பலோ அடுத்தவரைக் குறை சொல்லவோ நினைக்கும் ஒரு விஷயம் அல்ல. இவர்களைப் பற்றிய விமர்சனங்கள் அவர்களைச் சென்றடையவே செய்யாது. நான் கவலைப்படுவது இவர்களின் குழந்தைகளைப் பற்றி. நான் சந்தித்த யாரும் குழந்தை என்பது தன்னுணர்வு கொண்ட ஒரு சக உயிர் என்பதை உணர்ந்தவர்கள் இல்லை. சகமனிதர்களின் இந்தத் தாக்குதல் ஒரு விதப் பதட்டத்தை உருவாக்குகிறது.
உலகப்புகழ்பெற்ற பாரிசின் லூவர் மியூசியத்தில், ஒரு 5 வயதான பெண் குழந்தை தரையில் அமர்ந்து ஒரு ஓவியத்தை நகல் எடுத்துக் கொண்டு இருந்தது. நான் மிகுந்த ஆச்சர்யத்துடன் அது வரைய முயல்வதைப் படம் எடுத்தபடி அருகே போனேன். நான் அந்தப் பெண்ணிடம் பேச முயன்ற அடுத்தநொடி ஒரு நபர் என்னைக் கவனித்தபடி அருகே வந்தார். அது அவரின் பெண். கடந்த வருடம் வழக்கமான வார விடுமுறைக்கு அவளை அழைத்து வந்து விட்டு வீடு சென்றிருக்கிறார், மறுநாள் காலை அவர் எழும்போது, அவரிடம் அவள் கொடுத்தது, ஒரு பென்சிலால் வரையப்பட்ட அரைகுறை ஓவியத்தை. அன்றிலிருந்து ஒவ்வொரு ஞாயிறும் லூவருக்கு இருவரும் வந்துவிடுவார்கள். ம்யூசியம் மூடும் வரை ஏதேனும் ஒரு ஓவியத்தை அவள் வரைவாள். பின் வார நாட்களில் அவரவர் வேலையைத் தொடர்ந்தபடி அடுத்த வாரத்திற்காகக் காத்திருப்பார்கள்.
என்னுடன் வந்த நண்பர் அவரிடம் படிப்பு கெட்டுவிடாதா? என்று கேட்டார். அந்தக் கேள்வி அந்த நபரைக் குழப்பிவிட்டது. அவர் என் பெண்ணிற்கு எழுத, படிக்கத் தெரிந்தால் போதும், அதை அவள் செய்வாள் என்று நம்புகிறேன் என்றார். இல்லை அவளை MBA/MS படிக்க வைக்க வேண்டாமா என்று கேட்க, அவளுக்கு ஓவியம் பிடிக்கிறது, இன்னொருநாள் அதை எறிந்துவிட்டு வேறேதேனும் படித்தால் அது அவள் விருப்பம், நான் ஏன் அவள் படிப்பை முடிவு செய்ய வேண்டும் என்று கேட்டார். மகளுக்காக ஒருநாள் முழுவதும் காத்திருக்கும், அவள் வாழ்வை வாழவிடும் ஒரு தகப்பனை – மேய்ப்பனைக் கண்ட திருப்தியுடன் நான் கிளம்பினேன்.மீண்டும் சில மாதம் கழித்து, லூவர் செல்லும் போதும் நான் அந்தத் தந்தையையும் மகளையும் சந்தித்தேன். என் பார்வையில் இது ஒட்டுமொத்த ஐரோப்பிய சமூகமனநிலை. அங்கே இருக்கும் நம் மக்கள் இங்கே செய்யும் கொடுமைகளை மாற்றமே இல்லாமல் அங்கேயும் பிள்ளைகளுக்குச் செய்கிறார்கள்.
இங்கே, ஒரு வயதுக் குழந்தைக்குப் பாடம் சொல்லும் குறுவட்டு, 2 வயதில் ஆரம்பிக்கும் கல்வி, 3 வயதில் முறைப்படுத்தப் படாத கல்வி, 4 வயதில் ஆரம்பிக்கும் முறைசார் கல்வி, நான்காம் வகுப்பில் இருந்து I IT நுழைவுத் தேர்வுப் பயிற்சி, நடனம், ஓவியம், பாட்டு, கம்ப்யூட்டர் – இதில் எங்கேயும் வாசிப்போ, அரசியல், இயற்கை சார்ந்த விசயங்களோ இருக்கவே செய்யாது. இவை அற்ற எந்த விசயமும் கல்வி என்று சொல்லத்தகுதி அற்றவை.
சென்னையில், என்னுடன் வேலை செய்யும் ஒருவரிடம், எதற்காக உங்கள் குழந்தையை இவ்வளவு செலவு செய்து (ஒரே பையன் – இரண்டாம் வகுப்பு – மாதம் 15000 ரூபாய், இது தவிர வருடம் 3 லக்ஷம் ரூபாய் கட்டணம்) கொடுமைப்படுத்துகிறீர்கள் என்று கேட்டேன். என் மகனுக்கு சொத்து எதுவும் சேர்த்து வைக்க முடியாது, சிறப்பான கல்வியை மட்டுமே கொடுக்க முடியும் என்று சொன்னார். அவரின் மாத வருமானம் இருபது லட்சத்திற்கும் மேல். இவ்வளவு பணம் கொண்ட இவர்கள் தங்கள் குழந்தைகளையாவது சுதந்திரமாக வளர்க்கலாம் இல்லையா? இது ஒரு விதமான நிழலுடனான யுத்தம் போல் இருக்கிறது.இவர்கள் யாரும் தன் குழந்தையை ஒரு இலக்கிய/கலை நிகழ்விற்கோ, சிற்பக் கூடத்திற்கோ, அரும்பொருள் கூடத்திற்கோ அழைத்துச் செல்பவர்கள் இல்லை.
இவர்களிடம் கேட்டால் பின் வரும் காரணங்களில் ஒன்றைத்தான் சொல்வார்கள்:
· ஐன்ஸ்டீனை உருவாக்குதல். (பேரறிவைத் தொடர் பயிற்சியால் உருவாக்குதல் – எல்லோரும் ஐன்ஸ்டீன்கள் ஆவது எப்படி? போன்ற பயிற்சிகளைப் பெறுவதன் மூலம்.) :)
· பில்கேட்ஸ், அம்பானிகளை உருவாக்குதல் (தொழில் அதிபனாக அல்ல – பணக்காரனாக மட்டும் வர- I IT இல் சேர்ந்து நல்ல சம்பளத்தைப் பெற்றுப் பெரும் பணத்தைக் குவித்தல் J, ஒரு போதும் ஒரு புதுப்பொருளை/சிந்தனையைக் கண்டுபிடித்தலோ, நிறுவனத்தை ஆரம்பித்தாலோ இவர்கள் நோக்கமாக இருக்காது)
· தன் சக ஊழியருக்குப் போட்டியாக – கௌரவம் நிலை நாட்டுதல் (இருப்பதிலேயே நல்லவர்கள் இவர்கள்தான்)
மேல்கண்ட நோக்கங்களால்தான் குழந்தைகளை இந்தத் திருட்டுப்பள்ளிக்கூடங்களில் சேர்க்கிறார்கள்.
இந்தப் பள்ளிகளில் நுண்ணுணர்வு, கலை, அறம் குறித்து யோசிக்கும்/போதிக்கும் ஆசிரியர்கள் யாரும் கிடையாது. மதிப்பெண் வாங்கி, நல்ல (?) கல்லூரிகளில் சேர்ந்து, நல்ல (?) நிறுவனத்தில் பெரும் சம்பளத்தில் சேர்ந்து, வெளிநாடு போய், சம்பாரித்து, இரண்டு படுக்கை வீடு வாங்கி, எங்கும் வெளியே செல்லாமல் குடித்து, இதே வட்டத்தில் மற்றொரு தலைமுறையை – மனித சக்கையை – உருவாக்கிச்சாகிறார்கள்.
ஒரு கண்டுபிடிப்பாளனாகவோ, தொழிலதிபனாகவோ, எழுத்தாளனாகவோ, தனித்த வெற்றியாளனாகவோ, ஏன் ஒரு முழு மனிதானாக ஆவதற்குக் கூட மேல்கண்ட முறைகள் உதவாது. அது இப்போது பிரச்சனையாகத் தெரியாது. இன்னும் பத்து வருடத்தில், சாரமற்ற ஒரு சமூகம் உருவாகி வரும்போது என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்று நினைக்கிறீர்கள்?
இவற்றை ஒப்புநோக்கும்போது, அரசுக் கல்வி நிறுவனங்கள் இப்படிப்பட்ட கொடுமைகளைச் செய்வதில்லை. அங்கிருந்துதான் சவால்களைச் சந்திக்கும் மனிதர்கள் உருவாகிறார்கள். அதே சமயம், மசனாபூ ஃபுகொஹா சொல்லிய இந்த விஷயம் குழந்தைகளை வளர்ப்பதில் உதவும் என்று தோன்றுகிறது. ஆரஞ்சு மரத்தை வெட்டாமல் அப்படியே விடுவதல்ல இயற்கை விவசாயம். கிளைகளை சீரமைக்க வேண்டும். ஆனால் இயற்கையின் ஒரு பங்காகச் செய்யவேண்டும். ஆனால் இப்போது பெற்றோர் உருவாக்குவது போன்சாய் மரங்களையே. ஒரு நல்ல வழிகாட்டியாக, பெற்றோராக நீங்கள் – ஒரு சரியான “மனிதனாகத்” தன் குழந்தையை உருவாக்க பெற்றோர் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
இந்தக் கேள்வி இந்த வலைத்தளத்தைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் என்றே நினைக்கிறேன்.
இப்படிப்பட்ட பள்ளிகளும், மனிதர்களும் மட்டுமே நம்பிக்கையை விதைக்கிறார்கள்.
http://writersamas.blogspot.in/2010/11/45e.html
http://writersamas.blogspot.in/2013/03/blog-post_6.html
நன்றி.
என்றும் அன்புடன்,
பா.சரவணன்
உதாரணங்களை மென்பொருள் பணியாளர்கள் சார்ந்து சொன்னது என் அனுபவத்தை விளக்க மட்டுமே. இந்தப் பிரச்சனை எல்லோருக்கும் பொதுவானதே.
அன்புள்ள பா சரவணன்,
கல்வி குறித்த நோக்கில் மேலைநாட்டினருக்கும் கீழைநாட்டினருக்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளன.இன்று பொதுவாக கீழைநாட்டினர் கல்வியைக் கடுமையான ஒரு பயிற்சி என்றே எடுத்துக்கொள்கின்றனர். நம்மைப்போலத்தான் சீனர்களும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
இது ஏன் என்று பார்த்தால் எனக்குத்தெரியும் விடை இதுதான். நெடுங்காலமாக நம்மிடம் இருவகைக் கல்விகள் இருந்துள்ளன. ஒன்று வாழ்க்கைத்தொழில் கல்வி. அதைப் பயிற்சி எனலாம். இன்னொன்று ஆளுமை மலர்வுக்கான கல்வி.
இங்கே பெரும்பாலான கல்வி முதல்வகையைச் சேர்ந்ததாகவே இருந்துள்ளது. சென்ற காலத்தைய ஒரு தச்சன் குழந்தை மூன்று வயதில் உளி எடுத்து மரத்தைச் செதுக்கச் செய்யப்படும். எட்டு வயதில் கொட்டுவடி கையில் இருக்கும். பதினெட்டு வயதில் தேர்ந்த ஆசாரியாக ஆகும். இதுதான் வேதபாடக் கல்விக்கும் வழக்கம்.
இந்தவகையான கல்வி, தொழில்சார்ந்த பயிற்சிகளுக்கு பெரிதும் உகந்ததாக இருந்தது. இது சார்ந்த ஒரு முன்னுதாரணமே நமக்குக் கல்வி என்றால் பொதுவாகக் கிடைக்கிறது. இன்று கோடீஸ்வரர்கள் கூடத் தங்கள் குழந்தைகளுக்கு அளிக்க நினைக்கும் கல்வி இதுதான்
இன்னொரு வகைக் கல்வி இருந்தது. அது குருவிடமிருந்து ஞானத்தைப்பெற்று அறிவிலும் ஆளுமையிலும் ஆன்மீகத்திலும் மலர்தல். அதுவே கலைகளுக்குரிய கல்வியாக இருக்கமுடியும். தத்துவத்திற்கும் இலக்கியத்திற்கும் உரிய கல்வியாக இருக்க முடியும்.
ஆனால் அந்தக் கல்வி அன்றும் மிகமிகச் சிறுபான்மையினருக்குரியதாகவே இருந்தது. அந்தக் கல்விக்காக உலகியல்சார்ந்த பிற அனைத்தையும் உதறிச் செல்லக்கூடிய சிலருக்கு மட்டுமே அளிக்கப்பட்டது அது. அதை சாதாரண மக்கள் அறிய மாட்டார்கள்.
ஆகவே நம் சாதாரண மக்களின் மனதில் இன்றும் கல்வி என்றால் முதல்வகையான கடும் பயிற்சியே இருக்கிறது. இங்கே பொறியியல் முதல் ஐஐம் வரை கற்கும் நம் இளைஞர்கள் அடைவது இந்தக்கல்வியைத்தான். இவர்கள் திறன் மிக்க உழைப்பாளிகளாக ஆகி உலகியல் வெற்றிகளை ஈட்டுவார்கள். அதுவே பெற்றோரின் கனவு.
உண்மையில் நம்முடைய இளைஞர்களில் லட்சத்தில் இருவர் தவிர மற்றவர்களும் இதே கனவைத்தானே கொண்டிருக்கிறார்கள். ஆகவே அந்தக்கல்வி அவர்களுக்கு அளிக்கப்படுவதுதானே முறை? அப்படி அளிக்கப்படாவிட்டால்தான் அவர்கள் பிற்காலத்தில் பெற்றோரைக் குறை சொல்வார்கள்.
நம் இளைஞர்களில் அனேகமாக அத்தனைபேருமே உலகியல் தளத்தில் நல்ல உழைப்பைக் கொடுக்கக்கூடிய இயந்திரங்கள்தான். அவர்களைக் கலைஞர்களும் சிந்தனையாளர்களுமாக ஆக்க முயல்வது வீண்.
எனக்கு என்ன தோன்றுகிறதென்றால் விதிவிலக்கான அந்த லட்சத்தில் இரண்டுபேருக்காக நாம் ஏன் ஒட்டுமொத்தக் கல்விமுறையை மாற்றவேண்டும் என்றுதான். அந்த இரண்டுபேரும் அவர்களைக் கட்டுப்படுத்தும் கல்விமுறையின் இரும்புத்தளைகளை முடிந்தால் மீறி வந்து கற்கட்டுமே. அப்படித்தானே நேற்று உலகியல் வெற்றிகளைத் துறந்து ஒரு குருவைப் பின் தொடர்ந்து சென்றார்கள்?
ஜெ
கல்வி குறித்த கட்டுரைகள் இணைப்பு
சமச்சீர்க்கல்வி-கட்டுரைகள் இணைப்பு